எந்த ஒரு நாட்டிற்கும், நமக்கு கிடைத்துள்ள அற்புதமான ‘தூய திருவாளர்’ மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைக்கவே மாட்டார்.
அண்மையில் காஷ்மீரில் (மார்ச் 4) அவர் பேசுகையில் ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உச்ச நீதி மன்றத்தின் ‘பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து’ என்ற உத்தரவுக்குப் பிறகு, இவ்வாறு மொழிந்திருக்கிறார், பிரதமர். இவர் பொறுப்பேற்காவிட்டால் யார் இவரை விடப் போகிறார்களாம்? தீர்ப்பு வெளியானவுடன் (மார்ச் 3), ”தீர்ப்பை மதிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக (!) வேறு கூறினார் பிரதமர்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக ஊழல்கறை படிந்த பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுவதற்கு (செப். 6, 2010) முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) தேர்வுக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை சட்டை செய்யாமல் “பாமாயில் ஊழல் புகழ்’ தாமஸை மிகுந்த பிடிவாதத்துடன் சிவிசி.யாக நியமனம் செய்து மகிழ்ந்தனர் பிரதமர் மன்மோகனும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும். அதனை எதிர்த்து, லிங்டோ உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. ஒரு பொய்யைக் காப்பாற்ற ஒன்பது பொய் சொன்ன கதையாக, தாமஸ் மீதான வழக்கு விவரமே மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறி நீதிபதிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது மத்திய அரசு. அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.
அப்போதும் கூட பதவி விலக மறுத்தார் பி.ஜே.தாமஸ். அவரிடம் மத்திய அரசின் தூதர்கள் பலர் கெஞ்சிக் கேட்டும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். தான் நியமித்த ஒருவரையே ‘கண்டனத் தீர்மானம்’ கொண்டுவந்து நீக்குவது என்பது அரசு தன் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது போன்றது தான். கடைசியில், தாமஸின் விதியை நீதி மன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது மன்மோகன் சிங் குழுவால்.
இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரா குமார் ஆகியோரடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
”ஊழல் கண்காணிப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு பரிந்துரைகளில் எவ்வித சட்ட விதிமுறைகளும் இல்லை. இதன்படி செப். 3, 2010-ல் இந்தக் குழு வெளியிட்ட பரிந்துரைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல. எனவே, சிவிசி.யாக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்கிறோம்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
”ஊழல் கண்காணிப்பு அமைப்பின் மீதான நம்பகத் தன்மை, இந்த அமைப்பின் தலைவர் மீதான நம்பகத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் சிவிசி சட்ட விதிகளுக்கு உட்பட்டவை. பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உயர் நிலைக் குழு உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை. தாமஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இக்குழு பரிசீலிக்கவில்லை. அவரது படிப்பு, பதவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்த இக்குழு, கண்காணிப்பு ஆணையத்தின் நம்பகத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது மக்களின் நம்பகத்தை இழந்துவிட்டது” என்று தீர்ப்பில் கூறினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா.
அது மட்டுமல்ல, ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரசு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிற துறைகளில் உள்ள நேர்மையானவர்களைப் பரிசீலிக்கலாம்” என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.
இத்தீர்ப்பு வெளியானவுடன் தாமஸ் பதவி விலகிவிட்டதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், அதனை தாமஸின் வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூஸ் மறுத்துவிட்டார். தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு செய்ய தாமஸ் தயார். இப்போது அவரிடம் பதவி விலகுமாறு மன்றாடிக் கொடிருக்கிறது மத்திய அரசு. தாமஸை நியமிக்க வேண்டாம் என்று மன்றாடிய சுஷ்மாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த இழிநிலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்குமா?
”இத்தீர்ப்பு மத்திய அரசின் முகத்தில் பூசப்பட்ட கரி” என்று சரியாகவே சொல்லி இருக்கிறார் பாஜக தலைவர் நிதின் காட்கரி. ”சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசு மீதான இந்தக் கண்டனத் தீர்ப்பிற்கு சோனியாவும் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அத்வானி. செவிடன் காதில் சங்கு ஊதியது போலவே, இப்போதும் அமைதி காக்கிறார், காங்கிரசை வாழவைக்க வந்த இத்தாலிய அன்னை.
thanks:http://www.tamilhindu.com/
No comments:
Post a Comment