ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Tuesday, December 28, 2010
சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை
ஆனைகட்டி ஆஸ்ரமம்.
26 - 5 - 2010.
நீதியற்றதும் பிறப்படிப்படையிலானதுமான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை. நமது தேசத்தின் பல பிராந்திய மொழிகளில் உள்ள வேதங்களல்லாத திருமுறைகளும் அனைத்து மானுடத்தின் ஒற்றுமையைப் போற்றிப்புகழும் வசனங்களைக் கொண்டுள்ளன. மத நம்பிக்கை, பால், இன்று சாதி என கருதப்படும் பாகுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் நியாயமும் நீதியுமற்ற பாரபட்சங்களை அவை மறுக்கின்றன. ஹிந்து பாரம்பரிய வணக்கமான கை கூப்பி கூறப்படும் ‘நமஸ்தே’ எனும் வணக்கம் சக மனிதரில் உறையும் ஈஸ்வரத்தன்மையை வணங்குவதே ஆகும். பிறப்படிப்படையிலான பாகுபாடு காட்டுதலும் தனி நபர்களையும் குடும்பங்களையும் கொடூரமாக நடத்துவதும் சமூக ஏற்புடையதாக ஹிந்து சமுதாயத்தில் ஏற்பட்டது பழமையான ஹிந்து (சுருதி) பிரமாணங்களுக்கும் தத்துவங்களுக்கும் எதிரானதாகும் தமது பழமையான தர்மத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்றெடுத்த பல மக்கள் இதன் விளைவாக ஆண்டாண்டு காலமாக துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இன்றைக்கு நமது அரசியல் நிர்ணயச் சட்டமும் பல நூற்றாண்டுகளாக ஞான ஒளி பெற்ற சமூக-ஆன்மிக அறிஞர்களும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நிலைபாடுகள் எடுத்தும் போராடியும் வருகிறார்கள். என்ற போதிலும் இத்துன்பங்கள் நிலவுகின்றன. இத்துன்பங்களை போக்க அவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இத்துன்பங்களை உருவாக்கும் சூழலுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது முக்கியமானதாகும்.
கிராமக் குடியுறவுகளாக உருவான உறவுகள் ஒருவித பாதுகாப்புத் தன்மையை அளிப்பதாக அமைந்தன. இவ்வித உறவுகளாகத் தொடங்கிய விஷயங்கள் பல நூற்றாண்டுகளாக இவ்வித சமூகப் பாரபட்சங்களாக ஆழமாக நம் கிராமப்புறங்களில் வேரூன்றிவிட்டன. இதனை ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா நன்றாக உணர்ந்திருக்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களை முழுமையாக அகற்றுவது நேரமெடுக்கும் ஒரு விஷயமாகும் என்பதையும் ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. எனவே தீவிரமான முன்முனைப்பு கொண்ட தொடர்ச்சியான களப்பணியின் மூலமே பிறப்படிப்படையிலான நியாயமற்ற பாரபட்சங்கள் அகற்றப்பட முடியும் என ஆச்சாரிய சபா கருதுகிறது.
இந்த சமுதாய அடிப்படையிலான பிரச்சினைகளை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் குறையாகச் சொல்லி தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆபிரகாமிய மதமாற்றப் பிரசாரகர்கள் ஈடுபடுவதையும் ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா உணர்ந்திருக்கிறது. இதில் மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன. நம் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் நிலவும் கல்வியின்மை, அடிப்படை கட்டமைப்புகளின்மை, வருமானமின்மை ஆகியவை (அரசியல் சுயநலமிகளால்) சுரண்டப்பட்டு வருகிறது.
ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஆச்சார்ய சபாவின் உறுப்பினர்கள் உட்பட இந்த தேசத்தின் ஹிந்து சமயத் தலைமையானது பிறப்படிப்படையிலான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னணி முக்கிய செயல்பாடுகளை எடுக்க வேண்டுமென ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா கருதுகிறது. இதை அவர்கள் தங்கள் வரையறைக்குட்பட்ட மடங்களிலும் பீடங்களிலும் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் செய்ய வேண்டும். தங்கள் பிரவசனங்களில் செய்ய வேண்டும். மேலும் அறிவொளி கொண்ட ஹிந்து சமுதாய ஆர்வலர்கள் ஹிந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட எளிய மக்களை சமூக-பொருளாதார வலிமை அளிக்கவும் கல்வி அளிக்கவும் மேலும் பல அமைப்புகளை ஏற்படுத்தி உழைக்க வேண்டும்.
- சுவாமி தயானந்த சரஸ்வதி
ஒருங்கிணைப்பாளர், ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment