Monday, February 22, 2016

சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?

பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)


இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)

ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.
தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.



முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!


உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)                           

No comments:

Post a Comment