Friday, December 17, 2010

china-real face

சீனாவைப் பற்றி ஒரு பார்வையாளனின் எண்ணங்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சீனாவை ஒரு சட்டகத்திற்குள் அடைக்கும் முயற்சியோ, அல்லது சீனாதான் டாப்பு அல்லது வேஸ்ட்டு என்றோ குறிப்பிடாமல் ஒரு இந்தியன் சீனாவில் வாழ்ந்த காலங்களில் தான் கண்டு, கேட்டதை தனது இந்தியக் கண்ணாடி கொண்டு பார்த்திருக்கிறார். அங்கிருக்கும் நல்லது கெட்டதுகளையும், அது இந்தியாவில் இருந்தால் எப்படி நமக்கு நன்மை பயக்கிறது என்பதையோ, அல்லது அது நமக்கு எப்படி பாதகமாக இருக்கிறது என்பதையோ தனது கருத்தாக பதிவு செய்திருக்கிறார் பல்லவி அய்யர்.
சீனா என்ற பிரம்மாண்டத்தை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து கொள்வதற்காகவே பயணம் செய்திருக்கிறார். அவரது வேலையும் பத்திரிக்கையாளர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மனதில் பட்டதை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார்.
சீனா என்பது ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது என்கிறார். குறைந்தபட்ச தேவைகளான உணவு, உடை உறையுள் எல்லோருக்கும் கிடைப்பதை சாத்தியப்படுத்தியிருக்கிறது அரசு. ஒரு மக்கள் நலன்சார் அரசு இதைவிட வேறு என்ன மக்களுக்குச் செய்துவிட முடியும்?
இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு வாக்கு என்ற ஒரு ஆயுதமாவது இருக்கிறது. ஆனால் சீனா மக்களுக்கு வாக்கு என்ற ஒன்றிருப்பதே தெரியுமா எனத் தெரியவில்லை என்கிறார். மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சியைப் போன்ற ஒரு ஆட்சியில் இருப்பதை விளக்குகிறார்.
பொதுமக்களுக்கு எதிரான அரசின் குற்றங்கள் எல்லாம் பத்திரிக்கைகளாலும், மனித உரிமைகள் அமைப்பாலும் மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். மீண்டும் அரசு மக்கள் விரோத வேலைகளை செய்யாது. ஆனால் சீனாவிலோ மனித உரிமைகள் எல்லாம் முழுதாய் மீறப்படும். மக்களுக்கு எதும் தெரியாமல் மறைக்கப்பட்டு விடும். ஊடகங்களிலோ, புத்தகங்களிலோ அவை இல்லாமல் செய்யப்பட்டு அடுத்த தலைமுறைக்கு நடந்த அநியாயங்கள் எதும் தெரியாமலேயே போய்விடும். எடுத்துக்காட்டு, தியான்மென் சதுக்கப் படுகொலைகள். சுருங்கச் சொன்னால் எது வரலாறு என்பதைக்கூட அரசாங்கமே தீர்மானிக்கும். உண்மைக்கும் அதற்கும் காததூரம் இருக்கும்.
சீனாவில் ஒரு கட்சி ஆட்சியினால் எதிரிகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை என்ற நிலையில் அரசு நினைப்பதை உடனே செயலாக்க முடிகிறது என்பதையும், அதையே இந்தியாவில் செய்வதாயிருந்தால் சந்திக்க வேண்டிய சவால்களையும் குறிப்பிட்டு, இந்தியாவில் குறைந்தபட்சம் தனது கருத்துக்களைச் சொல்லவாவது வாய்ப்பளிக்கப் படுகிறது என்பதையும், ஆனால் சீனாவில் இந்த உரிமைகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்பதையும் சொல்கிறார்.
