Tuesday, February 19, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7


சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்டு மகத்தான மனிதர்களானோர் பலர். அவர்களுள் சுவாமி சித்பவானந்தர் முதன்மையானவர்.
தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை முன்னெடுப்பதில் அவர் நிறுவிய ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பேரிடம் வகித்து  வருகிறது.
சுவாமி சித்பவானந்தர் தனது மானசீக குருவான சுவாமி விவேகானந்தரின் சரிதத்தை ‘ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’ என்ற அற்புதமான ஒரு நூலாக அருளி இருக்கிறார். அந்த  நூலில் இருந்து...


பரிவ்ராஜக பரமஹம்சர்:
1891ஆம் ஆண்டின் துவக்கத்தில் கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி, பரம்பொருள் ஒன்றையே துணையாகக் கொண்டு பரிவ்ராஜக பரமஹம்சராய் அவர் புறப்பட்டுவிட்டார்.
பணம் எதையும் கையாளுவதில்லை;, வலிய வருகிற உணவை புசிப்பது; நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை, பிரயாணம் செய்ய வேண்டியவிடத்து யாராவது புகைவண்டிக்குச் சீட்டு வாங்கிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வது, ஏனைய நேரங்களில் கால்நடையாகவே போவது என்ற ஒரு வைராக்கியத்தை கருத்தினில் வைத்துக்கொண்டார்.
காசி:
சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது.
புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை, வழிபாடுகள் இவற்றைக்  காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார்.
தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டை புரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.
அயோத்தி:
தாம் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் வேறு பல இருப்பதை எண்ணி காசியினின்று புறப்பட்டு அயோத்தி போய்ச் சேர்ந்தார்.
அப்புண்ணிய க்ஷேத்திரத்திலும் இவரது மனத்தகத்தே அடங்காத ஆனந்த பரவசமுண்டாயிற்று. இவர் வழிபடும் கடவுளாகிய ராமபிரானின் அற்புதச் செயல்களையெல்லாம் கருதி களிப்புறுவாராயினர்.
பின்பு மொகலாய சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்திலே சீரும் சிறப்புமுற்று விளங்கிய நகரங்களாகிய ஆக்ரா, லக்ஷ்மணபுரி முதலிய இடங்களுக்குப் போனார்.
தாஜ்மஹாலில் சலவைக் கல்லில் செய்திருந்த சித்திர வேலையானது சுவாமிகளைத் திகைப்புறச் செய்தது. அக்கட்டடத்தின் எப்பகுதியைத் துருவி ஆராய்ந்தாலும் பேரரசன் ஒருவனது அன்பு அதனூடே மிளிர்வதைக் காணலாம் என்பது சுவாமிகளின் கருத்தாகும்.
பிருந்தாவனம்:
இப்புண்ணிய க்ஷேத்திரத்திற்கு வந்திருக்கையிலே சுவாமிகள் ஒருநாள் கோவர்த்தன கிரியைப் பிரதட்சிணம் பண்ணி வந்தார்.
கார்வண்ணனை கருத்தினில் வைத்தவராய் மலையை வலம் வந்துகொண்டிருக்கையில் பசியும் களைப்பும் அதிகரித்துவிட்டன. மழையும் வந்து சுவாமிகளை முற்றிலும் நனைத்துவிட்டது.
அதுபோழ்ந்து இவரை அழைக்கின்ற குரல் ஒன்று காதில் விழுந்தது. கூவி அழைத்த அன்பன் இவருக்கு ஆகாரம் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டே நெடுந்தூரம்   ஓடி வந்து அணுகினான்.
இது தெய்வாதீனமோ என்று வியந்து ஆராய்ந்தறிதல் பொருட்டு சுவாமிகள் விரைந்து ஓட ஆரம்பித்தார். அம்மனிதனும் ஒரு மைல் தூரம் பின்பற்றி ஓடி வந்து ஆகாரத்தை ஏற்குமாறு பணிந்து விண்ணப்பித்தான். சுவாமிகளும் போஜனம் பண்ணினார். அவரது உதரக்கனல் ஒடுங்கவே அம்மனிதனும் வனத்தினுட் சென்று மறைந்துபோய்விட்டான்.
வனாந்திரத்தில் நிகழ்ந்த இந்த அற்புத நிகழ்ச்சியை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கியவாறே சுவாமிகள் கண்ணனது கருணையைப் புகழ்ந்து வாழ்த்தினார்.
பவ ஆஹாரி பாபா:
அக்காலத்தில் காஜிப்பூர் என்னுமோர் ஊரிலே யோகி ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் உணவு ஏற்பது வழக்கம். அதலால் அவரை ‘பவ ஆஹாரி பாபா’ என்று அழைத்து வந்தார்கள். ‘காற்றைப் புசித்து வாழும் பெரியார்’ என்பது அப்பெயரின் கருத்து. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மாண்பனைத்தும் பவ ஆஹாரி பாபாவுக்கு முன்னமே தெரிந்திருந்தது. ஆகையால் அவருக்குகந்த சிஷ்யரை அன்புடன் வரவேற்றது இயல்பே.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பாபாஜியின் அரும்பெரும் விஷயங்களைப் பற்றிய பேச்சின் வாயிலாக அவரின் ஞானமுதிர்ச்சியும், மேன்மையும் அறிந்துகொண்ட சுவாமிகள் உலக நன்மையின்பொருட்டு ஜன சமூகத்துடன் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ளலாகாது என்று கேட்டார். பாபாஜியும், “ஏன்? தேகத்தின் உதவியின்றி ஒரு மனம் மற்றொரு மனத்தைக் கவராதோ?” என்று திருப்பிக் கேட்டார்.
இதைக் கேட்டப் பின்பு விவேகானந்தர் ஓர் அரிய முடிவுக்கு வந்தார். உலக மக்களுக்கிடையிலே உபன்யாசங்கள் வாயிலாக அருள்விருந்தை வழங்கியவர்களைவிட அதிகமாக மௌனநிலையில் இருந்தவர்களே வழங்கியிருக்கிறார்கள். இது எல்லாருக்கும் விளங்குவதில்லை யென்றாலும் இது தான் உண்மை.
பாபாஜி பயின்று பூர்த்தி பண்ணியிருந்த சாதனங்களையெல்லாம் தாமும் ஏன் பயிலலாகாது என்று சுவாமிகள் சிந்தித்தார். தாம் யோக தீட்சை பெற விரும்புவதாக பாபாஜியிடம் தெரிவிக்கலாமென்று அவரது குகைக்குப் போனார். ஏனோ நடக்க கால் வரவில்லை. “நம் இறைவன் யார்? பரமஹம்ஸரா? பாபாஜியா?” என்று ஏக்கமுறுவாராயினர்.
மருட்சிக்கிடையே ஜோதியொன்று தென்பட்டது. பரிந்த முகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டார்! அதன் பிறகு சுவாமிகள் பவ ஆஹாரி பாபாவிடம் ஒரு தோழன் போல நடந்துகொண்டாரேயொழிய அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளத் திரும்பக் கனவிலும் கருதவில்லை.
ஹிமாலய பர்வதம்:
ஹிமாலய பர்வதத்துக்கு யாத்திரை பண்ண விரும்பிய சுவாமிகள் உத்தர திசையை நோக்கிப் புறப்பட்டார். மலையின் அடிவாரத்தில் ஆங்காங்கு தவம் புரிந்துகொண்டிருந்த சகோதர சிஷ்யர்கள் அகண்டானந்தர், சாரதானந்தர் ஆகியவர்களைத் தற்செயலாகக் கண்டு மகிழ்ந்தார்.
சுமார் இருநூறு மைல் கடந்து பத்ரிகாஸ்ரமத்தை அணுகும்போது அகண்டானந்தருக்கு கடுஞ்ஜுரம் வந்துவிட்டது. அனைவரும் கீழ்நோக்கி வந்தனர். ஹிரிஷீகேசம் வந்தானதும் அகண்டானந்தருக்கு நோய் சொஸ்தமாயிற்று. ஆனால் விவேகானந்தருக்கு கடும் ஜுரம் வந்துவிட்டது.
