Showing posts with label ருத்ராட்சம். Show all posts
Showing posts with label ருத்ராட்சம். Show all posts

Tuesday, October 25, 2011

ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்







பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.
ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.

ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;

ருத்ராட்சங்களைக் கைகளிலும்,தோள்களிலும் அணிந்தவன் எவ்வித உயிரினங்களாலும் கொல்லப்படமாட்டான்.அவன் இவ்வுலகில் ருத்ரனைப் போல வலம் வருகிறான்.

ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ நெருங்குவதில்லை.

 நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொன்னது:ருத்ராட்ச உபநிஷத்து என்று ஒரு உபநிஷத்து இருந்தது.யாராவது வைத்திருக்கிறீர்களா?

ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா?

ஓம்சிவசிவஓம்




ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்



எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;

கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை உடலில் அணியாவிட்டாலும்,அதைப் பூஜிப்பவனும் கூட சிவலோகம் சென்றடைந்து சிவனைப் போலவே வணங்கப்படுகிறான்.

ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.
ஆன்மீகக்கடலின் கருத்து:
இந்த கலியுகத்தில்,ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது.ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும்,தேவையில்லாமல் மிரட்டவுமே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால்,பல நூறுபிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே இந்த பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்;தாம்பத்தியம் இதற்குத் தடை அல்ல;
ஆனால்,ருத்ராட்ச மாலை அணிபவர்களுக்குத்தான் ஏராளமான சிவநெறிகள் பின்பற்ற வேண்டியிருக்கிறது.இதை பலர் புரிந்துகொள்வதில்லை;

ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம்

Friday, February 26, 2010

ருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்பைக் குறைக்க முடியும்


ருத்திராட்சத்தின் மகிமைகள்

சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணின் அம்சமாகக் கருதப்படுவது ருத்திராட்சமாகும்.ஒரு முகத்திலிருந்து 32 முகம் வரை ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன.இவை பெரும்பாலும் நேபாளத்திலிருந்தே நமக்கு வருகின்றன.சதுரகிரி,திரு அண்ணாமலை,பொதிகை மலையிலும் ஓரளவு கிடைக்கின்றது.

ஒருவருக்கு ருத்ராட்சம் அணியும் எண்ணம் வருவதற்கே அவர் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது.மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது.அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது.வயிற்றிற்கும்,வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப்பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சிவிடுகிறது.தவிர, கண்திருஷ்டியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.

பஞ்சபூதங்களை எதிர்கொள்ளும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.பஞ்சபூதங்களின் குறிப்பிட்ட விகிதச்சேர்க்கையே நவக்கிரகங்களாகும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகளால்தான் ஒருவர் கோயில் கட்டுவதும்,மற்றவர் விபச்சாரம் செய்வதும்,மற்றவர் கொலை செய்யப்படுவதும் காரணமாக அமைகிறது.நவக்கிரகங்களின் தூண்டலால் ஒருவர் தீயச் செயல் செய்யாமல் தடுக்கும் சக்தியும்,நவக்கிரகங்களின் பாதிப்பை 100% அளவு இல்லாவிட்டாலும் 70% அளவு குறைக்கும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.