தென் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கோஷம்
மனித இனம் நாகரீகம் அடைந்தது முதல் இன்று வரையிலும் சிவாலயங்களில் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது;உலகின் ஆதி தெய்வம் ஈசன் எனப்படும் சிவன் என்பதற்கு இந்த கோஷமே முதல் ஆதாரம்
ஆகும்; எல்லாம் சிவன் செயல் என்பதும்,சிவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் பிற்காலத்தில்
வேறுவிதமாக திரிக்கப்பட்டன;
மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் மறைமுகமாக இயக்கிவருவது நவக்கிரகங்கள்;இந்த
நவக்கிரகங்களை வழிநடத்துவது பஞ்சபூதங்கள்;இந்த பஞ்சபூதங்களாக இருந்து உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்
இவைகளில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஆதிசிவன் ஆவார்.பஞ்சபூதத் திருத்தலங்களாக அண்ணாமலை(அக்னி);திருவானைக்கா(நீர்);சிதம்பரம்(ஆகாயம்);காஞ்சிபுரம்(நிலம்);திருக்காளஹஸ்தி(வாயு)
இருக்கின்றன;இவைகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஐந்து சிவாலயங்கள்
அமைந்திருக்கின்றன;
அக்னிஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூரும்,நீர்ஸ்தலமாக தாருகாபுரமும்;நில ஸ்தலமாக
சங்கரன் கோவிலும்;வாயுஸ்தலமாக தென் மலையும்;ஆகாயஸ்தலமாக தேவதானமும் அமைந்திருக்கின்றன;
வானியல்படி செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து தமிழ்நாடு
விலகியிருப்பதால்,செவ்வாய் தோஷம் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு தருவதில்லை;அதே
சமயம் செவ்வாய்க்கிரகத்தின் பார்வை தமிழ்நாட்டின் மீது படிவதால் உலகம் முழுவதும் இருந்து
சித்தர்கள் இங்கே வருகை தந்து முக்தி பெற்றனர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத சேதி!
எப்போதெல்லாம் பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை (பூமியின்
மொத்த மக்கள் தொகையில்) குறிப்பிட்ட சதவீதத்திற்கும் கீழாக வருகிறோதோ அப்போதெல்லாம்
தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பதை தேவாரப்பதிகங்களில் ஒன்று தெரிவிக்கிறது;எனவே,தமிழ்நாட்டின்
தெற்கு நீர்ஸ்தலமான தாருகாபுரத்தின் பெருமைகளை நாம் முதலில் அறிவோம்:
திருச்சிக்கு அருகில் அமைந்திருக்கும் திருவானைக்காவுக்கு இணையான நீர்ஸ்தலம்
இந்த தாருகாபுரம்;ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் வாசுதேவநல்லூருக்கும்
புளியங்குடிக்கும் நடுவே சாலையில் இருந்துவிலகி 2 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது;தாருகன்
என்ற அசுரன் இந்த ஆலயத்திற்கு வந்து சிவ வழிபாடு செய்து சாப நிவர்த்தி பெற்றான்;அதனால்
இதற்கு தாருகாபுரம் என்ற பெயர் தோன்றியது;சுமாராக 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்,500
ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருநகரமாக விளங்கியிருக்கிறது;சில நூற்றாண்டுகள் வழிபாடு
விடுபட்டுப் போனது;பின்னர்,மானாபுரப் பாண்டியன் என்ற மன்னனால் மீண்டும் புனர் நிர்மாணம்
செய்யப்பட்டது;
நவக்கிரக அதிபதிகள் வட்டவடிவில் அமர்ந்து கவனிக்க, அவர்களுக்கு தட்சிணாமூர்த்தி போதித்துக் கொண்டிருக்கிறார்;இப்படிப்பட்ட
விசேஷமான தட்சிணாமூர்த்தி வடிவம் உலகத்திலேயே இங்கே மட்டும்தான் காணப்படுகிறது;இந்த
தட்சிணாமூர்த்தியை மூன்று வியாழக்கிழமைகளுக்கு இங்கே வந்து குரு ஓரையில் அல்லது மாலை
4.30 முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும்;தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் துண்டு சார்த்தி,சுயஜாதகத்தை
பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்;கொண்டைக்கடலையை அவித்து பிரசாதமாக வைக்க
வேண்டும்;அர்ச்சனைக்குப் பின்னர் கொண்டைக்கடலையில் பாதியை பிரசாதமாக வாங்கிக் கொண்டு
அங்கே வருபவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;இப்படிச் செய்வதன்
மூலமாக குரு கிரகத்தின் பலம் அதிகரிக்கும்;குரு கிரகம் சார்ந்த தோஷங்கள் அனைத்தும்
நீங்கும்;
இங்கே இருக்கும் மூலவரின் பெயர் அருள்மிகு மத்தியஸ்தநாதர்;இறைவியின்
பெயர் அருள்மிகு அகிலாண்ட நாயகி.இந்த மூலவருக்கு நேர்கீழாக பூமிக்கு அடியில் ஒரு சிவலிங்கம்
இருப்பதாக ஐதீகம்;இவர் அருள்மிகு மத்தியஸ்த நாதருக்குச் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறார்
என்பது இப்பகுதி மக்களின் ஆயிராமாண்டு நம்பிக்கை ஆகும்;
இவ்வாலயத்தை தலைவன் கோட்டை ஜமீன் தார்கள் காலம் காலமாக பராமரித்து வருகின்றனர்;மாமரம்
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக அமைந்திருக்கிறது.இங்கே உள்ள பைரவருக்கு அக்னி பைரவர்
என்று பெயர்;இவர் பில்லி ஏவல் சூனியங்களும் நீக்கும் பைரவப் பெருமானாக அருள்பாலித்து வருகிறார்;
நிலஸ்தலம் சங்கரன் கோவில்:ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும்
விதமாக இங்கே சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சியளிக்கிறார்;பார்வதிதேவியின்
ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒரு ஆடி மாத உத்திராடம் நட்சத்திரநாளன்று(ஆடி பவுர்ணமி)
இவ்வாறு சங்கரநாராயணர் பார்வதிதேவிக்குக் காட்சியளித்தார்;பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும்
ஆடி பவுர்ணமியன்று ஆடித்தவசு திருவிழாவாக இப்பகுதி மக்கள் இதைக் கொண்டாடிவருகின்றனர்;
கேது தோஷங்களை நீக்கும் ஸர்ப்ப கணபதியும்,ராகுவின் தோஷங்களை நீக்கும்
ஸர்ப்ப பைரவரும் இங்கே அருள்பாலித்து வருகின்றனர்;சதயம் நட்சத்திரத்திற்குரிய பைரவ
ஆலயமாக சங்கரன் கோவில் விளங்குகிறது;
முற்காலத்தில் பொருநை ஆற்றங்கரையில் உக்கிரமப்பாண்டிய மன்னனால் இந்த
ஆலயம் கட்டப்பட்டது;இந்த ஆலயத்தின் கோபுரம் 125 அடி உயரமும்,9 நிலைகளும் கொண்டது;கோமதியம்பிகையின்
சன்னதியின் எதிரே ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது;வாசியோகம் பயில்வோர்,தினமும் பிராணயாமம்
செய்பவர்கள் இந்த சக்கரத்தின் மீது அமர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் கோமதியம்பிகையை எண்ணி
தியானம் செய்தால் அவர்கள் அடுத்த நிலையை எட்டுவர்;
இங்கு அக்னித்தீர்த்தம்,அகத்தியர் தீர்த்தம்,சூர்யதீர்த்தம்,சந்திரத்
தீர்த்தம்,இந்திரத்தீர்த்தம் என்று ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன;
சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திர
நாளில் இங்கே அமைந்திருக்கும் சர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அப்படி எட்டு
முறைச் செய்தால் அவர்களது அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;108
முறை அவ்வாறு செய்தால் இப்பிறவியிலேயே தகுந்த ஆன்மீககுருவை அடைவார்கள்;
ஸ்தலவிருட்சமாக புன்னை மரம் இருப்பதால் இந்த ஆலயத்தின் பழைய பெயர் ஆதி
புன்னைவனம் என்று இருந்தது;
இங்கு புற்று மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது;இதனால் சங்கரநாராயணருக்கு
வன்மீக நாதர் என்ற பெயரும் உண்டு;
அமைவிடம்:ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் சாலையில்
சங்கரன் கோவில் அமைந்திருக்கிறது.
அக்னிஸ்தலம் கரிவலம்வந்தநல்லூர்:
இந்த ஆலயத்தின் முன் மண்டபம் மாவீரன் புலித்தேவனால் கட்டப்பட்டது;1928
ஆம் ஆண்டில் திரு.அருணாச்சலம் செட்டியார் என்பவர் இந்த ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தையும்,கிழக்கு
மண்டபத்தையும் கட்டினார்;குடமுழுக்கையும் செய்தார்;இவரது சிலை இந்த ஆலயத்தின் நுழைவாயிலில்
அமைக்கப்பட்டுள்ளது;இவர் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்தவர்;இந்த ஆலயத்தின் கிளாமரம்
பூக்கும்;ஆனால் காய்ப்பதில்லை;
அகத்தியர் பராசக்தி பீடத்தை மூன்று இடங்களில் ஸ்தாபித்தார்;அவை குற்றாலம்,வேதாரண்யம்
மற்றும் கரிவலம்;
மனிதனுக்கு சிவன் சிரார்த்தம் செய்த இடங்கள் இரண்டு;ஒன்று அண்ணாமலை;மற்றது
கரிவலம்;அண்ணாமலையில் வல்லாளமகாராஜாவுக்கு தகப்பனாக இருந்து சிரார்த்தம் செய்தார்;கரிவலத்தில்
வரகுணராமபாண்டியனுக்கு மகனாக இருந்து சிரார்த்தம் செய்திருக்கிறார்;வரகுணராமப்பாண்டியன்
பதிற்றுப்பத்து அந்தாதி,வெண்பா அந்தாதி,கலித்துறை அந்தாதி என 300 அந்தாதிப்பாடல்களைப்
பாடியுள்ளார்;இதை குட்டித் திருவாசகம் என சைவ மரபினர் இன்றும் போற்றிப்பாடிவருகின்றனர்;
ஈசனுக்குத் தெற்கே ஸ்தாபிக்கப்படும் அம்மன் அளவற்ற வரங்கள் அருளும் சக்தியுள்ளவளாகத்
திகழ்வாள் என்பதை கோவில் ஆகமவிதிகள் தெரிவிக்கின்றன;இந்த விதிப்படி இங்கே பால்வண்ணநாதருக்குத்
தெற்கே ஒப்பனையம்மாள் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;ஆவணி மாதத்தில் வரும் பூராட
நட்சத்திரதினத்தன்று இங்கே தவசு(சங்கரன் கோவிலைப் போல) நடைபெற்று வருகிறது;
ராமாயணப் போரில் இராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் வதம் செய்தான்;அதனால்
லட்சுமணனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது;லட்சுமணன் இங்கே வந்து லிங்கப் பிரதிஷ்டை
செய்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெற்றான்;அதனால் லட்சுமணேசுவரர் என்ற லிங்கம் இன்றும்
இங்கே காணப்படுகிறது;ராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆவதாக இன்றைய நவீன அறிவியல்
தெரிவிக்கிறது;இதன் மூலமாக கரிவலம் அருள்மிகு பால்வண்ணநாதர்+அருள்மிகு ஒப்பனையம்மாள்
என்ற அழகிய சுந்தரியம்மாள் ஆலயத்தின் தொன்மையைப்
புரிந்து கொள்ளலாம்;
அகத்தியர் ஸ்தாபித்த பராசக்திபீடமானது தற்காலத்தில் புத்திர தோஷத்தை
நீக்கும் அன்னையாகவும்,திருமணத்தடையை தகர்க்கும் அருள் சக்தியாகவும் மிளிர்கிறது;திருமணத்தடை
உள்ளவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் 48 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே விரதம்
இருக்கவேண்டும்;இந்த விரத நாட்களில் அசைவம் சாப்பிடுவதையும்,பழைய உணவு உண்பதையும் கண்டிப்பாகத்
தவிர்க்க வேண்டும்;48 ஆம் நாள் அன்று இங்கு வருகை தந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து,புடவை
சார்த்த வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் இங்கே தரப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும்;இப்படிச் செய்தால்,அடுத்த 90 நாட்களில் திருமணத்தடை இருப்பவர்களுக்கு
அது நீங்கி சிறந்த வரன் அமையும்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களுக்கு அந்த தோஷத்தை
அன்னையானவள் வாங்கிக் கொண்டு மழலைச் செல்வம் அருளுவாள்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர்
இருவருமே இந்த விரதத்தை மேற்கொள்வது நன்று.அகத்தியர் பராசக்தி பீடத்தை ஸ்தாபித்த மற்ற
ஆலயங்கள் குற்றாலம் மற்றும் வேதாரண்யம்.
