Thursday, October 4, 2012

புரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்!!!









நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.
பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.
ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)


இந்த புரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 8.10.12 திங்கட்கிழமை முழுவதும் இருக்கிறது,
திங்கட்கிழமை இராகு காலம் காலை 7.30 மணி முதல் 9.00 வரையிலும் வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

திங்கட்கிழமையானது சிவபெருமானை வழிபட உகந்த கிழமை ஆகும்;சிவபெருமானின் அவதார நட்சத்திரம் திருவாதிரை ஆகும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் அவதாரத் திதி தேய்பிறை அஷ்டமி ஆகும்.இந்த மூன்றும் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒன்றாக ஒருங்கிணைந்து வரும்;அப்பேர்ப்பட்ட இந்த அரிய,அதி சக்தி வாய்ந்த நாளை வழிபாட்டுக்குப் பயன்படுத்தி,உங்களுடைய கர்மவினைகளை ஒரேயடியாக கரைத்துவிடுங்கள்;நீங்கள் நினைக்கும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்;அது மட்டுமல்ல;இத்துடன் மஹாளயபட்சம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த நாளில் ஒரே ஒருவருக்காவது அன்னதானம் செய்யுங்கள்;அப்படிச் செய்யும் போது அன்னதானத்துடன் எள் கலந்து செய்யுங்கள்;(கோவிலுக்குள் நுழையும் முன்பு)


இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.


இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள்  ஆகும்.
1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 8.10.12 திங்கட்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில்(காலை 7.30 முதல்  9.00க்குள்)மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஓம்சிவசிவஓம்

புரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோம்!!!




நமது பூமி சூரியனைச் சுற்றி வருகிறது;நமது சூரியன் பால்வழி மண்டலத்தில் ஒரு சிறு துகளாக இருக்கிறது.இந்த பால்வழி மண்டலத்தின் குறுக்களவை கடக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா? ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்.(ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ.வேகத்தில் பயணித்தால் நாம் ஒரு வருடத்துக்கு 9,00,000 கோடி கி.மீ.தூரத்தைக் கடந்திருப்போம்;அப்படி ஒரு லட்சம் வருடங்களுக்கு பயணித்தால் எத்தனை செக்ஸ்டில்லியன் கி.மீ.தூரம் இருக்கும்!!!)



நாம் வாழ்ந்து வரும் பால்வழி மண்டலம் இன்னொரு மையப்புள்ளியை சுற்றி வருகிறது.அந்த இன்னொரு மையப்புள்ளியானது,கன்னி ராசியைச்  சுற்றி வருகிறது.இதுவரையிலும் நமது வானியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்;


இனி நமது இந்து தர்மத்துக்கு வருவோம்;மனிதன் ஒருவன் இறந்ததும்,அவனது உயிரை எம தூதர்கள்/சிவ தூதர்கள்/விஷ்ணு தூதர்கள் அழைத்துச் செல்கிறார்கள்.இந்த பயணம் ஒரு வருடம் வரையிலும் தொடர்கிறது;இந்தப் பயணத்தின் முடிவில் அந்த உயிர் ஒப்படைக்கும் இடம் கன்னி ராசியே!! எனவேதான் சூரியன் கன்னிராசியைக் கடக்கும் புரட்டாசி மாதத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் மஹாளய பட்சத்தை நாம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்;இந்தப் புரட்டாசியில் பவுர்ணமிக்கு மறு நாளிலிருந்து அமாவாசை வரும் தேய்பிறை காலமே மஹாளய பட்சம் ஆகும்.இந்த 15 நாட்களில் நமது முன்னோர்கள்,மேலுலகத்திலிருந்து நாம் வாழும் வீடுகளுக்கு வருகை தருகிறார்கள்.


இந்த மஹாளய பட்சத்தில் சதாசிவனின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.7.10.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 6.08 மணியிலிருந்து 8.10.2012 திங்கட்கிழமை காலை 8.14 வரை உதயமாகியிருக்கும்.இந்த காலகட்டத்தில்,7.10.12 ஞாயிறு மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலும்,மற்றும் 8.10.12 திங்கள் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் இராகு காலம் அமைந்திருக்கிறது.


இந்த இரண்டு காலத்தையும் நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப்போல பயன்படுத்த வேண்டும்;என்னவெனில்,நாம் வாழும் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;அங்கே ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து,மஞ்சள் துண்டு விரித்து,மூலவரை நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;வசதியுள்ளவர்கள் இந்த நேரங்களில் வில்வத்தால் அர்ச்சனை செய்யலாம்;அப்படிச் செய்யும் போதே ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;(உட்கார்ந்திருக்க முடியாவிட்டாலும்!!!)
கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,அவரவர் வீடு/தங்குமிடத்தில் (முடிந்தால் உயரமான இடத்தில்)வடக்கு நோக்கியவாறு அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;



இன்னும் முடிந்தால்,நமது வீட்டில் இருக்கும் சிவலிங்கம் போட்டோவின் முன்பாக(கிழக்கு நோக்கி) மஞ்சள் துண்டு விரித்து அமர்ந்து,வடக்கு நோக்கி வைத்திருக்கும் சிவலிங்கம் போட்டோவுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்;அப்படி செய்தவாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்;இவ்வாறு ஞாயிறு இராகு காலத்திலும்,திங்கட்கிழமை இராகு  காலத்திலும் அர்ச்சனை செய்தவாறு ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்தப்பின்னர்,கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்;குறைந்தது மூன்று துறவிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அல்லது ஒரு கிலோ டையமண்டு கல்கண்டை அருகில் இருக்கும் முட்புதர்/காடு/பூங்கா/தோட்டம்/வனப்பகுதியில் தூவ வேண்டும்;

திங்கட்கிழமை காலையில் இராகு காலம் துவங்கும் முன்பாக ஆறு நாட்டு வாழைப்பழங்களை ஒரே ஒரு பசுவுக்கு தானமாகத்  தர வேண்டும்.இதன்மூலமாக நமது முன்னோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்!!!


இந்த வழிமுறைகளை முறைப்படிச் செய்தால்,அடுத்த சில வாரங்களில் நமது நீண்டகாலப்பிரச்னைகள் தீர்ந்துவிடும்; செய்து பார்க்கலாமா?


ஓம்சிவசிவஓம்

தேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாறு




சைவத்தின் ஆதாரத் தூண்களாக இருக்கும் தேவாரம்,திருமுறைப்பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்,

63 நாயன்மார்கள்(சைவக்குரவர்கள்) வாழ்க்கை வரலாற்றை வீடியோவாக பார்க்கவும்,

இங்கே சொடுக்கவும்.அற்புதமாக ஒரு வலைப்பூ இவைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

ஓம்சிவசிவஓம்

புத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்கும் கல்வித்துறை


உடுமலை : உடுமலை அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க, சிலம்ப கலையினை, பள்ளி நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பால், மாணவர்கள் முறையாக பயின்று வருகின்றனர். அழிந்து வரும் கலையாக காணப்பட்ட சிலம்பம், இளைய சமுதாயத்திடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதால், மீண்டும் புத்துயிர் பெற்று வருவதாக, சிலம்ப பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியது சிலம்ப கலை. தமிழ் மன்னர்களால்
உருவாக்கப்பட்டு, போற்றி பாதுகாக்கப்பட்டு வந்த தற்காப்பு கலைகளில், ஒன்றாக இக்கலை இருந்துள்ளது. கடந்த காலங்களில், சிலம்பாட்டம், புலி விளையாட்டு, கரடி விளையாட்டு, சில்தா (கம்பு), பிச்சுவா (இரண்டு கத்தி) சோடு, வாள், குத்து வரிசை, தீபந்தம், சுருள் கத்தி, மகுடு என்ற மான் கொம்பு விளையாட்டு ஆகியவை தமிழகத்தில் பாரம்பரியமிக்க போர் கலையாகவும் இருந்துள்ளது.

இதில், சிலம்ப பயிற்சி பெற்றவர்கள், பயிற்சி பள்ளிகளை துவக்கி அதன் மூலம் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இக்கலையினை கற்றுத் தந்து வருகின்றனர். தேங்காயை தலையில் வைத்து உடைத்தல், தராசு தட்டில் முட்டை வைத்து சுற்றுதல், தராசு தட்டில் இரண்டு டம்ளரில் தண்ணீர் வைத்து சுற்றுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளும் சிலம்ப ஆசிரியர்களால் அளிக்கப்படுகிறது.
திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சிலம்ப போட்டிகள் நடைபெறுகிறது; மாவட்ட அளவிலும் சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டு சிலம்ப கலைகளை இளைஞர்களிடம் வளர்க்கப்பட்டு வருகிறது.

உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 225 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் பாரம்பரிய மிக்க சிலம்ப கலை கற்க ஆர்வம் காட்டியதால், பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம்தோறும், வெள்ளிக்கிழமைகளில், மதிய நேரத்தில், 3.00 மணிக்கு மேல் மாணவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில், குச்சிகளை சுற்ற கஷ்டமாக உணர்ந்த மாணவர்கள் தற்போது, லாவகமாக குச்சிகளை சுற்ற பழகிகொண்டுள்ளனர்.

""பெற்றோர்கள் ஒத்துழைப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறப்பட்ட பின்னரே, சிலம்ப பயிற்சி வாரத்தில் ஒரு நாள் ஊராட்சி தலைவர் ஒத்துழைப்போடு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். உடற்பயிற்சி போன்றுள்ளதாலும், தற்காப்பு கலையாக உள்ள இக்கலையினை கற்க மாணவர் மட்டுமின்றி, மாணவியரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார் இப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி.

"உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிலம்பம்


'
சிலம்ப ஆசான் சக்திவேல் மற்றும் பயிற்சியாளர் நந்தகோபால் கூறியதாவது:ஆங்கிலேயர்களை விரட்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், புலித்தேவர், மருதபாண்டிசகோதர்கள் உள்ளிட்ட மன்னர்கள் காலத்தில் சிலம்பம் போர்க்கலையாக பயன்படுத்தப்பட்டதாக சிலம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலம்பம் வெறும் கலை மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இப்பயிற்சியின் மூலம் உடற்பயிற்சி, உளப்பயிற்சி, அதிர்வினை நிகழ்வு, உடல் தாங்கும் திறன் பயிற்சி, சமயோசிதமாக சிந்தித்தல், நிலை தடுமாறாமல் நிற்கும் பயிற்சி, சிலம்பத்தை கைகளினால், பயன்படுத்துவதால் விரல்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.உயிருக்கும் ஆரோக்கியம் தரும் சிலம்பம் மனித வாழ்க்கைக்கு கற்பக விருட்சமாக உள்ளது. தற்போது சிலம்பாட்டத்தை அரசு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்துள்ளனர். இதனால், அழிவின் விளிம்பில் இருந்த சிலம்ப போட்டி தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.
பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தற்போது மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊராட்சி தலைவர் ஒத்துழைப்பால், இப்பயிற்சி மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறது. இதற்கான சம்பளமும் அவர் சொந்த செலவில் வழங்கி வருகிறார். தற்போது, விடுமுறை நாட்களிலும் தினசரி மாணவர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Monday, October 1, 2012

முன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹாளய பட்சம்!!!




ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான பட்சத்தை(கால கட்டத்தை) மஹாளய பட்சம் என்று அழைக்கிறோம்;இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களாகிய தாத்தாக்கள்,பாட்டிகள் மேல் உலகத்தில் இருந்து அனுமதி பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்;முதல் யுகமான திரேதாயுகத்தில் அப்படி நமது முன்னோர்கள் வருகை தருவதை கண்களால் பார்க்க முடியும்;நாம் வாழும் கலியுகத்தில் பார்க்க முடியாது;அவ்வளவு பிரகாசமான ஒளி உடலோடு வருகை தருவார்கள்;அப்படி வரும் நமது முன்னோர்கள் நமது வீட்டை ஒட்டி இருக்கும் மரம்,செடி,கொடிகளில் தங்குவார்கள்:அது இல்லாதவீடுகளில் நமது வீட்டின் நீர்நிலைகளில் தங்குவார்கள்;


இந்த நந்தன வருடத்து மஹாளய பட்சமானது 30.9.12 முதல் 15.10.12 வரை வந்திருக்கிறது.இந்த நாட்களில் நாம் செய்ய வேண்டியது என்ன?


தினமும் யாராவது ஒரு ஏழை/துறவி/வறியவருக்கு ஒருவேளை மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.முடிந்தால் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்யலாம்;இப்படி தினமும் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் புரட்டாசி மாதத்து அமாவாசையான 15.10.2012 அன்று மட்டும் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்யலாம்;எத்தனை பேர்களுக்கு என்பது அவரவரின் பொருளாதார வளத்தைப் பொறுத்தது.குறைந்தது மூன்று பேர்களுக்கு காலையில் ஆறுமணி முதல் எட்டு மணிக்குள்ளும்,மதியம் பனிரண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்,மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்யலாம்.


வசதியிருந்தால் திரு அண்ணாமலை அல்லது திருஆனைக்கா அல்லது சிதம்பரம் அல்லது காசி அல்லது கயா அல்லது ராமேஸ்வரம் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் அன்னதானம் செய்யலாம்.


இப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தினமும் அருகில் இருக்கும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது ஆறு நாட்டுவாழைப்பழங்கள் வாங்கித் தரலாம்;தினமும் செய்ய முடியாதவர்கள் 15.10.2012  15.101111அக்டோபர் 15,2012 திங்கட்கிழமை காலையில் மட்டுமாவது செய்யலாம்.


இந்த பதினைந்து நாட்களில் (உங்கள் ஊரில் மலைக்கோவில் அல்லது வனாந்திரக் கோவில் இருந்தால்) உங்கள் ஊரில்=வசிக்கும் ஊராக இருந்தாலும் சரி;சொந்த ஊராக இருந்தாலும் சரி=மழை வரும் நாளைக் கவனிக்கவும்;மழை வந்த நாள் முதல் அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த மலைக்கோவில் அல்லது வனாந்திரக் கோவிலுக்கு ஒருமுறை செல்லவும்;அப்படிச் செல்லும்போது குறைந்தது  ஐந்து கிலோ நவதானியங்களை வாங்கிக்கொண்டு செல்லவும்;அந்த கோவிலுக்குச் செல்லும் பாதையின் ஓரங்களில் உள்ளடங்கியபகுதியை நோக்கி தூவுங்கள்;அடுத்த ஆறு மாதங்களுக்கு மழை அடிக்கடி வர இருக்கிறது;இந்த ஆறு மாதங்களும் இப்படி அடிக்கடிச் செய்யலாம்;இதன் மூலமாக நவக்கிரகங்களால் ஏற்பட இருக்கும் தோஷங்கள் நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடும்;


குறிப்பாக மீனம்,மேஷம்,கடகம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் இதைப் பின்பற்றுவது நல்லது;அவசியம்;ஏனெனில்,இவர்களுக்கு சனியின் தொல்லை அதிகமாக இருக்கிறது.எனவே,இவர்களும் இவர்களுக்காக இவர்களின் ரத்த உறவுகளும் இந்த நவதானியங்களை வாங்கித் தூவலாம்;வசதி உள்ளவர்கள் சதுரகிரிக்குச் சென்றும்,திரு அண்ணாமலைக்குச் சென்றும் இதுபோலச் செய்யலாம்.


இந்த மஹாளயபட்சமான பதினைந்து நாட்களில் நாம் செய்யக் கூடாதது என்ன?


காமம் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் நிறுத்தி வைக்க வேண்டும்;காம உணர்ச்சியைத் தூண்டக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாமலிருக்க வேண்டும்;கோபம்,சாபம் போன்றவைகளையும் நமது வீட்டில் மற்றும் நமது ரத்த உறவுகளிடம் காட்டாமலிருக்க வேண்டும்.


ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜபிக்காமல் இருக்கக் கூடாது;குறிப்பாக ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்காமல் இருக்கக் கூடாது.

ஏதாவது ஒரு இறைவழிபாட்டைச் செய்யாமல் இருக்கக் கூடாது.குறிப்பாக,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பிடிவாதமாக செய்யாமல் இருக்கக்கூடாது.


ஓம்சிவசிவஓம்

வீரட்டானங்களின் பெருமைகளும்,அவற்றின் இருப்பிடமும்!!!




உங்களுடைய நெருங்கிய நண்பராக உங்கள் ஊர் எம்.எல்.ஏ.இருந்தால்,நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?யோசித்துப்பாருங்கள்!


இன்னும் கொஞ்சம் பெரிதாக கற்பனை செய்து பார்த்தால்,நமது நாட்டின் பிரதமரின் மனதில் நீங்கள் நீக்கமற நிறைந்திருந்தால்,நீங்கள் நினைக்கும்போதெல்லாம் அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால்,என்னவெல்லாம் உங்களால் செய்ய முடியும்?

கற்பனை செய்தே பார்க்கமுடியாத அதிகார மையமாக மாறிவிடுவீர்கள்.அரசியல் அதிகாரத்தின் விளைவுகளை நாம் இன்று பார்க்கிறோம்.அரசியல் அதிகாரத்தை விடவும் அதிகமான “செல்வாக்கு” இறைவழிபாட்டின் மூலமாக உங்களுக்கு கிடைக்கவே இந்தப் பதிவு உங்களுக்கு எழுதப்பட்டுள்ளது:

இந்துதர்மத்தின் வரலாறே மிகவும் நீநீநீநீளமானது;சுமார் இருபது லட்சம் வருடங்களையும்,அதையும் விடவும் நீண்ட காலத்தைக்கொண்டது;நாம் இன்று வழிபாடு செய்யும் கணபதி,முருகக்கடவுள்,அம்பிகை,பத்திரகாளி,சுடலை,முனி, கருப்பசாமி,அங்காளபரமேஸ்வரி,மகாலட்சுமி,பெருமாள்,   கல்விக்கடவுளாம் சரஸ்வதி,ஹயக்ரீவர்,குலதெய்வங்கள்,சிவபெருமான்,அழகர்,   மாடசாமி என்று கடவுள்களின் எண்ணிக்கையே சில ஆயிரங்களைத் தொடும்;இந்த தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவரே ஸ்ரீகாலபைரவர் ஆவார்.

ஏன் ஸ்ரீகாலபைரவர் இந்த தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருக்கிறார்? அதுதான் இந்துதர்மத்தின் அடிப்படை ஆதாரமாகும்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது;அப்படிப்பட்ட சாபத்தை அவர் தனது தவற்றினால் பெற்றுவிட்டார்;மஹாவிஷ்ணு நம்மை காக்கும் கடவுள்:நம்மை அவர் காப்பதற்கு உதவி புரிவது அவரது துணைவி மஹாலட்சுமி! அழிப்பவர் ருத்ரன்(சிவன் அல்ல:) இங்கே அழிப்பது என்பது நம்மை அழிப்பது அல்ல;நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன்;இந்த மும்மூர்த்திகளையும் நேரடியாக நிர்வகித்துவருபவரே ஸ்ரீகால பைரவர்!



 காலம் என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் இவருக்கு கால பைரவர் என்று பெயர் வந்தது.எட்டுவிதமான பைரவர்களில் நம்மால் வழிபடக்கூடியவர் இரண்டே இரண்டு பேர்கள் மட்டுமே! ஒருவர் ஸ்ரீகால பைரவர்; மற்றவர்            ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்!! இந்த இருவரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் எட்டு பைரவர்களையும் விடவும் உயர்ந்தவர்;

முருகக்கடவுளின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்களே அறுபடைவீடுகளாக இருக்கின்றன.திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலும் தமிழ்நாடெங்கும் முருகக்கடவுளின் அறுபடைவீடுகள் பரவிக்கிடக்கின்றன.அதே போல,அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தைச் சுற்றிலும் நான்கு வீரட்டானங்களும்,திருவாரூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,பண்ருட்டிக்கு அருகே ஒரு வீரட்டானமும்,தஞ்சாவூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,திருஅண்ணாமலைக்கு அருகே ஒரு வீரட்டானமும் அமைந்திருக்கிறது.சுமாராக நானூறு சதுர கி.மீ.தூரத்துக்குள் அட்டவீரட்டானங்களும் அமைந்திருக்கின்றன.இந்த அட்ட வீரட்டானங்களிலும் ஒன்றிரண்டு மட்டுமே பிரபலமான சிவாலயமாக அமைந்திருக்கிறது.அங்கே தினமும் சில ஆயிரம் பேர்கள் வந்து செல்லும் ஆலயங்களாக இருக்கின்றன.


இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப்பெருமான் மூலஸ்தானத்தில் சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்.இந்த அட்டவீரட்டானங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளாக பிரபலமடையவில்லை;இந்த அட்டவீரட்டானங்களுக்கும் செல்ல யாரால் முடியும் தெரியுமா? யார் நீதி,நேர்மையுடன் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார்களோ அவர்கள் மட்டுமே செல்லமுடியும்.மற்றவர்கள் முயற்சி எடுத்தாலும் இந்த ஆலயங்களுக்குச் சென்று வருவது கடினமே!

இந்த அட்டவீரட்டானங்களை முழுமையாக தரிசிக்க நான்கு நாட்கள் தேவைப்படும்;ஒரு நாளுக்கு காலை ஒரு வீரட்டானம்;மாலை ஒரு வீரட்டானம் வீதம் நான்கு நாட்களில் எட்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்.இவைகளில் பெரும்பாலானவை பிரதான சாலையிலிருந்து விலகியே இருக்கின்றன.ஸ்ரீகாலபைரவரை சிவனாக தரிசித்தே ஆகவேண்டும் என்ற வேட்கை/தாகம் யாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதன் முதலில் அப்படி தரிசிக்கும்போது நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மை ஆகும்.நம்ப முடியவில்லையா? டெஸ்ட் செய்து பாருங்கள்:


அட்டவீரட்டானங்களும் அவைகளுக்கான வழித்தடங்களும்:


முதல் வீரட்டானம்=திருக்கண்டியூர்
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.
திருமூலப் பெருமானும்
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)
மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை;


இரண்டாவது வீரட்டானம்:திருக்கோவிலூர்
கோவல்நகர் வீரட்டம்,தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது.திரு அண்ணாமலைக்கு அருகில் திருக்கோவிலூர் அமைந்திருக்கிறது.
கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)
அலெக்ஸாண்டருக்கு முன்பே இந்த உலகத்தை ஆட்சி புரிந்த மாமன்னன் ராஜராஜசோழன் ஆவார்.(வெகு விரைவில் உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்)இன்றைய ஆசியக் கண்டம் முழுவதையும்,ஆஸ்திரேலியா கண்டத்தையும் ஆட்சிபுரியும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் மிகவும் பரந்துவிரிந்து இருந்தது;அப்படி மிகப்பிரம்மாண்டமான அரசை நிறுவுவதற்குக் காரணம்  இங்கே இருக்கும் ஸ்ரீகாலபைரவரை முறைப்படி வழிபாடு செய்து வந்ததால் தான்! இவரது ஆஸ்தான ஆன்மீக குரு யார்தெரியுமா? ஸ்ரீகருவூர் சித்தர்!

மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!

மூன்றாவது வீரட்டானம்:திருவதிகை
பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது.  அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமந்திரம் 343)
மூலவர்:வீரட்டானேஸ்வரர்



நான்காவது வீரட்டானம்:திருப்பறியலூர்


மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.
மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்;
மூலவளின்பெயர்:இளங்கொம்பனையாள்


ஐந்தாவது வீரட்டானம்:திருவிற்குடி என்ற விற்குடி
திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.
எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற
அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)
மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி


ஆறாவது வீரட்டானம்:வழுவூர்

மிக எளிதாகச் செல்லக்கூடிய ஆனால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரட்டானம் இது.ஏன் இப்படி நமக்கு மெய்சிலிர்க்கிறது என்பதற்கான காரணத்தை அறிய நமக்கு தகுந்த குரு இந்த பிறவியில் அமைந்தால் தெரியும்.இல்லாவிட்டால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான்.இவரை பார்த்த உடனே நமக்குள்ளே இருக்கும் அத்தனை அகங்காரமும் கரைந்து காணாமல் போய்விடும்;


மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது.இந்த நிறுத்தத்தில் இறங்கி,சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம்;இவ்வ்வளவு பெரிய்ய்ய்ய கோவிலாக இருந்தும் கூட ஒரு நாளுக்கு பத்து பக்தர்கள் வருவதே அதிகம் போலும்!அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமிநாட்களில் உள்ளூர் பக்தர்கள் ஓரளவு கணிசமாக வருவதாகக் கேள்வி!!
சபரிமலையில் அமர்ந்திருக்கும் பந்தளராஜா பிறந்த ஊர் இதுதான்;இதுதான்;இதே தான்!!! ஆமாம்! ஐயப்பன் பிறந்த ஸ்தலமே இந்த வழுவூர்.


ஏழாவது வீரட்டானம்:திருக்குறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)


மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது.
மூலவர்:வீரட்டேஸ்வரர் மூலவள்:ஞானாம்பிகை
காமம் சார்ந்த பிரச்னைகளால் கடந்த சிலபல வருடங்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இங்கே வந்து தொடர்ந்து வழிபட,வழிபட மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் காணாமல் போகும்;முதல் தடவை வந்து சென்றதுமே நமது மனது பரிசுத்தமாகிவிடும் என்பதை உணரலாம்.


எட்டாவது வீரட்டானம்:திருக்கடவூர்

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று
காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)



எப்போதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் வீரட்டானம் இது;காரணம் இங்கே 60 ஆம் கல்யாணம் மிகச் சிறப்பாகவும்,காலம் காலமாகவும் நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.
மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி
கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு,
மான் கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே(தேவாரம்)


ஒருமுறை போய் வரலாமா இந்த அட்டவீரட்டானங்களுக்கு!!!


ஓம்சிவசிவஓம்



அவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல் 13.4.13 வரை) மைத்ர முகூர்த்தங்கள்




