லஞ்சம் கொடுத்ததை ஊரறிய தெரிவிக்கலாம்: இணையதளம் அறைகூவல்
பெங்களூரு : லஞ்சம் கொடுத்ததை தெரிவிக்க அச்சமா? இனி வேண்டாம் என்கிறது ஜனகிரகாவின் இணையதளம். லஞ்சத்தை எதிர்த்து பிரசாரம் செய்யும் வகையில், பெங்களூரில் சமீபத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், யார் வேண்டுமானாலும் லஞ்சத்தை பற்றிய தங்களது அனுபவங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
"ஜனகிரகா' என்ற அமைப்பின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், www.ipaidabribe.com என்ற முகவரியை திறந்து உள்ளே சென்றால், நான்கு பிரிவுகளின் கீழ் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வாய்ப்பில் லஞ்சம் கொடுத்த அனுபவத்தை பதிவு செய்யலாம். இரண்டாவது பகுதியில், லஞ்சம் கொடுக்காதவர்கள் பதிவு செய்யலாம். மூன்றாவது கொடுக்கப்பட்டிருக்கும் பகுதியில், லஞ்சம் கொ டுக்க தேவையில்லை என்றும், நான்காவது பகுதியில், நான் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிவிப்பவர்கள், தங்களது கருத்துக்களையும் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து ஜனகிரகா அமைப்பின் நிறுவனர் சுவாதி ராமநாதன் கூறியதாவது: பெருகிவிட்ட லஞ்சத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, லஞ்சத்தை வேரறுக்கும் வகையில் இந்த புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இது பண்டமாற்று சாலை போன்று செயல்படும். சர்ச்சுக்கு போய் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல், லஞ்சம் வாங்கியவரும், லஞ்சம் கொடுத்தவரும் தங்களது கருத்துக்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் சிறு தவறு செய்து, அதிக வெகுமதி பெறுகின்றனர்.அவர்கள் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்ற மமதையில் அவர்கள் அடுத்தடுத்து தவறுகளை தொடர்கின்றனர்.ஆனால் லஞ்சம் பெற்றால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் உணர்ந்தால், கண்டிப்பாக லஞ்சம் வாங்கும்போது யோசிப்பார்கள். ஆனால் இந்த இணையதளம்அரசு ஊழியர்களையும்,தனி நபர்களையும் குறிவைத்து துவங்கவில்லை.லஞ்சத்தை தடுப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு துவக்கியுள்ளோம். இவ்வாறு சுவாதி ராமநாதன் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி துவக்கப்பட்ட இந்த இணையதளத்தில், இதுவரை 109 நாடுகளிலிருந்து 35,000 பேர் தங்களது லஞ்ச அனுபவ கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் மட்டும் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக 535 புகார்களும்,லஞ்சம் கொடுக்காதது குறித்து 100 தகவல்களும் பதிவாகியுள்ளன.
No comments:
Post a Comment