ஒரு தட்டில் நவதானியக்கொழுக்கட்டை,தினைப் பொங்கல்,தேன் தினைமாவு,வரகரிசிச் சோறு,வழுதுணங்காய் சாம்பார், கம்புத்தோசை, வல்லாரை தோசை,நிலக்கடலைச் சட்டினி,கூட்டுப்பொரியல், சாமைக் கூட்டாஞ்சோறு,குதிரை வாலி தயிர்ச்சோறு, பானகம் இவை எல்லாவற்றையும் வைத்துத் தருகிறார்கள்.நீங்கள் எப்படிச் சாப்பிடுவீர்கள்? அதாவது எதை எதோடு சேர்த்துச் சாப்பிடுவீர்கள்? எதில் தொடங்கி எதில் முடிப்பீர்கள்?
இவையெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் மற்றும் இந்திய முன்னோர்கள் சாப்பிட்ட ஆரோக்கியம் தரும் தினசரி உணவுகள்.இதன் பெயராவது இன்று நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரிந்திருக்கும்?
சென்னை லயோலா கல்லூரியில் கடந்தவாரம் 12 சுற்றுச்சூழல் அமைப்பினருடன் சேர்ந்து ‘பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பினர் ஒருங்கிணைத்த ஐந்திணை சுற்றுச்சூழல் விழாவின் இரவு,இந்துப்பாரம்பரிய உணவு விருந்தில் பங்கேற்றபோது இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டது.(அந்த அளவுக்கு நமது பெருமைகள் நமக்குத் தெரியாத அளவுக்கு கிறிஸ்தவ ஆங்கிலேயன் திட்டமிட்டு நமது பெருமைகளை அழித்தும்,மறைத்தும் வைத்து நம்மிடம் வியாபாரக் கொள்ளை அடித்திருக்கிறான்;அடித்தும் வருகிறான்)(பக்கத்தில் ஒரு நண்பர் தோசைக்கு சாமைக் கூட்டாஞ்சோறைத் தொட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.கொத்சு என்று நினைத்தாரோ என்னவோ?) கூர்ந்து யோசித்தால் இது குழப்பம் அல்ல;நமது இந்துப் பண்பாட்டின் பெருமைகளை நாம் அறியாமல் போனதால் ஏற்பட்ட இழப்பு!
நமது பாட்டனும்,பூட்டனும்(நமது தாத்தாவுக்கு தாத்தா) காலங்காலமாக சாப்பிட்ட உணவின் பெயரைக்கூட நாம் அறியாமல் போனதன் மர்மம் என்ன? நம்மை ஆள்கிறேன் பேர்வழி என்று கிறிஸ்தவ ஆங்கிலேயன் செய்த நரித்தனங்களே காரணம்!
உலகிலேயே நிலத்தைச் சூழல் சார்ந்து பிரித்து,வாழ்க்கைமுறையை வகுத்த சமூகம் நமது தமிழ்ச் சமுகம் தான்!!திணை என்பது வெறும் பெயர் அல்ல;அது ஒரு நிரூபிக்கப்பட்ட அறிவியல்.சூழலியல் அறிவியல்.இயற்கையோடு இயைந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்ட அறிவியல்.நம்முடைய முன்னோர்கள் காலத்தில் ஐந்திணைகளும் எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இதைத் திரும்பிப்பார்க்கும் நிகழ்வாகத்தான் ஐந்திணை விழாவை ஒருங்கிணைத்து இருந்தார்கள்.விழாவின் முக்கியக் களம் உணவின் மீதான மத அரசியல்!!!
விழாவை இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தொடங்கி வைத்தார். “சாப்பாடுதான் நமது மூலாதாரம் என்பதை புரிஞ்சிக்கிட்டுத்தான்,நம்ம மேல தாக்குதலைச் சாப்பாட்டுல இருந்து தொடங்குறான்.நவீன விவசாயம் என்ன செய்யுதுனு புரிஞ்சுக்க பெரிய விஞ்ஞான அறிவு எதுவும் தேவை இல்ல;ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க.
