Tuesday, November 15, 2016

வள்ளலார் அருளிய அம்பலத்தான் துதிப் பாடல்கள்



ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

பாடிய வேதங்கள் தேடிய பாதம்
  பக்தி செய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
  நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்                     1

                                         (ஆடிய)
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
  தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
  வஞ்ச மனத்தில் வசியாத பாதம்                      2
                                         (ஆடிய)
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
  அன்பர் உளத்தே அமர்ந்தருளும் பாதம்
நாராயணன் விழி நண்ணிய பாதம்
  நான்புனை பாடல் நயந்த பொற்பாதம்               3
                                          (ஆடிய)

நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
  நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்ல பொற்பாதம்
  மந்திர யந்திர தந்திர பாதம்                          4
                                          (ஆடிய)
எச்சமயத்தும் இலங்கிய பாதம்
  எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
  ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம்                    5
                                           (ஆடிய)

தேவர்கள் எல்லாம் சிந்திக்கும் பாதம்
  தெள்ளமுதாய் உளம் தித்திக்கும் பாதம்
மூவருங் காணா முழுமுதற் பாதம்
  மூப்பாலுக்கு அப்பால் முளைத்த பொற்பாதம்          6
                                          (ஆடிய)

துரிய வெளிக்கே உரிய பொற்பாதம்
  சுகமய மாகிய சுந்தர பாதம்
பெரிய பொருளென்று பேசும் பொற்பாதம்
  பேறெல்லாம் தந்த பெரும் புகழ் பாதம்                7
                                         (ஆடிய)

சாகா வரம் தந்த தாரக பாதம்
  சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருஷ்டிக்கும் பாதம்
  திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்               8
                                           (ஆடிய)

ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம்
  ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
  துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்                 9
                                          (ஆடிய)

ஐவண்ண முங்கொண்ட அற்புத பாதம்
  அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
  கண்ணும் கருத்தும் கலந்த பொற்பாதம்               10
                                           (ஆடிய)

ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
  அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
  சத்திய ஞான தயாநிதி பாதம்                      11
                                          (ஆடிய)

தாங்கி எனைப் பெற்ற தாயாரும் பாதம்
  தந்தையுமாகி தயவு செய்ப் பாதம்
ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்
  உண்மை விளங்க உரைத்த பொற்பாதம்               12
                                          (ஆடிய)

எண்ணியவாறே எனக்கருள் பாதம்
  இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
  பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்               13
                                           (ஆடிய)

ஆறந்தத் துள்ளும் அமர்ந்த பொற்பாதம்
  ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லா என வாழ்முதற் பாதம்
  மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்                  14
                                           (ஆடிய)

அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
  அம்மையும் அப்பனுமாகிய பாதம்
பொருட் பெரும் போகம் புணர்த்திய பாதம்
  பொன் வண்ணமாகிய புண்ணிய பாதம்               15
                                           (ஆடிய)
நாரண னாதியர் நாடரும் பாதம்
  நான் தவத்தாற் பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
  ஆசை விட்டார்க்கே அணிமையாம் பாதம்            16

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வள்ளலார் பெருமான் அருளிய இந்தத் துதியை தினமும் ஓதி,தில்லை சிதம்பரத்தில் ஆனந்தக் கூத்தாடுவானின் பொற்பாதங்களை தியானித்து வருதல் வேண்டும்;

அவ்வாறு மனம் உருகி அம்பலத்தாடுவானை வணங்குவோர் அனைவரும் பிறவிப்பிணி நீங்கி,மரணமில்லாப் பெருவாழ்வு அடைவார்கள் என்பது சத்தியம்;

ஓம் அகத்தீசாய நம
ஓம் அருணாச்சலாய நம
              


No comments:

Post a Comment