Monday, April 29, 2019

ஆன்மீக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பேட்டி பகுதி 2


ஆன்மீக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பேட்டி பகுதி 2

கேள்வி: “சனாதன தர்மம் சமத்துவத்திற்கு எதிரானது” என்று ஒரு குற்றச்சாட்டை சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்களே?


பதில்: அப்படிச் சொல்லி வருபவர்கள் சிறிய கூட்டம்;அவர்களை நாம் புறக்கணித்துவிடலாம்;வக்கீல்,மருத்துவர் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்,சிலர் தவறாக நடந்து கொள்வார்கள்;சிலர் தவறாக நடந்து கொள்வதால்,அந்தத் துறையே தவறு என்று யாரும் சொல்வதில்லை.

அது போல் மதத்தலைவர்கள் ஒரு சிலர் தவறாக இருக்கலாம்;இதனால்,மதத் தலைவர்களே இருக்கக் கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது;சனாதன தர்மத்தைப் பற்றிக்கூறும் போது, “பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.அந்தணர்களுக்கு மட்டுமே பெருமை;மற்ற வர்ணத்தவர்களுக்குப் பெருமை இல்லை;ஜாதி வேறுபாடுகள் அதிக அளவில் இருக்கிறது” என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்:


உண்மையில் சனாதன தர்மத்தின்படி, மனைவி இல்லாமல் கணவன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமுடியாது; 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய கலாச்சாரம் மற்றும் கோட்பாடுகளை அழித்தால் மட்டுமே நம்மை அடிமைப்படுத்த முடியும் என்பதை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டு,சனாதன தர்மத்தை அழிக்கும்பணியில் ஈடுபட்டார்கள்;

சனாதன தர்மம் அனைவருக்கும் தெரிவதற்குக் காரணமான நூல்களை கல்வி முறையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்;கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் கல்வி முறை தான் உயர்ந்தது என்று சொல்லி நம்மை நம்ப வைத்தார்கள்;

நம்மை அடிமைப்படுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொண்டு அதை வெற்றிகரமாகச் செய்தும் காட்டினார்கள்;இதனால் தான் நம்முடைய சனாதன தர்மத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல்,நாம் உட்பட பலரும் தவறாகப் பேச வாய்ப்பு ஏற்பட்டு விட்டது;

இந்த விஷயத்தில்,அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளை வைக்கும் திராவிட கட்சிகளுக்கு எதிர்வினையாற்ற முயல்கிறோமே தவிர,மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைக்க நாம் முயற்சி செய்வதில்லை;

ஒரு காலத்தில் பிராமணர்கள் சனாதன தர்மத்தைப் பற்றி மக்களிடம் சரியான முறையில் பிரச்சாரம் செய்து வந்தார்கள்;இப்போதோ பிராமண சமுதாயத்தில் பாதிப்பேர் அமெரிக்க குடிமக்களாக மாறிவிட்டார்கள்;மீதம் இருப்பவர்களும் சென்னை,பெங்களூரு,மும்பை போன்ற மெட்ரோ சிட்டிகளில் இருக்கிறார்கள்;கிராமப்புறங்களில் போய் திராவிடக் கட்சிகளின் கருத்துக்கள் தவறு என்று எடுத்துச் சொல்வதற்கான ஆட்கள் இப்போது இல்லை;


வெறும் வார்த்தைகளால் சனாதன தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளில் இருந்தால் எந்த நன்மையும் நடக்காது.முதலில் அவர்கள் தாய் நாடு திரும்பி பிரச்சாரகர்களாக மாற வேண்டும்;இந்த மாற்றம் எல்லாம் உடனடியாக நடக்குமா என்பது தெரியாது;

ஆனால்,இத்தனை 1000 ஆண்டுகளாக,இத்தனைப் படையெடுப்பிற்குப் பிறகும் சனாதன தர்மத்திற்கு எதுவும் ஆகவில்லை.பிரச்சாரம் செய்தாலும்,செய்யாவிட்டாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது.


கேள்வி:ஹிந்து மத நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியா?


