Saturday, August 12, 2017

திருஅதிகைவீரட்டானம்


திருச்சிற்றம்பலம்
1.கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
2நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்து அடியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
“அஞ்சேலும்!” என்னீர்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
3பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்! படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளி
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்! பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மனே!
4முன்னம், அடியேன் அறியாமையினான் முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீ
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலைஆயவர் அம் கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
5காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை நின்றவர், “கண்டுகொள்!” என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
6சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
7.உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும், ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீ
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
8.வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்! கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
9.பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்! புரி புன் சடையீர்! மெலியும் பிறை
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
10.போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment