Thursday, December 23, 2010

danger to our hindu religion:thanks to www.tamilhindu.com

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? - 1



ஜடாயு


2 Dec 2010
அச்சிட


மூலம்: டாக்டர். மூர்த்தி முத்துசுவாமி


தமிழில்: ஜடாயு






இறுதியாக, இந்தியாவுக்கான தருணம் வந்திருக்கிறது. முதலில் மேற்காசிய படையெடுப்பாளர்கள், பின்னர் பிரிட்டிஷ் காலனியம் என்று ஆயிரம் ஆண்டு அன்னிய அரசாட்சியிலிருந்து விடுபட்டு இந்தியா வெளிவந்திருக்கிறது.






1947ல் இந்தியா சுதந்திரமடைந்த வுடனேயே, பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டமைப்பு ஆகிய துறைகளில் புதிய கல்வி நிறுவனங்களைத் தொலைநோக்குடன் உருவாக்கியதன் பயனாக, பின்வந்த காலங்களில் செல்வப் பெருக்கமும், அதோடு கூடிய சமூக-பொருளாதார முன்னேற்றங்களும் சாத்தியமானது.






1940களில் உருவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அப்போதைய தேசத்தைப் பிரதிபலித்தது – ஒட்டுமொத்தக் கல்வியறிவு 12 சதவீதமே இருந்த தேசம்; [1] இன்னும் பிரிட்டிஷ் காலனியத்தால் ஆளப் படும் தேசம். இந்தச் சூழலில் உருவாக்கப் பட்ட அரசியல் சட்டத்தில், அது பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டிருந்தும் கூட, சில குறைகளும், தவறுகளும் உண்டாவது சகஜமே. இத்தகைய ஒரு குறைபாடு, இன்றைக்கு பட்டவர்த்தனமாகத் தெரியக் கூடிய மதரீதியான பாரபட்சங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. அதைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.






வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். மிகவும் வெட்கக் கேடான ஒரு விஷயம்.






எல்லாவற்றையும் விட, இந்திய தேசத்தில் இத்தகைய பாரபட்ச நடைமுறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன என்பது உலக அளவில் பலருக்கும் ஆச்சரியமளிக்கும். ஆனால் அது தான் உண்மை.






கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மதப்பிரிவினைக் கொள்கை (Religious Apartheid):






சமீபத்தில், தில்லியில் கிறிஸ்தவ மிஷனரிகளின் கட்டுப் பாட்டில் உள்ள உயர்தர உயர்கல்வி நிறுவனமான செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வெளியிட்ட ஒரு அறிவிப்பு பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் கல்வி நிறுவனத்தின் 50 சதவீத இடங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன என்ற அறிவிப்பு தான் அது. உயர்தர கல்லூரிகளில் பயில்வதை வாழ்க்கைக் கனவாகவே கொண்டிருக்கும் ஜனத்திரள் மிகுந்த ஒரு தேசத்தில், இத்தகைய அறிவிப்பு ஒரு பேரழிவுச் செய்தியாயிற்று.






“ஏற்கனவே ஸ்டீபன்சில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, அவர்கள் பொது மாணவர்களுக்கான இடங்களை இந்த அளவுக்குக் குறைத்து விட்டால் நாங்கள் எங்கே போவோம்? இது அநியாயம், அக்கிரமம்”






என்றார் ஆர்ய பிரக்ரிதி [3]. தில்லியில் கல்லூரியில் சேரத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் இந்து மாணவர் இவர்.






ஒரு அதிர்ச்சிகர தகவல்: இந்தக் கல்லூரி இயங்குவதற்கான நிதியில் 95 சதவீதம் மத்திய அரசிடமிருந்து, அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறது. அந்த வரிப்பணத்தில் மிகப்பெரும் பகுதி பெரும்பான்மை இந்து சமூகத்தால் செலுத்தப் படுகிறது [4]. இன்னொரு கவனிக்க வேண்டிய தகவல்: புது தில்லி நகரத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை ஒரு சதவீதம், அதாவது 1% மட்டுமே [5].






என்ன நடக்கிறது இங்கே? முற்றிலும் தகுதி வாய்ந்த, கிறிஸ்தவர் அல்லாதவர்களைப் புறக்கணித்து விட்டு, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் மூலமாக கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது. அது தான் நடந்து கொண்டிருக்கிறது.






எப்படி நடக்கிறது இது? இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப்பிரிவின் (Article 30) அடிப்படையில் உச்சநீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பைச் சுட்டிக் காட்டி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி நிர்வாகம் தங்களது மதரீதியான பாரபட்ச நடவடிக்கை சட்டபூர்வமானது தான் என்று நியாயப் படுத்துகிறது [6].






1993ம் ஆண்டு இந்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோர் “சிறுபான்மையினர்” என்ற வரையறையின் கீழ் வருவார்கள் என்று அறிவித்தது [7]. இந்த சிறுபான்மையினர் சமூகங்கள் சமூக பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருந்தாலும், அவை நடத்தும் கல்வி நிறுவனங்களில், அவை அரசு நிதி பெறும் நிறுவனங்களாக இருந்தாலும் கூட, தங்கள் சமூகத்தவர்களுக்கு என்று 50 சதவிகிதம் கல்வியிடங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்று 30வது சட்டப் பிரிவு கூறுகிறது [8]. இங்கு “சிறுபான்மையினர்” என்பது முன்பு சொன்னபடி தேசிய அளவில் ஒட்டுமொத்தமாகத் தான் வரையறை செய்யப் பட்டிருக்கிறது, ஒவ்வொரு பிரதேசத்தின் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, பஞ்சாபிலும், மிசோரத்திலும் முறையே சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையினர்; இந்துக்கள் சிறுபான்மையினர். ஆனால், 30-வது சட்டப் பிரிவின் பிடி, இந்த மாநிலங்களிலும் கூட, கிறிஸ்தவர்களும், சீக்கியர்களுமே “சிறுபான்மையினர்” என்று கருதப் படுவார்கள். அங்குள்ள இந்துக்கள் “பெரும்பான்மையினர்” என்றே கருதப் படுவார்கள்!






கல்வியிடங்களில் மட்டுமல்ல, கிறிஸ்தவ மிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் ஒதுக்கீடும், முன்னுரிமையும் உண்டு. ஏனென்றால், இதையும் 30வது சட்டப் பிரிவு அனுமதிக்கிறது. உதாரணமாக, மிஷநரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று கல்லூரிகளை எடுத்துக் கொள்வோம். மதுரை அமெரிக்கன் கல்லூரி பணியாளர்களில் 66 சதவீதம் கிறிஸ்தவர்கள். யூனியன் கிறிஸ்தவ கல்லூரி பணியாளர்களில் 83 சதவீதம் கிறிஸ்தவர்கள். மும்பை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பணியாளர்களில் 42 சதவீதம் கிறிஸ்தவர்கள் [9]. ஆனால், இந்தக் கல்லூரிகள் அமைந்துள்ள தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அங்கு கிறிஸ்தவர்களின் சதவீதம் முறையே 7, 19 மற்றும் 1 ஆகும். [10]. பணியாளர்களை அமர்த்துவதில் மதரீதியான பாரபட்சம் உள்ளது என்று தெள்ளத் தெளிவாக இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டபூர்வமான மதப் பாரபட்ச நடைமுறைகள் இந்தியா முழுவதிலும் உள்ள எல்லாவிதமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படுகின்றன என்பது கண்கூடு. சலுகைகளின் கவர்ச்சி ஒருபுறம், இவை சட்டபூர்வமானவை தான் என்பது இன்னொரு புறம். பின்னர் ஏன் மதரீதியாக பாரபட்சம் காட்டத் துடிக்க மாட்டார்கள்?






மிஷநரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவன்ங்களின் விகிதம், “சிறுபான்மை” கிறிஸ்தவர்களின் விகிதத்திற்கு சரிசமமாக இருந்தால், இந்த மதரீதியான பாரபட்சங்கள் ”மதச்சார்பற்ற” என்ற அடைமொழி கொடுத்துத் தன்னை அழைத்துக் கொள்ளும் நாட்டுக்குப் பொருந்தாவிட்டாலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடாது என்று கருதலாம். ஆனால் பிரசினையின் மையமே அங்கு தான் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள். மொத்தம் 40,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் [11, 12, 13].






30வது சட்டப் பிரிவையும், மேற்கண்ட விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், வெளிப்படையாகத் தெரிய வருவது – கிறிஸ்தவர்கள் இந்தியாவில் விசேஷ உரிமைகளும், சலுகைகளும் பெற்ற சிறுபான்மையினர். அவர்களை மட்டும் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக அரசின் வளங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன – வேண்டுமென்றே திட்டமிட்டு அப்படிச் செய்யப் படவில்லை என்று தோன்றினாலும் கூட. எனவே, கிறிஸ்தவர்களில் கல்வியறிவு பெற்றவர்கள், சராசரிக்கும் அதிகமாக 80 சதவீதம் இருப்பது ஆச்சரியமே அல்ல (தேசிய அளவில் சராசரிக் கல்வியறிவு 65 சதவீதம்). [14,15]. இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் 30 சதவீதம் மிஷநரிகள் கையில் உள்ளதால் [16], கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விட, கிறிஸ்தவர்களாக மதம் மாறுபவர்களுக்கான வேலை வாய்ப்பு சாத்தியங்கள் அங்கும் மிக அதிகமாக இருக்கும். இதுபோக, சிறுபான்மையினர் என்பதை வைத்து, மிகப் பெரிய அளவில் வரிவிலக்கு, நில ஒதுக்கீடு மற்றும் வேறு பலவிதமான சலுகைகளும் மிஷநரி நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. [17].






சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் பிற்பட்டவர்கள் என்று கோருவதை எந்த வகையிலும் நியாயப் படுத்தவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் கிறிஸ்வத சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பே சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் [18] இவ்வாறு கூறியிருக்கிறது – “தற்போது ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், எழுத்தர்கள், ஜூனியர் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) ஆகிய பல பணிகளில் கிறிஸ்தவர்களின் பங்கு, அவர்களது எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கிறது”. ஆனால் அதே அறிக்கை அடுத்த வரியில் சொல்கிறது – “இதற்குக் காரணம் கிறிஸ்தவர்களது சிரத்தை, நேர்மை, நல்ல கல்வி ஆகியவை தான்”. ஆனால் முக்கியமாக, 30வது சட்டப் பிரிவு ஏற்கனவே கிறிஸ்தவர்களுக்கு வெகுமதியான இட ஒதுக்கீடுகளையும், பிற வாய்ப்புக்களையும் அள்ளிக் கொடுத்து விட்டிருக்கிறது என்ற உண்மையை அந்த அறிக்கை, வருத்தமளிக்கும் வகையில், கண்டுகொள்ளவே இல்லை.






இத்தகைய பாரபட்சத்தின் பரிமாணமும், வீச்சும் நிலைகுலையவைப்பவை. மிஷநரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் மாணவர்களும், பணியாளர்களுமாக சேர்த்து சராசரியாக 300 இடங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். சராசரியாக, ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கையிலும், பணியிடங்களிலும் கிறிஸ்தவரல்லாத 10 பேர் இந்த பாரபட்ச நடைமுறையின் காரணமாக நிராகரிக்கப் படுகிறார்கள் என்று கொள்வோம். ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் நிராகரிப்புக்கள்! உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் 400 மாணவர்கள் உள்ளே வரும் [19] செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லுரியில், 200 இடங்கள் ஏகபோகமாக கிறிஸ்தவர்களுக்கு மட்டுமாக ஒதுக்கீடு செய்யப் படுகிறது – இதன் பொருள் ஒவ்வொரு வருடமும், 200 நிராகரிப்புகள் நிகழ்கின்றன என்பது தான்.






இந்த இடத்தில், நிறவெறிக் காலகட்டத்தின் போது வெள்ளையர்களால் ஆளப்பட்ட தென்னாப்பிரிக்காவில் (அங்கு வெள்ளையர் சிறுபான்மையினர்) செயல்படுத்தப் பட்ட நடைமுறையுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். அந்தக் காலகட்டத்தில் இனரீதியாக, வெள்ளையர்களுக்கே சாதகமாக அமையும் அரசு சட்டங்களின் மூலம், பெரும்பான்மையினரான கறுப்பின மக்களுக்கு கல்வியும், வேலை வாய்ப்புகளும் மறுக்கப் பட்டன. [20]. இதனால், தங்கள் மண்ணின்மீது கறுப்பர்களுக்கு உரிமையும், அதிகாரமும் இல்லாமலாயிற்று. தென்னாப்பிரிக்கா விஷயத்தில், அரசாட்சியில் இருந்த வெள்ளையரின் நிறவெறி, இனப்பிரிவினை நடவடிக்கைகள் கறுப்பர்களை அரசு அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. ஆனால், இந்தியா விஷயத்தில், இப்போது வெளிப்படையாகத் தெரியும் இந்த மதரீதியான பாரபட்ச நடவடிக்கைகள், அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவின் காரணமாக எதிர்பாராமல் உருவாகி விட்டிருப்பவை. அல்லது நமக்கு அப்படித் தோன்றுகிறது.