நவீன விவசாயம் என்ன செஞ்சுது? விவசாயியையும் மாட்டையும் பிரிச்சுது.மாடு கசாப்புக்கடைக்குப் போவுது;விவசாயி ஏரை விட்டுட்டான்;டிராக்டர் வந்துச்சு;கம்பெனிக்காரன் பெருகுறான்(வளர்கிறான்); மாடு கசாப்புக்கடைக்குப்போவுது; விவசாயி மாட்டுவண்டியை விட்டுட்டான்;பெட்ரோலும் டீசலும் இறக்குமதி ஆவுது; கம்பெனிக்காரன் பெருகுகிறான்(வளர்கிறான்);விவசாயி ஏத்தம் இறைக்குறதை மறந்துட்டான்;ஆழ்குழாய்க் கிணறு வந்துச்சு; மோட்டாரும் குழாயும் விக்குது;கம்பெனிக்காரன் பெருகுகிறான்.(வளர்கிறான்)விவசாயி ஓட்டாண்டி ஆயிட்டான்;நவீன விவசாயம் என்ன பண்ணுதுனு இப்ப புரியுதுங்களா? என்று நம்மாழ்வார் கேட்டபோது ஒட்டு மொத்தக் கூட்டமும் உறைந்து போனது.
“குதிரை வாலியும் வரகும் சாமையும் அரிசிக்கு நல்ல மாற்று;கேழ்வரகும் தினையும் குழந்தைகள் உள்ள ஓவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியவை;நெல்லுக்கும் கோதுமைக்கும் பாய்ச்சும் நீரில் பத்தில் ஒரு பங்கு போதும் இவற்றுக்கு.ஆனால்,அரிசி,கோதுமையை விடப் பல மடங்கு ஊட்டச்சத்து மிக்கவை: என்றார் சித்தமருத்துவர் கு.சிவராமன்.
“நீங்கள் இயற்கை உணவுக்கு மாறுவது எளிது;ஆனால் விவசாயிகள் மீண்டு இயற்கை விவசாயிக்கு மாறுவது அவ்வளவு எளிதானது அல்ல; இயற்கை விவசயத்தில் ஒரு வண்டி எரு அடிக்க வேண்டிய இடத்துக்கு,நவீன விவசாயத்தில் ஒரு சட்டி யூரியா போதும்;ஆனால்,அது நமது ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் விஷம்.அதனால்தான்,கூடுதல் செலவு,கூடுதல் சுமையைப்பார்க்காமல் இயற்கை விவசாயத்துக்குத் திரும்புகிறோம்;
ஆனால்,இதைப்புரிந்து கொள்ளாதவர்கள் ஏன் இயற்கை விளைபொருட்களின் விலை கூடுதலாக இருக்கிறது என்று கேட்டு நிராகரிக்கிறார்கள்? நான் கேட்கிறேன்.நஞ்சு என்று தெரிந்த அரிசியை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்;சத்தான உணவு என்று தெரியும் அரிசிக்கு 40 ரூபாய் கொடுக்கக் கூடாதா?” என்கிறார் முன்னோடி இயற்கை விவசாயியான வைகை குமாரசாமி.
“உணவு நஞ்சாயிடுச்சு;தண்ணீர் நஞ்சாயிடுச்சு(இதுல வெளிநாட்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் நமது தண்ணீர் வளத்தை நமது சட்டங்கள் மூலமாகவே கொள்ளையடித்து நம்மிடமே விற்றுவருகின்றன)இன்னமும் எப்படி மவுனமா இருக்கோம்? சொரணை இருந்தாத் தானே உயிர் இருக்குனு அர்த்தம்?”சமூகச் செயற்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதனின் கேள்வி இன்னமும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
நன்றி:ஆனந்த விகடன்,பக்கங்கள்88,89;வெளியீடு 8.8.12
No comments:
Post a Comment