என்ன செய்வதென்று அறியாமல் சகோதர சிஷ்யர்கள் ஏங்கியிருக்கையில் சன்னியாசி ஒருவர் திடீரென்று வந்தார். தேனில் ஏதோ மாத்திரையைக் குழைத்து சுவாமிகளது வாயினுள் செலுத்தினார்.
சிறிது நேரத்தில் அவர் தெளிவு பெற்றெழுந்து, “நான் மெய்மறந்து கிடந்தபோது உயர்ந்த அனுபவம் ஒன்று காணலானேன். நான் இவ்வுலகில் சாதிக்க வேண்டியது பல உள. ஏகாந்த குகை வாசம் நாடுவதெல்லாம் வீணே. நான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தின் பொருட்டு உலகில் உலவும்படி ஏதோ ஒரு சக்தி என்னை ஏவுகிறது” என்று சகோதர சிஷ்யர்களிடம் கூறினார்.
நல்ல தேகவலிவு பெற்றபின், அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற நாடுகளை காணத் தம் போக்கில் போனார்.
டெல்லி:
தென் திசையாகப் பிரயாணம் பண்ணி சொற்ப நாளில் டெல்லி போய் சேர்ந்தார். பார்த்தவிடமெல்லாம் பழைய கோட்டைகளும், மாளிகைகளுமே காணப்பட்டன. எத்தனையோ அரசர்களுக்குத் தலைமைப் பட்டணமாய்த் திகழ்ந்த இடம் இது.
முடி சார்ந்த மன்னர்களும் முடிவிலே ஒரு பிடி சாம்பலாய்ப் போய்விட்டார்கள் என்பதையே ஆங்காங்கு காணப்பட்ட குட்டிச் சுவர்களும் பாழுங்கட்டிடங்களும் ஞாபகமூட்டின.
ராஜபுதன சமஸ்தானம்:
டெல்லியினின்று ராஜபுதன சமஸ்தானங்களில் ஒன்றாகிய ஆள்வார் ராஜ்யத்தில் பிரசன்னமானார். அங்கே கடைத்தெருவிலேயிருந்த தர்மசாலை ஒன்றின் மேல் மாடியிலே அவர் தங்கினார்.
முகம்மதியப் பண்டிதர் ஒருவரும், டாக்டர் ஒருவரும் இவருக்கு முதன்முதலாக பழக்கம் ஆனார்கள். முகம்மதியர்கள் பலர் இவர் மீது பேரபிமானங்கொண்டு, தங்களுடைய இல்லங்களுக்கு இவரை அழைத்துச் சென்று இந்துக்களது ஆசாரத்துக்கு ஒப்ப உணவு சமைத்தளித்து உபசரித்தார்கள்.
ஆள்வார் சமஸ்தானத்தில் திவானாயிருந்த  சேனாதிபதி ராமசந்தர்ஜீ சுவாமிகளைத் தம் வீட்டுக்கு அடிக்கடி வரவேற்று நெருங்கி பழகி வந்தார். ஒரு நாள் திவான், ஆள்வார் மகாராஜாவுக்குத் தெரிவித்தார். அக்கோமகனும் ஒரு தினம் பிரதானிகள் புடைசூழ, சுவாமிகளது இருப்பிடம் சென்று பணிவுடன் அவரை வணங்கினார்.
கேத்திரி மகாராஜா:
பிறகு நெடுகப் பிரயாணம் பண்ணிக்கொண்டு ஜெய்ப்பூர், ஆஜ்மீர் போன்ற ஊர்களை பார்த்துவிட்டு கடைசியாக ஆபுமலைக்குச் சுவாமிகள் போய்ச்சேர்ந்தார். 13வது நூற்றாண்டிலே அளவிலாத தனம் செலவிட்டு அம்மலையின்மீது கட்டப்பட்டிருந்த ஜைன கோயிலின் அழகையும், சிற்ப அமைப்பையும் கண்டுகளித்தார்.
