Wednesday, December 7, 2016

அனைத்து வளங்களையும் தரும் தீப மோட்ச பவுர்ணமி 13.12.2016 செவ்வாய்க்கிழமை!!!



ஒவ்வொரு தமிழ் மாதமும் நம் ஒவ்வொருவருடைய ஆத்மாவும்,மனமும் பரிபூரணமாக செயல்படுவது பவுர்ணமி அன்று மட்டும் தான்!

அன்றுதான் ஆத்மக்காரனாகிய ரவி(சூரியன்)யும்,மனக்காரனாகிய மதி(சந்திரன்)யும் முழு வலிமை பெறுகின்றார்கள்;இருவரும் வலிமையடையும் நாளில் நாம் ஜபம் செய்தாலும் சரி;சித்தரின் ஜீவசமாதிக்குச் சென்று வேண்டினாலும் சரி;அன்னதானம் செய்தாலும் சரி;சிவ வழிபாடு செய்தாலும் சரி;அதன் பிரதிபலன் பல மடங்கு பெருகும்;


அதனால் தான் அம்பாள் ஆலயங்களில் பவுர்ணமி பூஜைகள் நடத்திவருகின்றார்கள்;சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள்,அன்னதானம்,தீபம் ஏற்றி வேண்டுதல்,கூட்டாகப் பதிகம் பாடுதல்,குழுவாக தியானம் செய்தல் போன்றவைகளைச் செய்துவருகின்றார்கள்;இந்த பாரம்பரியம் நமது தமிழ்நாட்டில் கடந்த 20,00,000 ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகின்றது;

கார்த்திகை மாதம் வரக்கூடிய பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் கார்த்திகை பவுர்ணமி 13 12 2016 செவ்வாய்க்கிழமை முழுவதும் பவுர்ணமி திதி இருக்கின்றது;


இந்த அரிய மற்றும் அபூர்வமான பவுர்ணமி நாளன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா,சோழாபுரம் கிராமத்தில் (ராஜபாளையம் டூ திருநெல்வேலி துணை நெடுஞ்சாலையில்=ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 8 வது கி.மீ.தொலைவில்) அமைந்திருப்பது அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரம பாண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு மாலை 4 மணிக்கு வந்துவிடவேண்டும்;ஒரு மணி நேரத்திற்குள் நமது கோரிக்கைகளுக்கு ஏற்ற எண்ணெய்யைக் கொண்டு வரவேண்டும்;(பட்டியலைப் பார்க்கவும்)
கடன் தீரவேண்டும் என்று விரும்புவோர் 11 மண்விளக்குகளில் மாலை சரியாக 6 மணிக்கு கோவில் வளாகத்தில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவேண்டும்;வடக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;

பலகாலமாக தீராத நோய் உள்ளவர்கள் மாலை 6 மணிக்கு விளக்கெண்ணெய் தீபம் 11 மண் விளக்குகளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;தீராத நோய் உள்ளவர்கள் சார்பாக அவர்களது ரத்த உறவுகள்,நெருங்கிய நட்புகள் என்று யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்;தீபம் ஏற்றும் போது,அதாவது 11 மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் விநாடியில்    “இன்னாருக்கு இன்ன நோய் விரைவில் குணமடைய அருள்புரியுங்கள் விக்கிரம பாண்டீஸ்வரா” என்று வேண்டிக்கொள்ள வேண்டும்;

மகன் அல்லது மகள் அல்லது மருமகன் மற்றும் மருமகள் அல்லது பாசத்துக்குரிய உறவுகள் பள்ளி அல்லது கல்லூரி அல்லது அரசுப்பணிக்கு படிப்பவர்களுக்கு அந்தக் கல்வியில் வெற்றி பெற 11 மண் விளக்குகளில் மாலை 6 மணிக்கு நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றிடவேண்டும்;வடக்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்;

தினசரி தியானம் அல்லது வாசி யோகம் அல்லது ராஜயோகம் அல்லது அம்பாள் உபாசனை அல்லது பைரவ உபாசனை செய்து வருபவர்கள் இதே ராஜபாளையம் தாலுகா சோழாபுரம் கிராமம் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரமபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மாலை 6 மணிக்கு 11 மண் விளக்குகளில் தீபம் ஏற்றிடவேண்டும்;வடக்கு நோக்கி தீபம் ஏற்றி வழிபடவேண்டும்; பல ஆண்டுகளாக மந்திர ஜபம் செய்தும் அது சித்திக்கவில்லையே என்று வருந்துபவர்களும் இப்படி தீபம் ஏற்றி வழிபடலாம்;

 ஜோதிடப்படி பாதகாதிபதி திசை அல்லது விரையாதிபதி திசை அல்லது அட்டமாதிபதி திசை அல்லது ஆறாமிடத்து அதிபதி மஹாதிசை நடைபெற்றுவருகின்றது;அதனால்,தொழிலில் வளர்ச்சி இல்லாமல் தினசரி வாழ்க்கையை போராட்டமான மன நிலையில் கழிப்பவர்கள் இங்கே வருகை தந்து மாலை 6 மணிக்கு பஞ்சதீப எண்ணெய்யில் 11 மண்விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக,தொழில் வீழ்ச்சியில் இருந்தும்,தொழில் மந்த கதியில் இருந்தும்,தொழிலில் ஓட்டம் இல்லாத நிலையில் இருந்தும் மீண்டு தொழில் படிப்படியாக வளர்ச்சி அடையும்;மேற்கு நோக்கி தீபங்களை ஏற்றிடவேண்டும்;/

ஆயில்யம்,பூராடம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு வாழ்க்கைத் துணை அமைவது மிகவும் கடினம் ஆகும்;தவிர,பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்களில் பல ஆண்களுக்கும்,பெண்களுக்கும் திருமணம் அமையாமல் பல ஆண்டுகள் மன உளைச்சலால் அவதிப்பட்டு வருபவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள்;அவர்களுக்கு விரைவில் வாழ்க்கைத் துணை அமைய நவதீப எண்ணெய்யில் 11 மண் விளக்குகளில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றிடல் வேண்டும்;மேற்கு நோக்கி தீபம் ஏற்றுவது அவசியம்;
பிரிந்து வாழும் கணவன் அல்லது மனைவி தமது வாழ்க்கைத் துணையுடன் இணைய இதே போல நவதீப எண்ணெய் தீபங்கள் 11 ஏற்றிடல் வேண்டும்;

 பல குடும்பங்களில் முன்னோர்கள் செய்த தீவினையால் வீட்டில் இருக்கும் யாராவது ஒரு சிறுவயதில் காணாமல் போயிருக்கின்றார்கள்;அவர்கள் திரும்பிவரவேண்டும் என்று ஏக்கத்தில் அவர்களது குடும்பத்தார் தவித்துக் கொண்டிருப்பர்;அவர்களது சார்பாக 11 மண் விளக்குகளில் நவதீப எண்ணெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்;

சுருக்கமாக::-

தேங்காய் எண்ணெய் தீபம்: கடன் தீரும்;(வடக்கு நோக்கி)

விளக்கெண்ணெய் தீபம்:நோய் தீரும்;(கிழக்கு நோக்கி)

நல்லெண்ணெய் தீபம்: கல்வி,ஞானம்,கலைகள் வரும்;(வடக்கு நோக்கி)

பஞ்சதீப எண்ணெய் தீபம்: தொழில் வளர்ச்சி,மன அமைதி,குடும்ப ஒற்றுமை(மேற்கு நோக்கி)

நவதீப எண்ணெய் தீபம்:திருமணத் தடை,பிரிந்தவர் கூடுவர்;காணாமல் போனவர்கள் திரும்பி வருவர்;(மேற்கு நோக்கி)

இது அனைத்தும் வேண்டியவர்கள் சுத்தமான பசு நெய் முடிந்தால் காராம்பசுவின் நெய்(கடையில் வாங்கிய நெய்யை கொண்டு வருவதால் பலன் கிட்டாது)

கடந்த ஏழு மாதங்களாக ஒவ்வொரு பவுர்ணமிக்கும் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே வருகை தந்து மஹாதேவசிவம் என்ற சித்தரின் ஆசிகளால் வளமோடும் நலமோடும் வாழ்ந்து வருகின்றார்கள்;

இம்மாதமும் வருகை தந்து தீபம் ஏற்றி வேண்டுபவர்களுக்கு அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் விக்கிரமபாண்டீஸ்வர் இவர்களிடம் இருந்து வரங்களை வாங்கித் தந்து நம்மை ஆட்கொள்பவர் இங்கே ஜீவசமாதியாகி இருக்கும் மஹாதேவசிவம் சித்தரே!!!


தென் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள்;சங்கரன் கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் பயணித்தால் முறம்பு என்ற நிறுத்தம் கடந்ததும் சோழாபுரம் வந்தடையலாம்;
வடக்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள்:ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன் கோவில் சாலையில் 8 வது கி.மீ.
விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர்கள்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முறம்பு வழியாகச் செல்லும் டவுண் பஸ் பிடிக்கவும்;சோழாபுரம் ஸ்டாப்பில் இறங்கி கோவிலை வந்தடையலாம்;

படத்தில் காணப்படுவது:கோவிலின் முகப்பில் இருக்கும் ஒற்றை நிலைக்கோபுரமும்; குழல்வாய்மொழி அம்பாள் சன்னதியும் அருகில் சிவசமாதி (ஜீவசமாதி) ஆகி இருக்கும் மஹாதேவ சிவம் சித்தரின் பீடமும்

ஓம் ரீங் மஹாதேவசிவம் மஹாதேவசிவம்



No comments:

Post a Comment