பதில்:எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் சீர்திருத்தங்கள் வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்;ஆனால்,இது போன்ற சீர்திருத்தங்களை,அந்தந்த தர்மங்களை முழுவதும் கற்றறிந்த ஆச்சாரியார்கள் கொண்டு வருவதுதான் சரியாக இருக்கும்;

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா,இல்லையா என்பதை சபரிமலை தந்திரி மற்றும் கேரளாவில் இருக்கும் மத குருமார்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர,நீதிமன்றம் இதில் தலையிடுவது சரியாக இருக்காது;

நம்முடைய தர்மத்தைப் பற்றியும்,பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரியாத ஒருவர்,நாம் பின்பற்றும் நடைமுறை தவறு என்று சொல்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சீர்திருத்தம் தேவை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்;

ஆனால்,அவையெல்லாம் எப்படி,யார் மூலமாக வர வேண்டும் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இருக்கிறது.ஒவ்வொரு சமுதாயத்திற்கும்,உள்ளிருந்துதான் இதுபோன்ற சீர்திருத்தங்கள் வர வேண்டும்.வெளியிலிருந்து யார் திணித்தாலும் இது தேவையில்லாத சண்டையில் தான் போய் முடியும்;

கேள்வி:மனிதர்களிடையே ஜாதிப் பிரிவினை வந்ததற்கும்,தமிழ் மொழி அழிந்ததற்கும் அந்தணர்களே காரணம் என்று கூறுகிறார்கள்.இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:கண்ணன் கீதையில் சொல்லும் போது,தன்னுடைய வாயில் இருந்து அந்தணனும்,தோளில் இருந்து சத்ரியனும்,தொடையில் இருந்து வைசியனும்,காலில் இருந்து நாலாம் வர்ணத்தவனும் தோன்றியதாகக் கூறுகிறார்;

கண்ணன் பிறப்பால் சத்ரியர்;வளர்ப்பால் வைசியர்;

ராமாயணம் எழுதிய வால்மீகி,மகாபாரதம் எழுதிய வியாசர்,மனுதர்ம சாஸ்திரம் எழுதிய மனு முதலான யாருமே அந்தணர்கள் இல்லை;வர்ண தர்மத்தைப் பற்றி பேசி இருக்கின்ற யாருமே அந்தணர்கள் இல்லை;

பிறகு எப்படி வர்ணாசிரமத்தை அந்தணர்கள் உருவாக்கினார்கள் என்று கூற முடியும்?


ராமானுஜர் அனைத்து வர்ணத்தவரும் சமம் என்று வாழ்ந்து காட்டி இருக்கிறார்.பாரதிதாசன் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும், “முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய் இராமானுசனை ஈன்றதன்றோ?” என்று ராமானுஜர் இங்கு பிறந்ததைப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார்.இதன் மூலம் பாரதிதாசனும்,ராமானுஜரை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது;


திராவிடக் கழகங்கள் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,ராமானுஜரின் பெருமையை அவர்களுடைய தொலைக்காட்சியிலேயே நாடகத் தொடராக ஒளிபரப்பினார்கள்;இதிலிருந்தே இவர்கள் போடும் கூச்சல் எல்லாமே அரசியலுக்கானது என்பது தெரியவில்லையா? 

உண்மையில்,இந்த விஷயங்களை எல்லாம் நாம் புரியவைக்க வேண்டியது சாமானிய மக்களிடம் தான்.மக்களுக்கு உண்மை நிலை புரிந்துவிட்டால்,அரசியலுக்காக என்னதான் திராவிடக் கழகங்கள் பேசினாலும் எடுபடாது;அரசியலுக்காக இப்படிப் பேசும் அரசியல்வாதிகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பெற்றோருக்கு,அவர்கள் இறந்தவுடன் தேவையான கர்மாக்களை யார் செய்ய முடியும்?

பதில்:நான் ஏற்கனவே சொன்னது போல்,நாம் செய்யும் கர்மாக்களால் இறந்தவர்கள் முக்தி அடையப் போவதில்லை;அவர்கள் உயிருடன் இருக்கும் போது செய்த கர்ம பலன்களினால் மட்டுமே மோட்சம் அடைய முடியும்;

ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு அவருடைய சகோதரர்கள்,அந்த சகோதரர்களுடைய மகன்கள்,பெண் வயிற்றில் பிறந்த மகன் =அதாவது பேரன் அல்லது மாப்பிள்ளை செய்யலாம்;இந்த வரிசையில்,கண்டிப்பாக யாராவது ஒருவர் இருப்பார்.இதில் யாருமே இல்லை என்றால்,கர்த்தாவே இல்லை என்ற காரணத்தினால்,அந்த நபருக்கு கர்மா செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


கேள்வி:ஹிந்து மதத்தில் ஆண்களை விட பெண்களுக்குத் தான் மோட்சத்திற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்களே?


பதில்:உண்மைதான்; ஆண் பிராமணர்களுக்கு நித்ய கர்மா,பூஜை என்று எல்லாவற்றையும் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே மோட்சம் கிடைக்கும்.இது போன்ற எந்த ஒரு கடுமையான விதிகளும் பெண்களுக்கு இல்லை.

தினமும் தலைக்கு குளித்துவிட்டுதான் பூஜை செய்ய வேண்டும் என்ற விதிமுறை ஆண்களுக்கு மட்டுமே சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால்,பெண்கள் தலைக்கு குளிக்காமலும் பூஜை செய்யலாம்.பெண் அந்த  அளவிற்குத் தூய்மையானவள் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன.


வியாசர் நான்கு யுகத்தில்,கலியுகம் சிறந்தது என்றும், ஆண் பெண் இருவரில் பெண் சிறந்தவள் என்றும்,மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிற நான்கு வர்ணத்தில் நாலாவது வர்ணத்தவர் சிறந்தவர் என்றும் கூறுகிறார்.

நமது சாஸ்திரத்தின் படி,பெண்களைப் பாதுகாக்க வேண்டியது ஆண்களின் கடமை.சுலபமாக மோட்சம் பெறும் அளவிற்கு பெண்கள் உயர்ந்தவர்கள்.ஆண் எதைச் செய்து புண்ணியம் சம்பாதித்தாலும்,அதில் மனைவிக்கு பங்கு உண்டு.


தினமும் கடவுளை வேண்டிக் கொள்வது,கணவன் & குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வது,வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு முகம் சுளிக்காமல் உணவு கொடுத்து உபசரிப்பது ஆகியவற்றைச் செய்தாலே பெண்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கேள்வி;இந்தக் கால குழந்தைகளுக்கு நம்முடைய தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எதுவுமே இல்லை.கோவிலில் ஒரு பத்து நிமிடம் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கான பொறுமை கூட அவர்களிடம் இல்லை.இதற்கு என்ன தீர்வு?

பதில்:குழந்தைகளை நாம் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.குழந்தைகளுக்கு பொறுமை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.உண்மையில் அவர்களுக்கு நேரம் இல்லை.இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு படிக்கவே நேரம் இருப்பதில்லை.ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பரீட்சை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாம் எல்லோரும் அனுபவித்தது போல இரண்டு மாத கோடை விடுமுறை இன்றைய குழந்தைகளுக்கு இல்லை.கோடை விடுமுறையில் கூட ஏதாவது ஒரு வகுப்புகளுக்கு செல்கிறார்கள்.

எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் குழந்தை கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்,ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்,நன்றாகப் படிக்க வேண்டும்,பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்,இதைத்தவிர  வேதம் உபநிஷத்துக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவை எல்லாவற்றையும் இன்றே செய்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


உண்மையில் பெற்றவர்கள் தான் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து,குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக நம்முடைய சனாதன தர்மத்தைப் பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.அவர்கள் மீது திணித்தால் அதன் மீது வெறுப்புதான் வளருமே தவிர,அதில் உள்ள நன்மைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

நம்முடைய தர்மத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை,தினமும் விடாமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டே வாருங்கள்.கண்டிப்பாக,குழந்தைகள் நம்முடைய தர்மத்தைப் புரிந்து கொள்வார்கள்.

கேள்வி:கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் நம்முடைய கல்விமுறையை மாற்றிவிட்டார்கள் என்று கூறினீர்கள்.இப்பொழுது நம்முடைய கல்விமுறையில் பகவத் கீதை,ராமாயணம்,மகாபாரதம் போன்றவற்றைப் பாடமாகக் கொண்டு வர முடியாதா?

பதில்:இவற்றையெல்லாம் கொண்டு வர முடியும்;ஆனால்,அவற்றை கற்றுக் கொள்ள ஆட்கள் வர மாட்டார்கள்.கடந்த 200 வருடங்களில்,வேலைக்காக மட்டுமே படிப்பு என்ற நிலை வந்துவிட்டது.

நீங்கள் கூறியவற்றைப் படித்தால் வேலை கிடைக்காது.எதைப் படித்தால் பணம் சம்பாதிக்க முடியுமோ அதை மட்டுமே படித்து வருகிறோம்.முன்பு நம்முடைய வாழ்க்கைக்கான படிப்பும்,பணம் சம்பாதிப்பதற்கான படிப்பும் ஒன்றாகவே இருந்தது.அதை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டார்கள்.இதற்கான பெரிய விலையைத்தான் நாம் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

இதற்குப் பிறகாவது,அந்தந்த வயதில் நம்முடைய சனாதன தர்மத்தைப் பற்றி நமது குழந்தைகள் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நம் கல்வி முறையில் கொண்டு வர வேண்டும்.


