Monday, September 24, 2012

கடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்




பின்வரும் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் ஒருபோதும்,எவருக்கும் கடன் தரக் கூடாது;அப்படித் தந்தால் கடன் திரும்ப வராது என்பதை எமது குருவின் உபதேசம் தெரிவிக்கிறது.
பரணி,
கார்த்திகை,
திருவாதிரை,
ஆயில்யம்,
மகம்,
பூரம்,
சித்திரை,
சுவாதி,
விசாகம்,
கேட்டை,
பூராடம்,
பூரட்டாதி.

எனவே,இந்த நட்சத்திரம் நிற்கும் நாளைத் தவிர,மற்ற நட்சத்திரம் நிற்கும் நாளில் கடன் தரலாம்.நமது முன்னோர்கள் அறிவுக்கு முன்பாக மேல்நாடுகளின் தொழில்நுட்பத்திறமையும்,அறிவாற்றலும் தூசிக்குச் சமம்.எதற்கெடுத்தாலும் மேல்நாடுகளின் வழிமுறைகளைப் பின்பற்றுவதை தவிர்ப்போம்;



இந்த உலகத்தையே ஆளப்பிறந்திருப்பது நமது இந்தியர்களே! இந்த உண்மை வெகு விரைவில் நிரூபணமாகும்.


ஓம்சிவசிவஓம்

Wednesday, September 19, 2012

விநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு!!!





முழு முதற்கடவுளாம் விநாயகர்,கணபதி,பிள்ளையாரின் ஆசியோடும்,குருகணபதியின் வழிகாட்டுதலோடும் இந்தப் பதிவினை ஆன்மீகக்கடல் வாசகப் பெருமக்களுக்கு சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன்!!!



இன்று 19.9.2012,நந்தன வருடம் புரட்டாசி மாதம் மூன்றாம் நாள்,தேய்பிறை சதுர்த்தி ஆகும்.இன்று நமது வீட்டில் மஞ்சளில் ஒரு விநாயகரை பிடிக்க வேண்டும்;அதே போல சந்தனத்தில் ஒரு விநாகயரையும்,குங்குமத்தில் ஒரு விநாயகரையும்,விபூதியில் ஒரு விநாயகரையும்,பசுஞ்சாணத்தில் ஒரு விநாயகரையும்,வெல்லத்தில் ஒரு விநாயகரையும்,வாழைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,பேரீட்சைப்பழத்தில் ஒரு விநாயகரையும்,வெண்ணெய்யில் ஒரு விநாயகரையும் பிடிக்க வேண்டும்.



கொஞ்சம் மஞ்சளை எடுத்து நமது மூன்று விரல்களால் பிடித்தாலே அந்த மஞ்சளில் விநாயக சக்தி வந்துவிடும்.இதேபோல ஒன்பது விநாயகர்களை மேற்கூறியவாறு பிடிக்க வேண்டும்;எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை;
இந்த ஒன்பது விநாயகர்களுக்கும் தனித்தனியே மோதகம் எனப்படும் கொழுக்கட்டைகள்,சுண்டல்களை படையலிடவேண்டும்;ஒன்பது குத்துவிளக்குகளில் தீபமேற்ற வேண்டும்;ஒன்பது முறை விநாயகர் அகவல் பாட வேண்டும்;தவிர,விநாயகரது பாடல்களையும் பாடலாம்;ஜபிக்கலாம்;இன்று எப்போது வேண்டுமானாலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம்;ஏறு பொழுது எனப்படும் காலை நேரங்கள்,இறங்குபொழுது எனப்படும் மதியம்,மாலை மற்றும் இரவு நேரம் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை;




இது போல இன்று புதன் கிழமை,நாளை வியாழக்கிழமை,நாளை மறு நாள் வெள்ளிக்கிழமை என்று மூன்று நாட்களுக்கு தினமும் ஒன்பது முறை விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் பாடல்களைப் பாட வேண்டும்;வழிபாடு முடிந்த ஓவ்வொரு நாளும் மோதகங்களையும்,சுண்டல்களையும் அருகிலிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விநியோகிக்க வேண்டும்;
மறு நாள் புதிய மோதகங்களையும்,புதிய சுண்டல்களையும் ஒன்பது விநாயகர்களுக்கும் படைக்க வேண்டும்.
நான்காம் நாளான சனிக்கிழமை 22.9.2012 அன்று அருகில் இருக்கும் ஆறு அல்லது கிணறு அல்லது கடல் அல்லது நதியில் இந்த ஒன்பது விநாயகர்களையும் கரைக்க(விஜர்சனம்) வேண்டும்.




