Thursday, February 28, 2013

இசையின் மகத்துவத்துக்கு இருஎடுத்துக்காட்டுக்கள்!!!



கேள்வி:பழங்காலத்துப் பாடலுக்கும், இந்தக் காலத்துப் பாடலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா? அப்படியானால் அந்த மகத்துவம் என்ன?

இசைஞானி இளையராஜாவின் பதில்:எட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவம்:ஒரு ஏரிக்கரையில் ஒரு அம்மா அழுது கொண்டிருந்தாள்.அங்கு வந்த திரு.சுந்தரப் பெருமான் என்ன? என்று அந்த அம்மாவைக் கேட்டார்.அந்த ஏரியின் முதலை ஒன்று தன் குழந்தையை விழுங்கிவிட்டது;நான்கு நாட்களாக நான் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறேன் என்றும் அழுதவாறே பதிலளித்தாள்.
உடனே,திரு.சுந்தரமூர்த்தி ஒரு பதிகம் பாடினார்.அதே முதலை கரைக்கு வந்து பிள்ளையைக் கக்கிச் சென்றது. தின்று ஜீரணித்த பிள்ளை எந்த காயமும் இல்லாமல் உயிரோடு திரும்பி வரச் செய்த பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?


அதே போல் இன்றும் ஒரு சம்பவம்
உடுமலைப் பேட்டையில் கேரள மலையை ஒட்டிய ஒரு கிராமம்.ஒரு டூரிங் தியேட்டரில் ஒரு திரைப்படம் ஓடியது.காடுகளில் இருந்த யானைக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் காட்டை விட்டு கூட்டமாக ஆற்றைக்  கடந்து வந்து,இந்த டூரிங் தியேட்டருக்கு வெளியே அமைதியாக இருந்து ஒரு பாடலை அந்தத் தியேட்டரில் கேட்டுவிட்டு அப்படியே எந்தத் தொந்தரவும் செய்யாமல் தோட்டப்பயிர்களை அழிக்காமல் அமைதியாகச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டன என்று செய்தி அறிந்தேன்.
அந்தப்பாடல் ‘வைதேகிக் காத்திருந்தாள்’ படத்தில் ராசாத்தி உன்னை என்ற பாடலாகும்.


இந்தப்பாடலின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது? மனிதர்களைத் தாண்டி, மிருகங்கள் என்று சொல்லக்கூடிய உயிரினங்களின்  இதயத்தை இழுத்து அவைகளுக்கு ஏதோ ஒன்றைத் தருவது போலல்லவா இருக்கிறது?
இதை மனிதர்களாகிய நாம் எப்படி எந்தக்கணக்கில் புரிந்து கொள்வது? ஆக , பாடலின் மகத்துவம் எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

நன்றி:குமுதம் வார இதழ்,பக்கம் 86,87;வெளியீடு 20/2/13

No comments:

Post a Comment