Thursday, November 29, 2012

வீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்!!!



எனக்குத் தெரிந்த ஒருவர் அரசுப்பணியில் இருந்தார்;அவரது வேலையில் அவர் செய்த ஒரு சிறு கவனக்குறைவால் அவர் மீது வழக்குப் பதிவாகி,நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்த சிறு கவனக்குறைவை அவரது உயர் அதிகாரி மட்டத்திலேயே சரி செய்திருக்கலாம்;வீண்பழி போட்டு தன்னையும்,தனது பதவி உயர்வையும் பழுதில்லாமல் பாதுகாப்பது அரசுப்பணியில் இருப்பவர்களின் கைவந்தக் கலை!!!


நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில் அவரது சக ஊழியர்கள் அவரை பயம் காட்டிவிட்டனர்;வேலையே போய் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எல்லோரும் பயம் காட்டிவிட்டனர்;அவரோ அரசுப்பணியில் இருந்தாலும்,நேர்மை,நீதி என்று மட்டும் வாழ்பவர்;எதையாவது காரணம் காட்டி அடிக்கடி காவி உடுத்திக்கொண்டு விரதமிருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்;இதன் மூலமாக லஞ்சம் வாங்காமலேயே தனது அரசுப்பணியை நிறைவு செய்தவர்;இந்த வழக்கு வரும்போது அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களே பணிக்காலம் இருந்தது;


மன உளைச்சலினால் இவர் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்;அப்போதெல்லாம் கள் தான் கிடைக்கும்;அவர் கள் குடிக்கப்போன இடத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.

மார்கழி மாதம் முழுவதும் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அதுவும் கோவில் திறக்கும் முன்பே கோவிலுக்குச் சென்றுவிட வேண்டும்;சென்று மூலவராகிய சிவபெருமானை முதன் முதலில் தரிசிக்க வேண்டும்;இப்படி மார்கழி மாதம் முழுவதும் அதாவது 29 நாட்களும் இப்படி முதல் ஆளாக சிவனை தரிசித்தால் உன் மீது இருக்கும் வீண்பழி நீங்கிவிடும் என்பதே அந்த ஐடியா!!

உடனே,குடிக்க இருந்த கள்ளை கீழே ஊற்றிவிட்டு புறப்பட்டுவிட்டார்;மறுநாள் மார்கழி முதல் நாள்!  தொடர்ந்து 29 நாட்களும் காலை 2மணிக்கே எழுந்து 3 மணிக்கே தனது ஊரில் இருக்கும் மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்து முதல் ஆளாக வைத்தியநாதசுவாமியைத் தரிசித்து விட்டார்;30 நாள் தை முதல் நாள் அன்றும் மூலவரை தரிசித்துவிட்டார்.தை மாதம் முதல் வாரத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது;தை மாதத்தின் இறுதி வாரத்தில் இவர் மீதான வழக்கு தீர்ப்பு வந்தது;அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்க வேண்டிய இந்த சிறு விஷயத்தை நீதிமன்றத்துக்குக்கொண்டு வந்து,நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று தீர்ப்பில் இருந்தது.
இன்று அந்தப் பெரியவர் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து தற்போது இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன;வீண் பழியோ,அவமரியாதையோ வரும் சூழ்நிலையில் இருப்பவர்கள் மார்கழி மாதத்தில் வரும் 29 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று,முதல் ஆளாக மூலவராகிய சிவபெருமானைத் தரிசியுங்கள்.வீண் பழியிலிருந்து விலகிவிடுங்கள்.

இந்த நந்தன வருடத்தில் மார்கழி மாதம் 16.12.12 அன்று பிறக்கிறது.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment