Tuesday, January 10, 2017

அண்ணாமலை கிரிவல ரகசியம்


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,1000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;அட்டவீரட்டானங்களுக்கு ஒருமுறை சென்று வந்தாலே நமது கடந்த ஐந்து முற்பிறப்பு ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்;


இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்;


84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;


மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;


ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;


இந்த நேரத்தை அறிந்து கொள்ள விரும்புவோர்,அவர்களுடைய ஜாதகம்,பிறந்த நட்சத்திரம்,போட்டோ போன்றவைகளை அனுப்பினால்,அவர்கள் எந்த நாளில் கிரிவலம் செல்லலாம்? என்பதை அவர்களுக்கு தெரிவிக்க இயலும்;


அண்ணாமலையைப் பொறுத்தவரையிலும்,பிற சிவாலயங்களை விடவும் பெருமையும்,புகழும் நிறைந்தது;சதுரகிரி சித்தர்களின் வீடு;ஆனால், அண்ணாமலை சித்தர்களின் கோவில்;சதுரகிரியை விடவும் 100 கோடி மடங்கு புனிதமானது அண்ணாமலை என்ற அருணாச்சலம் என்பது அகத்தியர் நாடியில் வெளிவந்த சிவரகசியம் ஆகும்;


பூமிக்கு மேலே 7 உலகங்கள் இருக்கின்றன;நாம் வாழ்ந்து வரும் கர்மபூமியில் நிறைய புண்ணியம் செய்திருந்தால்,நமது மரணத்திற்குப் பிறகு,மேலே இருக்கும்  7 உலகங்களில் ஏதாவது ஒரு உலகத்திற்குச் சென்று சகல சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறப்போம்;


பூமிக்குக் கீழே 7 உலகங்கள் இருக்கின்றன;நாம் வாழ்ந்து வரும் இந்த கர்மபூமியில் பிறரை ஏமாற்றி,துரோகம் செய்து,அகங்காரத்தால் ஆடாத ஆட்டம் ஆடினால்,இங்கே இறந்தப் பின்னர் இந்த 7 உலகங்களில் ஏதாவது ஒன்றிற்கு அனுப்பப்படுவோம்;அங்கே சகலவிதமான சித்திரவதைகளையும் அனுபவித்துவிட்டு மீண்டும் இதே உலகில் பரம ஏழையாகவோ,நோயாளியாகவோ பிறக்க வேண்டியிருக்கும்;


இதைத்தான்
ஜனனீ ஜன்ம சவுக்யானாம்
வர்த்தனீ குலசம்பதாம் பதவீ
பூர்வபுண்யானாம் லிக்யதே சுபஸ்ரீ ஜென்ம பத்ரிகா என்று குறிப்பிட்டு அவரவர் ஜனன ஜாதகங்களில் எழுதுகின்றனர்;

(மாநகரங்களில் ஜாதகம் எழுதித் தர ஜோதிடர்கள் குறைந்து வருகின்றனர்;என்பது வருத்தத்திற்குரிய விஷயம்!)
கணிப்பொறி மென்பொருட்களால் கணிக்கப்படும் ஜாதகங்கள் உயிருள்ளவை அல்ல;மனித மூளையால் கணிக்கப்படுபவையே முறையான ஜாதகங்கள் ஆகும்;எனவே,உங்கள் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் கணித்து வாங்கி வைத்துக் கொள்வது அவசியம்;


ஐந்து ஆண்டுகளுக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று வருவதன் மூலமாக நமது பிறப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் சர்வசக்தி வாய்ந்த சற்குரு நமக்கு அமைவார் என்பது சித்தர்களின் தலைவர்,தமிழ் மொழியின் தந்தை அகத்திய பெருமானின் வாக்கு!

அப்படி ஒரு சற்குரு அமைந்துவிட்டால்,நாம் ஒரு போதும் இந்த பூமியில் பிறக்கவேண்டிய அவசியம் இராது;
ஏனெனில்,நாம் இந்த பூமியில் இதுவரை குறைந்தது 20,000 பிறவிகள் எடுத்துள்ளோம்;அதிகபட்சமாக 3 கோடி பிறவிகள் எடுத்து,எடுத்து களைத்துள்ளோம்;தற்போது கலியுகமாக இருப்பதால் ஆன்மீகத்திலும்,ஜோதிடத்திலும் தான் ஏராளமான பித்தலாட்டங்கள் நடைபெறுகின்றன;எனவே,அண்ணாமலையையே குருவாக ஏற்றுக் கொண்டு மாதம் ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்;


1008 முறை இப்பிறவியிலேயே கிரிவலம் வந்துவிட்டால்,நமது சற்குருவானவர் நம்மைத் தேடி வருவார்;அவரது பார்வையால் நமது அனைத்து முற்பிறவி கர்மவினைகளையும் ஒரே நொடியில் எரித்து சாம்பலாக்கிவிடுவார்;அப்புறம் நமக்கு முக்தி உறுதி;


1008 முறை இலக்கு வைத்து அடிக்கடி கிரிவலம் வந்தால்,நமது பூர்வபுண்ணிய வினைகளுக்கு ஏற்ப 108 முறையாவது கிரிவலம் வரும் பாக்கியம் கிட்டும்;அந்த 108 முறை அண்ணாமலை கிரிவலமே நம்மை இப்பிறவி முழுவதும் கர்மவினைகள் தாக்காமல் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும்,வளமோடும் வாழ வைக்கும்;


பவுர்ணமிக்குத்தான் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்;சிவராத்திரி அன்று செல்லலாம்;அமாவாசை அன்று செல்லலாம்;ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் கிரிவலம் செல்லலாம்;ஜன்ம திதி வரும் நாளில் கிரிவலம் செல்லலாம்;காலையில் கிரிவலம் செல்லலாம்;மதியம் கிரிவலம் செல்லலாம்;இரவில் கிரிவலம் செல்லலாம்;நள்ளிரவிலும் கிரிவலம் செல்லலாம்;பின்னிரவிலும்,விடிகாலையிலும் கிரிவலம் செல்லலாம்;



ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!! 

No comments:

Post a Comment