கேள்வி:சிராத்ததைச் சிலர் ஹ்ரண்யமாகச் செய்கிறார்களே? சாஸ்திரத்தில் இதற்கு அனுமதி உண்டா?


பதில்:ஹிரண்யமாக சிராத்தம் செய்வதற்கு சாஸ்திரத்தில் இடம் உண்டு.ஆனால்,அதற்குரிய காரணம் உண்மையாக இருக்க வேண்டும்.இன்று ஒரு கல்யாணத்திற்குப் போக வேண்டும்.அதனால்,ஹிரண்யமாக சிராத்தம் செய்கிறேன் என்றால் சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது.வயோதிகம் காரணமாக,உடல்நிலை போன்ற உண்மையான காரணங்களின் போது இப்படிச் செய்தால் தவறில்லை.

சிராத்தம் செய்வதற்கான வசதி ஒருவனுக்கு இல்லை என்றால்,திதி அன்று பசு மாட்டின் கழுத்தை தடவி ‘சிராத்தம் செய்வதற்கான வசதி இல்லை’ என்றூ கூறி பகவானிடம் வேண்டிக் கொண்டாலே,சிராத்தம் செய்ததற்கான முழுப் பலன் கிடைத்துவிடும்.அதுவும் இல்லையென்றால் எட்டு எள்ளைத் தானமாக கொடுத்தால் முழுப்பலன் கிடைத்துவிடும்.

கேள்வி:உங்களுக்குப் பிடித்த ஆழ்வார் யார்?

பதில்:மதுரகவி ஆழ்வார்.இவர் மற்ற பத்து ஆழ்வார்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.ஆசாரியனே தெய்வம் என்று சொன்னவர் அவர்.மற்ற ஆழ்வார்கள் தெய்வத்தைக் குறித்துப் பாடி மோட்சம் பெற்றனர்.மதுரகவி ஆழ்வார் ஆசாரியனான நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே பாடி மோட்சம் பெற்றவர்.

கேள்வி:நித்திய ஆராதனையை மானசீகமாக செய்யலாமா?


பதில்: நித்திய ஆராதனை செய்ய முடியாத நிலையில் இருந்தால் மானசீகமாக செய்வதில் தவறில்லை.வேலை நிமித்தமாக செய்ய முடியவில்லை என்று காரணம் சொன்னாலும்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும்.எந்தக் காரணத்தைச் சொன்னாலும்,தினமுமே மானசீகமாக ஆராதனை செய்வது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

கேள்வி:ஹிந்துக் கோவில்களைப் பராமரிக்க,அறநிலையத் துறை தேவையில்லை என்ற கருத்தை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவில்களில் அவர்களுக்குச் சில அதிகாரங்கள் மட்டுமே உள்ளன.இப்பொழுது,கோவில்களை விட்டு அறநிலையைத் துறை வெளியேற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றதற்கான காரணம்,ஹிந்து அறநிலையத்துறை அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்ததுதான்!


எனவே,முதலில் ஹிந்து அறநிலையத் துறை விதிகளின் படி,அவர்கள் கோவிலின் நிர்வாகப் பணிகளை மட்டுமே பார்க்க வேண்டும்.இதைத் தவிர,கோவிலில் நடைபெற வேண்டிய பூஜை மற்றும் அங்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஹிந்து அறநிலையத் துறை தலையிடக் கூடாது.

கோவிலில் பின்பற்ற வேண்டிய மரபு மற்றும் நடைமுறை பற்றிய புரிதல் இல்லாத அறநிலையத்துறை,இதில் தலையிடுவது சரியாக இருக்காது.


ஹிந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம்,மற்ற மதங்களில் இப்படி அரசு தலையிடுவதில்லை என்பதாகும்;

முதலில் அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை இங்கு உருவாக வேண்டும்;ஆனாலும்,உடனடியாக அறநிலையைத் துறையை வெளியேற்றிவிட்டு,உள்ளூர் மக்களே கோவில்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்வது சரியாக இருக்காது.

நல்ல நிலையில் இருக்கும் கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து,தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் 32,000 கும் அதிகமான கோவில்களை ஹிந்து அறநிலையைத் துறை நிர்வகித்து வருகிறது.


கோவில்களை உள்ளூர் மக்களிடம் கொடுத்துவிட்டால்,இந்த நிலை நீடிக்குமா என்று தெரியவில்லை.இதற்கான பதில்களை அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து உட்கார்ந்து பேசித் தெரிந்து கொண்ட பிறகு,அறநிலையத் துறையை கோவில்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.


நன்றி:துக்ளக்,பக்கங்கள் 20,21,22,23;வெளியீடு 20/3/2019

No comments:

Post a Comment