கேத்திரி மகாராஜா அம்மலைக்கு யாத்திரை வந்திருந்தார். சுவாமிகள் சிரமபரிகாரம் செய்துகொள்ள ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அரசரின் காரியதரிசி இவரை சோம்பேறி என்றெண்ணி பரிகாசம் செய்தற்பொருட்டு சுவாமிகளோடு உரையாட ஆரம்பித்தார். ‘இவர் சாமானியமானவர் அல்லர்’ என்பதை அறிந்து மகாராஜாவிடம் அறிமுகம் செய்துவைத்தார். கேத்திரி மகாராஜா படித்தவர்; ஈசுவர பக்தியுடையவர்.
ஆங்காங்கு பரிபக்குவம் அடைந்தவர்களைக் காணுந்தோறும் அவர்களுக்கு தீட்சை முதலியன தந்து சிஷ்யர்களாக அவர்களைச் சுவாமிகள் ஏற்று வந்தனர். ஆயுள் பரியந்தம் கேத்திரிக் கோமானானவர் சுவாமிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்திருந்தார். அமெரிக்காவினின்று சுவாமிகள் விடுத்த மேலான கருத்துக்களடங்கிய கடிதங்களில் சில இம்மன்னருக்கு எழுதப்பட்டனவாம்.
இலிம்படி, ஜுனாகாட் மற்றும் சுதாமபுரி சமஸ்தானம்:
அதன் பிறகு அருள்வேந்தர் கூர்ஜர மாகாணத்தில் பல இடங்களில் பிரசன்னமானார். இலிம்படி மகாராஜா அரண்மனையைச் சார்ந்த பண்டிதர்களுடன் சிலருடன் சுவாமிகள் சொற்பநாள் அமர்ந்திருந்தார்.
பிறகு ஜுனாகாட் சமஸ்தானத்துக்கு அவர் செல்வாராயினர். அங்கே அரசருடனும், பிரமுகர்களுடனும் நெருங்கிப் பழகினது பேருக்கும், புகழுக்கும் அன்று. சமுதாயத்தில் பொறுப்பு மிக்கவர்களை சீர்த்திருத்திவிட்டால் அவர்களின் மூலம் ஆயிரக் கணக்கான பிரஜைகள் நன்மையடைவார்கள் என்பதே அவரது நோக்கம்.
கூர்ஜர மாகாணத்தில் சுதாமபுரி ராஜ்யம் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு மகாராஜாவுடன் ஒன்பது மாதகாலம் தங்கியிருந்து பண்டிதர்களுடன் கூடி வேதங்களையும், பல சாஸ்திரங்களையும் ஆராயந்தார். இந்த ஆராய்ச்சி பிற்காலத்தில் சுவாமிகளுக்கு மிகவும் பயன்பட்டது.
பம்பாய், பூனா: 
சுவாமிகள் பிரவேசித்த பட்டணங்களில் பிரதானமானது பம்பாய் நகரம். அவர் இருந்தது சில நாட்களே எனினும் பிரபலமானவர்கள் பலரைச் சந்தித்து பேச அவருக்குத் தருணம் விரைவில் வாய்த்தது.
சுவாமிகள் பின்னர் பூனாவிற்கு விஜயம் செய்தார். மகாபண்டிதரும், தேசாபிமானியெனவும் நாடெங்கும் பிரசித்தி பெற்றிருந்த பாலகங்காதர திலகருடன் சுமார் பத்து நாட்கள் தங்கியிருந்தார்.
நான்கு வேதங்களையும் கசடறக் கற்றவர் திலகர் பெருமான். பெல்காமினின்று தென்முகமாகப் புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தார்.
மைசூர் சமஸ்தானம்:
மைசூர் சமஸ்தான திவான் சேஷாத்ரி ஐயர் சுவாமிகளை தமதில்லத்திலேயே அதிதியாக அமர்ந்திருக்கச் செய்தார். சில நாட்களில் மகாராஜா ஸ்ரீ சாமராஜேந்திரா உடையார் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுவாமிகளின் பேரறிவையும், தேசாபிமானத்தையும் காணலுற்ற மகாராஜாவுக்கு அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தன.
