வலைப்பூ... சில கேள்விகள் - சில விளக்கங்கள்!
வலைப்பூ பற்றிய சில அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் கோவையின் 'ஓசை' செல்லா.
"பிளாக் துவக்குவது எப்படி?"
"ஒரு பிளாக் துவக்க, முதலில் நீங்கள் ஜி-மெயிலில் கணக்கு தொடங்க வேண்டும். பிறகு, பிளாக்கர்.காம் (Blogger.com) சென்று உங்களுக்கான பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லைத் (Password) தேர்ந்தெடுக்கலாம். அவ்வளவுதான் உங்களுக்கான தளம் தயார். அதில் நீங்கள் யுனிகோட் எழுத்துரு மூலம் உங்கள் கட்டுரைகளைப் பதியலாம். புகை - திரைப்படங்களைக் காட்சிக்கு வைக்கலாம். உங்கள் கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களை (Comments) நீங்களே தணிக்கை செய்யலாம். இப்போது பிளாக்கர்.காம் போலவே வேர்ட்பிரஸ்.காமும் (Wordpress.com) வலைப்பூ தொடங்கும் வாய்ப்பை அளிக்கிறது!"
"என் கட்டுரைகளை யார் படிப்பார்கள் அல்லது வாசகர்களை எப்படித் தேடிப் பிடிப்பது?"
"அந்தக் கவலையே உங்களுக்குத் தேவை இல்லை. ஏனெனில், ஆயிரக்கணக்கான வலைப்பூக்களைத் திரட்டும் திரட்டிகள் (Aggregator) ஏராளமாக இணையத்தில் இயங்குகின்றன. தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி ஆகியவை குறிப்பிடத்தக்க வலைப்பூ திரட்டிகள் ஆகும். உங்கள் வலைப்பூவைத் திரட்டியில் இணைத்துவிட்டால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் உங்கள் வலைப்பூக்களைப் படிக்கவும் செய்வார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நீங்கள் படிக்கவும் முடியும்!"
"வலைப்பூ எழுதுவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா?"
"நிச்சயமாக. எழுத்தின் தரம் மேம்பட மேம்பட, உங்கள் வலைப்பூவின் ஹிட்ஸ் (வருகையாளர்கள்) அதிகரிக்கும். ஹிட்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளம்பரங்களும் வரும். உங்கள் வலைப்பூவில் உள்ள விளம்பரத்தை ஒருவர் கிளிக் செய்தாலே உங்களுக்கு வருமானம் உண்டு. கூகுள் அட்சென்ஸ் என்ற நிறுவனமும் ஏராளமான விளம்பரங்களை அளித்து ஊக்குவிக்கிறது. இப்போதைய ட்ரெண்டில் பிரபல பதிவர் அந்தஸ்தை எட்டும் ஒருவருக்குக் குறைந்தபட்சம் மாதம் இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் விளம்பர வருமானம் கிடைக்கும்!"
"வலைப்பூவில் கட்டுரைகள் மட்டும்தான் பதிய முடியுமா?"
"அது உங்கள் இடம்... நீங்கள் எதுவும் செய்யலாம். சமீபமாக 'விளாக்' (vlog) என்னும் வலைப்பூக்கள் பிரபலமடைந்து வருகின்றன. விளாக் என்பது வீடியோ ஏற்றக்கூடிய பிளாக் ஆகும். ஒலி-ஒளி வலைப்பூக்களுக்கு ஏராளமாக விளம்பரங்கள் குவிகின்றன. நான் என் வலைப்பூவில் பயன்படுத்தும் புகைப்படங்களை ஸ்டாக் ஏஜென்சி எனப்படும் புகைப்பட நிறுவனம் காப்புரிமைக்காகக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறது!"
"வலையுலகின் எதிர்காலம் எப்படி இருக்கும்?"
"மிகவும் பிரகாசமாக இருக்கும். கோவை செம்மொழி மாநாட்டில் இணைய மாநாடும் ஒரு பகுதி. வலைப் பதிவர்களையும் எழுத்தாளர்களாக அங்கீகரித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நடத்தினார்கள். எனவே, பிரபல பதிவரே 'பிரபல எழுத்தாளர்' ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை!"
இணையத்தில் எழுதுவதன் மிகப் பெரிய பலம் அதன் ரகசியத் தன்மை. நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில்தான் எழுத வேண்டும் என்றில்லை. எந்தப் பெயரில் வேண்டுமானாலும் வலைப்பதிவு தொடங்கி எழுதலாம்.
பின்னூட்டங்களில் யார் பெயரையும் குறிப்பிடாமல் அனானிமஸாகக் குறிப்பிடப்படும் வசதி உண்டு. ஒருவேளை அத்தகைய கமென்ட்களை நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், அதை அனுமதிக்காமல் இருப்பதற்கான வசதி உண்டு.
உங்களது மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை உள்ள நபர்களிடம் மட்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிப்பதால், தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுக்கலாம்.
வலைப்பதிவு எழுதும் பெண்கள் தங்கள் புகைப்படங்களை வலையில் ஏற்றும் முன், யோசித்து ஏற்றுவது நல்லது. ஏனெனில், இணையம் என்பது எல்லோராலும் எந்த அனுமதியும் இன்றி பயன்படுத்தப்படும் தளம் ஆகும்.
உங்களது எழுத்துக்களில் உச்சபட்ச நாகரிகம் அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களது பதிவுகளை வலைப்பதிவில் ஏற்றும்போது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஏற்றினால், அது படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்.
புகைப்படம், வீடியோ ஏற்றுவது மட்டுமல்லாது கருத்துக்கணிப்பு நடத்துவது, டிவிட்டர் அப்டேட்ஸ்களை ஏற்றுவது என்று பல வசதிகள் இப்போது வலைப்பூக்களில் வந்துவிட்டன!
நன்றீ
ReplyDelete