சிவாலய தெய்வங்களில் தென்முகக் கடவுள், ஆடல்வல்லான் மற்றும் சண்டேசுவரர் ஆகியோர் தெற்கு நோக்கிக் காட்சியளிப்பார்கள்.சண்டேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பார்.சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை,பரிவட்டம் முதலிய சிவபெருமானுக்கு அணிவித்த பொருட்களை சண்டேசுவரர் சன்னதியில் சேர்த்து, “சிவதரிசனப்பலனைத் தர வேண்டும்” என்று அவரைப் பிரார்த்தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமயநூல்களின் விதி.
இதை அறியாத பலர்,தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசுவரர் சன்னதியில் எடுத்துப் போடுகின்றனர்.இது பெரும் தவறு.
சண்டேசர்,இடையறாத தியானத்தில் இருப்பவர்.அவரிடம் நமது வருகையையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கும் வகையில் அவரது சன்னதியில் நின்று மெள்ள(கை)த் தட்டுதல் வேண்டும்.இதைப் புரிந்து கொள்ளாமல் சண்டேசரைச் ‘செவிட்டுச் சாமி’ என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும்,சொடுக்கவும் செய்தால் அவரது அருள் கிடைக்கும் என்று கூறுவது தவறு.சண்டேசர் சன்னதியை முழுமையாக வலம் வரக்கூடாது.சந்நிதிக்கு வலப்புறமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்துவிட்டு, வந்த வழியே(அரை வட்டமாக) திரும்ப வேண்டும்.பக்தர்களுக்கு அனுமதி அளித்து,அவர்களை கோவிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர்.அது போல,சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உண்டு.
சிலர் ‘சண்டேசர் சன்னதி இடுக்கில் உள்ளது;சென்று தரிசிக்கச் சிரமமாக உள்ளது’ என்றும் அவரைத் தரிசிக்காமலேயே கோவிலை வலம் வருவர்;இவரை அவசியம் வலம் வர வேண்டும்;
கோவிலில் முதலில் விநாயகரையும்,நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால்தான் சிவ வழிபாடு முழுமையடையும்.சிவாலயத் திருவிழாக்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு என்னும் திருவீதியுலா நிகழும்.அப்போது,கணபதி,முருகன்,சிவன்,அம்பிகை எனும் வரிசையில் சண்டேசர் இறுதியாக வருவார்.
நன்றி:அஷ்டாஷ்ட மூர்த்தங்களும் 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும்,பக்கம் 141.
வெளியீடு :நர்மதா பதிப்பகம்,சென்னை.
No comments:
Post a Comment