வாயுஸ்தலம் தென்மலை:அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரர்+அருள்மிகு சிவபரிபூரணியம்மாள்
ராஜபாளையத்தில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இந்த கிராமத்திற்குச்
செல்கின்றன;மேற்கு நோக்கிய சிவாலயங்கள் பரிகாரக் கோவில்களாகும்;இவர் மேற்கு நோக்கி
அமைந்திருப்பதால் நமது கர்மவினைகள்,சாபங்கள்,துயரங்களை நீக்கிவருகிறார்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும்
இங்கே நடைபெறும் கிரிவலம் பிரபலமானது;ஏராளமான சித்தர்கள் இங்கே சூட்சுமமாக வந்து வழிபடுவது
வழக்கம்;
ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை
4.30 முதல் 6 மணிக்குள் வர வேண்டும்;அல்லது அவரவர் ஜன்ம நட்சத்திரதினத்தன்று வருகை
தந்து மூலவருக்கு அர்ச்சனை செய்தாலே போதுமானது;ஸர்ப்ப தோஷம் விலகிவிடும்;பல ஆண்டுகளாக
இப்பகுதி மக்களின் ஸர்ப்ப தோஷத்தை தென்மலை திருபுரநாத ஈஸ்வரர் நீக்கியவர் என்பதால்
இப்பகுதி மக்கள் தமக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு இவரது பெயரையே வைப்பது வழக்கம்;
அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தில் சில ஆண்டுகளாக வழிபாடு
தொடர இயலாமல் இருந்தது;அந்தக் கால கட்டத்தில் இந்த ஆலயத்தின் காவலாளியிடம் சிறுமி வடிவில்
வந்து அன்னை சிவபரிபூரணியம்மன் உண்ண உணவு வாங்கியிருக்கிறார்;இதை இன்றும் இப்பகுதி
மக்கள் பெருமையாகச் சொல்வது வழக்கம்;
மூலஸ்தானத்தினுள் ஜன்னல் கிடையாது;மூலவருக்கு அருகில் ஐந்து சர விளக்கு
அமைக்கப்பட்டுள்ளது;இதில் முதல் தீபம் மட்டும் ஒரு நிமிடம் பிரகாசமாக எரியும்;மறுநிமிடம்
அணைவது போல சுருங்கும்; அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரரின் மூச்சுக்காற்றுதான் இப்படி
முதல் தீபத்தை துடிக்க வைக்கிறது என்பது இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால நம்பிக்கை
ஆகும்;
அதே போல இங்கே அமைந்திருக்கும் அன்னை சிவபரிபூரணிக்கு வியர்ப்பது வழக்கம்;ஈசன்
தம்பதியாக இங்கே சூட்சுமமாக வசித்து வருவதற்கு இந்த இரு சம்பவங்களே ஆதாரங்கள் ஆகும்;
ஸ்தல விருட்சம் வில்வமரம்
சிவகிரி நாச்சியார் அறக்கட்டளையினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து
வருகின்றனர்;
ஆகாயஸ்தலம் தேவதானம்:இறைவன்:அருள்மிகு நச்சாடைதவிர்த்து அருளிய நாதர்;இறைவி:அருள்மிகு
தவம்பெற்ற நாயகி
ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் 16 வது கி.மி.தொலைவில்
தேவதானம் அமைந்திருக்கிறது;இந்த கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ.தொலைவில் வயல்வெளிக்கு
நடுவே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது;
பல நூற்றாண்டுகளாக இங்கே 7 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன;பார்வதி
தேவி ஆகாயம் நோக்கித் தவம் செய்ய இங்கே உருவான சுயம்புலிங்கமே நச்சாடைத் தவிர்த்து
அருளிய நாதராகத் திகழுகிறார்;
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,பாண்டிய நாட்டு மன்னன் பராக்கிரமப் பாண்டியனுக்கும்,சோழ
நாட்டு மன்னன் விக்கிரம சோழனுக்கும் போர் மூண்டது;வருடக்கணக்கில் போர் மூண்டதால் இருதரப்பிலும்
ஏராளமான வீரர்கள் மாண்டனர்;ஆனால்,போர் முடிவுக்கு வரவில்லை;எனவே,விக்கிரமச் சோழன் ஒரு
தந்திரம் செய்தான்;நச்சுச்செடிகளிலிருந்து பிழியப்பட்ட சாறுகள் கலந்த ஒரு பட்டு ஆடையைத்
தயார் செய்து பராக்கிரமப் பாண்டியனுக்கு பரிசாக அனுப்பி வைத்தான்;அவ்வாறு அனுப்பியதை
கனவில் பராக்கிரமப் பாண்டியனுக்கு தேவதான ஈசன் தெரிவித்ததோடு,அந்தப் பட்டு ஆடையை வாழைத்தண்டு
மூலமாக எடுத்து என்மீது போர்த்திவிடு என்று அருளிமறைந்தார்;தன்னைக் காத்த ஈசனை பராக்கிரமப் பாண்டியன் நச்சாடை தவிர்த்து
அருளிய நாதர் என்று போற்றி வழிபட்டு வந்தார்;அவரது பரம்பரையினரும் அந்த நன்றியுணர்வோடு
இன்றும் வழிபட்டு வருகின்றனர்;
ஓம் ஆம் ஹெளம் செள
ஒம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment