ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏஎம்வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.
சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.
பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!
உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.
நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.
எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.
ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.
தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்
பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.
இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.
இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...
"எப்படியோ வர்ர ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது''
முக்கிய குறிப்பு: நமது இணையதளத்தை இனிய தளமாக மாற்றுவதில் பெரும்பங்கு எடுத்துக்கொள்ளும் வாசகர்களில் ஒருவரான ஈரோடு கார்த்திகேயன் தற்போத பெங்களூருவில் ஐடி துறையில் வேலை பார்க்கிறார். ஆனாலும் ஊர் பாசத்துடன் நிறைய ஈரோடு தொடர்புடைய படங்களை போஸ்டர் பகுதிக்கு அனுப்பிவைப்பார், அப்படி அவர் அனுப்பிய ஒரு படத்தின் அடிப்படையில் விசாரித்து, விவரித்து எழுதப்பட்டதுதான் மேலே உள்ள ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு கட்டுரை, ஆகவே அனைத்து நன்றியும் கார்த்திகேயேனுக்கே. ஒட்டல் நடத்தும் வெங்கட்ராமன் போன் எண்:9629094020.
KADAVUL MANITHANAAGA PIRAPPATHU UNDU KARTHIKEYAN ROOPATHIL
ReplyDeleteபோற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை
ReplyDeletewell done very happy by Erode V.G.Racichandran
ReplyDelete