Sunday, January 20, 2019

கலியுக குரு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்!!!


உங்களை கலியுகத் துன்பங்களில் இருந்து காக்கும் வீரபிரம்மேந்திரர்!!!

உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் அனைத்தும் காலத்திற்கும்,கால மாற்றத்திற்கும் உட்பட்டவையே! சக்ரா தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நமது பாரத தேசம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;இலவச இணைய வீடியோக்களிலும் இதுபற்றிய பாடங்கள் இருக்கின்றன;

உலகத்தில் 84,00,000 உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன;ஒரு நாள் ஆயுள் கொண்ட ஈசல் முதல் 300 வருட ஆயுள் கொண்ட ஆமை,6000 வருட ஆயுள் கொன்ட மரங்கள் வரை இருந்தாலும்,மனித இனம் இவைகளில் இருந்து    எப்படி வேறு பட்டது தெரியுமா?


மனிதன் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஆறு சக்கரங்கள் சூட்சுமமாக இயங்குகின்றன;மனிதனின் உடலுக்கு வெளியே தலைக்கு மேலே இன்னும் 3 சக்கரங்கள் இயங்குகின்றன;இந்த சக்கரங்கள் மனித இனத்திற்கு மட்டுமே உண்டு;வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது;


இந்த 9 சக்கரங்களையும் பல கோடி ஆண்டுகள் தவ முயற்சியாலும்,பல உலகங்களில் பலப்பல பிறவிகள் எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சித்தர்கள்!


அதில் ஒரு சித்தர் பிரான் தான் இன்றைய ஆந்திர மாநிலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீவீரபிரம்மேந்திரர்!!!இவர் கலியுகம் முழுவதும் எப்போது என்ன நடக்கும் என்பதை காலக்ஞானம் என்ற பெயரில் கணித்துள்ளார்;இந்த நூல் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,ஆங்கில மொழிகளில் வெளிவந்திருக்கின்றது;


இவர் 175 ஆண்டுகள் வாழ்ந்தார்;கலியுகாதி 4094,விசாக சுத்த தசமி அன்று கடப்பா மாவட்டம்,கந்திமல்லையபல்லி என்ற இடத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இன்று அது பிரம்மம்காரி மடம் என்று அழைக்கப்படுகின்றது;

அவர் எழுதிய ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து,அதை பூமியில் புதைத்துள்ளார்கள்;அதன் மீது ஒரு புளியமரம் நடப்பட்டு,இன்றும் வளர்ந்து வருகின்றது;அந்த புளியமரத்தின் வயது 701 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது;இந்த புளியமரம்,இன்றைய கர்னூல் மாவட்டத்தில் பனகனாபல்லி மடத்தில் இருக்கின்றது;இம்மடத்தை சிந்தமானு மடம் என்று பொது மக்கள் அழைக்கின்றார்கள்;

இருவிதங்களில் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் காலக்ஞானம் நூலை எழுதியிருக்கின்றார்;ஒன்று வசன நடை;மற்றது செய்யுள் போல எழுதியிருக்கின்றார்;இன்று வரையிலும் பனகனாபல்லி நகரத்தில் நாடோடிப் பாடல்கள் போல பாடப்பட்டு வருகின்றது;அவ்வூர் மக்கள் இதை சாந்திர சிந்து வேதம் என்று அழைக்கின்றார்கள்;
கலியுகத்தில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ,துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நான் மீண்டும் வருவேன் என்று ஸ்ரீவீரபிரம்மேந்திரர் தெரிவித்திருக்கின்றார்;அதன் படி,இவரே மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்று மக்கள் போற்றுகின்றார்கள்;

ஸ்ரீவீரபிரம்மேந்திரர் கலியுகம் முடியும் வரை எப்போது என்ன நடைபெறும் என்பதை 3,34,000 பாடல்களாக எழுதியிருக்கின்றார் என்ற கருத்து உண்டு;அதில் சிறு பகுதி மட்டுமே கால ஞானம் என்ற பெயரில் பலர் தமிழ்,தெலுங்கு,ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்;இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் கந்திமல்லையாபல்லி,முடுமாலா,நகரிபாடு,பனகானபல்லி போன்ற ஊர்களில் இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் மடங்களில் இருக்கின்றன;


ஸ்ரீவீரபிரம்மேந்திரர் அவர்களின் கணிப்புகள் அனைத்தையும் இந்த இணைய வெளியில் வெளியிட முடியாது;உரிய நூல்களை வாங்கி படித்துக் கொள்ளுங்கள்;ஒரு சில உதாரணங்களை மட்டும் ஸ்ரீவீரபிரம்மேந்திரரின் அருளாசியுடன் இங்கே குறிப்பிடுகின்றோம்;

சுயம் அறிந்த குரு தேவர்கள் வருவது இனி அரிதாகும்;போலிச் சாமியார்கள் பெருகுவார்கள்;


வெண்மை நிறத் தோலுடைய மக்கள் இந்த பாரத நாட்டை ஆள்வார்கள்;

கலியுகாதி 5000 ஆண்டுகள் முடிந்த பின்னர்,இந்த புண்ணிய பூமியான பாரத நாட்டில் தர்மம் படிப்படியாக தேய்ந்து போகும்;தற்போது கலியுகாதி 5119 (கிபி 2019) நடைபெற்று வருகின்றது;கலியுகாதி 4095 இல் (கி.பி.1995) நமது புண்ணிய பூமிக்கு இணைய வசதி வரத் துவங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்;


மிதுனத்தை சனி கடக்கும் போது அழிவுகள் அதிகமாகும்;1913, 1943, 1973, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்;அடுத்தபடியாக 2033 இல் மீண்டும் மிதுனத்தை சனி கடக்க இருக்கின்றார்;பாவங்கள் கடுமையாகச் செய்பவர்கள் மொத்தமாக இறக்கும் காலம் இந்த இரண்டரை ஆண்டுகள் தான்!!!


சுபக்ருதி ஆண்டில் (நவம்பர் 2022) பாரதத்தின் தெற்குப் பகுதியில் வால் நட்சத்திரம் தெரியும்;அதனால்,நிறைய உயிர்ச் சேதங்கள் உண்டாகும்;


யார் ஒருவர் தினமும் 108 முறையாவது பின்வரும் மந்திரத்தை எழுதி வருகின்றார்களோ,அவர்களை நான் காப்பாற்றுவேன்;


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமசிவாய ஸ்ரீவீரப் பிரம்மேந்திர சுவாமினே நமஹ


ஸ்ரீவீரப்பிரம்மேந்திர சுவாமிகள் விசுவாச ஆண்டில் மீண்டும் வெளிப்படுவார்;அடுத்த விசுவாச ஆண்டு கி.பி.2025 டூ 2026 ஆம் ஆண்டு வருகின்றது;


கலியுகம் செல்லச் செல்ல நிம்மதியாக தினசரி வாழ்க்கையை கழிப்பதே பெரும்பாடாக இருக்கும்;இது ஏழைகளுக்கும்,செல்வந்தர்களுக்கும்,மிகப் பெரும் செல்வந்தர்களுக்கும் பொருந்தும்;


எந்த ஒரு நவீன தொழில் நுட்பத்தாலும்,அரசாங்கத்தாலும்,கார்ப்பரேட் நிறுவனத்தாலும் ஒரு தனி மனிதனின் நிம்மதியைத் தர முடியாது;
அவரவர் தனது பக்தி உணர்ச்சியின் மூலமாக நிம்மதியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்;


மேலே கூறப்பட்டிருக்கும் மந்திரத்தை தினமும் சிவாலயத்தில் 30 நிமிடம் வரை ஜபிக்கவும் செய்யலாம்;எந்த ஒரு ஆச்சார அனுஷ்டானங்களும் தேவையில்லை;ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் என்னைப் பாதுகாக்கும் குரு என்று எண்ணிக் கொண்டு தினமும் ஜபித்து வந்தால் போதும்!!!


குரு அருள் பெற்று,இறைவனின் ஆசிகளை பெறுங்கள்! நிம்மதியாக நீடூழி வாழுங்கள்!!!

No comments:

Post a Comment