அமெரிக்காவில் நடைபெறுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு சுவாமிகள் விஜயம் செய்ய வேண்டுமென்றும், அதற்கான பொருளுதவி புரிய தாம் ஆயத்தமாயிருப்பதாகவும் உடையார் தெரிவித்தார். ‘ஈசுவர சங்கற்பப்படி ஆகுக’ என்று சுவாமிகள் பகர்ந்துவிட்டு ரயில் மார்க்கமாக கேரளம் சென்றார்.
ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம்:
கொச்சி, திருவனந்தபுரம் வழியாக மதுரை மார்க்கமாய் ராமநாதபுரம் போய், ராஜா பாஸ்கர சேதுபதிக்கு அறிமுகம் ஆனார்.
பக்திமானாகிய பாஸ்கர சேதுபதி சுவாமிகளின் மகிமைகளை அதிவிரைவில் அறிந்துகொண்டார்.
அவசியம் அமெரிக்கா போக வேண்டுமென்றும், அதற்காக தம்மால் இயன்ற பணிவிடைகளை செய்யத் தயாராக இருப்பதாக ராஜா பகர்ந்தார்.
சுவாமி உறுதிமொழி எதுவும் கூறாது, ‘இறைவனது திருவுளப்படி ஆகுக’ என்று நவின்றுவிட்டு ராமேஸ்வரம் ஏகினார்.
கொஞ்ச நாட்கள் விவேகானந்தர் வசித்திருந்தாலும் இவ்வூரை ‘தக்ஷிணகாசி’ என்றே சொல்லத்தகும் என்று போற்றினார்.
கன்னியாகுமரி:
கடைசியாக பாரதத் தாயின் திருவடியான கன்னியாகுமரிக்கு எழுந்தருளினார். இங்கே அவர் மனத்தகத்தே எழுந்த உயர்ந்த எண்ணங்களைக் கூறி முடியா.
வடக்கே 2000 மைல்களுக்கு அப்பாலுள்ள பத்ரிகாஸ்ரமத்தினின்று தென்கோடியிலிருக்கும் குமரிமுனை பரியந்தம் உள்ள பிரதேசம் அனைத்தும் சேர்ந்து ஒரே திருப்பதியென அவருக்குத் தென்பட்டது. குமரியில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஜகன்மாதாவை வாழ்த்தி வணங்கிவிட்டு சுவாமிகள் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
புதுச்சேரி:
சுவாமிகள் புதுச்சேரி போய் சேரும் வரை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. ஆனால் வழியெங்கும் தமிழ்நாட்டின் மாண்புகளை நேரே கண்டறிந்தார். சுவாமிகள் புதுச்சேரியில் வசித்திருந்தபோது புராதான வைதிக பண்டிதர் ஒருவருடன் நெடிய சம்வாதம் ஒன்று நடைபெற்றது.
வைதிக தர்மத்தில் எந்தவிதமான சீர்திருத்தமும் செய்யலாகாதென்றும், ஜாதி வேற்றுமைகள் இருக்கத் தான் வேண்டுமென்றும், இந்துக்கள் வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் பண்ணலாகாதென்றும், ஆங்கிலேயர்களுடன் பழகலாகாதென்றும் அப்பண்டிதர் வாதாடினார்.
அவருடைய கொள்கைகளெல்லாம் பண்டைக்காலத்துக்கே உரியன என்பதும், வைதிகமானது உள்வலிவை இழக்காமலே காலநிலைமைக்கு ஏற்றவாறு மாறவல்லது என்று சுவாமிகள் வாதாடினார்.
மேலும், அப்போதைக்கப்போது அவதரித்துள்ள ஆசாரிய புருஷர்கள் அங்ஙனமே செய்து சாதித்திருக்கிறார்கள் என்பதும், கால வேறுபாட்டிற்கு ஏற்றவாறு இந்துக்கள் வாழ்வு முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதும், அவ்வாறு செய்யாவிடில் உலக முன்னேற்றத்தில் இவர்களுக்கு இடமில்லாது போய்விடுமென்பதும் சுவாமிகளின் கடைந்தெடுத்த கொள்கையாகும். பண்டிதரின் பழங்கொள்கைக்கு அனுதாபம் காட்டினார்; ஆனால் ஆதரவு கொடுக்க சம்மதிக்கவில்லை.
சென்னை:
சென்னையில் சுவாமிகள் எழுந்தருளுதற்கு சில நாட்களுக்கு முன்னரே பேராற்றலுடைய பெரியார் ஒருவர் வருகிறார் என்ற செய்தி ஆங்கு எட்டியது. கல்லூரிகளினின்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெருங்கூட்டமாக அவரைக் காணச் சென்றார்கள்.
அமெரிக்காவில் கூடுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு இந்து மதத்தின் பிரதிநிதியாகப் போகத் தகுந்தவர் நம் சுவாமிகள் தான் என்று சென்னை வாசிகளுள் பலர் தீர்மானித்தார்கள்.
ஊக்கம் ததும்பிய மாணவர்கள் உடனே வீடுவீடாய்ச் சென்று இரண்டு மூன்று நாட்களில் பிரயாணச் செலவுக்காக ரூபாய் ஐந்நூறு வசூலித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். ‘பணத்தைக் கையாளவேண்டி வந்துவிட்டதே’ என்று சுவாமிகள் சிறிது தயங்கினார்.
ஐதராபாத்:
ஐதராபாத்தை ஆளும் நைஜாம் உட்பட அறிஞர்கள் பலர் சுவாமிகளை ஐதராபாத்திற்கு விஜயம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி அழைத்தனர். சுவாமிகளும் அதற்கிசைந்து ஆங்கு சென்றபோது அமெரிக்காவுக்குப் போக வேண்டிய அவசியத்தைப் பற்றி அவ்வூர்ப்பெருமக்களும் பலவாறு எடுத்தியம்பினர்.
குருதேவர் மற்றும் அன்னையாரின் அனுமதி:
ஒருவாறு இசைந்தவராக சுவாமிகள் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தார்.
தாம் இருக்குமிடம் இன்னதென்று தமது குரு சகோதரர்களுக்குத் தெரிவிக்காமலேயே இருந்தார் சுவாமிகள். இப்பொழுது அதை மறைக்க முடியவில்லை.
சுவாமி சாரதானந்தருக்கு அவர் ஒரு கடிதம் எழுத வேண்டியதாயிற்று. தாம் அமெரிக்கா போய் வருவதைக் குறித்து அன்னை சாரதா தேவியார் என்ன அபிப்பிராயம் கொள்கிறார் என்பதை அறிந்து தமக்கு தெரிவிக்க வேண்டுமென்பது அக்கடிதத்தின் உட்பொருளாகும்.
இப்படி இருக்கையில் ஒருநாள் தம்மை ஆட்கொண்ட பெம்மான் குருதேவர் ராமகிருஷ்ணர் திடீரென்று தம் எதிரே பிரசன்னமாவதைப் பார்த்தார். தம்மைப் பின்பற்றும்படி சைகையால் அன்னவர் அறிவித்துவிட்டுச் சமுத்திரத்தினுட் சென்று மறைந்தார்.
இந்த அருட்காட்சியைப் பெற்ற பின்பே, புறநாடு செல்வதைப் பற்றிய எண்ணத்தை அவர் ஊர்ஜிதப்படுத்தினார்.
தமக்கு உத்தரவு கிடைத்துவிட்டதென்று கருதி விவேகானந்த சுவாமிகளும் வெளிநாடு புறப்படச் சம்மதம் கொடுத்து சென்னை அன்பர்களைத் திருப்திப்படுத்தினார்.
இதற்குள்ளாக அன்னை சாரதாதேவியாரின் பூரண அனுமதியும், ஆசியும் அடங்கிய மறுமொழிக் கடிதமும் வந்து சேர்ந்தது.

(விவேகானந்தர் மீது பற்று கொண்ட அன்பர்களால் விவேகானந்தரின் 150 வது பிறந்த தினத்தை ஒட்டி தொடங்கப்பட்ட இணையம் விவேகானந்தம்-150 ல் இருந்து...

No comments:

Post a Comment