நாம் வாங்கியிருக்கும் கடன் தொகை எவ்வ்வ்வளவு பெரியதாக இருந்தாலும்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ,நாம் வாங்கியிருக்கும் கடனில் அசலில் ஒருபகுதியைத் திருப்பித் தர வேண்டும்.அவ்வாறு திருப்பித்தந்தால்,அதன்பிறகு,அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,விரைவாக தீர்ந்துவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் மைத்ரமுகூர்த்தப்பட்டியலை வெளியிட்டுவருகிறோம்;ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த மைத்ர முகூர்த்த நேரப்பட்டியலைப் பயன்படுத்தி,தங்களது கடன்களைத் தீர்த்துவிட்டனர்.இந்த மைத்ர முகூர்த்தப்பட்டியலை கந்துவட்டிக்குப் பயன்படுத்தி,கடனைத் தீர்க்க முடியாது.
பாலன் என்பவர்,சுகுமாரிடம் ரூ.1,00,000/- கடன் வாங்கியிருக்கிறார்.கி.பி.2002 இல் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்;பாலன் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைத்ரமுகூர்த்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து,ரூ.500/- அல்லது ரூ.1000/-ஐ சுகுமாரிடம் கொடுக்க வேண்டும்.இதை அசலில் வரவு வைத்துக்கொள்ளுங்கள்;மீதிக் கடனை விரைவில் அடைத்துவிடுகிறேன் என்ற அர்த்தம் வருமாறு சொல்ல வேண்டும்.சுகுமார் அதை அசலில் வரவு வைக்க வேண்டும்.அவ்வளவுதான்.இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே,மீதி ரூ.99,500/- அல்லது ரூ.99,000/-கடனை பாலனால் தீர்த்துவிடமுடியும்.இதேபோல,வங்கிக்கடனுக்கும் முயற்சி செய்துபார்க்கலாம்;ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன்கள் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
கடன் என்பது சிலருக்கு கவனக்குறைவால் ஏற்படும் சுமை;பலருக்கு ஆடம்பரத்தால் உருவாகும் சுருக்குக் கயிறு;எப்படிப் பார்த்தாலும் கடன் என்பது அவரவரின் கர்மவினையின்  விளைவுதான்.இருப்பினும்  இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்தி விரைவாக கடனைத் தீர்ப்பதும்,அவரவர்களின் பூர்வபுண்ணியமே!!! சிலருக்கு அவர்களின் பிறந்த ஜாதகப்படி,வாழ்நாள் முழுக்க கடன் இருக்க வேண்டும்.அப்பேர்ப்பட்ட நேரத்தில் பிறந்திருப்பார்கள்;அவர்கள் ஒரு கடனை அடைத்துவிட்டு,அடுத்த கடனை வாங்கிட வேண்டியதுதான்.அப்பேர்ப்பட்ட ஆத்மாக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 மணிவரை;

27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை;

13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை;

25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை;

9.4.12 திங்கள்  இரவு 8.30 முதல் 10.30பத்து முப்பது வரை;

20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை;

7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை;

18.5.12 வெள்ளி காலை 4.05 முதல் 6.05 வரை;

3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை;

14.6.12 வியாழன் காலை 5.49 முதல் 6.49 வரை;

15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை;

30.6.12 சனி மாலை 3.35 முதல் 4.50 வரை;

7.8.12 செவ்வாய் இரவு 10.35 முதல் 12.35 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் 11.50 வரை;

24.8.12 வெள்ளி மதியம் 12.30 முதல் 2.30 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.50 முதல் 10.50 வரை;

21.9.12 வெள்ளி காலை 10.15 முதல் மதியம் 12.15 வரை;

1.10.12 திங்கள் இரவு 7.07 முதல் 9.07 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.19 முதல் இரவு 7.19 வரை;

14.11.12 புதன் காலை 7.45 முதல் 8.15 வரை;

15.11.12 வியாழன் காலை 6.05 முதல் 6.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 4.40 முதல் 6.40 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் 12.41 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த மைத்ர முகூர்த்த நேரங்களின் மைய பாகத்தைப் பயன்படுத்துதல் நன்று;இந்த மைத்ர முகூர்த்த நேரமானது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்னாடகா,லட்சத்தீவு பகுதிகளுக்கும்; இலங்கை,மாலத்தீவு முழுமைக்கும் பொருந்தும். பிற நாடுகளில் இருப்போர் இந்திய நேரத்துக்கும்,அவர்கள் வாழும் நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு பயன்படுத்தலாம்.கடனில்லாமல் வாழ வாழ்த்துகிறேன்.

ஓம்சிவசிவஓம்