உலகெங்கும் மக்கள் தென்னாப்பிரிக்காவின் இனப்பிரிவினை நடவடிக்கைகள் விளைவித்த அநீதியையும், கொடூரத்தையும் எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால், இந்தியாவில் அதே போன்ற நடவடிக்கைகளினால் உருவாகும் பூதாகாரமான விளைவுகளைப் பற்றிய புரிதலே முழுமையாக ஏற்படவில்லை. அப்புறம் தானே குரல் கொடுப்பதற்கு! விற்பனையைக் குவிக்கும் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா இதே செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான். ஆனால் தனது முன்னாள் கல்லூரியின் இட ஒதுக்கீடுக் கொள்கைகளை “நெறிகளுக்கு எதிரானவை” (unethical) என்று மிகவும் மென்மையான தொனியில் அவர் குறிப்பிடும்போது, அவரது பார்வையில் உள்ள குறைபாடு நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.






உள்ளபடி பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தின் 30வது சட்டப் பிரிவு விளைவித்திருக்கும் இந்த பாரபட்சமான கொள்கைகள், இந்தியா கையெழுத்திட்டு ஏற்றிருக்கும் ஐ.நா சபையின் ”உலக மனித உரிமைப் பிரகடனத்தின்” 23 மற்றும் 26வது ஷரத்துக்களை மீறுகின்றன என்று நாம் வாதிடலாம் [22]. குறிப்பாக, ”பணி புரிவதற்கான உரிமை மற்றும் சுதந்திரமான பணித் தேர்வுக்கான உரிமை” (23வது ஷரத்து), “உயர்கல்வியானது திறமையின் அடிப்படையில்அனைவரும் சம உரிமையுடன் பெற வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும்” (26வது ஷரத்து) ஆகிய கொள்கைகளை மீறுவதாகத் தோன்றுகிறது. எனவே, 30வது சட்டப் பிரிவு விளைவித்துள்ள பாரபட்சங்கள் ”மனித உரிமை மீறல்கள்” என்று அழைக்கப் படவும் தகுதியுடையதாகின்றன.






இந்தியாவின் எழுச்சி பற்றி நாம் எவ்வளவு பேசினாலும், உலக அளவில் மிகவும் ஏழ்மைப் பட்ட நாடுகளில் ஒன்றாகத் தான் இந்தியா இன்னமும் இருக்கிறது. 2006ம் வருடத்திய குடும்ப நல கணக்கெடுப்புப் படி, மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 46 சதவீதம் மிகவும் எடைகுறைவானவர்களாக உள்ளார்கள் (சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க தேசங்களில் கூட இது 28 சதவீதம் தான்). இந்தியக் குழந்தைகளில், சத்துக் குறைவால் ஏற்படும் சோகை நோய் (அனீமியா) அதிகரித்து 79 சதவீதத்தை எட்டியிருக்கிறது (1999ல் இது 74 சதவீதம் தான்) [23]. சத்துக் குறைவு எந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றால், ஒவ்வொரு வருடமும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் (அதாவது ஒவ்வொரு நாளும் 6000 குழந்தைகள்) இதனால் மடிகிறார்கள். [24].






பெரும்பான்மையினரான இந்துக்கள் பிற்படுத்தப் பட்டு, உரிமை இழந்ததற்கு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த அன்னிய ஆட்சியில் அவர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுக்கப் பட்டு, நிராகரிக்கப் பட்டதும் ஒரு காரணம். மேலும், தற்போதைய நிலவரங்களின் படி, சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஒப்பீட்டில் இந்துக்களை விடவும் அதிகம் பிற்பட்டு இருக்கிறார்கள் என்பதும் ஓரளவு உண்மையே [25]. ஆயினும், இதில் எவ்வளவு தூரம் முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்திய முஸ்லீம் சமூகங்கள் நவீனக் கல்வியை அணைத்துக் கொள்வதில் பெரும் தயக்கம் காட்டி வருவதும், மதரஸா கல்வியையே அதிகம் தெரிவு செய்து படிப்பதும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது [26]. இந்தியாவைப் போன்று அதே சாத்தியங்கள் கொண்டிருந்த, ஆனால் முஸ்லிம் பெரும்பான்மை தேசமான பாகிஸ்தான் எப்படி சமூக, பொருளாத பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் சென்றிருக்கிறது என்பதை வைத்துப் பார்த்தால் “முஸ்லிம்கள் தாங்களே விளைவித்துக் கொண்டது” என்ற கருத்திற்கு அது வலு சேர்க்கிறது [27].






சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் இந்தியாவின் மிக உரிமை பெற்ற, மிக முன்னேறிய வர்க்கத்தினரில் அடங்குவர் என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் வாக்குமூலங்களே சாட்சி. கணிசமான அளவிலுள்ள மற்றொரு சிறுபான்மையினரான சீக்கியர்களும், பெரும்பான்மையினரை விட மிக நல்ல நிலையில் தான் உள்ளனர்; வளம் கொழிக்கும் மாநிலமான பஞ்சாபில் தான் அவர்கள் அதிகபட்சமாக வசிக்கின்றனர். இந்தச் சூழலில், 30வது சட்டப் பிரிவை என்ன சொல்லியும் நியாயப் படுத்த முடியாது. அது மட்டுமல்ல, நூற்றாண்டுகளாக பெரும்பான்மை சமூகம் அனுபவித்து வந்த இன்னல்களை இந்த சட்டப் பிரிவு இன்னும் நீட்டிக்கிறது. அதுவும் அந்த சமூகமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அடுத்தடுத்த அரசுகளே இதற்கு உதவியும் உள்ளன.






கல்வியும் வேலைவாய்ப்புகளுமே வறுமையிலிருந்து மீள்வதற்கும், சுய உரிமை பெறுவதற்குமான வாசல்கள். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டமே விளைவித்திருக்கும் மேற்கூறிய பாரபட்ச நடவடிக்கைகள், தகுதியைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தில் மதச்சார்பு நிலைகள் ஆதிக்கம் செலுத்த வகை செய்துள்ளன. லட்சக்கணக்கான தகுதிவாய்ந்த குழந்தைகளும், இளைஞர்களும் வறுமையின் கோரப் பிடியிலிருந்து வெளிவர வழிசெய்யும் வாய்ப்புக்கள் அநியாயமாக அவர்களுக்கு மறுக்கப் படுகின்றன.






இந்த தேசத்தின் மக்கள் தொகையில் 95 சதவீதம் உள்ள மக்களைப் பாரபட்சத்துடன் நிராகரிப்பதைக் கொள்கையாகவே கொண்டுள்ள மிஷநரிகளின் கட்டுப் பாட்டில் தான் தேசத்தின் தலைசிறந்த பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. இதை மனதில் வைத்துப் பார்த்தால் சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றம் இயற்றியிருக்கும் கல்வி உரிமைச் சட்டம் [28] எவ்வளவு முட்டாள்தனமானது என்று விளங்கும்.






இந்தியாவில் மிஷநரி பணிகளுக்காக பெரும் தொகை வெளிநாடுகளிலிருந்து பாய்கிறது. உதாரணமாக, 2006-2007 வருடத்தில் 100 மில்லியன் டாலர்களுக்கும் (10 கோடி) அதிகமான பணம் வந்துள்ளது. [29]. தேவைப் படுபவர்களுக்கு உதவுவதற்கே இந்தப் பணம் முழுவதும் செலவழிக்கப் படுவதாக சொல்லப் படுகிறது, அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால், மிஷநரி கல்வி நிறுவனங்களின் பாரபட்ச அணுகுமுறைகள், அவர்கள் புரியும் பாராட்டுக்குரிய சேவைப் பணிகளை முற்றிலும் மதிப்பிழக்கச் செய்கின்றன. மிஷநரி நிறுவனங்களின் பாரபட்சமான இட ஒதுக்கீடுகள் பெரும்பான்மையினர் மத்தியில் பெரும் கசப்புணர்வை ஏற்படுத்துகின்றன [30] என்று நன்கு தெரிந்திருந்தும் கூட, இவற்றை ரத்து செய்வதையோ குறைப்பதையோ பற்றிய எண்ணம் சிறிது கூட அவர்களிடம் இல்லை. மாறாக, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரி செய்தது போல, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனங்களில் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன [31].






நீண்டகால நோக்கில், இதனால் பாதிக்கப் படுவது இந்தியாவின் வளர்ச்சி விகிதமும், மனித உரிமைகளும் மட்டுமல்ல, அதைவிட மேலும் பெரியதான அபாயங்களும் ஏற்படும் சாத்தியம் உள்ளது.






30வது சட்டப் பிரிவு உருவாக்கும் மதப் பாரபட்சங்கள், கல்வி நிறுவனங்கள் மீது மிஷநரிகளின் அளவுக்கதிகமான கட்டுப்பாடு – இவை உருவாக்கும் நீண்டகால விளைவுகளை “பிரிவினைகளின் தொடர் இயங்குமுறைக் கோட்பாடு” (Dynamic Models of Segregation) என்கிற அறிவியல்பூர்வமான முறை கொண்டு அடுத்த பகுதியில் ஆராய்வோம். இந்த அறிவியல் முறை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங் உருவாக்கியது.






(தொடரும்)



No comments:

Post a Comment