ஸ்ரீமஹாவிஷ்ணு,வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அடக்கினார்.அவர் வெற்றிபெற்றப் பின்னர் அகங்காரம் குறையாமல் பிரபஞ்சம் நடுங்கத் திரியலானார்;தேவாதிதேவர்களும்,முனிவர்களும் ருத்ரன் மூலமாக சதாசிவனிடம் முறையிட்டனர்;சதாசிவம் வடுகநாதராக அகங்காரம் கொண்டு திரிந்த திருமாலை மார்பில் அடித்து வீழ்த்தினார்;அப்படி வீழ்ந்த திருமால் பூமியில் வீழ்ந்தார்.(வடுகநாதர் என்றால் பைரவர் என்று பொருள்)
பிறகு இலக்குமிதேவியின் மாங்கல்யப்பிச்சைக்கு மனமிரங்கினார்;பூமியில் வீழ்ந்த திருமாலை உயிர்ப்பித்தார்.பின்பு,திருமாலின் அகங்காரமான தோலையும்,முதுகுத் தண்டையும் வடுகநாதர் என்ற பைரவர் எடுத்துக்கொண்டார்;திருமாலின் வாமன அவதாரத்தின் தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் கொண்டார்.அப்படி எடுத்துக் கொண்டதால்,வடுகநாதராகிய பைரவப்பெருமான் தண்டபாணி,சட்டநாதர்,சட்டைநாதர்,ஆபதுத்தோரணர் என பலவிதமான பெயர்களில் புகழப்பட்டார்;அவ்வாறு தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் அணிந்து கொண்ட இடமே நமது பூமியில்,நமது தமிழ்நாட்டில் இருக்கும் சீர்காழி!!! அவ்வாறு வாமன அவதாரத்தின் தோலை சட்டையாக அணிந்த போது,அது வடுகநாதர் என்ற பைரவரின் கால்முட்டிவரைதான் வந்ததாம்.ஏனெனில்,வாமன அவதாரம் எடுத்த திருமால்,ஓங்கி உலகளந்த உத்தமரல்லவா?
இந்தக்கோவிலில் தனிக்கட்டுமனையில் ஸ்ரீசட்டைநாதர் எழுந்தருளியுள்ளார்.சட்டைநாதருக்கு நாய் வாகனம் இல்லை;இரு மருங்கிலும் பூதகணங்கள் இருக்கின்றன.
சட்டைநாதர் வழிபாட்டின் தலைமையிடம் சீர்காழி.கட்டுமலையில் மேல் உள்ள சட்டைநாதர் திருமேனி,அத்திமரத்தால் செய்யப்பட்டதால்,இத்திருமேனிக்கு அபிஷேகங்கள் நடப்பதில்லை;அபிஷேகங்கள் நேர் கீழே உள்ள பலிபீடத்திற்கே நடக்கின்றன.வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையில்,சிறப்பாக சட்டைநாதருக்கு புனுகு சட்டம் பூசப்படுகிறது.அடுத்த வெள்ளியன்று,இந்த புனுகுடன் விபூதி கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
மேலும் நவபாஷாணம் கலந்த சுதையிலான சட்டைநாதர், ஆகாசபைரவராக விமானத்தில் எழுந்தருளியுள்ளார்.இங்கு தெற்கு கோபுரத்தின் இடதுபக்கத்தில்,வடக்கு நோக்கிய வலம்புரி மண்டபம் இருக்கிறது.இது அஷ்டபைரவர்களின் தனிக்கோவிலாகும்.இங்கே அஷ்ட பைரவர்களும்,யோக நிலையில் காட்சியளித்துவருகிறார்கள்.வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் மிகச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.இந்த அஷ்ட பைரவர் கோவிலில் உள்ள ஊஞ்சல்,முட்குறடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டை அணியாமல் திறந்தமேனியாகவும்,பெண்கள் மலர்களை அணியாமலும் செல்ல வேண்டும்;இங்கு நெய்தீப ஆராதனை மட்டும் நடைபெற்றுவருகிறது.
சீர்காழியில்,இந்த திருக்கோவிலின் மேலரதவீதியில் (பைரவன் கோடியில்) மேற்கு நோக்கி பைரவருக்கு மற்றும் ஓர் தனிக்கோவில் இருக்கிறது.மாடவீதியின் தெற்குப்பகுதியில் கண்நாதர் கோவில் என்று பலிபீடமாக வழிபடப்பட்டுவருகிறது.
நன்றி:வைரவ விஜயம்,பக்கங்கள்45,46.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment