Friday, January 10, 2020

நமது ஆதிகுரு அகத்தியரின் பிறந்த நாள் மார்கழி ஆயில்யம்!!!


நமது ஆதிகுரு அகத்தியரின் பிறந்த நாள் மார்கழி ஆயில்யம்!!!

உலகம் முழுவதும் பேசப்பட்ட முதல் மனித மொழி தமிழ் தான்! இந்த தமிழ் மொழியினை முருகக்கடவுளிடம் கற்றுக்  கொண்டு பூலோகம் முழுவதும் (இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,ஐரோப்பாக் கண்டம்,வட அமெரிக்க கண்டம்,தென் அமெரிக்க கண்டம்,ஆப்ரிக்க கண்டம்) மனிதர்களிடம் பரப்பியவர் அகத்தியர் என்ற சித்தர் ஆவார்.

இவரே சித்தர்களின் தலைவர் ஆவார்.இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு ஊர்கள்,மாநிலங்கள்,நாடுகளின் பெயர்கள் தமிழில் தான் இருக்கின்றது;உதாரணமாக நாகளேஸ்வரம் என்பது இன்று நாகலாந்து என்று மாறிவிட்டது;அயனீஸ்வரம் என்பது அயர்லாந்து என்று ஆகிவிட்டது;பிள்ளைப்பண் என்பது இன்றைக்கு பிலிப்பைன்ஸ் ஆகிவிட்டது;அகத்தீஸ்வரம் என்பது ஆஸ்திரேலியா ஆகிவிட்டது;இராக்கை என்ற தமிழ் வார்த்தைக்கு இரட்டைப் பசு என்று பெயர்;அது தான் இன்று ஈராக்   என்று இருக்கின்றது;

தமிழ் மொழியின் இலக்கண விதிகளின் தொகுப்பாக அகத்தியம் என்ற நூலை படைத்திருக்கின்றார்;அது இன்று வரையிலும் நமக்கு கிடைக்கவில்லை;ஆனால்,நமது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஆலயத்தில் அகத்தியரின் சன்னதியில் இருக்கலாம்;அவரது சீடரான தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கண விதிகளின் தொகுப்பு தொல்காப்பியம் கிடைத்திருக்கின்றது;

மூலிகைகள் பற்றிய மருத்துவ ஞானத்தை நம்மிடையே போதித்து சித்த மருத்துவத்தை பூமியில் தோற்றுவித்தவர் அகத்தியர்!

யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும் ஒரு மருத்துவக் கலை என்பதையும் நமக்கு போதித்தவர் அகத்தியர்!

ஒவ்வொரு மனிதன்,உயிர்கள்,பயிர்கள்,நாடுகள்,நகரங்கள்,நதிகள், ஆலயங்கள் பற்றிய எதிர்காலத்தை நமக்காக போதித்தவர் அகத்தியர்! அதுவே ஜோதிடம் என்று அழைக்கப்படுகின்றது;அவரைத் தொடர்ந்தே பல சித்தர் பெருமக்கள் இதே துறைகளில் மென் மேலும் பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து,பல நூல்களை ஓலைச்சுவடிகளாக எழுதி வைத்தனர்;

மூச்சுப் பயிற்சி பற்றிய கலைக்கு சரக்கலை என்று பெயர்;சரக்கலையில் வெற்றிபெறுபவர்களை நவக்கிரகங்களின் தீமை நெருங்காது;சரக்கலை பற்றிய போதனையை நமக்கு உபதேசம் செய்தவர் அகத்தியர்!


ஒவ்வொரு ஆலயத்தையும் எப்படி கட்டிட வேண்டும்? என்பதைப் பற்றிய விளக்கங்களுக்கு சில்ப சாஸ்திரம் என்று பெயர்;இதில் கணபதி ஆலயம்,முருகக் கடவுள் ஆலயம்,அம்பாள் ஆலயம்,சிவாலயம்,விஷ்ணு ஆலயம்,குல தெய்வ ஆலயம்,காவல் தெய்வ ஆலயம்   என்று சகலவிதமான  ஆலயங்களும்   அடக்கம்;  இக்கலையை மனிதர்களுக்கு போதித்தவர் அகத்தியர்!


ஒவ்வொரு ஆலயத்திலும் எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்ற வரைமுறைகளை போதித்தவர் அகத்தியர்! இந்த பூஜை முறைகளின் மொத்த தொகுப்புக்கு ஆகமம் என்று பெயர்;


ஒவ்வொரு தெய்வத்தின் அருளையும் எப்படி மந்திரம் ஜபித்து பெற வேண்டும்? எந்தெந்த திதிகளில் என்னென்ன மாதிரியான விரதம் இருக்க வேண்டும்? என்ன விதமான படையல்(தளுவை) வைக்க வேண்டும் என்பதை நமக்கு முதன்முதலில் போதித்தவர் அகத்தியர்!


கணபதி உபாசனை,முருக உபாசனை,அம்பாள் உபாசனை,ஸ்ரீசக்கர உபாசனை,ஸ்ரீவித்யா உபாசனை,லிங்க வழிபாடு,விஷ்ணு உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,காளி உபாசனை,அனுமன் உபாசனை என்று எல்லாவிதமான இறை சக்திகளின் அனுக்கிரகம் பெறும் உபாசனை முறைகளை முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!


இன்றைய கால கட்டத்தில் வீட்டில் சமையல் அறையில் இருக்கும்  அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்  என்பதை முதன் முதலில் தீர்மானித்தவர் அகத்தியர்!


என்னென்ன பாவச் செயல்கள் செய்தால்,அதற்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும்? அதில் இருந்து மீள்வதற்கு என்னென்ன விதமான வழிபாடு,பூஜை,யாகம்,தானம்,பரிகாரம் செய்ய வேண்டும் என்ற முழுமையான விளக்கத்தை நமக்கு (மனிதர்களுக்கு) முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!

கலியுகாதி 5121 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மட்டுமே நமது அறிவால் கண்டறிய முடியும்;ஆனால்,இன்னும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நிகழும்? இன்னும் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை 40,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது தவ ஆற்றலால் எழுதி வைத்தவர் அகத்தியர்!

இவைகள் அனைத்தையும் ஈசனின் அருளால் தான் அடியேன் எழுதினேன் என்று தனது ஒவ்வொரு நூலின் முதல் பக்கத்திலும் தெரிவித்திருப்பவர் அகத்தியர்!(பணிவு தான் தமிழர்களின் இயல்பு;திமிர் அல்ல என்பது இதன் மூலமாக நிரூபணம் ஆகிறது)


இராமாயணத்திலும்,மஹாபாரதத்திலும் மிக முக்கியமான கேரக்டராக அகத்தியர் இருக்கின்றார்;

கர்மவினைகளைப் போக்கும் அண்ணாமலை கிரிவலத்தைப் பற்றி நமக்கு முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!

கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,வேதனைகள் நிரம்பியது தான் நாம் வாழ்ந்து வரும் கலியுகம் ஆகும்;கலியுகத்தில் வாழும் மக்களால் 24 மணி நேரமும் பக்தியோடு வாழ முடியாது என்பதை உணர்ந்த அகத்தியர்,அவர்களுடைய துயரங்கள் தீர ஈசனை நோக்கி தவம் இருந்து ஒரு வரம் வாங்கி இருக்கின்றார்;

“மகனே,அகத்தியா! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று ஈசன் கேட்கிறார்;
அதற்கு அகத்தியர், “கலியுக மக்களுக்கு பணம் சம்பாதிக்கவே 24 மணி நேரம் போதாது.இதனால்,சைவ சமயப் பதிகங்கள் அனைத்தையும் அவர்களால் தினமும் பாட இயலாமல் போய்விடும்;எந்தெந்த பதிகங்களை மட்டும் தினமும் பாடினால்,கலியுக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை தாங்களே உபதேசிக்க வேண்டும்” என்று ஈசனிடம் வேண்டுகிறார்;
ஈசன் 25 பதிகங்களை குறிப்பிடுகிறார்;அதுதான் அகத்தியர் தேவாரத் திரட்டு! நாம் தினமும் இந்த 25 பதிகங்களை பாடினால் போதும்;ஆழ்ந்த மன நிம்மதி கிடைத்துவிடும்;


பூமியில் இருக்கும் எல்லா சிவாலயத்திலும் அகத்திய லிங்கம் என்று ஒரு சிவலிங்கம் இருக்கின்றது;இது தவிர,எந்தெந்த கோவில் மூலவர் அகத்தீஸ்வரர் என்று இருக்கின்றதோ,அவைகள் எல்லாம் அகத்தியரே உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;அந்த அடிப்படையில் சுமாராக 108 அகத்தீஸ்வரர் கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;இந்த ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு உள்ளே நுழையும் இடத்தில் அகத்தியரின் தெய்வீக உருவச் சிலை அமைந்திருக்கும்;


பூமியில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது “ஓம் அகத்தீசாய நமஹ” என்று நினைக்காவிட்டால்,சொல்லாவிட்டால் அவர்களுக்கு முக்தி கிடைக்காது;

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாள் தான் அகத்தியரின் பிறந்த நாள்!!!


இந்த ஆண்டு 12.1.2020 ஞாயிறு மதியம் 1.24 முதல் 13.1.2020 திங்கள் மதியம் 12.10 வரை ஆயில்யம் இருக்கின்றது;
அகத்தீசரின் அருளைப் பெற இந்த நாளில் அருகில் இருக்கும் ஆலயம் செல்வோம்;ஒரு மணி நேரம் ஓம் அகத்தீசாய நமஹ என்று ஜபிப்போம்!

ஈசனும்,அகத்தீசனும் ஒருவரே! ஈசனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை அன்று காலை 8 முதல் 9 மணி வரையிலான குரு ஓரையில் “ஓம் அகத்தீசாய நமஹ” என்று ஜபிப்போம்;குரு அருள் பெறுவோம்!!!

No comments:

Post a Comment