Wednesday, March 7, 2012

ஜீவ சமாதிகளின் வகைகள் (Types of final conscious Exit)


பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகக் கூற்றுப்படி சமாதி என்பது ஆதிக்கு சமமாதல் என்று பொருள்படுகிறது.அதாவது பார்ப்பவன்,பார்க்கப்படும் பொருள்,பார்த்தல் என்று செயல் மூன்றும் ஒன்றாகிய நிலை சமாதி ஆகும்.

மேலும் சமாதி எனும் சொல் ஒரு யோகியினுடைய உணர்வுடன் கூடிய ஒடுக்க நிலையையும் குறிக்கிறது.இதன்படி சமாதிக்குச் செல்லும் யோகி தன்னுடைய ஒடுக்க நாளை முன்கூட்டியே தெரிவிக்கிறார்.அதாவது தன்னுடைய யோக பலத்தால் தன் சமாதி நாளைத் தானே அறிவித்து,தன்னை சமாதியில் இருத்திக்கொள்ளுதல் ஆகும்.


சாதாரண மரணத்தில் உடம்பில் இருந்து கழிவுகளாக மலம்,மூத்திரம்,விந்துநாதம் வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும்.ஆனால்,சமாதியடையும்போது இவ்வகைக் கழிவுகள் வெளிவராமல் உயிர்ச் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் ஒடுங்கிவிடும்.யோகியினுடைய உடல் இயக்கமும்,மன இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்.இந்த உடம்பு மற்ற உடம்பைப் போல மண்ணில் அழியாது;காலா காலத்திற்கும் காக்கப்படும்.

1.நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற மறுபிறப்பற்ற நிலை : உதாரணம்:போகர்

2.விகற்ப சமாதி:மனதில் இருமை நிலையோடு கூடிய சமாதி .மறுபிறப்புக்கு வழியுண்டு.

3.சஞ்சீவினி சமாதி:உடலுக்கு சஞ்சீவித் தன்மையை மண்ணிலும்,மனதின் சஞ்சீவித் தன்மையை விண்ணிலும் கொடுக்கும் நிலை.மறுபிறப்பில்லாத நிலை.உதாரணம்:சந்த ஞானேஷ்வர் சமாதி,ஆலந்தி,பூனா.


4.காய கல்ப சமாதி:சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் சமாதி நிலை.மறுபிறப்புக்கு வழியுண்டு.சமாதி அடைந்த யோகி நினைத்தால் மீண்டும் அவ்வுடலுக்கு வர முடியும்.உதாரணம்:சச்சிதானந்தர் சமாதி,சச்சிதானந்தர் ஆசிரமம்,கொடுவிலார்பட்டி,தேனி மாவட்டம்.
5.ஒளி சமாதி அல்லது ஒளி ஐக்கியம்: யோகியானவன் தொடர்ச்சியான யோகப்பயிற்சியின் மூலம் பருவுடலை ஒளி தேகமாக ஆக்கி,உடல் சூட்டினை அதிகரித்து இந்தப்பருவுடலை பூமிக்குக் கொடுக்காமல் ஒளியாக்கி மறைந்துவிடுதலே ஒளி சமாதி ஆகும்.


உதாரணம்:காக புஜண்டரின் ஒளி ஐக்கியம்.இந்த சித்தர் பருவுடல் தாங்கி பூமியில் இருப்பார்;பூமியில் நீர்,நெருப்பு,காற்று,நிலநடுக்கம் என்று பிரளயம் வந்தால் காக உருவம் தாங்கி மரங்களிலும் வாழ்வார்.நீர்ப்பற்றாக்குறை,கடும் வறட்சியால் மரங்களும் அழிய நேர்ந்தால் ஒளியாகி,அவிட்ட நட்சத்திரமாகி வாழ்வார் என சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன.அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உங்களின் லக்னாதிபதி அவிட்டத்தில் நிற்கப் பிறந்தவர்கள் காகபுஜண்டரை வழிபட நல்லது மட்டுமே நடக்கும்.
ஒளி சமாதிக்கு வடலூர் வள்ளலார்,திரு அண்ணாமலையில் விட்டோபா சுவாமிகள்,எடப்பள்ளி சத்குருநாதர்,விருத்தாசலம் குமாரத்தேவர் ஆகியோர் உதாரணங்கள் ஆகும்.
 நன்றி:சித்தர்கள் களஞ்சியம் ,பக்கங்கள்52,53;ஆசிரியர்;பல சித்தர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்தவர் யோகி கைலாஷ்நாத்

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. Arumaiyaana vilakkam thagavalukku manamaarntha nanri.Om Siva Siva Om.

    ReplyDelete