மதுரை : ""தமிழகத்தில் ஸ்கேன் மையங்கள் பெருக, பெருக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது,'' என, மதுரையில் நடந்த கருத்தரங்கில், பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரத்தின் மையக்குழு உறுப்பினர் ஜீவா தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார்.
உறுப்பினர் ஜீவா பேசியதாவது : இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மொத்தமே மூன்று சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 3675 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இவையனைத்தும் கருவில் இருக்கும் குழந்தையின் ஊனத்தை கண்டறிவதற்கு பதிலாக, கருவின் பாலினத்தை தெரிவித்து, பெண் கருக்கொலைக்கு வழிவகுக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகளாக, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.கடந்த மூன்றாண்டுகளாக விருதுநகர், கோவை, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 677 ஆரம்ப சுகாதார மையங்களில் எடுத்த புள்ளி விவரங்களின் படி, மூன்றில் ஒரு பங்கு மையங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. பெண் கருக்கொலைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தின் கீழ் (பி.சி.பி.என்.டி.டி.,) 1994 லிருந்து, இன்று வரை 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிக்கவில்லை என சாதாரண காரணங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளன. ஆனால் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக எந்த ஒரு ஸ்கேன் மையமும், டாக்டரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஈரோட்டில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைவால், கேரளத் திருமண மையங்கள் பெருகிவருகின்றன. அங்கிருந்து பெண் எடுப்பதும் தொடர்கிறது, என்றார்.
மையக்குழு உறுப்பினர் காந்திமதி பேசுகையில்,"" பெண் குழந்தைகள் குறைந்தால், எதிர்காலத்தில் அவர்கள் மீதான பாலின வன்முறை அதிகரிக்கும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பெண் சிசுக்கொலை, கருக்கொலை பிரச்னை தொடர்ந்து வருகிறது. கருமுட்டை தானம், கருப்பை வாடகை, கட்டாய கருக்கலைப்பு... என விஞ்ஞான தொழில்நுட்பங்கள் அனைத்தும், பெண்ணினத்திற்கு எதிராக செயல்படுகிறது,'' என்றார். மாநில அமைப்பாளர் பாலசுந்தரி, டாக்டர் தில்ஷாத், வக்கீல் ரமணி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் ரூபா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment