Wednesday, March 6, 2013

பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்

மதுரை: ""இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது,'' என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
மதுரையில் நடந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசியதாவது: செயற்கை விவசாயத்தால், தாய்ப் பால், பசும்பால் கூட, விஷமாகிவிட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதும், செயற்கை விவசாயம் தான். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் "ஆர்கானிக் பாஸ்பெடிக்' ரசாயனம், உடலின் கொழுப்புச்சத்தில் தங்கி, மூளை, மார்பகம், இடுப்பு பகுதிகளை பாதிக்கும். பசுமைப் புரட்சி செய்வதாகக் கூறி, ரசாயனங்களை தாராளமாக்கிவிட்டனர். இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது. ரத்தசோகை நோய், செயற்கை விவசாயத்தால் தான் ஏற்படுகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை கூட பாதிக்கும், அபாய நோய் அது. செயற்கை விவசாயத்தால், கிராமங்களிலிருந்த 75 சதவீதம் விவசாயிகள், 56 சதவீதமாக குறைந்துவிட்டனர். விவசாயிகள், கிராமங்களில் வசிக்கும் வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். கிராமங்களில் காடுகள் வளர்க்க வேண்டும்; தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. கிராமங்களின் நீர்வளத்தை அதிகரிக்க வேண்டும். செயற்கை நெல் விவசாயத்தால், ஒரு ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் மட்டுமே பெற முடியும். இயற்கை விவசாயத்தால் 5,000 கிலோ மகசூல் செய்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோலைமலை சாதனை படைத்துள்ளார். அவரின் திருத்திய நெல் சாகுபடிக்கு, மத்திய, மாநில அரசுகளின் விருது கிடைத்துள்ளது. இயற்கை விவசாயத்தை, ஊக்குவிக்க வேண்டும், என்றார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத்குமார், செயற்பொறியாளர் அயூப்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment