Sunday, March 24, 2013

மாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் பிரியதர்ஷினி(ஆன்மீகக்கடலின் தலைப்பு:உலகமயமாக்கலா? இந்தியத் தன்மையை சிதைத்து இந்தியர்களை நோயாளிகளாக்கும் அமெரிக்கமயமாக்கலா?)


எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது இன்றைய தலைமுறைக்கு. பேனாவால் எழுதுவது, கடிதம் அனுப்புவது, வானொலியின் முதல் அலைவரிசை கேட்பது, தொலைக்காட்சியில் தகவல் சார்ந்த வேளாண் நிகழ்ச்சிகள் பார்ப்பது, பாரம்பரியமான சோறு, சாம்பார், குழம்பு, ரசம் சாப்பிடுவது, கை கூப்பி வணக்கம் சொல்வது, கையால் உண்பது, கிராமியக் கலைநிகழ்ச்சிகள் பார்ப்பது, மனதை அமைதிப்படுத்தும் இசை கேட்பது, வீட்டிலுள்ள தொலைபேசியில் பேசுவது, தொலைக்காட்சியோ, கணினியோ இல்லாமல் அரை மணிநேரமாவது உயிர் வாழ்வது என, எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது. வித்தியாசமானது என்பது, சற்றே நாகரிகமான வார்த்தைப் பிரயோகம். பைத்தியகாரத்தனமாக அல்லது முட்டாள்தனமாக என்பது தான் சரியான வார்த்தை வெளிப்பாடு.
இணையதளத்தில் தட்டச்சு செய்தே பழகிய நாம், குறுஞ்செய்தி அனுப்பிப் பழகி, மின்கடிதம் அனுப்பிப் பழகி, முகநூல் அறிமுகத்தோடு, முகம் தெரியாத யாரோ ஒரு அன்னியரோடு நட்பு பழகி, மின் நூல்கள் படிக்கப் பழகி, இணைய உலகிலேயே இருப்பதால், பேனா உலகில் இணைய மறுக்கின்றனர் இவர்கள். கடிதம் எழுதும் போது இருக்கும் ஆர்வம், கடிதத்தைப் பிரிக்கும் போது இருக்கும் பரபரப்பு, கடிதத்துக்காகக் காத்திருக்கும் படபடப்பு, பழைய கடிதங்கள் தரும் சுவாரஸ்யம், புடவைக்குள் கடிதத்தை பொதிந்து வைப்பது, அதன் வாசனையை நுகர்வது, அதை மார்போடு அணைத்து நெக்குறுவது... என, எதுவுமே அறிமுகமாகாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. பண்பலை வரிசைப் பாடல் வரிசையும், விரைவு வண்டி மாதிரி தட தட அறிவிப்புகளும், அர்த்தமே இல்லாத டெடிகேஷனும், காதலை,நேசத்தை, அந்தரங்கத்தைப் பறைசாற்றுவதும் தான், இவர்களுக்கு பழக்கமானது. அறிவார்ந்த நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ருசிக்காது; ரசிக்காது. முப்பது வினாடிக்கு மேல் எதையும் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ கொஞ்சமும் பொறுமை அவர்களுக்குக் கிடையாது, அவர்களுடையது முப்பது வினாடி வாழ்க்கை. வேட்டி அணிந்து வரும் இளைஞர்கள் என்பது, கனவிலும் காண முடியாத காட்சி. பெண்களை ஜீன்ஸ், டீ - ஷர்ட், பேன்ட், சுடிதார், சல்வார், ஸ்கர்ட் என, பலவிதமாகப் பார்க்க நேருகிறது. ஆனால், புடவை எப்போதாவது கட்டப்படுகிறது. தாவணி திரைக் கதாநாயகிகள் தவிர, கிராமத்துப் பெண் கூட அணியாத உடையாகி விட்டது. நமது தட்பவெட்பத்துக்கும், சீதோஷ்ணத்துக்கும் பொருத்தமே இல்லாத எருமை மாட்டுதோலை விடக் கடினமான, ஜீன்ஸ் கலாசாரத்துக்கு நம்மையே காவு கொடுத்து விட்டோம்.


உணவும் கூட மாறி விட்டது. பாரம்பரிய உணவு வகைகள், எந்தையும் தாயும் மகிழ்ந்து, குலாவ பகிர்ந்துண்ட உணவுகள், பண்டிகைக் கால பட்சணங்கள், பிரசவ காலக் கை வைத்திய லேகியங்கள் எதுவுமே காணோம்; எங்கேயும் காணோம்.

நம் மண்ணிலேயே விளையும் பரம்பரை உணவுகள், வள்ளுவனையும், கம்பனையும், பாரதியையும் உருவாக்கிய தமிழ்மண் சார்ந்த உணவுகள் எதுவுமே தெரியாது, இன்றைய இளைய சமூகத்துக்கு. நெல் மரத்தில் காய்க்கிறது, கத்தரிக்காய் கொடியில் முளைக்கிறது, பால் - பாக்கெட்டில் உருவாகிறது என்று தான், சரியாக, துல்லியமாக, தப்பாகத் தெரியும். பதநீர், இளநீர், நுங்கு இதைப் பார்த்திருப்பரா என்பதும் கேள்விக்குறி தான். காலையில் பிரெட், மதியம் பீட்சா, பர்கர், இரவு நூடுல்ஸ் என்று, மேலை நாட்டு உணவு வகைகளே, நம் உணவு மேஜைகளில் குடியிருக்கிறது. கூடவே, அருந்துவதற்கு கோக், பெப்சி போன்ற வஸ்துகள். நழுவிக் கீழே விழுந்து விடாமல், பீட்சாவைப் பிய்ப்பது எப்படி என, வகுப்புகள் வைத்துத் தான் சொல்லித் தரவேண்டும். மூக்குச் சளியில் ஜவ்வு மாதிரி பிய்த்துக் கொண்டு, நூலாய்ப் போகும் பீட்சா; சாணி வரட்டி மாதிரி பர்கர்; மூத்திரத்தை குடிப்பது மாதிரி, கோக். எல்லா உணவுப் பானமும், நம் மண்ணுக்குச் சம்பந்தமே இல்லாதவை. உடல்நலனுக்கு ஒவ்வாதவை. பெரிதும் கலப்படத்துக்கு வழிவகுப்பவை என்பதை, கொஞ்சமாவது நின்று நிதானமாக, யோசனை செய்வரா, நம் இளைய தலைமுறையினர்?

பல்லாங்குழி, கல்லாங்கால், பாண்டி, கண்ணாமூச்சி, கபடி என்றால் என்னவென்றே இவர்கள் தெரிந்து கொள்ள மாட்டார்கள். கணினியில், "விர்ச்சுவல் ரியாலிட்டி' விளையாட்டும், வீடியோ சென்டரில் விளையாடுவதுமான, சோம்பேறி வாழ்க்கை வாய்த்திருப்பவர்களுக்கு, வியர்க்க, விறு விறுக்க ஓடியாடி விளையாடுவதன் சுகம் புரியுமா? அந்த வியர்வை உப்பின் இனிமை புரியுமா? அந்த களைப்பின் உற்சாகம் புரியுமா? முன்பு, நம் பெண்கள் பூசிக் குளித்த மஞ்சள் தான், இப்போது கிருமிநாசினி என்ற பெயரில், மேலைநாட்டு அலங்காரப் பூச்சுகளில் கலந்து வருகிறது. நம் பாரம்பரியம் எனில், முகம் சுளிப்பதும், மேலை நாட்டு முலாம் பூசினால், முகம் மலர்வதுமான, முகமூடி வேஷம் நம்மிடையே அதிகம். யோகா - மதம் சார்ந்தது என, நாம் வீண் விவாதம் செய்து கொண்டு சீரழிந்திருக்க, அது உடல் நலமும், உற்சாகமும் சார்ந்தது என, மேல்நாட்டவர் கற்று, நமக்கே கற்றுத் தரும் போது, வெட்கம் சிறிதும் இன்றி, வாரி அணைத்துக் கொள்கிறோம். நல்லனவெல்லாம் அங்கீகரிக்கலாம் தவறே இல்லை. ஆனால், நம்மைக் காவு கொடுத்தே, அனைத்தையும் ஏற்க வேண்டும் என்பது தவறில்லையா? நம் கறுப்பு நிறம் தான், நம் மண்ணுக்கான சிறப்பு என்பதை மறந்து போய், மூளைச் சலவை செய்யப்பட்டு, ஒரே நாளில் வெளுப்பாக்கும் கிரீம் பூசினால் தான், கல்யாண மார்க்கெட்டில் விலைபோக முடியும் என்ற நிர்பந்தத்துக்கு, கிராமத்துப் பெண்களும் உடன்படுவது நியாயமா?

போலியான மாயவலையே, இவர்களின் வாழ்க்கையாகி விட்டது. உடலை, உடல்நலத்தை, மனசை, வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை, பாரம்பரியத்தை, கலாசாரத்தை, வேர்களை, விழுதுகள் குணத்தை, முன்னோடிகளை, முன்னோர்களை, வருங்கால சந்ததியினரை, நம் பரம்பரையைப் பலிகடாவாக்கும் பழக்க வழக்கங்களை மேற்கொள்பவர்களே முன்னேறியவர்கள், முற்போக்கானவர்கள், நாகரிகமானவர்கள், பண்பட்டவர்கள். மற்றவர்களெல்லாம் பிற்போக்கானவர்கள், நாகரிகமற்றவர்கள், பண்பாடு தெரியாதவர்கள் என்பதான, நம் பொதுப்புத்தி சமூக மனோபாவம், மேம்போக்கான பார்வை எல்லாமே மாறினால் தான், வேர்களோடு இருப்பதும், வேர்கள் மண்ணோடு இருப்பதும் இகழத்தக்கது அல்ல என்பது புரியும். நிலத்தை இழப்பவர்கள் மட்டுமா அகதிகள்? நம் அடையாளம், வேர், முகம், முகவரி, உணவு, உடை, கலாசாரம், மொழி, இலக்கியம் எல்லாமே இழப்பவர்களுக்கு, வேறென்ன பெயர் இருக்கக்கூடும்? அப்படிப் பார்த்தால், நம்மை எப்படி அழைப்பது? சொந்த தேசத்து அகதிகள் நாம்...

இ-மெயில்: aandalpriyadarshini@yahoo.co.in

ஆண்டாள் பிரியதர்ஷினி, சமூக சிந்தனையாளர்                                                                                                                                    ஆன்மீகக்கடலின் கருத்து: நம்மை ஏன் அமெரிக்கா இன்னும் வல்லரசாக ஏற்றுக்கொள்ளவில்லை தெரியுமா? அவர்களைப் போல நாம் இன்னும் டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்த ஆரம்பிக்க வில்லை;அதனால் தான்!!! அதைத் தவிர,அமெரிக்கர்கள் செய்யும்,செய்துவரும் அனைத்தையும் செய்யத் துவங்கிவிட்டோம்.(எப்போதுதான் இந்த அடிமைப்புத்தி நம்மவர்களுக்குப் போகுமோ?)

1 comment:

  1. நல்ல ஒரு அறிவுரை பதிவு . நன்றி அய்யா

    ReplyDelete