உலகம் இயங்குவதற்கு, தண்ணீர் என்ற சக்கரம் அவசியமானது. இது ஐம்பூதங்களில் ஒன்று. இயற்கையுடன் தொடர்புடையது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அன்றாட வாழ்வின் பெரும்பாலான பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும்ற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அவசியம்.
வறட்சி ஏன்: பெருகும் மக்கள் தொகை, காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம், பூமி சூடாவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம். சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது, உலகின் தண்ணீர் தேவையை எப்படி ஈடு கட்ட முடியும். இதையும் செயற்கையாக தயாரிக்கலாம் என்றால், செலவு பன்மடங்கு அதிகம். எனவே, இயற்கையாக கிடைக்கும் நீருக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். ஏனெனில், இந்தியாவில் மூன்றில் ஒரு தெருக்குழாய் பழுதடைந்ததாகவே உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. சிலரே பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ளலாம். அவசியமில்லாத பணிகளுக்கு, தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். உணவுப் பொருள் வீணாவதை தடுக்க வேண்டும். மழை நீரை ஏரிகளில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பது, மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு: தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
* உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர்.
* தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, 2050ம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும்.
* உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.
* அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன.
* வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஒருமுறை மழை... ஓராண்டு தண்ணீர்!
மழைநீரை சேமித்தால் குடிநீருக்கு மற்றவர்களை எதிர்பார்க்காமல் ஆண்டுமுழுவதும் பயன்படுத்தலாம் என்கிறார், பொதுப் பணித்துறை சிறப்பு முதன்மை பொறியாளர் (ஓய்வு) அருணாச்சலம். மதுரை ஒத்தகடை, புதுப்பட்டியில் உள்ள தனது வீட்டில் ஏழாண்டுகளுக்கு முன், மழைநீர் சேகரிப்பை அமைத்துள்ளார். அவர் கூறியதாவது:
வீடு கட்டும் போதே கட்டட வரைபடத்தில் திட்டமிட்டு கட்ட வேண்டும். முதல் மாடியில் மழைநீர் வடிகட்டிக்காக தனியாக தொட்டி அமைத்துள்ளேன். மொட்டை மாடியில் ஓரடி ஆழத்தில் பள்ளம் அமைத்து, அதிலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் ஐந்து குழாய்களை அமைத்துள்ளேன். பள்ளம் அருகிலேயே இரண்டு வால்வுகள் இருக்கும். ஒரு வால்வைத் திறந்தால் மொட்டை மாடியை சுத்தம் செய்யலாம். மற்றொரு வால்வு வழியாக, மிகுதியாக தேங்கும் மழைநீரை வெளியேற்றலாம். ஐந்து குழாய்களின் மேலே சல்லடை மூடியை மூடவேண்டும். பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, சல்லடை துளைகள் வழியாக, வடிகட்டி தொட்டிக்குச் சென்று சுத்திகரிக்கப்படும். இந்த தண்ணீர் கீழ்ப்பகுதியில் உள்ள பாதாளத் தொட்டியில் சேகரமாகும். "கார் பார்க்கிங்' பகுதியில் சுரங்கத் தொட்டி அமைத்து, அதன் மேலே காரை நிறுத்திக் கொள்ளலாம். 12 அடி நீள, அகலத்தில் எட்டடி ஆழத்தொட்டியில் தண்ணீரை தேக்கி வைக்கலாம். திறந்திருக்கும் குழாய் பகுதிகளில் துணியால் மூடி, செம்புக் கம்பியால் கட்ட வேண்டும். இதன் மூலம் பல்லி, கரப்பான்பூச்சி வராமல் பாதுகாக்கலாம். மழை அதிகம் பெய்யும் போது, கீழ்நிலைத் தொட்டியில் தண்ணீர் நிரம்பும். அங்கிருந்து மின்மோட்டார் மூலம் மொட்டை மாடியில் உள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மூன்று தண்ணீர் தொட்டிகளில் ஏற்றி விடுவேன். தண்ணீர்த் தொட்டிகளை தாங்கும் அளவுக்கு "சிலாப்' அமைப்பது முக்கியம். இதுமட்டுமல்ல... அனைத்திலும் தண்ணீர் நிரம்பி விட்டாலும், தோட்டத்தில் மழைநீர் சேகரிப்புப் பள்ளம் அமைத்துள்ளேன். அதில் நிரம்பி, நிலத்தடி நீர் பெருகும். எந்த விதத்திலும் மழைநீரை வீணாக்குவதில்லை. தண்ணீரை கண்டிப்பாக கொதிக்க வைத்து தான் பருக வேண்டும். இதுவரை குடிக்க, சமைப்பதற்காக வெளியில் காசு செலவழித்ததில்லை. கட்டிய வீட்டிலும் சிறு மாற்றங்கள் செய்து, மழைநீரை சேமிக்கலாம்.
தண்ணீர் வடிகட்டும் தொட்டி: நான்கடி ஆழத் தொட்டியின் அடியில் கூழாங்கற்கள், அடுப்புக்கரி, சலித்த ஆற்றுமணல், கடைசியாக ஆற்றுமணல், கரித்தூளை ஒன்றாக்கி கொட்ட வேண்டும். தொட்டியின் மேல்பகுதி காலியாக விட வேண்டும். கரித்தூள் கிருமிகளைக் கொல்லும். ஏழாண்டுகளாக தொட்டியை சுத்தம் செய்யவில்லை. தண்ணீரின் தரத்தை பொதுப்பணித் துறையில் அவ்வப்போது பரிசோதிக்கிறேன். சுத்தமாக இருக்கிறது.
மழையெல்லாம்... சுகமே...: ஒருநபருக்கு குடிக்க, சமைக்க ஆறுலிட்டர் தண்ணீர் வேண்டும். நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு ஒருநாளைக்கு 25 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில், ஆண்டுக்கு குறைந்தது 9000 லிட்டர் தண்ணீர் வேண்டும். ஆயிரம் சதுரடி உள்ள வீட்டில், ஒரு செ.மீ., மழை பெய்தால் ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். சராசரியாக ஒன்பது செ.மீ., மழை பெய்தால், ஓராண்டுக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து விடும்.
நன்றி:தினமலர்ஆன்மீகக்கடலின் கருத்து:எப்போதெல்லாம் உலகில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதெல்லாம் உலக அளவில் குடிக்கும் தண்ணீர் மட்டுமல்ல;பொதுப் பயன்பாட்டு தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்படும்.ஆதாரம்:சைவ சித்தாந்தப் பாடல்கள். ஆன்மீகக்கடலின் கருத்து:பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்கா அரசின் மூலமாக ஐ.நா.சபையில் திருத்தம் கொண்டு வந்து,தண்ணீரையும் வர்த்தகப்பொருளாக்கிவிட்டன;விளைவு? இன்று கோடிக்கணக்கான உலக மக்கள் குடிதண்ணீரை விலைகொடுத்து வாங்கும் இழிநிலைக்கு ஆளாக்கிவிட்டன;இதற்கான பின்விளைவாக ஜி.8 நாடுகள் உலக அரசியலில் தமது செல்வாக்கை பரிபூரணமாக இழந்துவிடும்;வறுமைநாடுகளாக மாறிவிடும்.இன்று உலகத் தண்ணீர் தினமாம்;22/3/13இல்லை இல்லை தண்ணீரை வியாபாரப் பொருளாக்கியதால் உலகக் கண்ணீர் தினம்!!!
தாங்கள் கூறியது முற்றிலும் சரியே. அவரவர்கள் உணர வேண்டும்
ReplyDeleteஅன்புடன்
வெங்கட்
சங்ககிரி