அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.
அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.கொஞ்சகாலம் முன்பு – சரியாகச் சொல்வதென்றால், காந்தியின் சில கட்டுரைகளைப் படித்துவிட்டு, கிராமப் பொருளாதார மேம்பாடு எப்படி ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். காந்தி முப்பதுகளில் எழுதிய கட்டுரைகள் அவை. கிராமப் பொருளாதார மேம்பாடு என்பது முன்னொரு காலத்தில் சரோஜ் நாராயண் சுவாமி மற்றும் ஜெயா பாலாஜியின் குரல்களில் உதித்து, அதிலேயே மரணமடைந்துகொண்டிருந்த ஒரு விஷயம் என்பது நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் செய்திகளில்கூட இந்தப் பிரயோகத்தைக் காணமுடிவதில்லை.
கடந்தவாரம் புதிய தலைமுறை வார இதழில் மாலன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தியாவின் மக்கள் தொகை முப்பது கோடியாக இருந்தபோது இங்கே எத்தனை பருப்பு உற்பத்தி செய்யப்பட்டதோ, அதே அளவுதான் இன்றைய நூற்று முப்பது கோடி அளவுக்கும் உற்பத்தியாகிறது. தேவை அதிகமாகவும் உற்பத்தி மிகக் குறைவாகவும் உள்ள நிலையில் இறக்குமதி தவிர நாம் செய்யக்கூடியது வேறில்லை. எனவே அதைச் செய்கிறோம். தேவையான அளவில் நாம் சமரசம் செய்வதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிடுகிற பட்சத்தில் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கிவிடுகிறது. துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாயைத் தொடும்போது அது செய்தியாகிறது. சாம்பார் காய்ச்சி, கலந்து அடித்தகையோடு அது மறந்தும் விடுகிறது. விலையேற்றத்துக்கு ஒருவாறு பழகிவிடுகிறோம்.
ஆனால் எந்தளவுக்கு இந்தப் ‘பழகிவிடுதல்’ சாத்தியம்? இதே நூறு ரூபாய் என்பது இருநூறாக ஆகும்போது என்ன செய்வோம்? அப்போது நமது வருமானமும் நூறு சதவீதம் அதிகரித்திருக்குமானால் ஒன்றும் செய்யத் தோன்றாது. ஆனால் நூறு சதவீத வருமான அதிகரிப்பு சாத்தியமா? நூறு சத வருமான அதிகரிப்பு என்பதுதான் சாத்தியமில்லையே தவிர நூறு ரூபாய் துவரம்பருப்பு, இருநூறு ஆகாது என்று சத்தியமாகச் சொல்ல முடியாது. ஆகும். ஏனெனில் நமக்குத் தேவை இருக்கிறது. அதற்கேற்ற அளவு உற்பத்திப் பெருக்கம் இங்கே இல்லை.
காரணம் விவசாயிகளுக்குத் தரப்படும் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது என்பது தொடங்கி, கிராமப்புற மக்கள் விவசாயத்தை விடுத்து மாற்றுத் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து வருவதுவரை பல உண்டு. கிராமப்புற மேம்பாடு என்பது பேச்சளவிலேயே பெரும்பாலும் தேங்கிவிடுவதால் கிராமப்புற மக்கள் வெறுத்துப் போய் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விடுவது அதிகரித்து வருகிறது. செய்வதற்கு ஆளில்லாமல் விவசாயம் குன்றுவதால், வேறு வழியில்லாமல் இறக்குமதி செய்கிறோம். எனவே சொல்லும் விலையைக் கொடுத்தாக வேண்டியுள்ளது. பெட்ரோல் ஆனாலென்ன, பருப்பானால் என்ன? இறக்குமதி என்றால் கண்டிப்பாக ப்ரீமியம் விலைதான்.
இது மட்டும்தான் காரணம் என்றில்லை. செலவுகளைக் கொஞ்சம் குறைப்பதற்காகவாவது கொஞ்சநாள் சுதேசிச் சரக்குகளை மட்டும் உபயோகித்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. தவிரவும் அவசியமே என்றாலும் ஆடம்பரமாகத் தோற்றமளிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தாதிருந்து பார்க்கலாம் என்றும் நினைத்தேன். அதன் முதல் படியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என் காரை விற்றேன். வாரத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தேன். மாதம் எப்படியும் ஐந்து முதல் ஆறாயிரம் ரூபாய் அதற்குச் செலவாகிக்கொண்டிருந்தது. தவிர ஓட்டுநர் சம்பளம் ஆறாயிரம் ரூபாய். [நானே ஓட்டுவதென்றால் தினசரி ஒரு கொலை வழக்குக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.]
ஆனால் கார் எனக்கு அவசியமாக இருந்தது. என் புறநகர் வீட்டிலிருந்து சென்னைக்குள் பேருந்து அல்லது ரயிலில் வந்து செல்வது என்பது மிகுந்த அயற்சியை அளிக்கக்கூடிய விஷயம். வந்து போகலாம். பெரிய விஷயமில்லை. ஆனால் வீடு திரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கத்தான் தோன்றும். இரவெல்லாம் வேலை பார்க்க முடியாது. அதனால்தான் கார் வாங்கினேன்.
காரும் கூடாது, என் வேலையும் கெடக்கூடாது என்று தீர்மானித்தபோதுதான் சென்னைக்குள்ளே குடிமாறி வந்து, காரை விற்று ஸ்கூட்டர் வாங்கினேன். இப்போது என் மாத பெட்ரோல் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே.
இந்தச் சிக்கனம் மூலம் சாத்தியமான சேமிப்பு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. கார் இல்லாததால் நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லை. மாறாக என் கையிருப்பு அதிகரித்தது. எனில், இன்னும் சில விதங்களிலும் இதனைப் பிரயோகம் செய்து பார்க்கலாமே?
காதியில் நான் முதல் முதலில் வாங்கிய பொருள் சோப்பு. அதுநாள் வரை டெட்டால் சோப் தவிர வேறெதையும் பயன்படுத்த விரும்பாதவன் நான். ஒரு சோப் எனக்கு ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு மட்டுமே வரும். மாதம் 150 ரூபாய் சோப்புக்கே போய்க்கொண்டிருந்தது. காதிக்குச் சென்றபோது அபரஞ்சி என்றொரு சோப்பைப் பார்த்தேன். நல்ல கோவிந்தா மஞ்சள் நிற அட்டைப்பெட்டி. உள்ளே டேபிள் வெயிட் மாதிரி கனமாக, பச்சை நிறத்தில் ஓவல் வடிவ அபரஞ்சி. துளசியின் மணம், நிறம், குணம் கொண்டது. விலை ரூபாய் இருபது மட்டுமே. சரி ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்க்கலாம் என்று வாங்கினேன்.
உண்மையிலேயே அபரஞ்சி உள்ளம் கொள்ளை கொள்ளக்கூடிய சோப்பாக இருந்தது. அபாரமான வாசனை கொண்ட ஆரோக்கிய சோப் அது. தவிரவும் ட்யூராசெல் பேட்டரி முயல் மாதிரி அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். குறைந்தது ஒரு சோப் ஒன்றரை மாதங்களுக்கு வருகிறது. ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட சோப் அது.
அடுத்தது வாசனாதி திரவியங்கள். நான் நாலாயிரம் ரூபாய் வீட்டுக்குச் சம்பளமாக எடுத்துவந்த காலத்திலிருந்தே பாடி ஸ்ப்ரே, பர்ஃப்யூம் வகையறாக்கள் இல்லாமல் வெளியே கிளம்பாத ஜில்பான்ஸ் பேர்வழி. விதவிதமான ஸ்பிரேக்கள், அபாரமான விலையில் மட்டுமே கிடைக்கும். ஒரு போதும் அது பற்றிய விமரிசனம் எனக்கு இருந்ததில்லை. யாராவது சுட்டிக்காட்டினாலும் பொருட்படுத்த மாட்டேன். கொசு மருந்துக்காரன் பீய்ச்சிவிட்டுப் போவதுபோல தினமும் குளித்துவிட்டு தேகமெங்கும் பாடி ஸ்பிரேவால் மறுகுளியல் போடாமல் வெளியே கிளம்பமாட்டேன். எனக்கு எப்போதும் வாசனையாக இருந்தாக வேண்டும். அப்போதுதான் எழுத மூட் வரும்.
காதியில் எனக்கு ஜவ்வாது அறிமுகமானது. வெறும் முப்பது ரூபாய். ஒரு சிறிய பாட்டில் ஜவ்வாது [பொடி, க்ரீம் இரு விதமாகவும் கிடைக்கும்.] ஊரைக்கூட்டும் நறுமணம் கமழ்வது. இதுவும் ஒரு மாதம் வரக்கூடியது. தவிரவும் இயற்கையான பொருள். ரசாயன சேர்மானம் இல்லாதது. எனக்கு ஜவ்வாது வாசனை ரொம்பப் பிடித்துவிட்டது. அலுவலகத்தில் முகில் எனக்கு மதன சுந்தர ஜவ்வாது பாகவதர் என்று பட்டப்பெயர் வைத்தான். அந்தக் கிண்டலும் கமகமவென்றே இருப்பதாகப் பட்டது.
அந்தக் காலத்து பாகவதர்கள் உபயோகித்தார்கள் என்பதனாலேயே ஜவ்வாதை நாம் நிராகரிப்பதும், அது பழம்பெருச்சாளிகளின் வாசனைப்பொருள் என்று ஒதுக்கிவைப்பதும் அபத்தம் என்று தோன்றியது. பாகவதர் கிராப்பும் ஜெமினி கணேசன் பேண்ட்டும் மறுஃபேஷனாகிவிட்ட காலத்தில் பாடி ஸ்ப்ரேக்களின் இடத்தில் ஜவ்வாதைத் திரும்பக் கொண்டுவைப்பதில் என்ன பிழை? எனக்குத் தெரிந்து ஒன்றுமில்லை. எனவே ஜவ்வாதுக்கு மாறினேன். இருநூறு ரூபாய் பாடி ஸ்ப்ரே இடத்துக்கு முப்பது ரூபாய் ஜவ்வாது.
இது கொடுத்த பரவசம் கொஞ்சநஞ்சமல்ல. நான் காதியின் காதலனாகிப் போனேன். அங்கே வேறென்னென்ன கிடைக்கின்றன என்று கவனமாக ஆராயத் தொடங்கினேன்.
எதுவும் கிடைக்கும். அண்ணாசாலை காதி பவன் என்பது ஸ்பென்சர் ப்ளாசா, சிடி செண்டர் போலவே ஒரு நல்ல ஷாப்பிங் மால். ஆனால் சுதேசி ஷாப்பிங் மால். உள்ளே நுழையும்போதே நன்னாரி, எலுமிச்சை ஜூஸ்கள், பதநீர்க் கடைகள் இருக்கின்றன. ஆறு ரூபாய் நன்னாரி ஜூஸுக்கு இன்னொரு பெயர் அமிர்தம். ஜில்லென்று அருந்திவிட்டு உள்ளே போகலாம். நிதானமாக எடை பார்த்துவிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதித்துக்கொண்டு[பத்து ரூபாய்.] கடை கடையாக ஆராயலாம். மளிகைப் பொருள்கள் கிடைக்கும் விசாலமான ஹால் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. எளிதாகப் பார்த்து வாங்க வசதியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். எடுத்துப் போட்டுக்கொண்டு போனால் வினாடிகளில் கம்ப்யூட்டர் பில்லிங். கடன் அட்டை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வளாகத்துக்குள்ளேயே சித்த மருத்துவப் பொடிகள், லேகியங்கள், தைலங்கள் போன்றவையும் இருக்கின்றன. விற்பனைப் பிரதிநிதிகள் ஒவ்வொன்றையும் எடுத்து மிக அழகாக விளக்குகிறார்கள்.
உங்களுக்கு ‘பிராண்ட்’ மாயை மட்டும் இல்லை என்றால் காதியில் இன்னதுதான் கிடைக்கும் என்றில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். விதவிதமான செருப்புகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பைகள், பர்ஸ்கள், பெல்ட்கள், முத்து, பவழம், மணி மாலைகள், ஸ்படிகம், ருத்திராட்ச மாலைகள், வேட்டி, துண்டு, சேலைகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள், தலையணை, போர்வைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், சிற்பங்கள், சிலைகள், இருக்கவே இருக்கிறது ஜிப்பாக்கள்.
முற்றிலும் உள்நாட்டில், கிராமப்புறங்களில், பெரும்பாலும் பெண்களால் கைத்தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தயாரிப்புகள் நம்பமுடியாத அளவுக்குத் தரமாகவும் விலை மலிவாகவும் உள்ளன. இவை பரவலாகாததற்குக் காதியும் ஒரு காரணம். அவர்கள் முழு வர்த்தகமாக இதனைச் செய்யவில்லை என்பதனால் பல இடங்களில் கிளைகள் இருந்தும் எல்லா இடங்களிலும் இதே அளவுக்கு எல்லா பொருள்களும் கிடைக்கும்படி வைப்பதில்லை. சென்னை நகரில் உள்ள பல காதி பவன்களில் வெறும் ஜிப்பாக்களும் சபரிமலை சீசன் வேஷ்டிகளும் மட்டும்தான் இருக்கின்றன. அற்புத சோப் அபரஞ்சி அண்ணாசாலை காதி தவிர வேறு எங்குமே இருப்பதில்லை. [லாயிட்ஸ் சாலை காதி பவனில் ஒருவேளை இருக்கலாம். நான் போகவில்லை.]
எனவே புறநகர்வாசிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. சென்னைக்குள்ளே குடியிருப்பவர்கள் மட்டுமாவது இந்த இடத்துக்கு முடிந்தபோது போய்வரலாம். மாதம் ஒருமுறை மளிகைப் பொருள் வாங்கவாவது போவது என்னும் வழக்கத்தை வைத்துக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட வகையில் கணிசமான சேமிப்பு நிச்சயம் சாத்தியமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு பெருநகரத்திலும் அநேகமாக இம்மாதிரி ஒரு பெரிய காதி அங்காடியாவது நிச்சயம் இருக்குமென்று நம்புகிறேன்.
தொலைக்காட்சி திணிக்கும் பிராண்ட் போதையிலிருந்து விடுபட்டு சுதேசித் தயாரிப்புகளை உபயோகிக்கத் தொடங்குவது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.நன்றி:www.writerpara.com/paper/
No comments:
Post a Comment