Thursday, October 18, 2012

உடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்


நெல்:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகு
ம். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.



சோளம்:- ( This is not Corn) சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


கம்பு:- கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.



சாமை:- சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.



வரகு:- நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.



கேழ்வரகு:-  ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.



கோதுமை:- அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.



பார்லி:- குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

சனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு


Wednesday, October 17, 2012

மதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து!!!



விநோதமான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களுடைய இலக்கு அப்பாவி இந்து இல்லத்தரசிகள் தான்!

கிராமங்களில் நடக்கும் இந்த மதப்பிரச்சாரம்,இப்போது நகரங்கள்,மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கும் பரவி இந்து தர்மத்தின் வேர்களை வெட்டிக்கூறுபோடத் துவங்கியிருக்கிறது.மாற்று மதத்தைச் சேர்ந்த அவர்கள் தம்பதியாகத் தான் வருகிறார்கள்;ஒன்று அல்லது இரண்டு ஜோடிகள்! அப்பாவியாகத்  தோற்றமளிக்கும் இந்துப் பெண்களை குறிப்பாக இல்லத்தரசிகளைக் கண்டால் அவர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும்.


மெல்லப் பேச்சுக் கொடுப்பார்கள்; “என்னம்மா,கவலையாக இருக்கிறாயே,என்ன விஷயம்? குடும்பத்தில் பிரச்னையா? பணக்கஷ்டமா? கவலையே வேண்டாம்.உங்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.எங்கள் மதப் புத்தகங்களைப்படிக்கிறோம்; அப்படிச் செய்தால் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்” என்று அன்பொழுகப் பேசுவார்கள்.இதைப்போல மயக்கிப் பேசி வீட்டுக்குள் நுழைந்து அவர்கள் மதத்தின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள்;சமயத்தில் ஆளைப்பார்த்துக்கொண்டு, நம் மதக் கடவுள்கள்  பற்றிக் கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இதை ஒரு தொழிலாகச் செய்யும் அப்படிப்பட்டவர்கள் சமீபத்தில் சென்னையில் என் நண்பரின் வீட்டுக்கு வந்தார்கள்;அப்போது நண்பர் வீட்டில்  இல்லை; நண்பரின் மனைவியிடம் நைசாகப்பேசி, இருபது நிமிடங்கள் எங்கள் பிரார்த்தனையைச் செய்கிறோம் என்று வீட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் பிரச்சாரத்தை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.நண்பர் சிறந்த தெய்வ பக்தி உடையவர்;அவர் வீட்டு வாசலில் விநாயகர் படம் ஒட்டப்பட்டிருந்தது.அவர் இல்லாத சமயமாகப்பார்த்து, இதெல்லாம் தெரிந்துகொண்டே அந்த கும்பல் உள்ளே நுழைந்து பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருந்தது.


நண்பரின் மனைவி எவ்வளவோ சொல்லியும் அவர்கள் போதனையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள்.தாங்கமுடியாமல் தன் கணவருக்கு எஸ்.எம்.எஸ்.செய்துவிட்டாள் மனைவி.கடும் கோபத்துடன் தன் வீட்டுக்கு விரைந்தார்.மனைவி டென்ஷனுடன் முறையிட,நண்பர் என்ன செய்தார் தெரியுமா?


அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, வாசல் கதவைச்சாத்திவிட்டு வீட்டுக்குள் போனார். திரும்பி வந்தவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.அது பகவத்கீதை! பாரதியார் அழகான தமிழில் மொழிபெயர்த்த அந்த அற்புதமான புத்தகம், நண்பர் அந்த மாற்று மதக்காரர்கள் முன் உட்கார்ந்தார். “இதோ பாருங்கள்.உங்கள் பிரச்சாரத்தை முடித்துவிட்டீர்களா? ரொம்ப சந்தோஷம்.இப்போது என் முறை. எங்கள் மதத்தின் வேத நூலான பகவத்கீதைக்கு மஹாகவி பாரதியார் அருமையான விளக்க உரை எழுதியிருக்கிறார்.அதை இப்போது படித்துக் காட்டப்போகிறேன்.அருமையான காவியம் இது. படித்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்.இப்போது நான் படிக்க ஆரம்பிக்கப்போகிறேன்.அசையக்கூடச் செய்யாமல் இதை நீங்கள் கேட்க வேண்டும்.எழுந்தாலோ,வெளியில் செல்லமுற்பட்டாலோ நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” என்று சொல்லி விட்டு, “எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண்புகு.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.துயரப்படாதே!”என்று பாரதியாரின் பகவத்கீதையை சத்தம் போட்டு,உணர்ச்சி பொங்க படிக்க ஆரம்பித்தார்; எதிரில் உள்ளவர்கள் விதிர்விதிர்த்துப் போனார்கள்.


ஒரு மணி நேரம்,கீதையின் கடைசி வார்த்தை வரை சொல்லி முடித்துவிட்டு, “புரியாவிட்டால் சொல்லுங்கள்:இன்னொரு முறை படிக்கிறேன்” என்று சொன்னார் நண்பர். வியர்க்க விறுவிறுக்க அன்று எழுந்துஓடிப்போனவர்கள் தான், அதற்குப்பிறகு அந்த ஏரியாப்  பக்கமே தலைகாட்டவில்லை;
உண்மைச் சம்பவம் இது. 



இது போல மாற்று மதக்காரர்கள்,பிரச்சாரம் செய்ய உங்கள் வீட்டுப் பக்கம் வந்தால்,உடனே கீதையையோ,தேவாரத்தையோ,திருமந்திரத்தையோ கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்புறம் பாருங்கள் நடப்பதை!

நன்றி:குமுதம் பக்தி ஸ்பெஷல் செப்டம்பர் 2012

Tuesday, October 16, 2012

நவராத்திரியில் பைரவ வழிபாடு!!!











நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது அன்னையாக வழிபாடு செய்து வருகிறோம்;இந்த ஒன்பது அன்னையையும் அவளுடைய சிவத்தோடு(சிவமும் சக்தியும் சேர்ந்ததே உலகம்!) வழிபட்டால் அதுவே நவராத்திரி பைரவ வழிபாடு ஆகும்.


நவராத்திரி பைரவ வழிபாடு செய்ய விரும்புவோர்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியிருக்க வேண்டும்;ஓம்சிவசிவஓம்  தினமும் ஜபிப்பவர்களும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டினை தினமும் பின்பற்றுபவர்களும் அவைகளைப் பின்பற்றிக்கொண்டே இந்த நவராத்திரி பைரவ வழிபாட்டை செய்யலாம்;
முதல் மற்றும் இரண்டாம் நாட்களின் வெள்ளை ஆடையை அணிய வேண்டும்;மூன்றாம் நாளன்று மஞ்சள் நிற ஆடையையும்,நான்காம் நாளன்று கறுப்பு ஆடையையும்,ஐந்தாம் நாளன்று பச்சை நிற ஆடையையும்,ஆறாம் நாளன்று பல வண்ணம் கொண்ட பளபளப்பான ஆடையையும்,
ஏழாம் நாளன்று அடர்ந்த சிகப்பு நிற ஆடையையும்
எட்டாம் நாளன்று நீல நிற ஆடையையும்
ஒன்பதாம் நாளன்று ரத்த சிகப்பு நிற ஆடையையும்
பத்தாம் நாளன்று உங்களுக்கு விருப்பமான ஆடையையும் அணிய வேண்டும்.


இந்த பத்து நாட்களும் தினமும் தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்களுக்கு அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;சென்று ஒவ்வொரு நாளும் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.எப்படியெனில்,இந்த ஒன்பது நாட்களும் பின்வரும் உணவுப்பொருட்களை படையலாக நமது வீட்டில் தயார் செய்து,ஸ்ரீகால பைரவருடைய சன்னதியில் படைக்க வேண்டும்;அவ்வாறு படைத்து நமது குடும்பத்தார் அனைவரின் பெயர்களிலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்து,பூசாரிக்கு உங்களால் இயன்ற அளவுக்கு தட்சிணை தர வேண்டும்.

பிறகு,ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் ஸ்ரீகால பைரவர் 108 போற்றியை ஒருமுறை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.ஜபித்து முடித்ததும்,படையலை அங்கே இருப்பவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.(பாதியை விநியோகம் செய்தால் போதும்;சில கோவில்களில் ஆட்கள் அதிகம் வராத நிலையில் அனைத்தையும் நமது வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்)நமது வீட்டில் இருப்பவர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

இவ்வாறு முறைப்படி ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி பைரவர் வழிபாடு செய்து முடித்தப்பின்னர்,பத்தாவது நாள் நமது குடும்பத்தோடு வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும்.குடும்பத்தார் அனைவரும் வர இயலாத சூழ்நிலை இருந்தால்,யாராவது ஒருவரையாவது அழைத்து வர வேண்டும்.
இப்படிச் செய்து முடிப்பதன்மூலமாக,பதினோராவது நாளில் நமது முன் ஜன்ம வினைகள் அடியோடு தீர்ந்து போயிருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.


தினசரி நைவேத்தியம்(படையல்)விபரம் வருமாறு:


முதல் நாள்          :அவல்+பொரிகடலை
இரண்டாம் நாள்      :சுண்டல்
மூன்றாம் நாள்        :தயிர்ச்சாதம்
நான்காம் நாள்        :வெண்பொங்கல்
ஐந்தாம் நாள்         :எலுமிச்சை சாதம்(லெமன்)
ஆறாம்நாள்          :அவல்பாயாசம்
ஏழாம் நாள்          :கற்பூரவல்லிப்பழங்கள்
எட்டாம் நாள்        :வெண்ணெய்
ஒன்பதாம் நாள்       :சர்க்கரைப்பொங்கல்


பத்தாம் நாளன்று வெண் பட்டு சாத்தலாம்.முடியாதவர்கள் வழிபாடு செய்தாலே போதுமானது.


இன்று இரண்டாம் நாள் என்பதால் இன்று முதல் இரண்டாம் நாள் வழிபாட்டிலிருந்தும் துவங்கலாம்.


ஓம்சிவசிவஓம்

Friday, October 12, 2012

சனிப்பிரதோஷத்தன்று (13.10.12)ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!




இந்த வருடம் சனிப்பிரதோஷம் இன்றும்,27.10.12 அன்றும் வருகிறது.ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயத்துக்குச் சென்று நாம் பிரதோஷபூஜையில் கலந்து கொண்டால்,ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற புண்ணியம் கிடைக்கும்.ஏனெனில்,பிரதோஷம் முதன்முதலில் நிகழ்ந்தது ஒரு சனிக்கிழமையன்றுதான்.


இந்த சனிப்பிரதோஷ நாளில் பிரதோஷத்துக்கு நாம் பூஜை மற்றும் அபிஷேகப்பொருட்கள் வாங்கித் தருவோம்;பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலகட்டத்தில் நந்தி பகவானை நோக்கியவாறு மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து கொள்வோம்;இரு கைகளிலும் ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக்கொண்டு கண்களை மூடாமல் இந்த 90 நிமிடங்களும் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபிப்போம்;அப்படி ஜபிக்கும்போது நந்திபகவானின் கொம்புகளுக்கு மத்தியப் பகுதியை நோக்கியவாறு ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;(உதடு அசையாமல் மனதுக்குள் சொல்வதை ஜபித்தல் என்று கூறுவார்கள்) இந்த 90 நிமிடங்களில் செல்போனை அணைத்து அல்லது அமைதிப்படுத்தி வைத்துவிட்டு,தனிமையாகவே இந்த சனிப்பிரதோஷத்தில் கலந்து  கொள்வோம்;



இந்த விதமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது மனதில் இருக்கும் தேவையற்ற பதிவுகள் நீங்கிவிடும்;தீய சக்திகள் மற்றும் பொறாமை சக்திகளின் தாக்கம் நம்மைவிட்டு கரைந்து ஓடிவிடும்.சிவாலயம் செல்ல இயலாதவர்கள்,அவரவர் இருப்பிடத்தில்  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து மஞ்சள் துண்டு விரித்து,இருகைகளிலும் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,மானசீகமாக நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் முன்பு நாம் கலந்து கொண்ட பிரதோஷத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து,நந்திபகவானின் கொம்புகளை மானசீகமாக நினைத்து ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;


இது வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,சிலபல காரணங்களால் இடையில் ஜபிக்கமுடியாமல் நிறுத்தியவர்கள் இந்த சனிப்பிரதோஷத்தில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கலாம்;


இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,15.10.12 திங்கட்கிழமை அன்று காலை 4.30 முதல் 6 மணிக்குள் அல்லது காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வரும் குரு ஓரையில் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.இந்த ஆரம்பம் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்பது உறுதி!!!


ஓம்சிவசிவஓம்

Thursday, October 11, 2012

நியூரோதெரபி என்றால் என்ன? யூட்யூப்பில் விளக்கம்

நியூரோதெரபி டாக்டர்.விஜய் ஆனந்த் அவர்களின் இரண்டாவது பேட்டியை பார்க்க இங்கே சொடுக்கவும்.இதில் நியூரோதெரபியால் குணமாகும் நோய்களைப் பற்றி விவரித்திருக்கிறார்.மேலும் நியூரோதெரபி என்றால் என்ன ? என்பதையும் விவரித்திருக்கிறார்.இவரது செல் எண்கள்:8124879155,98944877122

கைப்பேசி என்கிற எட்டப்பன்!


உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?'' என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!
வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப் பொருத்திவிட்டு, வானில் சுற்றி வரும் புவியியல் இடமறியும் செயற்கைக் கோளின் உதவியுடன் அந்த விலங்குகளின் நடமாட்டத்தை உயிரி ஆய்வர்கள் கண்காணிப்பார்கள்.
கைப்பேசி உண்மையில் உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு ரேடியோ காலர். நீங்கள் நடந்தாலும் நின்றாலும் பறந்தாலும் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யார் யாருடன் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களை அக்கணமே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களில் பதிவு செய்யும் எட்டப்பன். அதைக் கொண்டு அழைக்கவும் அழைக்கப்படவும் முடிவது உங்களுக்கு ஆசை காட்டும் தூண்டிற் புழு.
கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் கைப்பேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் உரிய வாரண்டுகள் ஏதுமில்லாமலேயே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்றளவில் பொருத்தமில்லை. அவற்றின் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காரிருளும் பனிமூட்டமும் அவற்றின் பார்வையைத் தடுக்க முடியாது. ஆழ்கடலுக்கு அடியிலும் சுரங்கங்களுக்குள்ளும் அடர்ந்த வனாந்தரங்களுக்குள்ளும்கூட அவற்றால் பார்க்க முடியும்.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய தன்னிலை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருள்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்; அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; என்று எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்; மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார்; எந்த இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்; எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; இத்யாதித் தகவல்களை அவர் தன்னையும் அறியாமல் கைப்பேசி நிறுவனங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.
பல கைப்பேசி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உங்களுக்கு ஓர் அயல்நாட்டு அல்லது உள்நாட்டு ஓட்டலிலிருந்து அழைப்பு வந்தால் வியப்படைய வேண்டாம். அந்த ஓட்டல் இருக்கும் ஊருக்கு நீங்கள் அலுவல் நிமித்தம் அடிக்கடி செல்கிறீர்கள் என்பதையும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு சென்று பத்து நாள்கள் தங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அது கைப்பேசி நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டது என எளிதாய் ஊகிக்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஒரு புதிய ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதையறிய வரைபட வசதியுள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
ஒவ்வோராண்டும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் போக்குவரத்துகள், உரையாடல்கள், நிதி நிலவரங்கள் மட்டுமன்றி, சிந்தனைப் போக்குகளைக் கூடக் கண்டறியவும் கண்காணிக்கவும், தொகுத்து வைக்கவும், தமக்குள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிற புதிய சேவைகளைக் கொண்ட கைப்பேசிகளை உருவாக்குவதற்குப் பல மில்லியன் டாலர்களைச் செலவழிப்பதாகக் கொலராடோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள பால் ஓம் கூறுகிறார்.
இதையறியாத மக்கள் தேனில் வந்து விழும் ஈக்களைப்போல ஆவலுடன் ஸ்மார்ட் ஃபோன், ஐ போன் என அதிநவீனக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி உணர் கருவிகள் மற்றும் இணையச் சுற்றுகளின் இடையறாத கண்காணிப்பு வலையில் வலுவில் வந்து சிக்குகிறார்கள்.