நமது தோழர்களும், காம்ரேடுகளும் சொல்வதுபோல சீனா ஒன்றும் சொர்க்கபூமியல்ல… எல்லா நாடுகளைப் போலவே எல்லாவிதமான பிரச்சினைகளும் உண்டு என்பதையும், அரசாங்கம் என்பது கிட்டத்தட்ட ஒரு அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல செயல்படுவதையும், இதையெல்லாம் எதிர்த்துக் கேட்க முடியாத நிலையில் அரசாங்கம் மக்களை வைத்திருப்பதையும் குறிப்பிடுகிறார்.சீனாவில் மருத்துவம் படிக்கச் செல்லும் நமது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கல்வி கிடைக்கிறது என்பதையும் சொல்கிறார். கிட்டத்தட்ட நம்மூர் மாட்டுக்கொட்டகை பொறியியல் கல்லூரிகளை விட மோசமான கல்வி வழங்கப்படுகிறது என்கிறார்.
சீனாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
பொதுமக்களுக்கு தீமை விளையும் எந்தத் திட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் அல்லது குறைந்தபட்சம் உரிய நஷ்டஈடு பெறவாவது முடியும். ஆனால் சீனாவில் அரசு, ”இடத்தைக் காலிசெய்” என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் இடம்பெயர வேண்டும். மறுத்தால் ஜெயில்வாசமும், கொடுமைகளும்.
இந்தியாவில் நமது இஷ்டம் மற்றும் வசதிக்கேற்ப நாம் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சீனாவிலோ நினைத்தபடி குழந்தை பெற்றுக்கொள்ள நீங்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் முடியும். இல்லையெனில் ஒரு குழந்தைதான் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் சாமி கும்பிடலாமா, எந்த சாமியைக் கும்பிடுவது அல்லது கோவில் கட்டிக்கொள்ளலாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் இந்தியாவில், சீனாவில் அரசாங்கம் முடிவு செய்யும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு கடவுள். முன்பு சேர்மன் மாவோ, தற்போது புத்தர். முதலில் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடித்தனர் இந்த கம்யூனிஸ கும்பல்கள். தற்போது பொறுமை இழந்துகொண்டிருக்கும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஒரே வழி கோவில்களை புதிதாய் கட்டுவதுதான் என கோவில்களை அரசே கட்டிக்கொண்டிருக்கிறது. ஆக, கொள்கைகளைவிட தான் பதவியில் இருப்பதும், நாட்டை இரும்புப் பிடியில் வைக்கவும் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். புத்த மதத்தையும் அரசாங்கத்தின் பிடியில் வைத்துக்கொள்ளவும், அரசுக்கு எதிரான எதிர்ப்புக்குரல்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடவும் தலாய்லாமாவை நாட்டைப் பிரிப்பவர் என்றாக்கி விட்டார்கள். அடுத்த லாமாவையும் அரசே நிர்ணயம் செய்து மத சுதந்திரம் என்ற ஒன்றில்லாமல் செய்துவிட்டனர்.
சீனாவின் இஸ்லாமிய சமூகம் இதுவரை அரேபியாவுடன் தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் சீனர்களுடன் சுமூகமாக வாழ்ந்துவந்தனர். ஆனால் சமீபத்திய அரேபியத் தொடர்புகள், அவர்களை சீன சமூகத்திலிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது என்கிறார். தற்போதைய அமைதியின்மை அரேபியாவுடன் சீன முஸ்லிம்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவுடன் வந்தது என்கிறார்.
நமது கேரளக் காம்ரேடுகள் அன்றாடம் செய்யும் போராட்டம், வேலை நிறுத்தம் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். தொழிலாளர்களின் சொர்க்கபுரியான கம்யூனிச சீனாவில் இவையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கப்படும்.
இந்தியாவில் உங்கள் எண்ணங்கள் உங்களுடையவை, சீனாவில் அரசாங்கம் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதுடன் , அரசாங்கம் செய்வது மட்டுமே சரி என்றும் உங்களை நம்பவைக்கும்.
உலகமே சார்ஸ் என்ற வியாதியால் அமளி துமளிப் பட்டுக்கொண்டிருக்க, அது சீனாவிலிருந்துதான் வருகிறது எனச் சொன்ன பிறகும் அரசாங்கமே மூடி மறைத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் அழியக் காரனமாய் இருந்தது. நிலமை கைமீறிய பின்னர் உண்மையை ஒத்துக்கொண்டது. இந்தியாவில் ஒரு ஆளுக்கு சார்ஸ் என்றாலும் இந்தியா முழுக்க அதுபற்றி பேசப்படும், குறைந்த பட்ச பாதுகாப்பு நடவடிக்கையாவது எடுக்கப்படும். சீனாவில் நாட்டின் கௌரவம் என்ற பெயரில் விஷயத்தை வெளியே சொல்லாமல் மக்களை சாகவிட்டது சீன அரசு.
நமது தோழர்கள் காட்டும், அல்லது கம்யூனிச நாடுகளில் தேனும் பாலும் ஓடுவதுபோல சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட பொய்கள் மட்டுமே என்பதை நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணரலாம்.
இந்தப் புத்தகத்தின் பலமே கிட்டதட்ட எந்தவிதச் சார்பும் அற்று ஒரு சமகால பத்திரிக்கையாளரின் பார்வையில் சீனாவைப் பற்றி சொல்லப்படுவதுபோல எழுதப்படிருப்பது. ஆனால் முடிந்தவரை உண்மையாய் எழுதப் பார்த்திருக்கிறார்.
china-labor-dispute
புத்தகத்தில் சிலகுறைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக, இந்தப் புத்தகம் சீனாவின் பெரும்பான்மைப் பகுதியான கிராமப்புற சீனாவைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சி எப்படி பண்டைய வரலாற்றை அழித்தது, அந்த வெற்றிடத்தை எப்படி சாதுர்யமாக கிறிஸ்தவம் நிரப்பி அதனை மேற்கிற்கான ஆயுதமாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை.சீனாவால் ஆதரிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் நமது பழங்குடி கலாச்சாரத்தை அழிப்பதுடன் நின்றுவிட்டு, அந்த வெற்றிடத்தை கிறிஸ்தவம் மூலம் நிரப்பி இன்றைக்கு வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட கிறிஸ்தவமயமாகி இந்திய இறையாண்மைக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம். சீனாவில் மாவோவினால் உருவாக்கப்பட்ட பஞ்சங்களைப் பற்றியும், அதனால அழிந்த லட்சக்கணக்கான மக்களைப் பற்றியும் சிறுகுறிப்புகூட இல்லை.
இவற்றை பல்லவி அய்யர் அணுகாதது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் இந்த விஷயங்களை அவர் அணுகாமைக்கான காரணங்கள் வெளிப்படை. அவர் வேலை செய்தது சென்னை மவுண்ட் ரோடிலிருந்து வெளிவரும் ஒரு சீன ஆதரவுப் பத்திரிக்கையில் என்பதை கருத்தில் கொண்டால், இவ்வளவுதூரம் சீனாவைப் பற்றி எழுதியதற்கே பாராட்டலாம். புத்தக ஆசிரியரின் இந்தியாவுடனான ஒப்பீடு நமக்கு சீனாவைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ராமன்ராஜா. சொல்வனம் இதழில் நிறைய அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் கலந்து எளிமையாக எழுதுபவர். இவரது சொல்வனம் கட்டுரைகள் இவரது எழுத்தைப் பற்றிய ஒரு சிறப்பான அறிமுகம் கொடுக்கும். புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பின் மூலம் நாம் மூலப்புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வேற்படுத்தியிருக்கிறார். ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிறார். பல்லவி ஐயரும் நகைச்சுவை உனர்ச்சியுடன் எழுதியிருப்பார்போல..  தமிழில் ஒரு காலத்தில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்றாலே வறட்டுத்தனமாக, ஜீவனின்றி மொழிபெயர்த்தல் என்ற நிலையிருந்தது. இன்றைக்கு ராமன்ராஜா, ஜெ.ராம்கி போன்றோர் தமிழ் மொழிபெயர்ப்பில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றனர்.
சீனாவைப் பற்றி கிட்டத்தட்ட காய்ப்பு, உவத்தலின்றி எழுதப்பட்ட அருமையான புத்தகம்.
சீனா - விலகும் திரை
பல்லவி அய்யர் (தமிழில்: ராமன் ராஜா)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 360, விலை: ரூ 200.
ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.

1 comment: