Thursday, February 7, 2013

தேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவியுங்கள்






கடந்த ஆண்டு ‘தேசிய தண்ணீர் கொள்கை’ ஒன்றை அறிவித்த மத்திய அரசு,அது சம்பந்தமாக பிப் 29,2012க்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது.விவரமறிந்த பிரமுகர்கள் தவிர யாருக்கும் இப்படி ஒரு விஷயம் ஆலோசிக்கப்பட்டு வருவதே தெரியாத நிலையிலும் கூட,அக்கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பால், அதை முற்றிலும் நிராகரிக்காமல் சில  ‘வெட்டு,ஒட்டு’ வேலைகள் செய்து ‘திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கை’ என்று அறிவித்து,தற்போது பிப் 28,2013க்குள் பொது மக்கள் கருத்தை கேட்டுள்ளது.


தண்ணீர் வீணாக்கப்படுகிறது என்பதையோ,வசதி உள்ளவர்கள் அளவிற்கு அதிகமாக  பயன்படுத்துகிறார்கள் என்பதையோ நீர் மேலாண்மை சம்பந்தமாக தெளிவான கொள்கை வேண்டும் என்பதையோ நாம் மறுக்கவில்லை;ஆனால்,அதை ஓர் பொருளாதாரப் பண்டமாக கருத வேண்டும்,அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரிலும் பணம் பண்ணும் பேராசையை மத்திய அரசு செயல்படுத்திட முனைவதை ஏற்றுக்  கொள்ளமுடியவில்லை;
சுதந்திர காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து நிலத்தடி நீர் நில  உரிமையாளருக்கே சொந்தம் என்கிறது சட்டம்.இதுதான் மனுதர்மக்கொள்கையும் கூட.தற்போதைய கொள்ளையோ,ஸாரி,கொள்கையோ ‘மனை உனக்கு,அதன் நிலத்தடி நீர் அரசுக்கு;விவசாய நிலம் உனக்கு;அதன் நிலத்தடி நீர் அரசுக்கு’என்று கூறுகிறது.

உடலும் உள்ளமும் குளிர ஆற்றிலும் வாய்க்காலிலும் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லை;எதிர் எதிரில் குளித்துக்கொண்டிருந்த ஆண் பெண்களிடம் காம வக்கிரம் உருவாகவில்லை.ஆனால்,இன்றும் உடலும் உள்ளமும் குளிர குளிப்பது கூட ‘லக்ஸரி’ ஆக பன்னாட்டு நிறுவனங்களின் சாதுர்யமான செயல்பாடுகளாலும்,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கலால் மாறிவருகிறது.ஆற்று நீரை உறிஞ்சி வீடுகளுக்குக் கொண்டு வந்து,கழிவு நீரால் சாக்கடை ஆறுகளை உருவாக்கி,ஆறுகளில் மணல் அள்ள அனுமதித்து ஆறுகளை காணாமல் செய்து விட்ட அரசு மக்களை தண்டிப்பது எந்தவித நியாயமும் இல்லை;


நீராதாரங்கள் தனியார் மயம் ஆக்கப்படும் போது, அந்த தனியார் பன்னாட்டு கம்பெனிகளாகத் தான் இருக்கும்.லேண்ட் மாஃபியா,சாண்ட் மாஃபியா உருவாகி இருப்பது போல வாட்டர் மாஃபியாதான் உருவாகுமே தவிர அடிப்படை நீராதாராப் பிரச்னை தீராது.நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சீரான விநியோகத்திற்கும் தீர்வு ‘தனியார் மயமோ’ ‘கட்டணவழியோ’  அல்ல;மாறாக உள்ளாட்சி நிர்வாகத்தில் அவற்றை ஒப்படைப்பதுதான்.


இந்த மத்திய அரசு, மெல்ல மெல்ல மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசான தன்னிடம் எடுத்து வருகிறது.நதிநீர் தாவாக்களை தீர்ப்பதற்கு தகுதியற்ற அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏதோ சில பகாசுர பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வருவது வேடிக்கையாகவும்,வேதனையாகவும் உள்ளது.
இதுவரை குடிநீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி தமிழ்நாட்டிலும் சரி,பிற மாநிலங்களிலும் சரி,வெற்றி பெறவில்லை;இந்நிலையில் விவசாய நீர்ப்பங்கீடும் தனியார்மயம் என்றபெயரில் உலகமயமாக்கலும்,அமெரிக்கமயமாக்கலும் செய்வது பேராபத்தைத் தந்துவிடும்.உணவுப்பண்டங்களின் விலை எட்டாததாக உயரும்.குறிப்பாக அரிசி விலை!!!

அரசு தனது ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பிப் 28,2013க்குள் கேட்டுள்ளதால் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை nwp2012mowr@nic.in என்ற மின் அஞ்சலுக்கு தெரிவிக்கவும்.அரசின் வலைத்தளமானhttp://wrmin.nic.inஎன்ற தளத்தில் தேசிய தண்ணீர்க் கொள்கை வரவினை படிக்கலாம்.நமது கருத்துக்களை அனுப்பி நமது தேசத்தின் தண்ணீர் சொத்து,பன்னாட்டு கொள்ளைக்கும்பல்களிடமிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி;சுதேசிச் செய்தி,பக்கம்5,பிப்ரவரி 2013.தலையங்கம்.

ஆன்மீகக்கடலின் கருத்து: எப்போதெல்லாம் சிவ வழிபாடு பூமியில் குறைகிறதோ,அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்படும்.இந்த கருத்து தேவாரம்,திருவாசகம்,சிவபுராணம் போன்றவற்றில் வேறு ஒரு தேடல் தேடிய போது கிடைத்த ஆதாரம் ஆகும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment