மாதொரு பாகன் சிவலிங்க ரூபியாகக் கோவில் கொண்டு பக்தர்களின் இடர் களையும் பழைமைவாய்ந்த பல தலங்களில் ஒன்று தேவதானம் அம்மையப்பர் ஆலயம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத் திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேத்தூர். இதன் அருகே அமைந்துள்ள கிராமம்தான் தேவதானம். இந்த கிராமத் திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்- மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் செல்லும் சாலையையொட்டி- மிக அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த சிவாலயம்.
முற்காலத்தில் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக இது இருந்ததென்றும்; இங்கு தெய்வம் வந்து குடியேறியதால் தெய்வவனம் என்று பெயர் ஏற்பட்டதென்றும்; அதுவே பின்னாளில் தேவதானம் என மருவியதாகவும் கூறுகின்றனர்.
ஆலயத்திற்கு முன்புறம் மிகப்பெரிய குளம் உள்ளது. மூன்று பிராகாரங்களைக் கொண்ட இவ்வாலயத்தில் பரிவார மூர்த்திகள் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். கருவறையில் நச்சாடை தவிர்த்தருளிய நாதரான அம்மையப்பர் அருள்புரிகிறார்.
முன்னொரு காலத்தில், பாண்டிய நாட்டை வீரபாகு பாண்டியன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் இரவில் நகர்க் காவலுக்குச் செல்வது வழக்கம்.
அவ்வாறிருந்த நிலையில் அவ்வூரைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். எனவே, அவர் வீட்டையும் கவனமாகக் காவல் காத்து வந்தான் மன்னன். ஒருநாள் இரவு அந்த அந்தணன் வீட்டுக்கு வர, அவனைத் திருடன் என்றெண்ணிய மன்னன் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டான்.
இதையறிந்த அந்தணனின் மனைவி மன்னனிடம் கதறியழ, அவளுக்கு ஆறுதல் கூறிய மன்னன் பல உதவிகளையும் செய்து, தன் தவறுக்கு வருந்தி பல தானங்களையும் செய்தான். என்றாலும் அந்தணனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மன்னனைப் பற்றிக் கொண்டது. இதன் விளைவாக நாட்டில் பல குழப்பங்கள் விளைந்தன.
இந்த விவரங்களைத் தன் ஒற்றன் மூலம் அறிந்த சோழ மன்னன் விக்கிரமன், இது தான் தக்க சமயமென்று பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியன் மிகுந்த சிவபக்தி கொண்டவனாகையால், அவன் கனவில் தோன்றிய ஈசன், பாண்டியனுக்குத் துணையாகத் தானும் தன் பூத கணங்களும் வந்து போரிடுவதாகக் கூறியருளினார். மறுநாள் நடந்த போரில் இறையருளால் பாண்டியன் வெற்றி பெற, சோழர்படை பின்வாங்கியது.
எனினும், பாண்டியனின் ஆட்சிக்குப் பல்வேறு வகைகளிலும் தீங்கிழைக்க சோழன் முயன்றான். இதன் காரணமாக அவன் பார்வை பறிபோனது. பின்னர் சிவனருளால் கண்ணொளி பெற்று, அதன் காரணமாக ஒரு ஆலயம் நிறுவி இறைவனையும் இறைவியையும் பிரதிஷ்டை செய்தான். பார்வை வழங்கிய இந்த ஈசன் திருக்கண்ணீசர் என்று அழைக்கப் பெற்றார்.
பெருமான் அருளால் சோழன் பல நன்மைகளைப் பெற்றாலும், ஊழ்வினை வசத்தால் மீண்டும் அவன் பாண்டியனுக்குத் தீங்கிழைக்க எண்ணினான். கொடிய நஞ்சு கலந்த ஒரு ஆடையை உருவாக்கி, அதைத் தூதுவன் மூலம் பாண்டியனுக்குக் கொடுத்தனுப்பினான்.
இதையறிந்த ஈசன் பாண்டியனின் கனவில் தோன்றி, "தூதன் கொண்டு வரும் நச்சாடையைக் கையால் தொடாமல் ஒரு கோலால் எடுத்து, அதை அந்தத் தூதன் மேலேயே போர்த்திவிடு' என்று கூறினார்.
மறுநாள் ஒரு பெட்டி யில் நச்சாடையை வைத்துக்கொண்டு வந்த தூதன், "சோழ மன்னனின் பரிசு' என்று சொல்லிக் கொடுத்தான். அந்த ஆடையை ஒரு கோலால் எடுத்த பாண்டியன் அதை அந்தத் தூதன் மேலே போர்த்த- நஞ்சின் வீரியத்தால் அவன் அங்கேயே சாம்பலானான். இதன் காரணமாகவே இங்குள்ள ஈசன் நச்சாடை தவிர்த்தருளிய பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.
பார்வதிதேவி இங்கே இறைவனைக் குறித்து தவமிருந்தாளாம். எனவே இத்தலத்து அன்னை தவம் பெற்ற நாயகி என்னும் திருப்பெயரால் அழைக்கப் பெறுகிறாள். சப்த கன்னியர்களும் இங்கு அருள்புரிகின்றனர்.
இத்தல விருட்சமாக உள்ள நாகலிங்க மரம் சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கிறது. ""இந்தப் பூவை மூன்று முறை பாலில் ஊற வைத்து விதிப்படி உட்கொண்டால் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு சித்திக்கும். இப்படி பலன் பெற்றவர்கள் பலர் உண்டு. எனவே இந்த மரத்தை கவனம் செலுத்திப் பாதுகாக்கிறார்கள்'' என்கிறார் அய்யனார் தேவர்.
""இங்கே நம்பிக்கையோடு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்காதது ஒன்றுமில்லை. நான் தொடர்ந்து இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறேன். இந்த இறைவனின் அருளால் என் பலசரக்கு வியாபாரம் எந்தக் குறையுமின்றி நடந்து வருகிறது'' என்கிறார் சேத்தூரைச் சேர்ந்த வீரபுத்திர தேவர்.
பக்தர்களின் அனுபவம் அந்தப் பரமனின் திருக்கருணையைத் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது!
THANKS:OUR UK READER
"இங்கே நம்பிக்கையோடு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்காதது ஒன்றுமில்லை.
ReplyDeleteதங்கள் பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநாங்கள் சென்று பார்க்கிறோம்.
மிக்க நன்றி ஐயா.