வாசக அன்பர்களுக்கு வணக்கம். நேற்று நமது ஹனுமன் தரிசனம் பற்றிய கட்டுரையைப் படித்து விட்டு , மதுரையிலிருந்து திரு. குரு மூர்த்தி அவர்கள் , பின்னூட்டம் இட்டு இருந்தார். அவரது அனுபவத்தை அப்படியே இங்கே தருகிறேன்...
பின்னூட்டத்தில் இருந்தால், நிறைய வாசகர்கள் கவனிக்க தவறிவிடுவதால், இதை தனிப் பதிவாகவே பதிவிடுகிறேன்..!, இவர் எவ்வளவு புண்ணியம் செய்தவராக இருக்க கூடும்.. ! பெருமாளின் பரிபூரண அருள் , நம் அனைவருக்கும் கிடைக்க மனமார வேண்டுவோம்...!! உங்களிடமும், இதைப் போலே மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் இருந்தால் , பகிர்ந்து கொள்ளுங்களேன்!
=======================================================
நானும் என் குடும்பத்தாரும் ஸ்ரீ நிவாசப்பெருமாளை, கண்ணாரக் கண்டோம் என்றால் நம்புவீர்களா?
நம்புங்கள்.சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு,என் தம்பி ஸ்ரீ நிவாசனுக்கு , திருமலையில் திருமணம் ஏற்பாடு செய்திருந்தோம்.திருமணத்திற்கு முதல் நாள் இரவு , நான்,என் மனைவி பானுமதி (அவர் இப்போது இறைவனிடத்தில்)என் இரு மகன்கள் (5 & 2 yrs old) அனைவரும் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு ,கோயில் பழைய மடப்பள்ளி வழியாக வந்து கொண்டு இருந்தோம்.அப்போது என் மனைவி " இப்போ சூடா இங்கே கிடைக்குமே ,எள் போட்ட பெரிய வடை - அது கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?" என்றார்.
நானும் கிண்டலாக," ஆமாம்.உனக்குன்னு special ஆக பெருமாள் வந்து , இந்தா வடை ன்னு கொடுப்பார்" என்று கேலி செய்தேன்.
அப்போ அந்த இடம் அவ்வளவாக வெளிச்சமாக இல்லாமல்,சற்று இருளாக இருந்தது. எங்களை தவிர யாரும் அருகில் இல்லை. மணி இரவு சுமார் ஒரு மணி இருக்கும். அப்போது ஒரு உயரமான படி மேல் நல்ல கருமை நிறத்தில்,தூய வெள்ளை உடை உடுத்திய ,நெற்றியில் பட்டை நாமத்தோடு,கோவில் பட்டர் ," ஹஹஹா" என மெதுவாக சிரித்தபடியே " என்ன , வடை வேணுமா?" என கேட்டார்.எனக்கு ஒரே படபடப்பு.
நாம் கேலி செய்து பேசியதை இவர் கேட்டு விட்டாரோ என எண்ணியபடி , அவரிடத்தில் சற்று பயத்துடன் சென்று," ஆம் சுவாமி. வடை இருந்தால் கொடுங்கள்" என்றேன்.அவரும் சிரித்தபடியே ," இருங்கள் வருகின்றேன்" என அருகில் இருந்த கதவினை திறந்து உள்ளே சென்று,பின் வெளியே வந்தார், கை நிறைய சுமார் பத்து சூடான வடைகளுடன். "சவாமி . எவ்வளவு ருபாய் தரவேண்டும், வடைகளுக்கு?" என பவ்யமாக கேட்டேன். அவர் சிரித்து கொண்டே ,"கொடுப்பதை கொடுங்கள் " என்றார் .
நானும் சட்டையில் கைவிட்டு,கையில் வந்த ருபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து விட்டு,பெருமாளின் தயவை வியந்தபடி ,நகர்ந்தேன். சற்று தொலைவில் எங்களை கண்ட என் சகோதரி " அண்ணா , எங்கே இந்நேரத்தில் உங்களுக்கு வடை கிடைத்தது?" என் கேட்க, நாங்களும் நடந்ததை சொன்னோம். அவளும் ஓடி சென்று , அங்கே பார்த்துவிட்டு , திரும்பி வந்து," அங்கே அப்படி படியோ, அறையோ... ஒன்னும் இல்லையே. யாரும் காணோம்." எனறாள். என் உடல் சிலிர்த்து சில்லிட்டு போனது.அப்போதுதான் உணர்ந்தோம் , எங்களுக்கு வடை கொடுத்தது சாட்சாத் வெங்கடேசப்பெருமாள் தான் என்று.
PN.குருமூர்த்தி -மதுரை.
==================================================
நான் திரும்ப திரும்ப சொல்ற விஷயம் இதுதான். ஆண்டவன் இருப்பது நிஜம். முழு நம்பிக்கையுடன் உங்கள் கடமைகளை செய்து வாருங்கள். உங்கள் நியாயமான கோரிக்கைகள் அத்தனையும் விரைவில் நிறைவேறும்!!
Read more: http://www.livingextra.com/#ixzz1ScTcvoEV
No comments:
Post a Comment