Monday, February 11, 2013

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அருகே 11 ஆண்டாக சாதனை!!!


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற்கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன் மூலம் தென்னை, மா, வாழை போன்ற பயிர்களை, 75 வயது முதியவர் சாகுபடி செய்து, சாதனை புரிந்து வருகிறார்.

விவசாயத்தில், ரசாயன உரங்கள் பயன்பாட்டால், மனிதனினுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க, விவசாயிகள், இயற்க்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகளுக்கும் சந்தையில் தனி வரவேற்பும், விலையும் கிடைக்க துவங்கியுள்ளது.

இருப்பினும், பல விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிருக்கு, தற்போதும் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த நேரலகிரியை சேர்ந்தவர் அஸ்வத்நாராயணன், 75. இவர், கர்நாடகா மாநில போக்எவரத்து கழகத்தில் வேலை பார்த்து விட்டு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுக்கு பின், நேரலகிரியில் உள்ள தனக்கு சொந்தமான, எட்டு ஏக்கர் நிலத்தில், தென்னை, மா, வாழை, சப்போட்டா, பப்பாளி போன்றவற்றை சாகுபடி செய்துள்ளார்.

இவர், ஒரு பசு மாடு மற்றும் ஒரு கன்றை வளர்த்துக் கொண்டு, அதில் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு இயற்கை உரங்களை தானே தயாரித்து விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார். ரசாயன உரங்களை கொண்டு சாகுபடி செய்பவர்களை காட்டிலும், இவர் அதிக உற்பத்தி செய்து, விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். மேலும், தான் உற்பத்தி செய்த இயற்க்கை உரத்தை, தோட்டக்கலை துறைக்கு இலவசமாகவும், இவர் வழங்கி வருகிறார்.

அஸ்வத்நாராயணன் கூறியது:

கடந்த, 2002ம் ஆண்டு, ஹரித்துவாரில் சென்று, இயற்கை உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்று வந்தேன். அதன் பிறகு, மாட்டு சாணத்தில் இருந்து, பஞ்ச காவியம் தயாரித்து, மரங்களுக்கு உரமாக போட்டு வருகிறேன். மேலும், மரம் மற்றும் செடிகளுக்கு நோய் ஏற்பட்டால், அதற்கு தெளிப்பதற்காக, கோமியம், 100 லிட்டர், வேப்ப இலை, 25 கிலோ, பச்சைமிளகாய், 10 கிலோ, இஞ்சி, 10 கிலோ, பூண்டு, 10 கிலோ, புகையிலை, 10 கிலோ ஆகியவற்றை அரைத்து, கலந்து, 40 நாள் ஊற வைக்கிறேன்.

அதன் பின், அதை வடிகட்டி, ஒரு லிட்டர் தண்ணீரில், 50 மில்லி கலந்து, மரம் மற்றும் செடிகளுக்கு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கிறேன். இந்த கரைச்சலை தெளித்தால், மரம் மற்றும் செடிகளை தாக்கும் அனைத்து நோய்களும் சரியாகிவிடுகிறது. இதனால், உற்பத்தியும் அதிகமாகிறது. இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மா, மற்றும் தேங்காய்களை, பலரும் வாங்கிச் செல்கின்றனர். இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த விரும்புவோர், என்னை அணுகினால், இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நாங்களும் இயற்கை விவசாயம் தான் செய்ய தொடங்கியுள்ளோம், இயற்கை விவசாயம் தொடங்க முடிவு எடுத்திருந்தால் முதலில் மாடுகளும் ஆடுகளும் வளர்க்க ஆரம்பிக்க வேண்டும் நாட்டு மாடாக இருந்தால் மிகவும் நல்லது. பிறகு எடுத்தவுடன் வெறும் எறு மட்டும் போதும் என்று இருந்து விட கூடாது. சிறிது செயற்கை உரம் உபயோகியுங்கள் ஏன் என்றால், நமது நிலத்தின் நுண்ணுயிரிகள் தற்போது குறைவாக உள்ளதால் நமக்கு நாம் இடும் எருவின் பலன் உடனடியாக பயிர்களுக்கு கிடைக்காது அதனால் ஆரம்பத்தில் சிறிது மற்றும் கதிர் அல்லது பூ வைக்கும் போது சிறிதளவு செயற்கை உரம் இடவேனும் மற்ற காலத்தில் மோர் கரைச்சல், பஞ்ச காவ்யா மற்றும் ஜீவமிர்தம் இவற்றை தொடர்ந்து உப்யோகிக்கவேனும். மேலும் மண்ணில் எக்காரணம் கொண்டும் குருணை மருந்துகளை உபயோகம் செய்ய கூடாது. அது மண் புழுக்களை கொன்று விடும். தினமும் கோமியத்தை ஒரு வாளியில் பிடித்து அத்துடன் சாணத்தை சரி பாதி கரைத்து நான்கு மடங்கு நீர் சேர்த்து வயலுக்கு நீர் பாச்சும்போது அதில் சேர்த்து விடுங்கள் ஒரு 6 மாதம் இப்படி தொடர்ந்து செய்தால் அப்புறம் செயற்கை உரத்தை நிறுத்திவிடலாம். எப்பவும் உடல் வலிமை குறைந்தவனை தான் நோய் அன்டும் அது பயிர்களுக்கும் தான். அதன் பிறகு பூச்சி மருந்து கலவையினை அய்யா சொன்னதுபோல தயார் செய்து வைத்து எப்ப வேணும் என்றாலும் உபயோகம் செய்யுங்கள் மேலும் நம்மாழ்வார், பாலேக்கர், இவர்களின் கருத்துக்களை படியுங்கள், மக்கள் டிவி வேளாண்மை செய்திகள் பாருங்கள். இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் தமிழ் கூகுளே என்று type செய்து இன்டர்நெட் ப்ரௌசெரை தமிழுக்கு மாற்றி வைத்து விடுங்கள். பிறகு இன்டர்நெட் options கரண்ட் என்று type செய்யுங்கள் எப்போவும் தமிழ் ப்ரௌசெர் உங்களுக்கு கிடைக்கும். அதுக்கு பிறகு தங்களின் சந்தேகங்களை தமிழில் type செய்து கேளுங்கள் விடை கிடைக்கும். தமிழில் type செய்வது பிரச்சனை என்றால், நமது தினமலரின் இந்த கருத்துக்களை பதிவு செய்யும் பகுதியில் எழுதி பிறகு கூகுளில் பேஸ்ட் செய்யுங்கள் எளிதாக விடை கிடைக்கும். எதிர் காலம் நமது கையில் யாருக்கும் நாம் பயப்படவேண்டாம் இந்த பூமாதேவி நம்மை காப்பாத்துவாங்க.ஜெய் ஹிந்த்

Saturday, February 9, 2013

சொந்த செலவில் சூனியம்?




