இதனால் இப்போது அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் போன் போட்டு, "விக்கிலீக்ஸ்" தகவல்களை பொருட்படுத்தாதீர்கள். நாம் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம் என்று தாஜா செய்து வருகிறார்!
இந்த அளவுக்கு நிலைமை சந்தி சிரித்த பிறகும், அமெரிக்க அரசுக்கும் அந்நாட்டவர்களுக்கும் தங்களை பற்றிய ஆணவம் என்னவோ கடுகளவும் குறைந்தபாடில்லை என்பது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.
'யு.எஸ்.ஏ டுடே' ( USA Today) என்ற அமைப்பு கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை அமெரிக்கர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் - அதாவது 62 விழுக்காட்டினர் - அமெரிக்காவும், அமெரிக்கர்களும் "விதிவிலக்கானவர்கள்" என்று கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
" மற்ற உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா வேறுபட்ட மகத்தான நாடு.அதன் கடந்த கால வரலாறு மற்றும் அரசியலமைப்பு சாசனம் போன்றவற்றினால் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களின் குணாதிசயம் மாறுபட்ட ஒன்று" என 73 விழுக்காட்டினர் கருத்து கூறியுள்ளனர். இதில் குடியரசு கட்சியை சேர்ந்த 91 விழுக்காட்டினர் இதே கருத்தைக் கொண்டுள்ளனர்.
அதேப்போன்று அதிபர் பராக் ஒபாமாவும் "அமெரிக்கா விதிவிலக்கான நாடு" என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாக 58 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முந்தைய அதிபர்களான ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர்களிடத்தில் இருந்ததை விட, ஒபாமாவிடம் இந்த எண்ணம் சற்று குறைச்சலாகத்தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதே சமயம் அமெரிக்கா, தனது சாதுரிய நடவடிக்கை மூலம் பெற்ற "உயர் அந்தஸ்து நிலை" யை இழக்கத் தொடங்கியிருப்பதாக ( விக்கிலீக்ஸ் போன்றவற்றால்...) பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும் உலக விவகாரங்களுக்கு தலைமையேற்று நடத்திச் செல்லும் "சிறப்பு பொறுப்பு" அமெரிக்காவுக்கு உள்ளதாக 66 விழுக்காட்டினர் கூறியுள்ளனராம்.
ஹூம்...! தும்முவதை கூட அமெரிக்காவிடம் கேட்டுவிட்டு செய்யும் பல உலக தலைவர்கள் ( நம் நாடும் சேர்த்துதான்!) இருக்கும் வரை அமெரிக்கர்களின் இந்த ஆணவம் அத்தனை இலேசில் அடங்காதுதான் போல!
No comments:
Post a Comment