Friday, May 1, 2015

பரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவர்!!!





மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தனது மாமனின் விருப்பப்படி மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்காக கடற்கரைப்பட்டிணத்தில் இருந்து அழைத்துக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.வரும் வழியில் மாலை நேரம் ஆகிவிட்டதால் பெரிச்சிக்கோவில் என்ற இத்தலத்தில் இரவுப்பொழுதைக் கழிப்பதற்காகத் தங்கினான்.இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் போது நச்சுப்பாம்பு ஒன்று அவனைத் தீண்ட உயிர் துறந்தான்.அவன் மணம் செய்துகொள்ள அழைத்து வந்த மணமகள் அழுது புலம்பினாள்.அந்நேரம் அவ்வழியே யாத்திரை வந்த திருஞானசம்பந்தர் அப்பெண்ணின் துயரைக் கண்டு மனம் இரங்கி இத்திருத்தலத்தில் தான் சுகந்தவனேசுவரரை வணங்கி வணிகன் உயிர்ப்பெற்று எழ வேண்டும் என்று பதிகம் பாடினார்.

இத்திருத்தலத்தின் இறைவன் அருளால் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான்.பின்னர் திருஞானசம்பந்தரே இக்கோவிலில் உள்ள வன்னிமரம்,கிணறு,இலிங்கம் இவைகளை சாட்சியாக வைத்து வணிகனுக்கும்,அவன் மாமன் மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.பின்னர் வணிகன் தன் மனைவியை  அழைத்துக் கொண்டு மதுரையைச் சென்றடைந்தான்.அங்கே மதுரையம்பதியில் வணிகனின் முதல் மனைவி இந்த இளையவளைக் கண்டவாறு பேசித் துரத்த முயன்றாள்.இளையவளும் மூத்தவளின் நச்சுச்சொற்களைக் கேட்டுப்பெரிதும் துன்புற்றுப் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சோமசுந்தரக்கடவுளிடம் முறையிட்டாள்.

“நான் என் கணவரை மணம்முடித்துக் கொண்டது உண்மையானால் இப்பொழுதே என் திருமணம் நடந்தபோது இருந்த வன்னிமரமும்,கிணறும்,இலிங்கமும் இங்கே சாட்சியாகத் தோன்ற வேண்டும்.இல்லையேல் என் உயிரை இக்கணமே மாய்த்துக் கொள்வேன்” என்று சத்தியம் செய்தாள்.உடனே,மேற்கூறிய மூன்று சாட்சிகளும் தோன்றி இவளுக்கு இவ்வணிகனுடன் திருமணம் நடந்தது எனப் பறைசாற்றின.


இங்கே இரட்டைமுக பைரவர் மேற்கு நோக்கியவாறு காட்சியளிக்கிறார்.பழனிமலையில் முருகக்கடவுளை நவபாஷாணத்தால் வடிக்கும் முன்பே,இங்கே பைரவப் பெருமானின் வடிவத்தை நவபாஷாணத்தால் உருவாக்கியிருக்கிறார்.எட்டுக் கைகள்,ஆயுதம் ஏந்திய கபால மாலையுடன் காட்சியளிக்கும் நவபாஷாணபைரவப் பெருமானுக்கு பவுர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு வழிபாடுகள் 12,000 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன.பைரவப்பெருமானின் சிலை அதிக சக்திவாய்ந்த நவபாஷாணத்தால் ஆனது;எனவே,இதன் மருத்துவசக்தியைத் தாங்கும் ஆரோக்கியவலிமை கலியுக மனிதர்களுக்கு இல்லை என்பதன் அடிப்படையில் பைரவப் பெருமானுக்கு அணிவிக்கப்படும் வடைமாலை மற்றும் தீர்த்தம் பிரசாதமாகத் தருவதில்லை;வடைமாலையை சன்னதிக்கு மேல் போட்டுவிடுகின்றனர்;கலியுக அதிசயமாக இதை பறவைகளும் தொடுவதில்லை;அபிஷேகத் தீர்த்தம் பக்தர்கள் தொடமுடியாதவாறு கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.


இக்கோவிலில் சனிபகவான் வடகிழக்கு மூலையான சனிமூலையில் தனியாக,பைரவப் பெருமானின் சன்னதியின் பின்புறம் வன்னிமரத்தடியில் காட்சி தருகிறார்.இவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்;இவருக்காக பைரவப் பெருமான் பின்புறம் காட்சி தருவதாக கூறப்படுகிறது.சனிபகவானின் வாதநோயை குணப்படுத்தியவர் பைரவப் பெருமான்;மேலும்,சனியின் குரு பைரவப்பெருமானே! 

பைரவப் பெருமானின் அவதார நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கே தொடர்ந்து ஆறு பரணி நட்சத்திர நாட்களில் இங்கே வந்து ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேசுவரர்+சமீபவல்லிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அதன்பிறகு,பைரவப் பெருமானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்தால் அனைத்து கர்மவினைகளும் அடியோடு முழுமையாக நீங்கிவிடும்;

இங்கே வந்து இதுபோல வழிபாடு செய்ய இயலாதவர்கள்,அவரவர் வாழ்ந்து வரும் ஊர்களில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து(முடியாதவர்கள் அர்ச்சனை மட்டுமாவது செய்துவிட்டு),பைரவப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இதன் மூலமாக கடுமையான கர்மவினைகள் படிப்படியாக விலகி,நிம்மதியும்,செல்வச் செழிப்பும் மிக்க வாழ்க்கை தேடிவரும்.

இந்த வழிபாடுகளைச் செய்யத் துவங்குவோர் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்;மது அருந்தவேக் கூடாது;ஒழுக்கமாக வாழ்ந்து இந்த வழிபாடு செய்தால் இப்பிறவி முழுவதும் சகல சம்பத்துகளும் கிட்டும்;நிம்மதி நிரந்தரமாக இருக்கும்.

சிவகெங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ.தூரத்திலும்,காரைக்குடியில் இருந்து 19 கி.மீ.தூரத்திலும் அமைந்திருக்கிறது.

No comments:

Post a Comment