Monday, January 30, 2017

அண்ணாமலையில் கிரிவலம் செல்லும் முறைகளில் ஒன்று!


எந்த ஊரில் இருந்து அண்ணாமலைக்கு வந்தாலும்,அண்ணாமலையில் தங்கி குளிக்க வேண்டும்;ஏனெனில்,அப்படிக் குளித்தால் தான் சோணாநதியில் நீராடிய பலன் கிட்டும்;அண்ணாமலை இருக்கும் திரு அண்ணாமலை நகரின் தரைக்கு அடியில் சோணா நதி ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த தண்ணீரில் நமது உடல் முழுமையாக நனைக்கப்படவேண்டும்;அப்படி நனைக்கப்பட்டதும்,பல பிறவிகளாக சேமித்திருந்த கர்மவினைகள் கரையத் தயார் ஆகிவிட்டது(இளக்கம் என்பார்களே,அதுதான்!)


பிறகு,மஞ்சள் நிற ஆடை(பெண்கள் எனில் சேலை/சுடிதார்,ஆண்கள் எனில் மஞ்சள் வேட்டி;ஆண்கள் மேலாடை அணியக்கூடாது)அணிந்து கொண்டு,இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சம் வைத்துக் கொண்டு,கிரிவலம் புறப்பட வேண்டும்;ஒவ்வொரு லிங்கத்தின் வாசலை அடையும் போதும் இந்த ருத்ராட்சங்களை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு லிங்கதரிசனம் செய்ய வேண்டும்;இடுப்பில் ஒரு மஞ்சள் துண்டு கட்டிக் கொண்டு,அந்த துண்டுக்குள் குறைந்தது மூன்று எலுமிச்சைம்பழங்கள் இருக்க வேண்டும்;


இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இரண்டு தேங்காய்களை சிதறு தேங்காயாக எறிய வேண்டும்;பிறகு,ஓம் ஸ்ரீமஹா கணபதி நமஹ என்று மனதுக்குள் சில நிமிடங்கள் வரை ஜபித்துவிட்டு,சிறப்பாக இந்த அண்ணாமலை கிரிவலம் நிறைவடைய அருள்வீராக! என்று அவரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்;


அங்கிருந்து புறப்பட்டு,தேரடி முனீஸ்வரர் ஆலயம் செல்ல வேண்டும்;அவரிடம், “அண்ணாமலை கிரிவலம் செல்லப் போகிறோம்;தாங்கள் வழித்துணைக்கு வாருங்கள் எங்கள் முனீஸ்வரா”  என்று வேண்டிட வேண்டும்;முனீஸ்வரர் என்பவர் காலபைரவப் பெருமானின் ஒரு வடிவமே!


அங்கிருந்து சிறிது தூரம் நடந்தாலே கிழக்கு கோபுரவாசலுக்கு எதிரான சாலை வந்துவிடும்;அந்த சாலை வடக்குத் தெற்காக செல்கிறது;கிழக்கு கோபுர வாசலுக்கு நேராக சாலையில் இருந்தவாறே அண்ணாமலையாரை நினைத்துக் கொண்டு,நமது கோரிக்கைகளை எண்ணி வேண்டிக் கொள்ள வேண்டும்;இங்கே நாம் எதை நினைத்து வேண்டுகிறோமோ,அந்த கோரிக்கையை கிரிவலபுண்ணியம் நிறைவேற்றும்;கடந்த 11 ஆண்டுகளில் உணர்ந்த அண்ணாமலை ரகசியம் இது!!!


இங்கிருந்துதான் கிரிவலம் துவங்குகிறது;

மிகச் சிறந்த கிரிவல மந்திரம்: ஓம்சிவசிவஓம்

வேறு சில சிவ மந்திரங்கள்:ஓம் அருணாச்சலாய நமஹ(ஒருமுறை அருணாச்சலாய நமஹ என்று சொன்னால் 3,00,00,000 தடவை ஓம் நமசிவாய சொன்னதற்குச் சமம் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது)

ஓம் ரீங் அருணகிரி அருணகிரி

ஓம் ரீங் அண்ணாமலை அண்ணாமலை

அண்ணாமலையானே போற்றி

மிக மெதுவாக கிரிவலம் செல்லத் துவங்க வேண்டும்;சிறிது தூரத்திலேயே இந்திர லிங்கம் வந்துவிடும்;

அடுத்து அக்னிலிங்கம் வரும்;அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,ஊரின் எல்லை ஆரம்பமாகிவிடும்;வனப்பகுதி ஆரம்பமாகிவிடும்;100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இப்போது அண்ணாமலை கிரிவலப்பாதை கடினமாக இல்லை;தார்ச்சாலையில் தான் நாம் கிரிவலம் செல்கிறோம்;
அடுத்து எமலிங்கம் வரும்;பூமியில் எவரது ஆயுள் முடிந்தாலும்,அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரிக்க எம லோகத்தில் இருந்து எமதூதர்கள் இங்கே வந்து இறங்குவர்;இறங்கி,எமலிங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியப் பின்னரே,பூமியில் அந்த மனிதனின் இருப்பிடம் நோக்கிச் செல்வர்;இதை அகத்திய மகரிஷி விவரித்திருக்கிறார்;

