Monday, June 13, 2011

ஒரு ஆன்மீக உண்மையைத் தேடி . . .




கி.பி.2007 ஆம் ஆண்டு முதல் திரு அண்ணாமலை கிரிவலம் சென்று வருகிறேன்.2008 ஆம் ஆண்டின் இறுதியில் கிரிவலம் என்ற பெயரில் ஒரு புத்தகம் சென்னையைச் சேர்ந்த கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருந்தது.அதை வாசித்து,குறிப்பெடுத்துக்கொண்டேன்.அதில் குறிப்பிடும்படியான விபரங்கள் இல்லை;சில மாதங்களில் அந்த புத்தகத்தை வேண்டியவர் எவரோ வாங்கிச்சென்றவர் திருப்பித் தரவில்லை;யாரிடம் கொடுத்தேன் என்ற ஞாபகமும் எனக்கு இல்லை;புத்தகத்தை எனக்குத் தந்தவர் நச்சரிக்க ஆரம்பித்ததும்,நானே வேறொரு கிரிவலப்புத்தகம் வாங்கித் தர முடிவு செய்தேன்.ஒரு மாதத்தில் கிரிவலம்,கிழக்குப் பதிப்பகம் வெளியீடு ஒன்றை வாங்கினேன்.அதில் இருக்கும் தகவல்களும்,முதல் எனக்கு இரவலாக வந்த கிரிவலம் புத்தகத்தில் இருக்கும் தகவல்களும் சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தது.இந்த இரண்டாவது புத்தகத்தில் இருந்த அரிய ஆன்மீகக் குறிப்புதான்,துவாதசி அன்னதானம்!



காசியில் ஒருவருக்கு செய்யப்படும் அன்னதானமானது மற்ற இடங்களில் 1,00,000 பேருக்கு செய்யப்படும் அன்னதானத்தை விட உயர்வானது;

திரு அண்ணாமலையில் ஒருவருக்கு ஒரு சாதாரண நாளில் செய்யப்படும் அன்னதானமானது,காசியில் 1,00,00,000 பேர்களுக்குச் செய்யப்படும் அன்னதானத்தை விட உயர்வானது.

அதே சமயம்,துவாதசி திதியன்று திருஅண்ணாமலையில் ஏழை ஒருவனுக்குச் செய்யப்படும் அன்னதானமானது,அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க செய்த அன்னதானத்துக்குச் சமமான புண்ணியத்தைப் பெறுகிறார்.மேலும்,இறவாத நிலை எனப்படும் முக்தியை அவர் பெறுகிறார் என சிவமஹா புராணத்தில் தெரிவிக்கிறது என்பதே அந்த புத்தகத்தில் இருந்த அரிய குறிப்பு.



நான் தான் ஜோதிடராச்சே! துவாதசி திதி வரும் நாட்களைத் தேடினால் ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை வருவதை கண்டறிந்தேன்.அதற்கான பட்டியலை நமது ஆன்மீகக் கடலில் 2009 முதல் வெளியிடத் துவங்கியிருக்கிறேன்.பி.எஸ்.பி.ஐயா அவர்களின் விடியல் ஜோதிட மாத இதழிலும்,சென்னையிலிருந்து வெளிவரும் ஜீவ ஜோதிடம் மாத இதழிலும் இதுபற்றி ஜோதிடக் கட்டுரை எழுதி வெளியிட்டேன்.



மறுபுறம் எனது ஜோதிட குருநாதர்கள்,ஆன்மீக வழிகாட்டிகள்,சிவனடியார்களிடம் இந்த குறிப்பின் நம்பகத் தன்மையை விசாரித்தேன்.பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பது தெரியவில்லை;இந்த விசாரணையில் ஓராண்டு ஓடிப்போனது.இந்த ஓராண்டில் ஒரு துவாதசி திதி வரும் நாளன்று எனது ஜோதிட வாடிக்கையாளர்கள் 12 பேருடன் அண்ணாமலைக்கு வருகை தந்து மதியம் மட்டும் ஆளுக்கு மூன்று அல்லது நான்கு பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டோம்.அப்படி அன்னதானம் செய்தவர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் பொருளாதாரச் சமநிலையும் நிம்மதியான வாழ்க்கையையும் பெற்றனர்.அப்படி அவர்கள் பெற்றவிபரத்தை,அந்த 12 பேர்களையும் கண்காணித்தவாறும்,அவர்களிடமே பலமுறை விசாரித்தும் உறுதி செய்து கொண்டேன்.

ஓராண்டு கடந்தப்பின்னர்,எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமான பென்னிங்கடன் நூலகத்தில் சிவபுராணம் என்ற பெயரில் இருக்கும் 19 புத்தகங்களையும் அடுத்த 3 மாதங்களில் வாசித்து முடித்தேன்.அதில் ஒரே ஒரு பழமையான புத்தகத்தில் மட்டுமே மேற்கூறிய துவாதசி அன்னதானக்குறிப்பு இருந்தது.ஆக,இந்த குறிப்பு உண்மை என முடிவுக்கு வந்தேன்.

2010 பிறந்தது.இருப்பினும் துவாதசி திதியன்று அண்ணாமலை அன்னதானம் பற்றிய நிஜத் தகவல் தேடுதல் வேட்டை குறையவில்லை;அண்ணாமலையில் இருக்கும் பூஜாரிகளிடமும் இது பற்றி கேட்டேன்.இருக்கலாம்.என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

மீண்டும் எங்கள் ஊரில் இருக்கும் 84 வயது பெரியவர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்தேன்.அவர் தினமும் சிவாலயம் செல்பவர்;

இதுபற்றிக் கேட்டதும்,உன் வயது என்ன? எனக் கேட்டார். 36 முடிந்தது என்றேன்.நீ சிவனடியார் ஆகப் போகிறாயா? எனக் கேட்டார்.அதற்குரிய தகுதி எனக்குக் கிடையாது.நான் வெறும் ஜோதிடர்;இப்படி ஒரு அன்னதான ரகசியம் இருப்பது நிஜமா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.என்றேன்.அதற்கு நான் விசாரித்து சொல்லுகிறேன்.என்றார்.நானும் நன்றிங்க அய்யா என்றேன்.இன்று வரையிலும் 13.6.11 வரையிலும் விசாரித்துச் சொல்லுகிறேன் என்றே அந்த பெரியவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.



இந்நிலையில் 12.6.11 ஞாயிற்றுக்கிழமையன்று துவாதசி திதி வந்தது.ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் அன்னதானம் செய்தால் போதுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.இந்த கேள்வியும் 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலை கிரிவலம் செல்லும்போது,கிரிவலப்பாதையில் இருக்கும் எம லிங்கத்தை தரிசித்ததும் எழுந்தது.இந்தக் கேள்வியை எனது டைரியில் குறித்துக்கொண்டேன்.



12.6.11 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணிக்குள்ளும்,மதியம் 3 மணிக்குள்ளும்,இரவு 8 மணிக்குள்ளும் அண்ணாமலையில் அன்னதானம்,அதுவும் துவாதசி திதி அன்னதானம் செய்தே தீருவது என முடிவெடுத்து எனது ஜோதிட வாடிக்கையாளர்கள் சுமார் 50 பேர்களிடம் போனிலும்,நேரிலும் விளக்கி அனைவரையும் அண்ணாமலைக்கு வரும்படி வேண்டினேன்.

12.6.11 அன்று என்னையும் சேர்த்து மூன்றே மூன்று பேர்கள் அண்ணாமலைக்கு வந்தடைந்தனர்.(இவர்களில் இருவர் நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் வாசகர்கள்!!!)

காலையில் சரியாக 8.20 கிழக்குக் கோபுர வாசலில் அன்னதானம் முடித்துவிட்டு,கிரிவலம் புறப்பட்டோம்.மாலை 2.30க்கு ஈசான லிங்கத்தினை வந்தடைந்தோம்.ஈசான லிங்கம் பூட்டியிருந்தாலும் நான்கு பாட்டிகள் யாசகம் கேட்டவாறு அமர்ந்திருந்தனர்.எங்களில் இருவரை விரைந்து அனுப்பி ஐந்து மதிய உணவுப்பொட்டலங்களை வாங்கி அந்த நான்கு பாட்டிகளுக்குத் தந்தோம்.(ஆளுக்கு ஒன்று)எங்களது துவாதசி திதி அன்னதானம் மதியம் செய்யக் காரணமாக இருந்த அந்த பாட்டிகளை மனதார கையெடுத்துக் கும்பிட்டேன்.

கிரிவலப் பாதையில் இருக்கும் எட்டு லிங்கங்களை வழிபட,உரிய கோவிலுக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது இரண்டு அல்லது ஒரு அண்டங்காக்கைகள்தான்.இந்த ஒரு சூட்சும அடையாளமே போதும் எனக்கு! எனது அப்பா அண்ணாமலையாரே துவாதசி திதி அன்னதானம் நிச்சயமாக எங்கள் நால்வருக்கும் முக்தி தரும் என்பதைக் குறிப்பால் உணர்த்திவிட்டார்.மாலை 5.30 முதல் 6 மணிக்குள் அண்ணாமலையாரை இராகு காலத்தில் தரிசனம் செய்துவிட்டு,

இரவு 8.10க்கு மீண்டும் கிழக்குக்கோபுர வாசலில் தலா ஒருவருக்கு அன்னதானம் செய்துவிட்டு வீடு திரும்பினோம்.



ஆக,இப்படி ஏராளமான ஆன்மீக,ஜோதிட ஆராய்ச்சிகளை இன்னும் தொடர்ந்து செய்துவருகிறேன்.அவற்றில் நிரூபணம் ஆகுபவைகளை ஆன்மீகக்கடலில் வெளியிட்டு வருகிறேன்.

6 comments:

  1. நான் ஒன்றை கொடுத்தால் நீ ஒன்றை கொடுக்க வேண்டும். இது தான் ஆன்மிகமா? இதன் பேர் வியாபாரம். எதையும் எதிர்பார்க்காமல் இறைவனிடம் மனதை செலுத்துவதே,வேண்டுதல் அற்ற நிலை தானே ஆன்மிகம்? ஆயிரம் முறை மந்திரம் சொன்னால் வீடு கிடைக்கும் ,ஸ்கூட்டர் ,கார் கிடைக்கும் ,துவடசியன்று அன்னதானம் செய்தால் பண வசதி ஏற்படும் . வாழ்க்கையில் செட்டில் ஆயிடலாம் என்று ஏன் எல்லாரையும் முட்டாள் ஆக்கி கொண்டிருக்கிறாய் ஆன்மிக கடலே? நான் கிரிவலம் போறதை தப்பா சொல்லலே. இது வேணும்,அது வேணும்னு வணிக நோக்கத்தோட போவாதீங்க. மோட்சத்தை எதிர்பார்ப்பதும் வியாபார நோக்கமே.அவன் அருளாலே அவன் தாள் வணங்க என்று கற்று கொள்ள போறீங்க ஆன்மிக கடல்?- sivasiddan

    ReplyDelete
  2. முகமறியாத சிவசித்தனே, உனக்கு வேண்டுமானால் வீடு,கார்,கம்யூட்டர்,பேங்க் பேலன்ஸ் என சகல வசதிகளும் இருக்கலாம்.ஆனால்,ஒவ்வொரு மனிதனுக்கும் பொருளாதாரச் சுயச்சார்பை எட்டவதே வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது.அதற்கு உழைப்புதான் முதல் தேவை.அதேசமயம்,கொஞ்சம் பக்தியும்,கொஞ்சம் தானம் தரும் எண்ணமும் தேவை.இந்த கொஞ்சம் பக்தியும்,கொஞ்சம் தானமும் செய்பவருக்கு விரைவான செல்வ நிலையை எட்ட உதவும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.
    அதுவும் மறுபிறவியில்லாத முக்தி என்பதை ஒருவன் அடைய எத்தனை பிறவி எடுத்து,எத்தனை ஆன்மீகப் படிகளைத் தாண்டி,எத்தனை ஆன்மீகச் சோதனைகளைக் கடக்க வேண்டும் தெரியுமா?
    (நீங்கள் ஒரே ஒரு நாள் எதுவும் சாப்பிடாமலும்,எதுவும் அருந்தாமலும் இருந்து பாருங்கள்;தெரியும்)
    இந்த துவாதசி அன்னதானம் செய்பவருக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.உங்களது நாத்திக எண்ணப்படியே இது பொய் என வைத்துக்கொள்வோம்.இதன் மூலமாக தமிழ்பேசுவோரிடம் அன்னதானம் செய்யும் பழக்கத்தை இது வளர்க்குமில்லையா?

    வாழ்க்கை வசதிகளை அடைந்தப்பின்னரே எவருக்கும் முக்தி,மோட்சம் செல்லும் எண்ணம் வரும்.இப்படிச் செய்வது வணிக நோக்கம் அல்ல;

    ReplyDelete
  3. திருமாறன்June 14, 2011 at 1:46 PM

    சாதாரண மனிதனின் அடிப்படைத்தேவைகளுள் முக்கியமானது உணவு. அத்தேவை நிறைவேறினால்தான் அடுத்த நிலைக்கு (லௌகீகம்/ஆன்மீகம்) முயற்சிக்கவே முடியும். அன்னதானம் செய்வதும், செய்யத்தூண்டுவதும் நல்ல அறப்பணி. இலக்கு நல்லதாயிருக்கும்போது, பெரும்பான்மையோரை அதை நோக்கித் திருப்ப, சில சிறு ஆசைகளைக் காட்டுதல் தவறல்ல. மேலும், நாளடைவில் இச்சிற்றிலக்குளை புறக்கணித்து விட்டு பேரிலக்கையடைய இறைவன் அருள் புரிவான் என்பது எனது கருத்து. நான் கூட 12/06/11 அன்று திருவண்ணாமலை வந்து தங்களுடன் இப்பணியில் இணைய உத்தேசித்திருந்தேன். முடியவில்லை. நற்பணிக்கு வாழ்த்துக்கள். படைப்புகளுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அன்னதானதுக்கோ ,மந்திர ஜபதுக்கோ நான் எதிரியல்ல. பலன் கருதி பக்தி செய்யாதீங்க என்று சொன்னால் நாத்திகவாதி ஆகிவிடுவேனா?அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சொல்லியும் நீங்க புரிந்து கொள்ள வில்லையென்றால் என்ன செய்வது? திருமாறன் அவர்களின் பதில் பண்பட்டதாக இருக்கிறது. ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைந்தவர்களின் நிலை இப்படிதான் இருக்கும். -sivasiddhan

    ReplyDelete
  5. அன்னதானம் செய்தல் புண்ணியம் உண்டு அனால் நீங்கள் சொல்வது உண்மையாக தெரியவில்லை

    ReplyDelete
  6. //வாழ்க்கை வசதிகளை அடைந்தப்பின்னரே எவருக்கும் முக்தி,மோட்சம் செல்லும் எண்ணம் வரும்.இப்படிச் செய்வது வணிக நோக்கம் அல்ல;//
    முட்டாள்தனமான வாதம்.

    ReplyDelete