அதிநவீனக் கைப்பேசிகளின் உதவியால் பூமியில் எந்தவொரு பொருளின் இருப்பிடத்தையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளி துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட முடியும்.
ஒரு கைப்பேசி நிறுவனத்திலுள்ள கருவிகள் அதன் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகள் எந்த இடங்களிலுள்ளன என்பதை இடையறாது பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் காவல் துறையினர் அப்பதிவுகளைக் கோரிப் பெறுவதுண்டு. குறுந்தகவல் செய்திகள் மூலம் விளம்பரம் செய்வோரும் இப்பதிவுகளைக் கோருவார்கள்.
இப் பதிவுகள் ஓராண்டுக் காலத்துக்குப் பராமரிக்கப்பட்ட பின் அழிக்கப்படுவது வழக்கம். ஆயினும், அரசு, நீதிமன்றங்கள் அல்லது காவல்துறையின் கோரிக்கைகளுக்கு இணங்கச் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்படும். ஒருவரது நடமாட்ட விவரங்களிலிருந்து அவருடைய ஜாதகத்தையே கணித்துவிட முடியும். அவர் நாள் தவறாமல் அலுவலகம் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கி இருக்கிறாரா; இடையிடையே வெளியே சென்று சொந்த வேலைகளை முடிக்கிறாரா; மாலையில் அலுவலகத்திலிருந்து நேராகச் சொந்த வீட்டுக்குப் போகிறாரா அல்லது வேறு வீட்டுக்குப் போகிறாரா; அல்லது பார், சூதாட்ட விடுதி என்று பொழுது போக்குகிறாரா; ஜிம் அல்லது பீச்சில் நடை பயின்று உடல் நலத்தை அக்கறையுடன் பேணிப் பராமரிப்பவரா; எந்த மருத்துவரிடம் எந்த நோய்க்குச் சிகிச்சை பெறுகிறார்? எந்தப் பொழுதுபோக்கு கிளப் அல்லது தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சியில் உறுப்பினராயிருக்கிறார்? சிக்கனமானவரா அல்லது செலவாளியா; இன்னோரன்ன ஏராளமான தன்னிலைத் தகவல்களைக் கைப்பேசிகள் மூலம் திரட்ட முடியும்.
கைப்பேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அதிநவீனக் கைப்பேசிகளின் பயன்படு நேரத்தில் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணைய தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.
அதிநவீனக் கைப்பேசியை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கேமரா, கால்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைப்பேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.
சினிமா டிக்கெட் முதல் ரயில் அல்லது பஸ் டிக்கெட் வரை கைப்பேசி வாங்கித் தரும். ஒரு மடிக்கணினிக்குச் சமானமாகச் செயல்படக்கூடிய கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
கண்காணிப்பு வலையில் சிக்க விரும்பாத கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கடத்தல் மன்னர்கள் போன்ற சட்டவிரோதிகள் பொய் முகவரி கொடுத்து அல்லது அனாமதேயமாக ரொக்கப் பணம் தந்து பிரீபெய்டு முறையில் கைப்பேசி இணைப்பு பெறுவார்கள். ஓரிரு நாள்கள் அவற்றைப் பயன்படுத்திவிட்டு கைப்பேசிகளை உடைத்து நொறுக்கி விடுவார்கள். அவை இருக்குமிடம் தெரிந்தாலும் அவற்றை அந்த நபர்களுடன் தொடர்புபடுத்த முடியாது. பல நாடுகளில் பிரீபெய்டு முறையில் ரொக்கமாகக் கட்டணத்தைச் செலுத்தினால் பெயரையும் முகவரியையும் தெரிவிக்க வேண்டாம். அரபு நாடுகளிலும் பர்மாவிலும் கிளர்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள். நம் நாட்டில் அது முடியாது.
நம்மைப் போன்ற சாமானியர்கள் அழைப்பு அனுப்பவும் பெறவும் மட்டுமே வசதி செய்யும் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு கண்காணிப்பாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவராமல் பயன்படுத்தலாம். நாம் போகுமிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை. கைப்பேசியைப் பயன்படுத்தாதபோது அதை அணைத்து வைக்கலாம். ஆனால், நம்மை யாராவது அழைத்தால் தெரியாமல் போகும். பாட்டரியை வெளியே எடுத்து வைத்தாலும் போதும். ஆனால், மீண்டும் உள்ளே பொருத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். கைப்பேசியே இல்லாமலிருப்பது உத்தமம். ஆனால், அது அசாத்தியம். உண்மையை ஒப்புக் கொள்வோம். கைப்பேசி ஓர் இன்றியமையாத இன்னல், விலக்க முடியாத வில்லன், ஒதுக்க முடியாத ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் வாழ்க்கை பூரணம் பெறாது!