அடுத்து நிருதிலிங்கம் வரும்;அடுத்தபடியாக அடி அண்ணாமலை எனப்படும் பாதி தூரம் கடந்தமைக்கான ஆலயங்கள் வரும்;பிறகு,வாயுலிங்கம்,சூரியலிங்கம்,சந்திரலிங்கம்,
குபேரலிங்கம் வரும்;
அடுத்தடுத்ததாக லிங்கங்களை வழிபட்டு இறுதியில் ஈசானலிங்கம் வரும்;அங்கிருந்து ஒரு கி.மீ.தொலைவில் திருஅண்ணாமலையின் பேருந்து நிலையம் வரும்;அதையும் கடந்து சென்று,பூதநாராயணப் பெருமாள் கோவிலைச் சென்றடைய வேண்டும்;இதுதான் கிரிவலம் நிறைவடையும் இடம்;


கிரிவலப் பாதை முழுவதும் ஒரு போதும் பேசாமல் சிவ மந்திரம் ஜபித்தவாறு செல்ல வேண்டும்;தேவைப்படும் போது தண்ணீர்,குளிர்பானம்,சுடுபானங்கள் அருந்தலாம்;


உள்ளங்கையில் ஐந்து முக ருத்ராட்சங்கள் வைத்துக் கொண்டு சிவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்;சிலருக்கு ருத்ராட்சம் மீனைப் போல துடிக்கும்;அவர்கள் ஜபிக்கும் மந்திரம் ருத்ராட்சத்தில் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே அடையாளம்;இவையெல்லாம் உணரவேண்டியவை;பெருமையாக இதையும் பிறரிடம் சொல்லி தன்னைப் பற்றி உயர்வாக நினைப்பதற்காக வெளிப்படுத்துவது தவறு;


கிரிவலம் நிறைவடைந்ததும்,தங்கியிருக்கும் இடத்தைச் சென்றடைந்துவிட்டு,வழக்கமான ஆடையை அணிந்து கொண்டு,மூன்று எலுமிச்சைபழங்களை வீட்டுக்கு கொண்டு சென்றுவிடவேண்டும்;வீட்டில் இருக்கும் அனைவரும் அதை பிழிந்து சாப்பிட்டால்,அண்ணாமலையாரின் அருள் கிட்டும்;
ஒருவர் இடுப்பில் மஞ்சள் துண்டுக்குள் எலுமிச்சை பழங்களை வைத்துக் கொண்டு சிவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்வதால்,அந்த மந்திரம் அந்த எலுமிச்சை பழங்களில் அந்த சிவமந்திர ஜபம் பதிவாகி,நிறைந்துவிடும்;ஆமாம்!

எலுமிச்சைபழத்தில் இருக்கும் சாறு முழுவதும் சிவமந்திரமும்,அண்ணாமலையின் கதிர்வீச்சும் நிரம்பியிருக்கும்;
கிரிவலம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு எனில்,அண்ணாமலையாரை தரிசிக்காமலேயே வீடு திரும்பலாம்;


கிரிவலம் நிறைவடையும் நேரம் கோவில் திறந்திருக்கும் நேரம் எனில்,அண்ணாமலையார்+உண்ணாமுலையம்மனை தரிசித்துவிட்டு வீடு திரும்பலாம்;

அண்ணாமலை புராணத்தில் கூறப்பட்டிருப்பது என்னவெனில்,கிரிவலம் முடித்துவிட்டு கோவிலுக்குள் சென்று தரிசிக்காமலேயே கூட வீடு திரும்பலாம் என்பதுதான்;

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் நன்றியுணர்ச்சி,பக்தி உணர்ச்சி,பாச உணர்ச்சி,விசுவாச உணர்ச்சி,பொறுப்பு உணர்ச்சி,தேசபக்தி உணர்ச்சி,தெய்வபக்தி உணர்ச்சி போன்றவைகள் குறைந்து கொண்டே வருகின்றன;(மிஞ்சியிருப்பது காம உணர்ச்சி மட்டுமே! அதைப் போய் காதல் உணர்ச்சி என்று பலர் நினைக்கின்றனர்)

தற்போது கிரிவலப்பாதை 14 கி.மீ.தூரமாக இருக்கின்றது;200 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதை 54 கி.மீ.தூரமாக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதை 300 கி.மீ.தூரமாக இருந்தது;
கிரிவலம் ஆரம்பித்தது முதல் நிறைவடையும் வரை எங்கும் அமராமல் கிரிவலம் வரவேண்டும்;கிரிவலப்பாதை முழுவதும் எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது என்பதும்,கிரிவலம் நிறைவடையும் வரையிலும் எதுவும் சாப்பிடக்கூடாது;தண்ணீர் மட்டும் அருந்தலாம் என்று விதிகள் இருந்தன;தற்காலத்தில் இவைகள் அனைத்தையும் அப்படியே பின்பற்றுவது கடினம்;


எந்த ஒரு பக்தி உணர்ச்சியும் இல்லாமலேயே அண்ணாமலை கிரிவலம் சென்றால் நமது அனைத்து முற்பிறப்பு கர்மாக்கள் கரைந்து காணாமல் போய்விடும்;


நம்மில் பலர் எந்த பிக்கல்,பிடுங்கலும் வேண்டாம்;நிம்மதியாக,கடன் இன்றி,நோய் இன்றி,மாந்தீரீகத் தொல்லையின்றி,வேதனை இன்றி வாழ்ந்தால் போதும் என்பதையே விரும்புகின்றனர்;அவர்களின் விருப்பம் நிறைவேற அண்ணாமலை கிரிவலமே எளிமையானது;


ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment