Monday, August 30, 2010

கெடும் நாடு,கேட்டினைச் சந்திக்கும்:சீனா

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூக்கை நுழைக்கிறது சீனா
















புதுடில்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட்டில், சீனா தன் மக்கள் விடுதலை ராணுவ வீரர்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்துள்ளது. இதை, சர்வதேச கொள்கை மையம் என்ற அமைப்பின் ஆசியத் திட்ட இயக்குனரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சீனாவின் செயல்களில் அதிக எச்சரிக்கை காட்டுகிறது இந்திய அரசு.














அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்று கூறி அதற்கான வரைபடங்களில் குழப்பம் ஏற்படுத்தி வரும் சீனா, ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் தற்போது மூக்கை நுழைக்க ஆரம்பித்து விட்டது. ஏற்கனவே, அம்மாநிலத்திலிருந்து சீனாவுக்குச் செல்பவர்களுக்கு, அம்மாநிலம் இந்தியாவுக்கு தொடர்பில்லாத தனிப்பகுதி என்று குறிப்பிடும் வகையில் முத்திரை பதித்து விசா வழங்கியது. இது ஸ்டேபிள் விசா நடைமுறையாகும்.














இந்தியா தலையிட்டு இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்த பின்பு, இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து செல்பவர்களுக்கு வழக்கம் போல் விசா வழங்கும் சீனா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் விசா வழங்குவதில்லை. அப்படி விசா தரப்பட வேண்டும் என்றால் அம்மாநிலம் "சர்ச்சைக்குரியது' என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று வாதிட்டு வருகிறது.














கடந்த வாரம், இந்திய ராணுவத்தின் வடக்குப் பிரிவின் தலைமைத் தளபதி பி.எஸ்.ஜாஸ்வால், சீனத் தலைநகர் பீஜிங்கில் நடக்க இருந்த ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவருக்கு சீனா விசா தர மறுத்து விட்டது. இதையடுத்து, இந்தியாவில் ராணுவப் பயிற்சிக்காக வர இருந்த இரண்டு சீன ராணுவ அதிகாரிகளுக்கு, இந்தியா விசா தர மறுத்து விட்டது.இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, சீனா, தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பி.ஓ.கே.,) தன் படைகளைக் குவித்து வருகிறது.














இதுகுறித்து சர்வதேசக் கொள்கை மையத்தின் ஆசிய திட்ட இயக்குனர் செலிக் எஸ்.ஹாரிசன் கூறியிருப்பதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் - பல்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மக்கள். இதையடுத்து, சீனாவின் ராணுவமான, "மக்கள் விடுதலை ராணுவ' வீரர்கள் ஏழாயிரத்திலிருந்து 11 ஆயிரம் பேர் வரை அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில், சீனா தன் பிடியை தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை செய்யவும் முனைந்துள்ளது. இதன் மூலம், வளைகுடா நாடுகளுடன் சீனா எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.சீனாவின் இச் செயலை பாகிஸ்தான் ஆதரிப்பது, அது அமெரிக்காவின் கூட்டாளி அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு செலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.














இதுகுறித்து கடந்த வாரத்தின் இறுதியில் இந்திய ராணுவ அதிகாரிகளோ, சீன ராணுவ அதிகாரிகளோ எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இந்திய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் தரப்பு அதிகாரிகள் சீனாவுக்குச் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அப்படி எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய இந்திய அதிகாரிகள் சிலர்,"சீனாவின் மறுப்பு குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது.இருப்பினும், இருதரப்பு எல்லை அதிகாரிகளுக்கிடையிலும், இந்த விவகாரத்தில் உருவாகியுள்ள முரண்பாடுகள் குறித்து இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்று குறிப்பிட்டனர்.














அருணாச்சல விவகாரம்: புதிய பிரச்னை: இந்நிலையில், சீன நகரமான ஷாங்காயில் கடந்த ஜூலை மாதம் நடந்த சர்வதேச கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் சீனர்கள் சிலர் நுழைந்து, இந்திய தேசிய வரைபடம் கொண்ட பிரசுரங்களை எடுத்துச் சென்றதாக புதிய விவகாரம் கிளம்பியுள்ளது.














இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில்,"சீனர்கள் சிலர் இந்திய "பெவிலிய'னில் புகுந்தனர் என்ற செய்தியில் உண்மை இல்லை. சீன அரசின் மக்கள் பாதுகாப்பு பீரோவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாகக் காட்டப்பட்டிருந்த வரைபடங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அந்த கண்காட்சியில், நம் பெவிலியன் இயங்குவதற்கு எவ்வித இடையூறும் நேரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.














ஆனால், இரண்டு அல்லது மூன்று சீனர்கள், இந்திய பெவிலியனில் நுழைந்து, வரைபடங்களைக் கேட்டு எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் அனேகமாக மாணவர்களாக அல்லது அதிகாரிகளாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.







1 comment:

  1. IF WE ALLOW THIS WITH PATIENCE CHINA WILL INVADE OUR COUNTRY WITH THE HELP OF PAKISTAN AND BANGALADESH, NEPAL AND SRILANKA THOSE WHO ARE WAITING TO REDUCE POWER OF OUR COUNTRY, THE CONGRESS GOVT NEVER DO ANY THING, THEY SIMPLY KEEP QUIT TO GET MUSLIMS VOTE BANK TO CONTINUE THEIR DECOITY.

    ReplyDelete