இதன் மூலமாக கேது திசை நடைபெறுபவர்களுக்கும்,கேது சார திசை மற்றும் கேதுவுடன் சேர்ந்த கிரகங்களின் திசை நடைபெறுபவர்களுக்கும், ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி, சனி திசை நடைபெறுபவர்களுக்கும் வர இருக்கும்,வந்து கொண்டிருக்கும் துயரங்களை விநாயகப்பெருமான் நீக்கிவிடுவார்;மேலும் விநாயகரின் அருள் முழுமையாகக் கிட்டும்;ஜீவகாருண்யம் ஏற்படும்;முன்னோர்களின் அருளாசி கிட்டும்;முன்னோர்களின் சாபம் இருந்தால் அது அடியோடு விலகிவிடும்;


இந்த நந்தன வருடத்தில் புதன் கிழமையும்,விநாயகர் சதுர்த்தியும் வந்திருப்பதால் இந்த வழிமுறைப்படி ஒன்பது விநாயகர் வழிபாடு செய்து வளமோடு வாழ்க! அருள் பல பெறுக!!!


படங்களில் காட்சியருள்வது தங்க விநாயகர்,          ப்ளாட்டின விநாயகர்,வைர விநாயகர்!!!


ஓம்சிவசிவஓம்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!

விநாயகனே !!!விநாயகனே !!!
வினை தீர்பவனே!!
தாய்  காவலுக்கு தலை தந்த 
தங்கமே !! தங்கமே !!
பஞ்சத்தில்  இருந்த  எம்மை !
பஞ்சு மெத்தையில்  அமர்த்திய 
விநாயக பெருமானே !!
நின்  பாத மலரடி  போற்றி !      போற்றி ! போற்றி !போற்றி !                                                       நன்றி: நமது வாசகர் ஒருவர்

Monday, September 17, 2012

தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக் காட்சிகள்!!!




கி.பி.1960 முதல் 1970 வரையிலான தமிழ்த்திரைப்படங்கள் தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தன;ஆனாலும் ,அப்போதே கவர்ச்சியை பயன்படுத்தும் விதமான படங்கள் தமிழ் இளைஞர்களின் மத்தியில் காதலுடன் சேர்ந்தே வக்கிரமான காம  எண்ணங்களையும் விதைத்தது;கூடவே பக்திப்படங்கள் , கடவுள் வடிவங்களை சுலபமாக மக்களின் மனதில் பதித்தன;புராணங்கள்,செவிவழிச் செய்திகள் திரைப்பட வடிவம் எடுத்தப்பின்னர்,இறைவழிபாடு பற்றிய நம்பிக்கையும் ஆரம்ப காலங்களான 1950 முதல் 1980 வரை அதிகரித்தன;


சென்சார் போர்டு தலைவராகவும்,உறுப்பினராகவும் இருந்து கொண்டே சில வக்கிரமான காட்சியமைப்புகளை தனது திரைப்படங்களில் வைத்து லட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்தனர் சிலர்;அப்படி சம்பாதிப்பதை பலரும் காறித்துப்பியும்,கவலைப்பட வில்லை;பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று பலரும் அந்த கவுரவமான மனிதர்களிடம் கேட்டும்கூட அவர்கள் திருந்தவில்லை என்பது சோகமான உண்மை!!!

கி.பி.1970 களில் தண்ணீர்,தண்ணீர் என்று  ஒரு திரைப்படம் வெளிவந்தது;அந்தத் திரைப்படத்தின் மூலமாக அடிப்படைத் தேவைகளை தராத அரசுக்கு மக்களின் கோரிக்கையை சாத்வீகமான விதத்தில் தெரிவிக்கும் வழியே சாலை மறியல் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.(இப்போதோ அதையும் தாண்டி பஸ்ஸையும்,பஸ்ஸில் பயணிக்கும் அப்பாவிகளையும்  எரிக்குமளவுக்கு முன்னேறி விட்டனர்)


மனிதனை மனிதனாக பார்க்காமல் பிறவியிலேயே தொழிலாளியாக சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள்,  தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க திரைப்படங்களை பிரச்சார சாதனமாக  பயன்படுத்திக்கொண்டனர்;1970 முதல் 1985 வரை தியாகராஜன்,ரஜினிகாந்த் நடித்த் திரைப்படங்கள் இதைத் தான் வெளிப்படுத்தின;ஆனால்,கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி வெற்றி பெற்றாலும்,அந்த வெற்றியை தக்கவைக்க அவர்களுக்குத் தெரியவில்லை;ஆனால்,கம்யூனிஸ சிந்தனைகள் மூலமாக பணக்காரர்கள் வர்க்கம் கொத்தடிமைத் தனத்தைக் கைவிட நேர்ந்தது;


ஆனால்,கம்யூனிஸ்டுகளிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட,திராவிடத்தை தனது பெயரில் கொண்ட கட்சியானது,சாதாரண மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியை கொண்டுவர இந்த திரைப்படங்களைப் பயன்படுத்திக் கொண்டது என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் ஆகும்.அப்படிப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டின் பக்தி,ஒழுக்கம்,மாண்புகள்,பெரியோர்களை மதித்தல் போன்ற தமிழ்ப்பண்பாடுகளை நாத்திகம் என்ற பெயரில் சின்னாபின்னப்படுத்தினர்.இன்றும் தொலைக்காட்சித்தொடர்களின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு வீடுகளுக்கும் புகுந்து அடிமுட்டாளாக்கி,இவர்கள் கோடிகளில் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.(இவர்கள் நினைத்தால்,தமிழ் சமுதாயத்தையே சிந்திக்கும் விதமாக மாற்றமுடியும்;ஆனால்,ஒருபோதும் அப்படி செய்ய மாட்டார்கள்)


நூறாவது நாள் திரைப்படத்தின் மூலமாக ஒரு ஆட்டோ சங்கர் உதயமானான்;  இதனால்,தமிழ்நாட்டில் குற்றவாளிகள் தடயமில்லாமல் கொலை செய்து,துப்பு துலக்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை அழிக்க சினிமா சொல்லிக் கொடுக்கத் துவங்கியது;13 நம்பர் வீடு பேய்களைப்பற்றிய பயத்தை மாநிலமயமாக்கியது; பேய்களைப் பற்றிய பல மூடநம்பிக்கைகளை தமிழ்நாடெங்கும் பரப்பியது;


உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தின் மூலமாக ஏராளமான சமூக சேவகர்கள் உண்டாயினர்;ரஜினி,கமல்,சத்தியராஜ் நடித்த இருவேடங்கள் உள்ளடக்கிய திரைப்படங்கள் நிஜமான ரவுடிகளின் மத்தியில் ஈகை குணத்தைப்பரப்பியது; இன்று வரையிலும் ரவுடித்தனம் செய்து வரும் பல ரவுடிகள் தாம் சம்பாதிப்பதில் ஒருபகுதியை அன்னதானம்,படிப்புச் செலவு,கோவில் நிர்வாகச் செலவுக்கு செலவழிக்கத் துவங்கினர்.


1990 களில் இந்தியாவுக்கு வந்த தகவல் தொழில்நுட்ப அலை, தமிழ்நாட்டிலும் பரவத் துவங்கியது;1980களின் இறுதியில் கலர் டிவிக்கள் தமிழ்நாட்டில் பரவத் துவங்கின; வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான தூதர்ஷன் ஒலியும்,ஒளியும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.இந்த ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக டிவியின் முன்பாக தமிழ்நாடே அணிவகுக்கத் துவங்கியது;அந்த ஒரு மணி நேரத்துக்கு புதிதாக வர இருக்கும்,வெளிவந்திருக்கும் திரைப்படங்களின் பாடல்காட்சிகளை பார்க்க தமிழ்நாடே ஸ்தம்பித்தது;கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பும் அறிமுகமாகத் துவங்கியதும் இந்தக் கால கட்டத்தில் தான்;இந்த இரண்டும் ஒளிபரப்பாகும்போது திரையரங்குகளே முடங்கத் துவங்கின;அந்த அளவுக்கு சினிமா மோகம் இருப்பதை ஒருசிலர் அப்போதே கணிக்கத் துவங்கி,அதை வைத்து காசு பார்க்க நினைத்தனர்;


இதே காலகட்டத்தில்(1980 முதல் 1990 வரை)மதுரையிலிருந்து திரைப்பட இயக்குநராகவும்,கதாநாயகனாவும் ஆன ஒருவர் கிராமத்துக் கலைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்,தமிழ்நாட்டின் கிராமியப்பண்பாட்டை வெளியுலகிற்கு மட்டுமல்ல;இன்றைய நவீன கால இளைஞர்களுக்கும் புரியவைத்தது;அற்புதமான இசையும்,கிராமியக் கலையும் இணைந்து மக்களின் மனதில் குலதெய்வ வழிபாட்டையும்,கிராமக் கலைகள் மீது மரியாதையையும் புதுப்பிக்க உதவின என்பது சர்வேயால் கண்டறிய முடியாத உண்மைகள்!!!

தளபதியை பட்டமாகக் கொண்டவர் தனது அப்பாவாலேயே கதாநாயகனாக்கப்பட்டு,பல திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின;இந்த திரைப்படங்களின் கதைக்கரு எப்படியெல்லாம் காதலிப்பது? பெண்கள் எப்படியெல்லாம் கவர்ச்சியாக ஆடை அணிவது?உடலை மறைக்க ஆடை என்பது போய்,காமவெறியைத் தூண்டும் விதமாக ஆடை உடுத்தும்  காட்சியமைப்புகள் வெளிவர,செம கல்லா கட்டத்துவங்கினர் அப்பாவும்,மகனும்!இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள்  என்பது பலரால் நம்பமுடியாத உண்மை ஆகும். தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கம் நாசமாகத் துவங்கியது இந்த மாதிரியான திரைப்படங்களால் தான்!காதலின் இறுதியே காமம் என்பது போய் காதலே காமம் என்ற எண்ணத்தை தமிழ்நாடு முழுக்கவும் தனது திரைப்படங்களால் பரப்பியது இந்த புண்ணியவான்கள் தான்!தமிழ்ப்பண்பாட்டின் ஆதாரமான பெண்களின் ஒழுக்கத்தை சிதைக்கத் துவங்கினர்.

பேருந்துக்குள் பணிபுரிந்து,நடிகரானவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக பல புத்திமதிகளை தனது திரைப்படங்களில் புகட்டிக்கொண்டே வந்திருக்கிறார்;ஒரு படத்தில் ருத்ராட்சத்தைக் கொண்டு திருப்புமுனைக் காட்சியாக வைத்து  தமிழ் திரையுலகத்தில் ஒரு  ஆன்மீகத் தூண்டலை உருவாக்கினார்;தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரவுடியாக மாறுவதைப்போல சில படங்களில் நடிக்கக்  கூட செய்தார்.இதன்மூலமாக குடும்பம் என்ற அமைப்பை பாதுகாக்க ரவுடியாக மாறுவது தப்பில்லை என்ற எண்ணைத்தை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் விதைத்தார்;சாதுக்கள்,துறவிகளைப் பற்றி காட்சிகளை அமைத்ததன் விளைவாக,இன்று அவருடைய பல லட்சம் ரசிகர்கள் ருத்ராட்சம் அணியத் துவங்கிவிட்டனர்;யோகா,தியானம்,குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே துறவு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல்,துறவிகளின் வழிகாட்டுதலின்படி குடும்பத்தை நிர்வகித்தல் என்று ஒரு  மகத்தான மவுனப்புரட்சியை உருவாக்கிவிட்டார்.

1995 முதல் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பினராக கையெழுத்திட்டது;இதன்படி, யார் வேண்டுமானாலும் எந்தப் பொருளை வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் குறைந்த விலையில் விற்கலாம்;வாங்கலாம்;எங்கே? இந்த உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே! உலகில் இருக்கும் 220 நாடுகளில் 185 நாடுகள் இதில் கையெழுத்திட்டன;இந்த உலக வர்த்தக அமைப்பில் சீனாவைச் சேர்க்கவில்லை;இந்தியாவாகிய நாம்தான் ரெக்கமண்டு செய்து சேர்த்தோம்;உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்கமயமாக்கல் இந்தியாவுக்குள் ஊடுருவத் துவங்கியது;பூமாலை என்ற வீடியோ பத்திரிகை சன் டிவியாக உருவெடுத்தது;வலுவான அரசியல் பின்னணியோடும்,சிறந்த நிர்வாகத்திறமையோடும்,பெரும் செல்வச் செழிப்போடும் சன் டிவியானது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறத்துவங்கியது.இன்று சன் டிவியின் அத்தனை கெட்டப் பழக்கங்களும் எல்லா டிவி சேனல்களால் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றப்படுகின்றன.(சன் மியூஸிக்கில் பாட்டை பாதியிலேயே நிறுத்துவது;நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரம் என்பது போய்,விளம்பரங்களுக்கு நடுவே நிகழ்ச்சி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்து கோடிகளை சம்பாதிப்பது;முறையற்ற உறவை பெருமைப்படுத்தும் விதமாக மெகா சீரியல்கள் எடுப்பது;காம மயக்கத்தைத் தூண்டும் விதமாக புதிய,புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது;பேராசையை பரப்பும் விதமாக போட்டி வைத்து அதில் டிவி ரசிகர்களை பங்கேற்க வைப்பது;நகைக்கடைக்காரர்களிடம் மிரட்டி விளம்பரங்கள் வாங்குவது;)

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1990கள் வரையிலும் பெரும்பாலும் தாவணியும், சேலையும் கட்டிய கல்லூரி மாணவிகள்,2000 வாக்கில் சுடிதாருக்குத் தாவத் துவங்கினர்;2010க்குள் ஜீன்ஸும் டாப்ஸீம் நாகரீகத்தை வெளிப்படுத்தும் ஆடைகளாகிவிட்டன;தாவணியும்,சேலையும் காணாமல் போய்விட்டன;காணாமல் போனது தாவணியும்,சேலையும் மட்டும் தானா? நான் அவன் இல்லை என்று ஒரு திரைப்படம்  சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது;அந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பே,நான் அவன் இல்லை கதாநாயகனும்,நான் அவள் இல்லை கதாநாயகியும் ஊருக்கு ஒருவர் உருவாகிவிட்டனர்;யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாத ஒரு இழிவான சூழ்நிலையை உலகமயமாக்கலும்,அதை பிரதிபலிக்கும் திரைப்படங்களும் உருவாக்கிவிட்டன;அது மட்டுமல்ல;கருச்சிதைவு செய்பவர்களின் வயது சராசரி குறைந்து போய் இன்று டீன் ஏஜின் விளிம்பைத் தொட்டுவிட்டது;

அது மட்டுமல்ல;1995 முதல் 2005 வரையிலும் கிராமத்துப்  பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களிலும் கூட தமிழ் கதாநாயகர்கள் வேட்டி கட்டுவதற்குப் பதிலாக பேண்ட் போட ஆரம்பிக்க,இன்று வேட்டியும் காணாமல் போய்விட்டது;2001 ஆம் ஆண்டு வாக்கில் வெளிவந்த சின்னத்தம்பி,கிழக்கு வாசல் போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்;முன்பெல்லாம் படித்தவர்கள் தான் பேண்ட் அணிவார்கள்;தற்போதோ யார் படித்தவர்,யார் படிக்காதவர் என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு குழப்பம் உண்டாகிவிட்டது;விளைவு? கிராமப்புறத்தில் வாழ்ந்துவரும் மதிப்புமிக்கவர்கள் மட்டுமே வேட்டி கட்டுவார்கள் என்ற நம்பிக்கையை சினிமா தமிழ்நாடு முழுவதும் பரப்பி விட்டது;


அதுவும் ஒரு வருட மனைவி ஒப்பந்தத்தை ஒரு திரைப்படத்தில் கதைக்கருவாக உருவாக்கி,அந்தத் திரைப்படம் வெளிவந்தது.இதன் பின்விளைவாக,அடுத்த சில வருடங்களில் ஒரு வார மனைவி,ஒரு மாத மனைவி,ஒரு மணி நேர மனைவி மட்டுமல்ல;கணவன்களும் உருவாகத் துவங்கிவிட்டனர்;இந்த ஒப்பந்தக் கணவன்,மனைவிகள் சென்னை,கோவை,மதுரை,திருச்சி முதலான மாநகரங்களில் மட்டும் தான் என்று எண்ண வேண்டாம்; சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கி,சமுதாயத்தின் ஒரு அங்கமாகிவிட்டது;


இன்று ஆண்கள் அணியும் சட்டைகள் காணாமல் போகத் துவங்கி,டீ ஷர்ட்கள் எனப்படும் ரெடிமேட் ஆடைகள் பல லட்சம் டெய்லர்களின் வாழ்க்கையில் டெய்லரிங் பகுதிநேரவேலையாகி வருகின்றன;

2005 வரையிலும் கல்லூரிக்காதலை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் வெளிவந்தன;அது வரை கல்லூரிப் பருவத்தினரே ஓடிப்போயினர்;அதன்பிறகு பனிரெண்டாம் வகுப்புக்குள் கேமிராக்கள் நுழைய(1989 வாக்கில் வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு முதல்  சமீபத்திய களவாணி வரை) கொஞ்சநஞ்ச தமிழ்ப்பண்பாடும் சிதைந்து போனது; தனது காதலனால் கர்ப்பமாகும் பள்ளிமாணவியே தனது வீட்டுக்கே தெரியாமல் கர்ப்பத்தடை செய்வதும்,கருக்கலைப்பதும் சகஜமாகத் துவங்கியிருக்கிறது.இந்த சூழ்நிலை தமிழ்நாட்டின் சிறு நகரங்களுக்கும் பரவத் துவங்கிவிட்டது என்பது அதிர்ச்சி கலந்த உண்மை ஆகும்.   ஒருவனுக்கு ஒருத்தி என்பது வரலாற்றில் மட்டுமே இருக்கும் ஒரு நிகழ்வு என்ற சூழ்நிலையாகி,ஒருவனுக்கு பலத்தி,ஒருத்திக்கு பலவன் என்ற சூழ்நிலை  உருவாகத் துவங்கியிருக்கிறது.

மேலும் டிவியில் வரும் நகைக்கடை விளம்பரங்கள் டீன் ஏஜ் பெண்களின் மனதில் பேராசையை உருவாக்கிவருவதோடு,சிந்திக்கும் திறனையும் இழந்து வருகின்றனர்.இதன்விளைவாக,நான் அவன் இல்லை என்பது மாறி,நான் அவள் இல்லை என்ற அளவுக்கு சமுதாய ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டுவிட்டது;

வெற்றி பெறும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்தால்,அதன் பார்முலாவினை அப்படியே பின்பற்றுவது தமிழ்த்திரையுலகத்தின் எழுதப்படாத அரிச்சுவடியாக இருந்தாலும்,இன்று இந்தித்திரையுலகிற்கும்,ஹாலிவுட் திரையுலகிற்கும் வழிகாட்டும் அளவுக்கு தமிழ்த்திரையுலகம் உயர்ந்திருக்கிறது.


கடந்த பத்தாண்டுகளில் சினிமா வில்லன்கள் கதாநாயகனைத் துரத்துவது டாடா சுமோ போன்ற ஒருசில குறிப்பிட்ட வாகனங்களில் மட்டும் தான்;இப்படிப்பட்ட காட்சியமைப்புகளை தொடர்ந்து பல திரைப்படங்களில் வைத்ததன் பின்விளைவு என்னதெரியுமா? தமிழ்நாட்டில் கார் விற்பனை செய்யும் ஏஜன்ஸிகளுக்கு குறிப்பிட்ட விதமான கார்கள் விற்பனை அதிகரிக்கத்துவங்கியது.நம்பமுடியவில்லையா?கார்களை விற்பனை செய்யும் விற்பனைப்பிரதிநிதிகளிடம் கேட்டுப்பாருங்கள்!!!

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும்,கதாநாயகிகள் கண்ணியமாக ஆடை அணிந்து வந்தனர்;உலக நாயகனுடன் ஓடும் லாரியில் பாட்டுப்பாடி நடித்த நடிகையின் உடலை காட்டத் துவங்கினர்.(இன்று இருவருமே திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்)இன்று கதாநாயகிகளே தமது முழு உடலைக் காட்டுமளவுக்கு ‘முன்னேறி’விட்டனர்.இதன் உச்சமாக,திருட்டுத்தனமாக பார்க்கும் படங்களில் நடித்த கதாநாயகிகளும் வெள்ளித்திரை கதாநாயகிகளாக விஸ்வரூபமெடுக்கத் துவங்கிவிட்டனர்.இதுவும் தமிழ்நாட்டுப் பெண்களின் ஒழுக்கமனநிலையைச் சிதைத்துவிட்டது.

தமிழ் நாட்டின் சமுதாய விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக வெளிவரும் திரைப்படங்கள் மிகக்குறைவே! அப்படி வரும் படங்களும் கடுகு சிறுத்தாலும்,அதன் காரம் அதிகம் என்கிற அளவுக்கு அதன் விளைவுகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை தோற்றுவிக்கிறது.கற்றது தமிழ், இந்தியன்,எந்திரன்,ஏழாம் அறிவு,போராளி,சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் சமுதாயத்தில் பலத்த தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன;ஆனால்,அப்படி உருவாகும் தாக்கத்தை சமுதாய மறுமலர்ச்சியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் சூழ்நிலையும்,சமுதாய ஒழுங்கும் சீரழிந்து போய்விட்டது;ஏனெனில்,இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பிக்கத் துவங்கினால்,சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியோ அல்லது மாறுதலோ உருவாகிவிடும்.



அப்படி உருவாகாமல் தடுக்குமளவுக்கு கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பாகும் மானாட,மயிலாட நிகழ்ச்சிகள்;ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் தவறாக வழிநடத்தி சீரழிப்பது என்று போதிக்கும் மெகா தொடர்கள்,இணையத்தின் பரவல்,செல்போன்களின் விலை வீழ்ச்சி,மென்பொருள் நிறுவனங்களின் கிராமப்பரவல் போன்றவை சிந்திப்பவர்களை மழுங்கடித்துவருகின்றன.

நகைச்சுவை கூட நமது மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கிவருகிறது;இரட்டையர்கள் செய்த நகைச்சுவையின் தாக்கத்தை விடவும்,வைகைக்கரையில் பிறந்து,பல வருடங்களாக துணை நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர்,தமிழர்களின் பலவீன சுபாவங்கள்,ஏக்கங்கள்,சமுதாய அவலங்களை தமது நகைச்சுவைக் காட்சிக்குப் பயன்படுத்தியதால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டார்.ஆணியே புடுங்க வேண்டாம்;முடியல;ஆஹா நல்லாக் கெளப்புறாங்கய்யா பீதியை; (தன்னைத் தானே ஆட்காட்டிவிரலை காட்டி) உனக்கு வேணும்;அது போனமாசம்,நான் சொல்றது இந்த மாசம்; அது வேற வாய்,இது நாற வாய்;சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? =இவைகளெல்லாம் இன்று தமிழ்நாட்டின் தினசரி வசனங்களாக மாறிவிட்டன;சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிவிட்டது.


ஐம்புலன்களையும் அடக்கத் தெரிந்தவரே யோகி,துறவி என்பது இந்துதர்மத்தில் எழுதப்படாத தகுதி ஆகும்.ஐம்புலன்களிலும் அதிகமான சக்திவாய்ந்தவை கண்களும்,காதுகளும் தான்! நாம் “பார்க்கும்” எந்த ஒரு காட்சியும் நமது கண்கள் வழியாக மூளையால் ‘பார்க்கப்பட்டு/ரசிக்கப்பட்டு/எரிச்சல்பட்டு’ வலதுபக்க மூளைப்பகுதியில் பதிவாகிறது;காதுகள் மூலமாக கேட்கும் எதையும் மனமானது,வலது பக்கமூளையில் பதிவு செய்துவிடும்;கடந்த கால அனுபவங்களோடு அதை ஒப்பிட்டுப் பார்க்கும்;பிறகே கேள்விப்பட்ட தகவல்களையும்,உண்மைத்தன்மையையும் பிரித்துப்பார்க்கும்;ஒரே நேரத்தில் நமது கண்களையும்,காதுகளையும் ஏமாற்றும் மனித கண்டுபிடிப்பே சினிமாவும்,டிவியும் ஆகும்.நமது மனோநிலையை மாற்றத்துவங்கியப்பின்னரே,மனிதர்களிடையே குற்றங்கள் நுணுக்கமாகவும்,கண்டுபிடிக்கமுடியாத விதமாகவும் பெருகிவிட்டன.அதே சமயம்,தினசரி பிராணயாமம் அல்லது தினசரி ஓம்சிவசிவஓம் அல்லது தினசரி ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தால் நமது கண்களையும்,காதுகளையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

காதலும்,வீரமும் தமிழர்களின் பண்பாடாக பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தன.தற்போது காதலைக் காணவில்லை;ரவுடித்தனமே வீரமாக நம்பப்படுகிறது.இந்த  சூழ்நிலையை உண்டாக்கியது தமிழ்ச் சினிமாவின் வளர்ச்சியே ஆகும்.இனிவரும் காலத்தில் மட்டுமல்ல;எப்போதுமே சமுதாய அக்கறையோடு பெரும்பாலான திரைப்படங்கள் இயக்கப்படுவது அபூர்வமே!

எனவே,திரைப்படங்களையும்,அதில் வரும் காட்சிகளையும் முடிந்தவரையிலும் பின்பற்றாமலிருப்பதே நமக்கு நல்லது.தேசபக்தி,தெய்வபக்தியைத் தூண்டும் விதமாக திரைப்படங்கள் நிறைய வெளிவருவது நல்லது.மனோதத்துவரீதியாக சாதிக்க வைக்கும் டெக்னிக்குகளை காட்சியமைத்து யதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக திரைப்படங்களை வெளியிட்டால் நல்லது.செய்வார்களா நமது திரையுலக பிரம்மாக்கள்? இப்படி ஒரு பத்தாண்டுகள் வரை செய்துவிட்டாலே தமிழ்நாட்டில் ஒரு சிறிய அளவிலான ஆன்மீகப்புரட்சியை உருவாக்கிவிடமுடியும்.


ஓம்சிவசிவஓம்

மனமிருந்தால் பாலைவனமும் பழத்தோட்டமாகும்!!!




மஸ்கட்டில் பல வருடங்களாக பணிபுரிந்துவந்த பட்டுக் சிங் ஜடேஜா தனது சொந்த ஊரான மோட்டாமாவ்தான் என்ற கிராமத்துக்குத் திரும்பினார்.அப்படி திரும்பியபோது அவருக்கு வயது 51.திரும்பிய வருடம் 1990.மோட்டாமாவ்தான் குஜராத் மாநிலத்தில் புஜ் அருகில் இருக்கிறது.இது ஒரு வறண்ட களர்பூமியாகும்.இங்கே இவர் 50 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.இந்த நிலத்தை விளைநிலமாக மாற்றிட இவருக்கு மூன்றாண்டுகள் ஆயின.அந்த பகுதியிலேயே விளையாத கேஸர் என்ற ரகத்து மாம்பழக்கன்றுகள் நூறு வாங்கி பயிரிட்டார்.நல்ல விளைச்சல் உண்டானது;எனவே,மேலும் நிலம் வாங்கினார்.தற்போது 240 ஏக்கரில் அவரது கேஸர் மாம்பழத்தோட்டங்கள் பழுத்து,வெளிநாடுகளுக்குப் பறக்கின்றன.




இவர் தமது நிலத்தை விளைநிலமாக மாற்றிட ஒரு கிராம் கூட ரசாயன உரத்தைப் பயன்படுத்தவில்லை;ஆர்கானிக் ஃபார்மிங் எனப்படும் இயற்கை முறையிலான விவசாய வழிமுறையைப்பின்பற்றினார்.இன்று இவர் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் டன் கேஸர் மாம்பழங்களை விளைவிக்கிறார்;இதில் பத்து சதவீதம் ஏற்றுமதியாகிறது;2001 ஆம் ஆண்டில் கட்ச் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது;அதன்பிறகு,செயற்கைக்கோள் உதவியுடன் தமது நிலத்தில் எந்தப் பகுதியில் நிலத்தடிநீர் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.இதன் மூலமாக தோட்டப்பயிர் சாகுபடியை இவரால் பலமடங்கு அதிகரிக்கமுடிந்தது;


நன்றி:இந்தியா டுடே 5.7.12

டி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்!!!






மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஊர் டி.கல்லுப்பட்டி ஆகும்.இங்கிருந்து பேரையூர் செல்லும் வழியில் இரண்டு கி.மீ.தூரத்தில் அமைந்திருப்பது தேவன்குறிச்சி ஆகும்.இங்கே மலையடிவாரத்தை ஒட்டி அமைந்திருக்கும் சிவாலயம் அக்னீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேற்கு நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.இங்கே செய்யப்படும் சிறு பரிகாரமும் உடனடியாக நற்பலன்களைத் தரும்.


இந்த கோவிலை ஒட்டி ஒரு குகை இருக்கிறது.இந்தக் குகை மண்மூடி இருக்கிறது.இந்த குகைக்குள்ளாக ஒரு சித்தர் இன்றும் தவம் செய்து வருகிறார்.தகுதியுள்ளவர்களுக்கு காட்சியளித்து வருகிறார்;கீழே இருப்பது அந்தக் குகையிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.



இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் அபிஷேகமும்,ஆராதனைகளும் நடைபெற்றுவருகின்றன.இந்த யோக பைரவருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செவ்வரளிமாலை,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளோடு வந்து அபிஷேகத்தில் கலந்து கொண்டு நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 16 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 16 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்துவர நமது தீராத பிரச்னைகள்,வழக்குகள்,சொத்துத் தகராறுகள் தீர்ந்துவிடும்.ஆனால்,ஒரே ஒரு நிபந்தனை இவரை வழிபட ஆரம்பித்தப்பின்னர்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மது,(மனைவியைத் தவிர) மற்ற மாதுவைத் தொடாமல் இருந்தால் விரைவான பலன்கள் கிடைக்கும்;பைரவரது தரிசனமும் கிட்டும்.இவர் அவ்வ்வளவு சக்தி வாய்ந்தவர் ஆவார்.மேலே இருக்கும் போட்டோவில் அவர் தான் இருக்கிறார்.


ஓம்சிவசிவஓம்

மஹாளயபட்சத்தினுள் ஒளிந்திருக்கும் இந்துதர்ம(ஜோதிட)விஞ்ஞான ரகசியம்:அவசியமான மறுபதிவு









பல ஆண்டுகளாக எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது.இறந்த நமது தாத்தாக்கள்,பாட்டிகள்,முப்பாட்டன்கள்,முப்பாட்டிகள்,பூட்டன்கள்(தாத்தாவின் தாத்தா),பூட்டிகள்(பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?ஏனெனில்,ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார்.இதற்கான விடை நேற்றுதான் எனக்கே தெரிந்தது.அப்படித் தெரிந்த உடனே,எனது ஆன்மீகக்கடல் வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்தே ஆக வேண்டும் என்று துடித்தேன்.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது.அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு.இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில் விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்களை பத்திரிகைகள் பிற்போக்கானவர்கள் என எழுதித் தள்ளிவருகின்றன.ஆனால்,இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடு,ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)



நாம் மெக்காலே கல்விமுறைப்படி படித்தவர்கள்.எந்த ஒரு இந்துதர்ம நடைமுறையையும்,நமது பகுத்தறிவுக்கு உட்பட்டு அது நிஜம் என நம்பினால் மட்டுமே அதைப் பின்பற்றுவோம்;ஆனால்,ஜீன்ஸ் அணிவது,சிறிதும் சத்து இல்லாத கார்ன் பிளக்ஸ் மெல்லுவது,ஈ மொய்த்தாலும் கெண்டகி சிக்கன் சாப்பிடுவது,குடித்த உடனே தாகம் எடுக்கும் கோக்,பெப்ஸியைப் பற்றி நமது பகுத்தறிவு சந்தேகப்படாது!?! இல்லையா?சரி,விஷயத்துக்கு வருவோம்.



புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்,தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன.வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம்.



புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார்.கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.நம்மையும் சேர்த்து,சூரிய மண்டலம்,நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன.இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் பல கோடி பெறுமானமுள்ள டெலஸ்கோப்கள் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.



பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது.பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின.அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன.இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும்.அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது.எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகி,சூரியனால் வாழ்விக்கப்படுகிறதோ,அப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகி,அதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.



ஒரு மையத்திலிருந்து உண்டானது,பிரளயகாலத்தின்போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும்.நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்;சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்;அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்;



மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள்.



இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது.இங்கு ஒரு கேள்வி எழலாம்? பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன.பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்,ஏது திசை?முடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?



இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது.துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும்.அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும்.இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும்.பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டு,எது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும்.இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.



கன்னிராசியானது ,பூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது.அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது.அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது.நாம் உண்டான மையம் தெற்கு திசையில்,கன்னிராசியில் இருக்கவே,இறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள்.எனவே,அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம்.அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.



இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம்.இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம்.அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.



சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு.அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது.இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அதன் விளக்கம்:



ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)

2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)



30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்



12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்===இதை திதியாக மாற்றினால்,

ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி



ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே,



10,800 திதி/360 திதி =30 வருடம்



அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.



ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்,பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம்.அதனால்,பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.



தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்,அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும்.அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.



இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது.இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.



அது மட்டுமல்ல,ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்,நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு.



இதனால்தான் நமது மிஸ்டிக் செல்வம் ஐயா,ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று(15.10.2012 திங்கள்) அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என தெரிவித்துள்ளார்.

பின்குறிப்பு:படத்தில் இருப்பது கன்னி ராசி மண்டலம்.உற்றுப்பாருங்கள் நமது முன்னோர்கள் தெரிகிறார்களா?