மனித உயிர்களின் ஜீவிதகாலம் நிறைவடைந்தப் பின்னர்,இப்பூவுல வாழ்க்கையில் புண்ணியம் செய்தவர்களானாலும்,பாவங்களைச் செய்தவர்களானாலும் தர்மலோகம் சென்று அங்கு தர்மராஜர் முன்பு நிறுத்தப்படுவர்;அங்கே அவரவர் செய்த நற்செயல்கள்(புண்ணியம்) மற்றும் தீயச்செயல்கள்(பாவங்கள்) ஆகியவற்றுக்கேற்ப புண்ணிய உலகங்களுக்கோ அல்லது நரக உலகத்திற்கோ அல்லது மீண்டும் இப்பூவுலகிற்கோ அனுப்பப்படுகிறார்கள்.(ஆதாரம்:கருடபுராணம்)
மகத்தான புண்ணிய காரியங்களைச் செய்துள்ள உத்தமஜீவர்களுக்கு தர்மராஜர் சம ஆசனம் கொடுத்து அவர்களை கவுரவித்துவருகிறார்;கவுரவிப்பார்;அதன்பின் புண்ணிய உலகங்களுக்குச் சகல மரியாதையுடன் சொர்ணமயமான விமானங்களில் அனுப்பி வைத்தார்;வைக்கிறார்;வைப்பார்;என்றும் புராணங்கள் விவரித்துள்ளன.
மறுபிறவியற்ற ஜீவன் முக்தர்கள் திருக்கையிலாயம்,பரமபதம் போன்ற உலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்;அங்கு இறைவனுடன் ஒன்றி நித்திய சாயுஜ்யப் பதவியைப் பெற்றுவிடுவர்.
இந்நிலையில் இப்பூவுல வாழ்க்கையின் போது அளவற்ற பாவங்களைச் செய்தவர்களைக் கூட பயங்கரமான,கொடிய தண்டனையைக் கொடுக்க அவ்வளவு எளிதில் தர்மராஜனுக்கு மனவராதாம்.ஆதலால்,அத்தகைய பாவிகள் கூட ஏதாவது ஒரு சிறு புண்ணியம் செய்திருந்தால் அதனைக் காரணம் காட்டியாவது மீண்டும் உலகிற்கே மறுபிறவி எடுக்க அனுமதித்து நரகவேதனையில் இருந்து அந்த ஜீவனைக் காப்பாற்றிவிடலாம் என கருணை மிகுந்த தன் திருவுள்ளத்தில் நினைப்பாராம் தர்மராஜர்.
ஆதலால்,கொடிய பாவங்களைச் செய்துள்ள ஜீவனைப் பார்த்து சிறு புண்ணிய காரியமாவது செய்திருக்கிறாயா? பசித்தவனுக்கு உணவு கொடுத்திருக்கிறாயா? புண்ணிய நதியில் நீராடியிருக்கிறாயா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வருவாராம்;எல்லா கேள்விகளுக்குமே ‘இல்லை’ என்று சொல்லும் ஜீவனிடம் கடைசி முயற்சியாக “ கொக்கராயன் திருக்கோவில் கோபுரத்தையாவது கண்ணால் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்பாராம்.
இந்த சிறு புண்ணியத்தையாவது அந்த ஜீவன் செய்திருந்தால் அந்த காரணத்தைக் கொண்டு அந்த ஜீவனின் நரகவேதனையைத் தவிர்த்துவிடலாமே என்று ஏக்கத்துடன் தான் இக்கேள்வியைக் கேட்பாராம். ‘அவற்றை நான் பார்த்ததில்லை’ என்று அந்த ஜீவன் பதிலளித்துவிட்டால் வேறு வழியில்லை என்று நரகத்திற்கு அனுப்பி வைப்பாராம்.
புராணத்தில் இருக்கும் ஸ்தலவரலாறு:
பிரம்மதேவனுக்கு ஒருமுறை படைப்புத் தொழிலைச் செய்யும் யாமே பெரியவர் என்ற ஆணவம் கொண்டு சிவனை வணங்காது இருந்தார்.ஆணவம் தலைக்கேறியது.சிவ அபவாதம் நேரிட்டது.அப்பாவச் செயலால் மறதியில் வீழ்ந்தான் பிரம்மன்.உறக்கத்தில் ஆழ்ந்தான்;உறக்கம் நீங்கி எழுந்தான்.எப்போதும் போல படைப்புத்தொழில் செய்ய முனைந்தான்;தொழில் கைகூடவில்லை! என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்தான்.
ரிக்,யஜீர்,சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களையும் கொண்டு நான்முக பிரம்மா படைப்புத்தொழில் இயற்ற இயலாமல் வருந்து சிவப்பரம்பொருளை நோக்கித் தியானித்தார்.அப்போது தேவரிஷி நாரதர் அவர் முன் தோன்றி, “நீங்கள் செய்த சிவ அவராதம் மிகவும் கொடியது.எல்லாம் வல்ல பரம்பொருள் சிவபெருமான் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமாய் நிற்கும் மூர்த்தி பசுபதியாகி ஆன்மாக்களிடம் மலத்தேய்வை ஏற்படுத்த பிறவிகள் தோறும் பிறப்பெடுக்கச் செய்கிறார்.ஆணவம்,மாயம்,கன்ம மலங்களை விடுத்து பசுவாகிய உயர்பதியாகி இறைவனோடு சேர பூவுலகில் பல்வேறு இடங்களில் ஆலயம் அமைத்து பக்திநெறி செலுத்தி உய்ய வழி செய்துள்ளார்.
நீவிர் செய்த கொடுஞ்செயலுக்கு ஈரோடு காவிரிக்கரையில் மாமரங்கள் அடர்ந்த(கொக்கு=மாமரம்) கொக்கு அரையன் பேட்டை வனத்தில் தவம் இயற்றினால் சிவபெருமான் காட்சி தருவார்.உமது பாவம் தீரும்” என்றார்.
பிரம்மனும் பூவுலகிற்கு வந்து,காவிரிக்கரையில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து,பல ஆண்டுகள் தவமிருந்தார்.பிரம்மன் உருவாக்கிய லிங்கமே பிரம்மலிங்கம் என்ற பெயரில் அருள்பாலித்துவருகிறார்.பிரம்மனது தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அங்கு தோன்றி பிரம்ம தேவரின் சிவ அபவாதத்தை நீக்கினார்.பிரம்ம தேவரின் வேண்டுதலின்படி இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கொடுத்து வளமான வாழ்வு பெறா ஸ்ரீபிரம்மதேவர் பூஜித்ததாக ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.
இங்குள்ள பைரவப்பெருமான் சிறப்பு அம்சங்களைக் கொண்டவர்.எட்டுத் திருக்கரங்களுடன்,நாய் வாகனம் இன்றியும்,முப்புரிநூலாக நாகத்தை அணிந்தும் காட்சி தருகிறார்.இத்தகைய வடிவத்தை வடுகபைரவர் என்று ஆகமசாஸ்திரம் தெரிவிக்கிறது.அஷ்ட பைரவர்களில் இவர் சத்ரு சம்ஹாரபைரவராக இருக்கிறார்.சத்ரு உள்ளவர்கள் இங்கே வந்து தேய்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் தேங்காய்மூடியில் அல்லது சாம்பல் பூசணி(திருஷ்டிப் பூசணி)யில் விளக்கு ஏற்றி,பைரவ சஷ்டிக்கவசம் பாடி வழிபட்டால்,எதிரிகள் அடங்குவர் என்பது ஐதீகம்.
நாமக்கல் மாவட்டம்,திருசெங்கோடு வட்டத்தில் கொக்குராயன்பேட்டையில் ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.ஈரோட்டில் இருந்து 16 கி.மீ.தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,தனது ஜன்ம நட்த்திர நாட்களில் இங்கே வந்து,மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால்,வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.தொடர்ந்து ஒன்பது ஜன்ம நட்சத்திர நாட்களில் வந்து வழிபடுவது நன்று.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
No comments:
Post a Comment