உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி அடியேனுக்கு உண்டு;ஏனெனில்,கடந்த
27 ஆண்டுகளாக பொது மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது ஜாதகங்களைப் பார்த்து
பலன் சொல்லி,அவர்களின் கஷ்டங்கள் தீர ஜோதிட ஆலோசனை சொல்லி பலர் நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்;அடிக்கடி
சந்தித்து ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனையும்,ஆன்மீக வழிகாட்டுதலும்
செய்வது வழக்கம்;
சுமாராக ஆயிரம் குடும்பத்தினருக்கு ஜோதிட ஆலோசனை கூறி அவர்களுக்கு ஆஸ்தான
ஜோதிடராக இருந்தாலும் அடியேனை இப்பூமிக்கு அனுப்பிய இறைவன்,ஒரு பொறுப்புள்ள ஜோதிடராக
மட்டும் உருவாக்கவில்லை;அனுபவம் மிக்க ஆலோசகராகவும்,சிலபல அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,ஆன்மீகவாதிகள்,கூட்டுக்குடும்பத்தார்களுக்கு
அந்தரங்க மந்திரியாகவும் உருவாக்கியிருக்கிறார்;அப்படி உருவாகக் காரணம் புத்தகவாசிப்பு
என்ற பழக்கம் தான்!
ஜோதிடர்தான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதில்லை;
இந்த பாரத நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும்,
தனது குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும்
அடுத்த பத்தாண்டுகளில் ஒரு தலைசிறந்த பணியாளராகவோ,அல்லது தலைசிறந்த தொழிலதிபராகவோ
ஆக விரும்பும் ஒவ்வொருவரும்
சமூகசேவையில் பிரபலமடைய விரும்பும் ஒவ்வொருவரும்
நமது பாரத நாட்டின் பெருமைகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும்
உலகத்திலேயே தலைசிறந்த வலைப்பூ நடத்திட விரும்பும் ஒவ்வொருவரும்
நமது தமிழ் மொழி,இந்து தர்மம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,வாஸ்து,ஆலய
வாஸ்து,தேசபக்தி,இறைவனைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள்,ஜோதிடத்தில் ரகசியங்களைக் கண்டறிய
விரும்புவோர்,சமஸ்க்ருத மொழியின் பெருமைகளை உலகம் முழுக்கப் பரப்ப விரும்புவோர்,வரலாறு
படைக்க விரும்புவோர்,பலதுறை வித்தகராக இருக்க விரும்புவோர் ஒவ்வொருவரும்
உங்கள் குழந்தை 21 வயதைத் தொடும் போது மற்ற குழந்தைகளை விடவும் மேதையாக
இருக்க விரும்பும் ஒவ்வொருவருமே
புத்தகவாசிப்பை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்;அடியேனது புத்தகவாசிப்புப்
பழக்கம் பற்றியும்,அடியேனை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த புத்தகங்களைப் பற்றியும்
குறிப்பிடவிரும்புகிறேன்.
1987 ஆம் ஆண்டில் தினசரி செய்தித்தாள்கள் வாசிக்கத் துவங்கினேன்;அதுதான்
புத்தகவாசிப்பின் ஆரம்ப முனை;அப்போது அடியேன் எட்டாம் வகுப்பு படித்த ஒரு சராசரி மாணவன்;ஒரு
போதும் பத்து ரேங்க்குக்குள் வந்ததில்லை;அப்போதைய தினகரனில் வந்த ஒரு பெட்டிச் செய்தி
அடியேனை ஆச்சரியப்பட வைத்தது;
திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமம்;அங்கே ஒரு விவசாயி மார்கழி மாதத்தில்
ஒரு நாளில் அதிகாலை 5 மணிக்கு தனது விவசாயப் பண்ணைக்குச் சென்றிருக்கிறார்;அவரை ஒரு
பாம்பு கடித்துவிட்டது;அப்படி கடித்த பாம்பு சில நிமிடங்களில் இறந்துவிட்டது;இதுதான்
அந்தச் செய்தி;
கடந்த 25 ஆண்டுகளாக அந்த விவசாயி(அதாவது 1962 முதல் 1987 வரை) தினமும்
வேப்பமரத்தில் இருந்து வேப்பங்கொழுந்துகளைப் பறித்து,ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்குச்
சாப்பிடுவாராம்;அதுவும் ஒரு நாள் கூட இப்படிச் சாப்பிடாமல் இருந்ததில்லை;காலையில் பல்
துலக்கியதும் அவர் சாப்பிடுவது இதை மட்டும் தான்;
இந்தச் செய்தியை வாசிக்கும் நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்;1987 முதல்
இன்று 2015 வரை இந்தச் செய்தி தொடர்பாக பலரிடம் சந்தேகம் கேட்டிருக்கிறேன்;இதுவரை அவர்கள்
சொன்னக் கருத்துக்களை ஒரு 100 பக்க புத்தகமாகவே வெளியிடலாம்;நீங்கள் இது தொடர்பாக அறிய
உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்;
1988 ஆம் ஆண்டில் நான் வாசித்த முதல் நாவல்:-
ஏழை படும் பாடு;எழுதியவர் கவியோகி சுத்தானந்தபாரதியார்;இது பிரெஞ்ச்
மொழியிலலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்;இந்த நாவலை எனது பாட்டிவீட்டு மாடிப்படியில்
அமர்ந்து நான்கு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன்;ப்ரெஞ்ச் புரட்சியின்
பின்னணியில் எழுதப்பட்ட ஒரு காதல் புதினம்.இதை வாசித்து முடித்ததும் எனக்குள் காதல்
உணர்வு உண்டானது;ஆமாம்! யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது;
1989,1990,1991 மூன்று ஆண்டுகளில் பள்ளி ஆசிரியர்களின் பிரம்படியும்,மிரட்டலும்
எனக்குள் இருந்த துணிச்சலை கொன்றுவிட்டது;1991 இல் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்டமத்துச்சனியின்
பிடியில் இருந்ததை உணர்ந்தேன்;அது என்ன அஷ்டமத்துச்சனி? இந்தக் கேள்விக்குரிய முழுமையான
விடையை அறிந்து கொள்ள எனக்கு பத்து ஆண்டுகள் ஆயின;ஏனெனில்,நான் வாழ்ந்த அடிமட்ட சமுதாயத்தில்
சிந்திக்கும் திறன் உள்ளவர்களை கிறுக்கன் என்றார்கள்;கூர்மையாக கேள்வி கேட்டால் அதற்குப்
பதில் சொல்லாமல் பொறாமை என்ற முகமூடியால் என்னைத் தாக்கினார்கள்;1991 முதல் ஜோதிடம்
பார்க்கத் துவங்கினேன்;அப்படிப் பார்க்கத் துவங்கும் முன்பு எவரிடமும் ஜோதிடம் கற்றுக்
கொள்ளவில்லை;2006 ஆம் ஆண்டில் சந்தித்த ஒரு அருள்வாக்கு சொல்பவர் மூலமாக “நான் போன
பிறவியிலேயே ஜோதிடராக இருந்தேன்” என்பதை அறிய முடிந்தது;
1991 முதல் 1994 வரை சென்னயில் இளங்கலை பொருளாதாரம் பயிலும் பாக்கியம்
பெற்றேன்;எங்கள் ஊரில் வாழ்ந்து வந்த அய்யாப்பிள்ளை(இது அவர் பெயர்:) என்ற பிரபல ஜோதிடரிடம் எனது அப்பா எனது ஜாதகத்தைக் காட்டினார்;அவர்
நிச்சயமாக உன் மகன் கடலோரம் சென்று பட்டப்படிப்பு படிப்பான் என்று சொல்லியிருக்கிறார்;அதன்
பிறகே தைரியமாக என்னை சென்னையில் பட்டப்படிப்பு படிக்க கொண்டுவந்து விட்டார்;அய்யாப்பிள்ளையிடம்
ஜோதிடம் பார்க்க தமிழ்நாடு முழுவதும் இருந்து காரில் பலர் வருவார்களாம்;அவர் அவ்வளவு
பிரபலம்;அவரிடம் ஜோதிடமும் சிலர் கற்றுள்ளனர்;
17 ஆண்டுகளாக வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வந்த என்னால் முதல்
வருடம் வரை சென்னையில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை;ஏனெனில்,எப்பப் பார்த்தாலும் அம்மா,அப்பா
நினைவு வந்து கொண்டே இருந்தது;அந்த நினைவுகளை மறக்க இரண்டு காரியங்கள் செய்து சமாளித்தேன்;ஒன்று
தினமும் அம்மா,அப்பாவுக்கு இன்லாண்டு லட்டர் எழுதுவது;இரண்டு கல்லூரி நேரம் போக மீதி
நேரம் முழுக்க கல்லூரி நூலகத்திலேயே இருந்து பழமையான நூல்களை வாசிப்பது;
மூன்று ஆண்டுகளில் சுமாராக 2000 நூல்களை வாசித்துவிட்டேன்;அதில் என்னை
சுமாராக மூன்று மாதங்கள் வரை தூங்கவிடாமல் செய்த புத்தகம் ஒன்றே ஒன்றுதான்;அந்த புத்தகத்தை
விவேகானந்த கேந்திரம் 1960 வாக்கில் வெளியிட்டிருந்தது;அந்த புத்தகத்தின் பெயர்:ஹிந்து
ராஷ்டிரத்திற்கு அறைகூவல்; சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களின் தொகுப்பு;தொகுத்தவர்
ஏக்நாத் ரானடே ;அது எப்படி ஏக்நாத் ரானடே என்பவர் தமிழ்நாட்டிற்கு வந்து சுவாமி விவேகானந்தரின்
பேச்சுக்களைத் தொகுத்தார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது;கல்லூரிப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,வகுப்புத்
தோழர்கள் என சகலரிடமும் இந்த சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்;பலருக்கு பதில்
தெரியவில்லை;ஒரே ஒருவருக்குத் தெரிந்திருந்தது;அவர்தான் வி.பா.பிரபாகர்;முதலாம் ஆண்டு
பயாலஜி படிக்கும் மாணவர்; அப்போது நான் இரண்டாம் ஆண்டு மாணவர்;இவரது அறிமுகம் எனது
வாழ்க்கையையே புரட்டிப் போட்டது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னை,எனது சிந்தனையை,எனது
வாழ்க்கையை அடியோடு மாற்றியவர் இவர்;
அவர் 40 பக்கங்கள் கொண்ட சிறு,சிறு கையேடுகளைத் தந்து என்னை வாசிக்க
வைப்பார்;அந்த கையேடுகளின் பெயர்கள் இன்றும் நினைவில் இருக்கிறது;
1.ஆரிய மாயை,திராவிட மாயை ஒரு கட்டுக்கதை
2.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ வே.ரா.,
3.ஓம் சக்தியும்,அணு சக்தியும்
4.ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடரை வாசிக்கச் சொன்னார்;அதுதான் வந்தார்கள்;வென்றார்கள்
மேலும் சில புத்தகங்களை அவர் பரிந்துரைத்தாலும் அவைகளில் பலவற்றை இன்று
வரை வாசிக்கமுடியவில்லை;ஏனெனில்,இன்றுவரையிலும் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை;
மீண்டும் சந்திப்போம். . .
இன்று உலக புத்தக தினம்!!!
எனவே புத்தகம் வாசிப்பதை ஒரு அனிச்சை செயலாக்குவோம்;மேதை ஆவோம்;
இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி.
No comments:
Post a Comment