Thursday, May 4, 2017

நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு பாகம் 2


அறிவே சக்தி;வலிமையே வாழ்க்கை என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கிறார் ஒருவர்;அது இன்றும் நம் ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் பொருந்திவருகிறதா?

இணையத்தின் பரவல்,செல்போனின் கட்டணக்குறைப்பு போன்றவை புத்தகவாசிப்பை இளைஞர்களிடையே குறைத்துவிட்டாலும்,இணையம் மூலமாக வாசிப்பது அதிகரித்துள்ளது;இங்கேதான் ஒரு சிக்கல்?

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சுதந்திரமான நிலை உருவாகிவிட்டதால்,இணையத்தில் எழுதுபவர்கள் அனுபவத்தைத்தான் எழுதுகிறார்களா? அல்லது சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதுகிறார்களா?

எது உண்மை?எது பொய்? எது பாதி உண்மை? என்பதில் குழப்பம் நீடிக்கிறது.அதே சமயம் அந்த குழப்பம் பற்றி எதுவும் அறியாமலேயே கண்டதையும் வாசித்துவிட்டு செயலில் இறங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது;இதனாலும் ஆன்மீகத்தின் மீதான நாட்டம் பலருக்கு வெறுப்பாக மாறிவருகிறது;குரு தொட்டுக்காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியே நம்மில் பலருக்குத் தெரியாது.


எனவே புத்தங்கள் எழுதி வெளியிடுவதில் 90% உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,வாஸ்து போன்றவற்றில் புத்தகவாசிப்பு இருப்பது அவசியம்;

1980க்கு முன்பு வெளிவந்த வார,மாத இதழ்களில் உண்மை மட்டுமே இருக்கிறது;ஆன்மீகம்,தியானம்.ஜோதிடம் போன்றவைகளில் 1940க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும்,1915க்கு முன்பு வெளிவந்த நூல்களிலும் ஏராளமான பொக்கிஷங்கள் நிரம்பியிருக்கின்றன;இவைகளைத் தேடி அலையும் கூட்டம் ஒருபுறம் தமிழ்நாட்டில் அதிகரித்தாலும்,அவர்களுக்கு இவைகளை எங்கே தேடுவது? என்று தெரியாமல் தேடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள்;அனைத்து பழைய புத்தகக்கடைகள்,கன்னிமரா நூலகம்,சென்னை,     பென்னிங்க்டன் நூலகம்,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்றவைகளில் தேடலாம்;


லண்டனில் நூலகராக வாழ்ந்து வந்த ஒரு ஆங்கிலேயர் ,லண்டனின் பழைய புத்தகக்கடையில் ஒரு நூலைக் கண்டெடுத்தார்;அந்த நூல் நமது பாரத நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது;


சீனப் பெருஞ்சுவரைப் போல நமது பாரத நாட்டில் கி.பி.1700களில் உப்பு வேலி ஒன்றை அன்றைய ஆங்கிலேயன் 2500 கி.மீ.தூரத்திற்கு நிறுவினான்;இந்த உப்புவேலி இன்றைய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே துவங்கி டெல்லி,மத்தியப்பிரதேசம்,ஒரிஸா வரை நீண்டிருந்தது;இந்த உப்புவேலியின் மூலமாக நமது பாரத நாட்டில் பலமுறை செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கினான் ஆங்கிலேயன்;இந்தப் பஞ்சங்களால் நமது தேசம் பல கோடி இந்தியர்களை பலி கொண்டது;இது தொடர்பாக அந்த ஆங்கிலேயர் தொடர்ந்து ஆய்வு செய்து,நமது நாட்டிற்கும் வருகை தந்து அந்த உப்புவேலியின் மிச்ச சொச்சத்தை 18 ஆண்டுகளாகத் தேடி அலைந்தார்;பூலான் தேவி வாழ்ந்து வந்த புந்தேல் கண்டு என்ற வனப்பகுதியில் சில நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வனத்திற்குள் இருந்ததைக் கண்டுபிடித்தார்;அதைப் படம் பிடித்து உப்புவேலி என்ற புத்தகமாகவும் வெளியிட்டார்;மார்ச் 2015 இல் தமிழிலும் இந்த புத்தகம் வெளிவந்தது;நமது பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த உப்புவேலி என்ற புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பது அவசியம்;


வெறும் உப்புக்கு வரிவிதிக்கிறேன் பேர்வழி என்று நமது நாட்டின் அப்பாவி மக்கள் கோடிக்கணக்கானவர்கள் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கி கொன்றான் ஆங்கிலேயன்.

ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த தொடர் வந்தார்கள்;வென்றார்கள்;கி.பி.1000 முதல் கி.பி.1992 வரை நமது நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை பல ஆங்கில நூல்களை வாசித்து அதில் இருந்து தொகுக்கப்பட்டு வெளிவந்த தொடர் இது;ஆனந்த விகடனில் கார்டூனிஸ்டாக இருந்த மதன் எழுதிய அற்புதமான வரலாற்றுத் தொடர்;கடந்த ஆயிரம் ஆண்டுகளில் நமது நாட்டின் வரலாற்றை வாசிக்க ஒரளவு இந்த புத்தகம் உதவும்;


பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள் என்ற தலைப்பில் விநாயக தாமோதர சாவர்க்கர் ஐந்து பாகங்களாக எழுதியிருக்கும் இந்த நூல் பழமையான நூலகங்களில் மட்டுமே காணப்படுகிறது.கடந்த 10,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் எப்படியெல்லாம் வாழ்ந்தது? என்பதை சாவர்க்கர் எழுதியிருக்கிறார்;

இதையே நமது பள்ளியின் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும்;அந்த அளவுக்கு ஆழமாக ஆராய்ந்து நமது பாரத தேசத்தின் பெருமைகளை விவரித்து எழுதியிருக்கிறார்;நமது தேசம் பற்றிய பெருமைகளையும்,சாதனைகளையும் இவரைப் போல வேறு எவரும் எழுதியிருப்பார்களா? என்பது சந்தேகமே!!

கண்சிமிட்டும் விண்மீன் கள் என்ற பெயரில் ஒரு நாவல் மராத்தி மொழியில் இருந்து தமிழில் 1980களில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.சுசீலா கனகதுர்கா என்பவர் மொழி பெயர்த்துள்ளார்;வேற்றுகிரக மனிதர்களை சந்தித்து பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனையை மனிதர்கள் பேசித் தீர்க்கும் விதமாக மராத்திய மொழியில் எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியிருக்கிறார்;


டீன் ஏஜ் குழந்தைகளிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் நாவல்களில் இதுவும் ஒன்று.
ஆன்மீகத்தில் தேடல் உள்ளவர்கள் கோட்டயம் புஷ்பநாத் எழுதியிருக்கும் அனைத்து நூல்களையும் ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்;அவர் எழுதியிருக்கும் ஆன்மீக,ஜோதிட,மாந்திரீக விஷயங்கள் நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்கினாலும்,உண்மையை,உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களையே அவர் எழுதியிருக்கிறார்;

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய நாவல் கூடு;ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரு மன்னனின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார்;நிர்வாகத்தில் நாசமாகிப் போன ஒரு நாட்டை வெறும் 48 மணி நேரத்தில் எப்படி சீரமைக்கிறார் என்பதை அவரது சொந்த ஸ்டைலில் நாவலாக எழுதியிருக்கிறார்;ஒரு நாட்டை ஆளும் மன்னன் கெட்டவனாக இருந்தால்,அந்த நாட்டில் பெண்கள் நிலை என்னவாகும்? அரசு அதிகாரிகள் எப்படியெல்லாம் ஆட்டம் போடுவார்கள்? என்பதை அப்பட்டமாகவும்,சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார்;இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே ஆன்மீகத்தின் மீது ஒரு தாகத்தை உருவாக்கும் என்பது எனது அனுபவம்.

புத்தக வாசிப்பு என்பது இலக்கில்லாத பயணம்;இந்த பயணத்தில் தொடர்ந்து வருபவர்களால் மட்டுமே தமது சொந்த வாழ்க்கையில் சாதனையாளராக முடியும்;ஏனெனில்,மாற்றம் என்பது மட்டுமே நிரந்தரமானது;அதை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு நொடியும் நாம் தயாராக இருக்க வேண்டும்;


இன்னும் தொடரும். . .

இப்படிக்கு


உங்கள் கை.வீரமுனி. . .

No comments:

Post a Comment