வியர்வை சுரப்பிகள் வெளியிடும் திரவம் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து உடல் வாடையைத் தருகிறது என நமக்குத் தெரியும்.ஆனால், ABC11 எனும் ஜீன் நமது உடலில் இருந்தால் நமது உடலில் இருந்து வாடையே வருவதில்லை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


அது மட்டுமல்ல, மனிதர்களில் பெரும்பான்மையோருக்கு உடல் வாடை ஏற்படுவதேயில்லை எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும் உடல் வாடை இல்லாத 75% பேர் பாடி ஸ்ப்ரே(நாத்தமருந்து??!!) உபயோகிப்பதாகவும் உடல் வாடை இருக்கும் நபர்களில் பலர் பாடி ஸ்ப்ரே உபயோகிப்பதில்லை எனவும் அவர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.சமூக கலாச்சாரம் என்ற பெயரில் ஆட்டு மந்தைகளாக மக்கள் செயல்படுவதையே இது காட்டுகிறது.


இது இப்படியிருக்க, நமது உடலில் இருந்து வெளிவரும் உடல்வாடை மாற்று பாலினத்தவரை(ஆண் எனில் பெண்ணையும்,பெண் எனில் ஆணையும்) கவர்கிறது எனக் கண்டறிந்து அதன் மூலக்கூறுகளை அடிப்படையாகக்  கொண்டு பாடி ஸ்ப்ரே கம்பெனிகள் தங்கள் பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன. அது மட்டுமல்லாமல்,பாடி ஸ்ப்ரேவினை உடலில் நேரடியாக அடித்துக் கொள்ளும்போது தோல் கறுத்துப் போய்விடுகிறது;பலருக்கு தீர்க்கமுடியாத நரம்புத்தளர்ச்சியை( ஸ்கின் அலர்ஜியால்) உருவாக்கிவிடுகிறது என்பது அனுபவ உண்மை.வியாபார தந்திரங்களில் ஒன்றாக இந்த  உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆக,மாற்று பாலினத்தவரை கவர பயன்படுத்த வேண்டி உடல்(துர்)நாற்றத்தினை மறைக்க பணம் செலவு செய்து, தோலை கறுக்கிக் கொள்ளும் வழக்கத்தினையும்,உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதை என்னவென்று சொல்வது?


இதைத் தான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பதா?
2009 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வுக்கட்டுரையை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருந்தோம்.ஒரு இளம்பெண்ணுக்கு எந்த இளைஞனைப் பார்த்ததும் காதல் வருகிறது தெரியுமா?


அந்த இளம்பெண்ணின் அப்பாவின் உடலில் இருந்து வெளிவரும் உடல் வாடை,எந்த இளைஞனின் உடலில் இருந்து வெளிவருகிறதோ அவன் மீதே காதல் உணர்வு வருகிறது.இதே நிலைதான் இளைஞனுக்கும்.அதாவது,தனது தாயின் உடல் வாடை எந்த இளம்பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுகிறதோ அவள் மீதே காதல் உண்டாகிறது.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 28,பிப்ரவரி 2013

"கொல்லும் சினத்தைக் கொள்ளாதே"



சோழப் படைத்தளபதி   ஒருவன் கடல்கடந்த போர்களில் பெருஞ் சாதனைகள் புரிந்து வெற்றியோடு திரும்பிய பின்  தன் உள்ளத்தை உறங்கவிடாமல் செய்த கேள்வி ஒன்றைச் சித்தர் ஒருவரை அணுகிக்கேட்டான்: ''சொர்க்கம்நரகம் இவையெல்லாம் உண்மையா?'' 
''உன் முகத்தைப் பார்த்தால் ஆண்டியைப்போல இருக்கிறது. உன்னைப்போன்ற ஆட்களுக்கெல்லாம் விளக்கமளித்து,  என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். விலகிப்போ'' என்று சினத்துடனும்அலட்சியத்துடனும் சித்தர் கூறினார். ஊரெல்லாம் புகழும் தன்னை ஒரே நொடியில்சித்தர் அவமானப்படுத்தியதைப் பொறுக்காத அத்தளபதி  கடும் சீற்றத்துடன் சித்தரை வெட்ட வாளை உருவினான். .  
''இதற்குப் பெயர் தான் நரகம்'' என்று அமைதியாகபுன்முறுவலுடன் பதிலளித்தார் சித்தர். உடனே தளபதி கோபம் தணிந்து அவர் காலில் விழ்ந்து, ''என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்றான். '' இதற்குப் பெயர் தான் சொர்க்கம்'' என்றார் சித்தர். சொர்க்கமும் நரகமும் நாம்  இந்த உலகில் நமக்குள் உருவாக்குவதே என்பதைப் புரிந்து கொண்டு ஞானியானான் அந்தத் தளபதி. 
கோபத்தில் கொதிப்பவர்கள் தங்களுக்குள் நரகத்தை உருவாக்குவதுடன் மற்றவர்களையும் நரகத்தில் தள்ளுகிறார்கள் என்பதே உண்மை. கோபம் கொள்வது மனித இயல்புதான். உங்களை ஒருவர் புண்படுத்தினாலோதவறு நிகழ்ந்தாலோ கோபம் எழுவது இயற்கையே. ஆனால் சினத்தீ வரம்பு கடந்து உங்களையோ,மற்றவர்களையோ பாதிக்கும்போதுதான் அது பிரச்சினையாகிறது. உங்களுக்குள் இருக்கும் கோப மிருகத்தின் சங்கிலியை நீங்கள்   அவிழ்த்துவிட்டால்அது உங்களையும் அழித்துஉங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களையும் சுட்டழிக்கும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.  
ஆனால்சமூக அநீதிகள்அவலங்கள்சிறுமைகள் இவற்றைக்கண்டு பொங்கி எழும் கோபமோ ஆக்கப்பூர்வமானது. நன்மை பயக்கக்கூடியது. இதனையே பாரதியார் தம் புதிய ஆத்திசூடியில் 'ரௌத்திரம் பழகுஎன்று  ஆதரிக்கிறார். அதே பாரதியார் தனி மனித கோபத்தை விட்டொழிக்கச் சொல்கிறார். 'சினத்தை முன்னே வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லைஎன்று கோபத்தை விட்டொழித்தவனுக்கு மரணமேயில்லையென்கிறார். 
தான் என்ற அகந்தைபாதுகாப்பின்மைஏமாற்றம்மன்னிக்கமுடியாமைஅவமானம்,மனப்புண்தர்மசங்கடம் முதலியவற்றிற்குக் கேடயமாகவே தனிமனித கோபம் ஏற்படுகிறது. ''நான் மிகவும் கோபக்காரன்'' என்று சிலர் பெருமைப்படுவது ''நான் மிகவும் பலவீனமானவன்'' என்று முரசறைவதாகும். கோபத்தை அடக்குவதுஅல்லது வெளியிடுவது இவற்றில் எது சரிஇரண்டும் சரியல்ல என்கின்றனர் உளவியலார். அடக்குவது மனஅழுத்தத்தை விளைவிக்கலாம். வெளியிடுவது கோபத்தை இன்னும் மிகுவித்து மேலும் தீமை விளைவிக்கும். சினத்தைக் கட்டுப்படுத்திமடைமாற்றம் செய்வதே தீர்வாகும். 
நம்மைக் கோபப்படவைக்கின்ற செயல்களே நம்மைச் சிரிக்கவும் வைக்கின்றன. மனிதத்தவறுகளே நகைச்சுவையாகின்றன. எனவே கோபத்தை ஆற்ற சிறந்த மடைமாற்று நகைச்சுவையே. உங்கள் பலவீனங்களைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். புண்படுத்தாமல்எரிச்சலூட்டாமல் நீங்கள் நினைப்பதைச் சாதிக்கக் கோபத்தை விட நகைச்சுவையே கைகொடுக்கும். 
கோபம் ஏற்படும்போதுஐம்புலன்களும் பாதிக்கப்படுகின்றன. சுரப்பிகள் தாறுமாறாகச் சுரக்கின்றன. எதிர்மறை எண்ணங்கள் மனத்தை ஆட்கொள்கின்றன. இதனால் இதய நோய்இரத்த அழுத்தம்நீரிழிவுகொலஸ்டிரால் அளவு மிகுதல்,நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல்மறதிமன ஆற்றல் உறிஞ்சப்படல்,சிந்தனைத்திறன் மந்தமாதல்கவனக்குறைவு மனச்சோர்வு முதலியவற்றைக் கரம் கூப்பி வரவேற்கிறது கோபம். 
இதற்கு நேர்மாறாகநகைச்சுவை சிறந்த விருந்தும்மருந்துமாகிறது. சிரிப்பு,உயிர்வளியை மிகுதியாக உள்வாங்கிதேவையான சுரப்பிகளைச் சுரக்கவைத்து உடலைத் தளர்த்துகிறது. தசைகளுக்குப் பயிற்சியளித்துப் பலப்படுத்துகிறது. எந்த வலியையும் குறைக்கிறது. இரத்த அழுத்தம் குறைத்துஇதய இரத்த நாளங்களை விரிவாக்கிஇதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது. சிவப்பணுக்களை மிகுதியாக்கிமூச்சுத்தொடர்பான நோய்களை விரட்டுகிறது. இடவல மூளை ஆற்றலைச் சமப்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்குகிறது.  நம் நேர்மறை சிந்தனையை மிகுவிக்கிறது. இதனால் கோபம் வருவதைக்  கட்டுப்படுத்தவும்வந்தால்  சாமாளிக்கவும் முடியும். நாள்தோறும் சில நிமிடங்கள் சிரிப்பதைக் கட்டாயமாக்கிக்கொண்டால் இந்தப் பலன்களை மட்டுமல்ல மேலும் பலவற்றையும் பெறலாம். 
இச்சமயத்தில் ஔவை சொன்ன ஆத்துச்சூடிதான் நினைவுக்கு வருகிறது.... "ஆறுவது சினம்., ஆற்றுவது நகை"              
கோபம் x நகைச்சுவை  ஒப்பீட்டை மனதில் பதித்தவர்கள்,  கோபத்தைக் கைவிட்டு நகைச்சுவையுணர்வை நிச்சயம் வளர்த்துகொள்வார்கள். அப்படியும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குச் சில யோசனைகள்: 
1.உங்கள் கோபத்தைத் தூண்டும் நிகழ்வுகள்இடங்கள்மனிதர்கள் முதலியவற்றைத் தவிருங்கள். சூழலைத் தவிர்க்கமுடியாவிட்டால்கோபத்தை வெளிப்படுத்தும் முன் சற்றே சிந்தியுங்கள். இந்தக் கோபத்தால் எனக்கு என்ன பாதிப்பு நேரும்இந்தச் சூழலில் நான் நினைப்பது சரியாகோபப்படுவதற்குப் பதில் வேறு ஏதேனும் செய்யலாமா? 
2. கோபம் வந்தபின்னர் மனம் வருந்திஇனி கோபமே வராமல் அடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களாகோபமே வராமல் இருப்பது சாத்தியமில்லை. வந்தால் எப்படிக் கட்டுப்படுத்துவதுஆக்கப்பூர்வமாகக் கையாள்வதுவெளியேற்றுவது என்பதில் தான் கோப நிர்வாகம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதற்கான வழிகளைச்  சிந்தியுங்கள். 
3.'வெல்வது வேண்டின் வெகுளி விடல்',என்று  நான்மணிக்கடிகை கூறுவதையும், 'பொறுத்தார் பூமியாள்வார்என்ற பழமொழியையும், 'அடக்கப்பட்ட வெப்பம் சக்தியாக மாறுவதுபோலஅடக்கப்பட்ட சினம் ஆற்றலாக மாறுகிறதுஎன்று விவேகானந்தர் கூறுவதையும்திருக்குறளின் வெகுளாமை அதிகாரம் முழுவதையும் அடிக்கடி அசைபோடுங்கள். 
4.சாந்தி ஆசனம்ஆழ்ந்த பெருமூச்சு விடுதல்அமைதிப்படுத்தும் இசை,நடைப்பயிற்சிபிடித்தமான உடற்பயிற்சி , 10வரை எண்ணுதல்ஓவியம் தீட்டல் - இவை கோபத்தைக் கட்டுப்படுத்தும். கோபமூட்டியவரை மன்னித்து,கோபச்சூழலுக்குக் காரணமான படிப்பினையைப் பெற முயல்வது சிறந்த வழியாகும். 
5.எரிச்சலும்கோபமும்  ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்திஅமைதியை அளிக்கும் ஆற்றல் இனிப்பான,  பழச்சாறுகளுக்கும்பானங்களுக்கும் உண்டு என்கிறார் தி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் டென்னிசன். செம்பருத்திக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதி தரும் ஆற்றல் உண்டு

புற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்!!!



நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு போன்றவை மாசுபட்டுள்ளதால் பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படுகின்றன.புற்றுநோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.கேரளாவில் காசர்கோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் எண்டோசல்பானை அதிகம் பயன்படுத்தியதால் புற்றுநோய் கடுமையாகப் பரவியது;இப்போது கேரளாவில் எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுள்ளது.தேசிய அளவில் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து எண்டோசல்பானை உற்பத்தி செய்யக்கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்வு வலுத்துள்ளது.

இந்நிலையில் சைமரூபா கிளாகா(Saimarouba Glauca) இலைக்கஷாயத்தை தொடர்ந்து பருகி வந்தால் புற்றுநோய் தணிகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.தென் இந்தியாவில் குறிப்பாக கர்னாடகா மாநிலத்தில் சைமரூபா மரங்கள் பரவலாக உள்ளன.இதற்கு சொர்க்க விருட்சம்,லட்சுமி தரு என்ற பெயர்களும் உள்ளன.
கேரளாவைச் சேர்ந்த புற்றுநோயாளிகள் பலருக்கு சைமரூபா கஷாயத்தத பெங்களூருவைச் சேர்ந்த சுந்தர் ஜோஷி சாந்தா ஜோஷி தம்பதியினர் கொடுத்தனர்.இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.இந்த கஷாயத்துக்காக இவர்கள் காசு வாங்குவதில்லை;சேவையாக செய்து வருகிறார்கள்.
சைமரூபா மரத்தை வளர்ப்பது கடினமானதல்ல;இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும்.இந்த மரத்தை வீட்டுக்கொல்லையில் கூட வளர்க்கலாம்.இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமம் ஆகும். என்று ஷ்யாம்சுந்தர் ஜோஷி கூறுகிறார்.இவரை080 23335813 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சைமரூபாவில் ‘கோசினாய்ட்ஸ்’ என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ரத்தப் புற்றுநோய்க்கும் கூட இது அருமருந்தாகும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக்காட்டைப்பார்ப்போம்: கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ்.புற்றுநோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர்.இந்நிலையில் ஷ்யாம் சுந்தர் ஜோஷி,சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சைமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாஸீம் அவரது மனைவி ஷைலாவும் கேள்விப்பட்டனர்.சைமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராம்தாசின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படத்துவங்கியது.அவரது எடை படிப்படியாக அதிகரித்தது.இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்.
கீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்றுநோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சைமரூபா கஷாயத்தின்பங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது என்று ராமதாசும் ஷைலாவும் ஒருமித்தக் குரலில் கூறுகின்றனர்.
புற்றுநோயாளிகளுக்கு சைமரூபா கஷாயம் வரப்பிரசாதம்.இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு,மத்திய அமெரிக்கா.(அப்போ பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதுக்கு பேடண்ட் வாங்கிடும்;விலையை சில லட்ச ரூபாய்களில் நிர்ணயித்துவிடும்;வேறு யாரும் இதிலிருந்துமருந்து தயாரிக்க முடியாத அளவுக்கு லாபி செய்துவிடும்)இது ஒருவகை எண்ணெய் மரம்.இந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிற உணவு எண்ணெயை சமையலுக்குப்பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்பாடு அடைகிறது என்று பயன்படுத்தியவர்கள் கூறுகிறார்கள்.
நன்றி:விஜயபாரதம்,தேசிய வார இதழ்,பக்கம்11, 15.2.13
ஓம்சிவசிவஓம்

Thursday, February 7, 2013

தேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்குத் தெரிவியுங்கள்






கடந்த ஆண்டு ‘தேசிய தண்ணீர் கொள்கை’ ஒன்றை அறிவித்த மத்திய அரசு,அது சம்பந்தமாக பிப் 29,2012க்குள் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது.விவரமறிந்த பிரமுகர்கள் தவிர யாருக்கும் இப்படி ஒரு விஷயம் ஆலோசிக்கப்பட்டு வருவதே தெரியாத நிலையிலும் கூட,அக்கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பால், அதை முற்றிலும் நிராகரிக்காமல் சில  ‘வெட்டு,ஒட்டு’ வேலைகள் செய்து ‘திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கை’ என்று அறிவித்து,தற்போது பிப் 28,2013க்குள் பொது மக்கள் கருத்தை கேட்டுள்ளது.


தண்ணீர் வீணாக்கப்படுகிறது என்பதையோ,வசதி உள்ளவர்கள் அளவிற்கு அதிகமாக  பயன்படுத்துகிறார்கள் என்பதையோ நீர் மேலாண்மை சம்பந்தமாக தெளிவான கொள்கை வேண்டும் என்பதையோ நாம் மறுக்கவில்லை;ஆனால்,அதை ஓர் பொருளாதாரப் பண்டமாக கருத வேண்டும்,அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரிலும் பணம் பண்ணும் பேராசையை மத்திய அரசு செயல்படுத்திட முனைவதை ஏற்றுக்  கொள்ளமுடியவில்லை;
சுதந்திர காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து நிலத்தடி நீர் நில  உரிமையாளருக்கே சொந்தம் என்கிறது சட்டம்.இதுதான் மனுதர்மக்கொள்கையும் கூட.தற்போதைய கொள்ளையோ,ஸாரி,கொள்கையோ ‘மனை உனக்கு,அதன் நிலத்தடி நீர் அரசுக்கு;விவசாய நிலம் உனக்கு;அதன் நிலத்தடி நீர் அரசுக்கு’என்று கூறுகிறது.

உடலும் உள்ளமும் குளிர ஆற்றிலும் வாய்க்காலிலும் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லை;எதிர் எதிரில் குளித்துக்கொண்டிருந்த ஆண் பெண்களிடம் காம வக்கிரம் உருவாகவில்லை.ஆனால்,இன்றும் உடலும் உள்ளமும் குளிர குளிப்பது கூட ‘லக்ஸரி’ ஆக பன்னாட்டு நிறுவனங்களின் சாதுர்யமான செயல்பாடுகளாலும்,உலகமயமாக்கல் என்ற பெயரில் அமெரிக்கமயமாக்கலால் மாறிவருகிறது.ஆற்று நீரை உறிஞ்சி வீடுகளுக்குக் கொண்டு வந்து,கழிவு நீரால் சாக்கடை ஆறுகளை உருவாக்கி,ஆறுகளில் மணல் அள்ள அனுமதித்து ஆறுகளை காணாமல் செய்து விட்ட அரசு மக்களை தண்டிப்பது எந்தவித நியாயமும் இல்லை;


நீராதாரங்கள் தனியார் மயம் ஆக்கப்படும் போது, அந்த தனியார் பன்னாட்டு கம்பெனிகளாகத் தான் இருக்கும்.லேண்ட் மாஃபியா,சாண்ட் மாஃபியா உருவாகி இருப்பது போல வாட்டர் மாஃபியாதான் உருவாகுமே தவிர அடிப்படை நீராதாராப் பிரச்னை தீராது.நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சீரான விநியோகத்திற்கும் தீர்வு ‘தனியார் மயமோ’ ‘கட்டணவழியோ’  அல்ல;மாறாக உள்ளாட்சி நிர்வாகத்தில் அவற்றை ஒப்படைப்பதுதான்.


இந்த மத்திய அரசு, மெல்ல மெல்ல மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசான தன்னிடம் எடுத்து வருகிறது.நதிநீர் தாவாக்களை தீர்ப்பதற்கு தகுதியற்ற அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து ஏதோ சில பகாசுர பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முன்வருவது வேடிக்கையாகவும்,வேதனையாகவும் உள்ளது.
இதுவரை குடிநீர் விநியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சி தமிழ்நாட்டிலும் சரி,பிற மாநிலங்களிலும் சரி,வெற்றி பெறவில்லை;இந்நிலையில் விவசாய நீர்ப்பங்கீடும் தனியார்மயம் என்றபெயரில் உலகமயமாக்கலும்,அமெரிக்கமயமாக்கலும் செய்வது பேராபத்தைத் தந்துவிடும்.உணவுப்பண்டங்களின் விலை எட்டாததாக உயரும்.குறிப்பாக அரிசி விலை!!!

அரசு தனது ‘தேசிய தண்ணீர்க் கொள்கை’பற்றி பொதுமக்களின் கருத்துக்களை பிப் 28,2013க்குள் கேட்டுள்ளதால் வாசகர்கள் தங்கள் கருத்துக்களை nwp2012mowr@nic.in என்ற மின் அஞ்சலுக்கு தெரிவிக்கவும்.அரசின் வலைத்தளமானhttp://wrmin.nic.inஎன்ற தளத்தில் தேசிய தண்ணீர்க் கொள்கை வரவினை படிக்கலாம்.நமது கருத்துக்களை அனுப்பி நமது தேசத்தின் தண்ணீர் சொத்து,பன்னாட்டு கொள்ளைக்கும்பல்களிடமிருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி;சுதேசிச் செய்தி,பக்கம்5,பிப்ரவரி 2013.தலையங்கம்.

ஆன்மீகக்கடலின் கருத்து: எப்போதெல்லாம் சிவ வழிபாடு பூமியில் குறைகிறதோ,அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஏற்படும்.இந்த கருத்து தேவாரம்,திருவாசகம்,சிவபுராணம் போன்றவற்றில் வேறு ஒரு தேடல் தேடிய போது கிடைத்த ஆதாரம் ஆகும்.

ஓம்சிவசிவஓம்

Wednesday, February 6, 2013

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!





ஒவ்வொரு தமிழ் வருடமும் இந்துக்களுக்கு மூன்று அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் பழமையான சிவாலயங்கள் அல்லது நமது ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது திரு அண்ணாமலை= இந்த சிவாலயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.அவ்வாறு அன்னதானம் செய்வதால் நமது முன்னோர் பரம்பரையினர் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.கடகராசியில் சூரியனோடு சந்திரன் சேரும் ஆடி அமாவாசை,கன்னி ராசியில் ரவியோடு மதி சேரும் புரட்டாசி அமாவாசை,மகர ராசியில் உருவாகும் தை அமாவாசை இம்மூன்றும் மிகுந்த புண்ணியம் தரும் அமாவாசைகள் ஆகும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஆவார்.


துன்பம் நிறைந்த கலியுகத்தில் நமது தினசரி வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் சிக்கல் மேல் சிக்கல்களுடன் தான் நகர்கின்றது;ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தாலும் கூட சிலருக்கே தினசரி வாழ்க்கையானது எந்தக் குறையுமின்றி நகர்கின்றது;அதற்குக் காரணம் அவர்கள் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது மட்டுமே காரணம்.


எப்படி முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது?


நந்தன ஆண்டின் தை அமாவாசையானது 9.2.13 சனிக்கிழமை மதியம் 2.38க்குத் துவங்கி மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.04 மணிக்கு நிறைவடைகிறது.சனிக்கிழமை தை அமாவாசை துவங்குவதால், கடுமையான கர்மவினைகளை நீக்கிட விரும்புவோர்,நீண்ட காலமாக நிம்மதியில்லாமல் தவிப்போர்,ஒரு மகத்தான விடிவுக்கு ஏங்குவோர்,அனைத்து சாபங்களும் நீங்கிட விரும்புவோர் இந்த பொன்னான திதியைப் பயன்படுத்த முயற்சி செய்யவும்.



பக்தியும்,வசதியும்,ஓய்வு நேரமும் கொண்டவர்கள் காசி அல்லது ராமேஸ்வரம் அல்லது கொடுமுடி அல்லது காவிரிக்கரையோரம் இருக்கும் சிவாலயங்கள் சென்று அந்தணர்களைக் கொண்டு பித்ரு தர்ப்பண பூஜைகள் செய்து வஸ்திர தானம்,கோதானம்,சொர்ண தானம்,அன்னதானம் செய்யலாம்.


பக்தியும்,ஆர்வமும்,ஓரளவு வசதியும் உள்ளவர்கள் அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து கிரிவலம் செல்ல வேண்டும்;அவ்வாறு கிரிவலம் செல்லும்போது கிரிவலப்பாதையில் எதிர்ப்படும் சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் டயமண்டு கல்கண்டு தூவலாம்;நவதானியங்களைத் தூவலாம்;அண்ணாமலையில் அன்னதானம் செய்தாலே முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்தமைக்குச் சமம் என்று சித்தர்களின் தலைவர் கும்பமுனி தெரிவித்திருக்கிறார்.



பக்தியும்,ஆர்வமும்,ஓரளவு சேமிப்பும் உள்ளவர்கள் அண்ணாமலைக்கு 9.2.13 சனிக்கிழமை காலையிலேயே வருகை தந்து  ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு,பகல் முழுவதும் உபவாசம் இருக்கலாம்;பகல் முழுவதும் அண்ணாமலையாரின் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து மஞ்சள் துண்டு விரித்து காலையிலும்,மாலையிலும் குறைந்தது ஒரு மணி நேரம்(அதிக பட்சம் எட்டுமணி நேரம்) மூலவரை நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அன்று இரவு ஒன்பது மணிக்கு கிரிவலம் புறப்பட வேண்டும்;அவ்வாறு கிரிவலம் புறப்படும் போது மேலாடை எதுவும் அணியாமல் மஞ்சள் நிற வேட்டி மட்டும் அணிந்து,கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணிந்து,உடல் முழுவதும் விபூதி பூசி,தலையில் வில்வதளத்தை ஒட்ட வைத்து,இரண்டு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு மனம் முழுக்க ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவேண்டும்.கிரிவலப்பாதையான பதினான்கு கிலோமீட்டர்கள் முழுவதும் இவ்வாறு செல்வது மிக மிக மிக புண்ணியச் செயல் ஆகும்.மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமையில் மூலவராகிய அண்ணாமலையாரை தரிசித்து விட்டு நேராக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.(வேறு எந்த ஊருக்கும்,எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது)


வீடு திரும்பிய மூன்று நாட்கள் வரையிலும் 14.2.13 வியாழன் காலை வரையிலும் கோபப்படாமல் இருந்தாலே தை அமாவாசை கிரிவலத்தின் முழுப்பலன்களையும் அடையலாம்.மிக நீண்டகால பிரச்னைகள் தீர்ந்து போயிருக்கும்.தீரவே தீராத வழக்கிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்;உங்களது கெட்ட சுபாவமே மாறிப்போயிருக்கும்;உங்களின் ரத்த உறவுகளின் சகிக்க முடியாத சுபாவமும் கரைந்து போய்,நீங்கள் ஒற்றுமையாக இருக்க ஆரம்பிப்பீர்கள்.


இதுவும் செய்ய இயலாதவர்கள்,9.2.13 சனிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும், 10.2.13 ஞாயிற்றுக்கிழமை காலை பதினோரு மணி முதல்  பனிரெண்டு மணி வரையிலும் ஏதாவது ஒரு ஜீவசமாதி அல்லது உயரமான மலைப்பகுதிக்குச் சென்று தனிமையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இதுவும் செய்ய இயலாதவர்கள்,இதே நேரத்தில் நமது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்பவர்கள் மேலே கூறிய நேரத்தில் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திர ஜபம் செய்யலாம். மிதமிஞ்சிய பூர்வபுண்ணியம் உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.


இவைகளில் எந்த ஒன்றைச் செய்தாலும்,நீங்கள் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு மேல் பனிரெண்டு மணிக்குள் ஒரே ஒரு பசுவுக்கு ஆறு நாட்டு வாழைப்பழங்களை வாங்கித் தர வேண்டியது உங்கள் கடமையாகும்.இது உங்கள் குலதெய்வத்தை மகிழ்ச்சிப்படுத்தும் கடமை ஆகும்.குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இதை மட்டுமாவது செய்யலாம்.


இந்தப் பதிவினை வாசிக்கும் நீங்கள் ஒரு கோடியில் ஒருவர்;இந்தப் பதிவில் குறிப்பிட்ட வழிமுறையில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திவிட்டால் நீங்கள் நூறு கோடியில் ஒருவர்.உங்கள் முன்னோர்களின் ஆசியும் , உங்கள் குல தெய்வத்தின் ஆசியும் உங்களுக்கு மட்டுமே இருந்ததால் தான் இதில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த முடிந்திருக்கிறது.

ஓம்சிவசிவஓம்

Tuesday, February 5, 2013

ஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்க்கை-1





சுமாராக 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரமாநிலத்தில் பரிபூர்ண ஆச்சார்ய ப்ரக்நதாம்பா என்ற பொற்கொல்லர் தம்பதியர்க்கு ஒரு சிறுகிராமத்திற்கு அருகில் அடர்ந்த காட்டில் மகனாய் பிறந்தார்.அவர் பிறந்த வருடம் கி.பி.1593.உலகத்தில் மகான்கள் அவதரிக்கும் போது வானில் புதிய பிரம்மாண்டமான ஜோதியுள்ள நட்சத்திரம் தோன்றும் என்பது ஐதீகம்.அதே போல,வீரபிரம்மம் அவதரித்தபோது வானில் ஒரு பிரம்மாண்டமான ஜோதி நட்சத்திரம் தோன்றியது.இவர் குழந்தையாக இருக்கும்போதே இவர் தாய் தந்தையை இழந்தார்.இவரை மானசீகமாக இறைவன் ஞானப்பால் வார்த்து வளர்த்து வந்தார்.தமது இளம்வயதில் இருந்தே தெய்வீக சக்திகளை  உடையவராகத் திகழ்ந்தார்.
இவர் வாழ்ந்திருந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் நவாப்புகளின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.குறிப்பாக கர்நூல் நவாபு,செகந்திராபாத் நவாபு,ஹைதாராபாத் நிஜாம்,சித்தூர் ராஜா ஆகியோர் இவரை தம் அரண்மனையில் போற்றி வந்தனர்.இவரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தனர்.


இவர் பொற்கொல்லர் இனத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை இடையனாகவே தொடங்கினார். வீரபொட்லைய்யா,பாப்பம்மாள் இவரது வளர்ப்புப் பெற்றோராக இருந்தனர்.சில வருடங்களுக்கு இவர்களின் பராமரிப்பில் இருந்துவிட்டு,பிறகு அவர்களின் ஆசியோடும்,சம்மதத்தோடும் காவி,கமண்டலம் எடுத்துக் கொண்டு தன் மேனி முழுவதும் விபூதி பூசிக் கொண்டார்;கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொண்டு ஸ்ரீசைலம்,பிரயாகை,காசி,பிரம்மகபாலம்,காஞ்சி,திருவானைக்கா,காளஸ்திரி,திருப்பதி,திரு அண்ணாமலை,ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்துவிட்டு இறுதியாக அரிஹரபுரம் என்னும் ஊருக்கு வந்து தங்கினார்.அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு,மீண்டும் அங்கிருந்து பனகானப்பள்ளிக்குச் சென்றார்.அங்கே அச்சம்மா என்ற பதிவிரதையின் வீட்டின் திண்ணையில் படுத்துறங்கினார்.மறுநாள் அச்சம்மா அவரை விசாரித்தாள்;


வீரப்பிரம்மமோ நான் ஒரு அனாதை,எல்லா ஊரும் என்னுடைய ஊரே! அனைவரும் என்னுடைய சுற்றத்தாரே!1 அனைவருக்கும் பணி செய்து கிடப்பதே எனது வேலை;திக்கற்றவர்கள் அனைவருக்கும் நானே துணை என்று கூறினார்.


இதைக்கேட்ட அந்த அச்சம்மா, ஐயா என்னிடம் பசுக்கள் இருக்கின்றன;அவைகளை தினமும் மேய்த்து வருவீர்களானால் நான் தினமும் உங்களுக்கு மூன்று வேளையும் உணவு படைக்கிறேன்.அதற்குச் சம்மதமானால் சொல்லுங்கள் என்று வீரப்பிரம்மத்திடம் கேட்டாள்.
இதற்குச் சம்மதித்த வீரப்பிரம்மம்,தினமும் காலையில் அருகில் இருக்கும் காட்டிற்கு பசுக்களை மேய்த்திட அழைத்துச் செல்வார்.காட்டின் ஒருபகுதியை அடைந்ததும் தன் கையில் உள்ள கோலினால் பூமியில் சில இடங்களில் கோடு போட்டு விட்டு, மாடுகளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தான் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு பனை ஓலையில் முட்களின் உதவி கொண்டு எழுதி வந்தார்;அன்று அவர் எழுதிய நூலே காலக்ஞானம் ஆகும்.மாலை வரை பசுக்கள் அவர் கோடிட்ட எல்லையைத் தாண்டாது எல்லைக்குள்ளேயே மேயும்;அந்த எல்லைக்குள்ளும் துஷ்ட ஜந்துக்களோ,வேறு மனிதர்களோ நுழைய முடிவது இல்லை;

ஒரு சமயம் ஒரு புலியானது,ஒரு பசுவை கொன்று தின்றுவிட வந்தது;அதுஅந்த எல்லைக்குள் நுழைய முடியாமல்  திண்டாடுவதை வேறு பல யாதவர்கள் கண்டார்கள்;இதனை பசுவின் சொந்தக்காரியான அச்சம்மாவிடம் சொன்னார்கள்;இவர் மாடு மேய்த்து வந்த நாள் முதல் அவர் வீட்டில் பால் பெருகியும்,வியாபாரம் சிறந்த முறையிலும் நடந்து வந்தது.


மற்ற யாதவர்கள் சொன்னதைக்கேட்டு நேரில் விசாரிக்க எண்ணம் கொண்ட அச்சம்மா  ஒரு நாள் காட்டிற்கு வந்தாள்.காட்டில் தன் பசுக்கள் இல்லாதிருப்பதையும் கண்டாள்.ஆச்சரியம் அடைந்தாள்.அவர் எங்கு உள்ளார் என்பதனைக் காண காட்டில் உள்ளே சென்று பார்த்தாள்.அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து,ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார்.அவரிடம் ஒன்றும் பேசாமல் அந்த அச்சம்மா வீடு திரும்பினாள்.



தான் முதலில் சந்தித்த அன்று அவருடன் உரையாடிய நிகழ்ச்சியை நினைத்து அவரின் மேல் பயமும்,பக்தியும் கொண்டார்.அவர் வீடு திரும்பி வந்ததும் அவரின்  கால்களில் வீழ்ந்து வணங்கி, ஐயா நீவிர் மகா புருஷர்,உங்களின் சக்தி அபாரமானது;நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்.உங்களின் அருமை தெரியாது நான் உங்களுக்கு மாடு மேய்க்கும் வேலை கொடுத்துவிட்டேன்.நான் தெரியாமல் செய்த பிழையை பொறுத்து என்னை மன்னிப்பீராக என்று வேண்டினாள்.


அம்மா நான்  ஒரு சிறுவன்;எனக்கு ஒன்றும் தெரியாது;நான் எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும் என்று வீரப்பிம்மம் கூறினார்.
அதற்கு அச்சம்மா,நீவிர் மஹாபுருஷர் என்பதை உங்களின் ஒவ்வொரு செயலிலாலும் நான் அறிந்து கொண்டேன்.ஆகவே,நீவிர் என்னை உங்களுடைய சீடனாக ஏற்று எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என வேண்டினாள்

.
இதைக் கேட்ட வீரப்பிரம்மம், அச்சம்மா நீ போன பிறவியில் மஹா பதிவிரதையாக இருந்தவள்.எனவே தான் நான் உனக்கு இப்பிறவியில் பணிவிடை செய்யும் இந்நிலையினை பெற்றேன். நீ முக்திகதியினை அடைய ஓம்நமசிவாய என்னும் பஞ்சாட்சரி மந்திரத்தை ஜபித்துவா.இம்மந்திரத்தை நீ உச்சரித்து வருவதனால்,நீ முக்தி அடைந்து பிறப்பு என்னும் மாயை உன்னை விட்டு நீங்கும் எனக் கூறினார்.
அப்போது அந்த அச்சம்மா,நீங்கள் காட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தீரே.அதனை நான் அறிந்து கொள்ளலாமா? என வினவினார்.


அதற்கு அவர் கலியுகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் எழுதுவது காலக்ஞானம் என்னும் நூல். வருங்காலத்தில் வாழும் மக்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதை நீ அறிந்து கொள்ள ஆசைப்படுவதால் நான் உனக்குச் சொல்லுகிறேன்.கவனமாக நீ கேட்டுக்கொள்வாயாக என்று காலக்ஞானத்தில் தான் எழுதியதை வீரப்பிரம்மம்,அச்சம்மாவுக்குச் சொன்னார்:


சுமார் இன்றைய நாளிலிருந்து(கி.பி.1612) எண்ணூற்றி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூலோகத்தில் தர்மம் நசிந்து அதர்மம் தாண்டவமாடும்;
புண்ணியஸ்தலங்களில் மட்டுமே தர்மதேவதையானவள் இருப்பாள்.
அச்சமயம் நான் வீரபோக வசந்தராயன் என்ற பெயரில் பிறந்து உலக மக்களுக்கு ஞான வழியினை போதிப்பேன்.அது கலிமுற்றியதற்கான அறிகுறி நேரம் ஆகும்.


கலி முற்றும் போது உலகில் அசத்தியம் விருத்தி அடையும்.சத்தியம் முழுவதும் மறைந்துவிடும்.


மக்களிடையே பாரபட்சம் அதிகரித்து அதன்படி நடப்பார்கள்;


துரோகிகள் அதிகமாகப் பிறப்பார்கள்.


நடு இரவில் சூரியன் தோன்றுவான்.


மக்கள் பரமாத்மாக்களை (கடவுள்) நிந்திப்பார்கள்.


துஷ்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்;இது போன்ற விபரீதங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும்.


காசிக் கோவிலில் இருக்கும் நடன சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று நடனம் செய்த வண்ணம்,மக்களுடனும் பேசும்.


உலக வாழ்க்கையில் தந்தை மகனையும்,மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.


தாய் தந்தையர்கள் மகன்களை நம்பாமல் தங்களின் மகள்களையே நம்புவார்கள்.

தெய்வ வழிபாடு செய்வோர்,தெய்வ விரதம் இருப்போர் கஷ்டமும்,தரித்திரமும் அனுபவிப்பார்கள்.


வேப்ப மரத்தின் இலை இனிப்பாக மாறும்.


பகலில் நட்சத்திரம் தோன்றும்;அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.


குருவாயூரில் இருக்கும் க்ருஷ்ணன் மனிதர்களிடையே பேசுவார்.


காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்து விடும்.


வேதங்களும்,புராணங்களும்,சரியான முறையில் ஆன விளக்கங்கள் கூறப்படாமல்,தவறான கேலிக்குரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்படும்.


தர்மசிந்தனையே தன் இதயத்தில் அற்றவர்கள்,குரோத குணம் உடையவர்கள்,அநியாயம்,அதர்மம்,அக்கிரமம் செய்வோர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.


மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.


பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்;அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.(எதிர்கால ஜெனட்டிக் என் ஜினியரிங்கில் இது நடக்குமோ?)

வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.


உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.


பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.


எங்கும்,எதிலும் பொறாமையும்,பொச்சரிப்பும் அதிகமாகும்.


வெள்ளைக் காக்கைகள் காணப்படும்;அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும்.


புண்ணிய க்ஷேத்திரம்,புண்ணிய நதி,புண்ணிய தீர்த்தம் ஆகிய இடங்களில் இருக்கும் வியாபாரிகளும்,பூஜை செய்பவர்களும்,ஊழியர்களும் ஆண்டவனுக்குப் பயந்து நடக்காமல் அந்த ஸ்ரீஸ்ரீசர்வேசரன் பெயரால் ஏமாற்றியும்,வஞ்சித்தும் பிழைப்பார்கள்;அதனால் பக்தி குறைந்து நாத்திகம் பேசுவதற்கும்,அததக் கேட்பதற்கும் ஆவல் ஏற்படும்.


இன்னும் சில   விஷயங்களை வீரப்பிரம்மம் அவர்கள் எழுதியிருக்கிறார்.அதை வெளிப்படையாக எழுத முடியாது.


ஸ்ரீ வீரப்பிரம்மம் தான் 14000 ஓலைச்சுவடிகளில் நான்கு லட்சம் தத்துவங்களை எழுதியுள்ளார்.அவைகளை ஓரிடத்தில் புதைத்து வைத்துள்ளார்.அவ்விடத்தில் ஒரு புளியமரம் வளர்ந்தது.
அம்மரம் இரண்டு கிளைகளாக பிரிந்து சுமார் அறுபது அடி உயரமும்,நான்கு அடி அகலமும் வளர்ந்துள்ளது.அந்த மரம்  இன்றும் அவ்விடத்தில் இருக்கிறது.அதில் காய்க்கும் காய்கள் உள்ளே கருப்பாக இருக்கும்.அதை யாரும் சாப்பிடுவது இல்லை;இம்மரத்தில் பூக்கள் ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் உதிர்ந்துவிடும்.இந்த சிறப்பான நிகழ்ச்சியை இன்றும் காணலாம்.

நன்றி & மேலும் விபரமறிய:ஸ்ரீவீரப்பிரம்மம் அவர்கள் இயற்றிய கால ஞான தத்துவம்,ரூ.45/- எழுதியவர் ஜெ.ராவுஜி, கிடைக்கும் இடம்:ஸ்ரீ தேவி புத்தக நிலையம், 219B அல்லிக்குள வளாகம்(முதல் மாடி),மூர்மார்க்கெட்,சென்னை-3. போன்: +91-44-25367149.
ஓம்சிவசிவஓம்