Thursday, January 3, 2019

கால பைரவப் பெருமானின் அருளைப் பெற....


கால பைரவர் பரணி நட்சத்திரத்தில் உதயமானார்!
கால பைரவர் அஷ்டமி திதியில் உதயமானார்;
அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே வருவது மிகவும் அபூர்வம்....


2.2.2020 சண்டே அன்று மாலை 4.44 வரை அஷ்டமி திதியும்,இரவு 8.13 வரை பரணி நட்சத்திரம் சேர்ந்து வருகின்றது;

கால பைரவரின் அருளைப் பெற இந்த நேரத்தில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்;


முடிந்தால் இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் செல்வதால்,அண்ணாமலையாரின் அருளும்,கால பைரவரின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்;


கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று ஜபிக்கலாம்;இதுதான் பைரவ உலகத்திற்கும் நமது பூமிக்கும் இடையே இணைப்பு ஆன்மீகப் பாலமாக இருக்கின்றது;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்த பொன் பேத்தி அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் பொற்றளி பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம்;இவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவராக கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதயமானார்;


அட்டவீரட்டானங்கள் என்ற பைரவரின் எட்டு படைவீடுகளில் ஜபிக்கலாம்

(திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்,
பண்ருட்டி அருகில் இருக்கும் திருவதிகை,
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கும் திருக்கண்டியூர் அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி மற்றும் திருக்கடையூர் மயானம்,
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்
திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி வீரட்டேஸ்வரர்,
மயிலாடுதுறை அருகில் இருக்கும் செம்பொனார் கோவில் பகுதியைச் சேர்ந்த திருப்பரசலூர்
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்து பிறகு விசாரித்துச் சென்றால் வரும் குறுக்கை என்ற கொறுக்கை=இங்கே இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் மன்மதனை எரித்த சாம்பல் இன்றும் இருக்கின்றது)

தவிர,அவரவர்களுடைய ஜன்ம நட்சத்திர பைரவர் ஸ்தலங்கள்:-
அசுபதி = பேரூர் சிவாலாயத்தில் இருக்கும் ஞானபைரவர்

பரணி = காரைக்குடி திருப்பத்தூர் அருகில் அமைந்திருக்கும் கண்டரமாணிக்கம் சென்று பெரிச்சி கோவில்


கார்த்திகை = அண்ணாமலை உள்பிரகாரத்தில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

ரோகிணி = திருக்கண்டியூர் பிரமசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் வடுக பைரவர்


மிருகசீரிடம் = க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழி)

திருவாதிரை = திருவண்டார் கோவில் பைரவர்(விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம்)


புனர்பூசம் = விஜயபைரவர்,பழனி(ரோப்கார் அருகில் இருக்கும் சாது சுவாமிகள் மடாலயம்)


பூசம் = யோக பைரவர்,ஸ்ரீவாஞ்சியம்

ஆயில்யம் = பாதாள பைரவர்,காளஹஸ்தி


மகம் = அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவில் பைரவர்,வேலூர்

பூரம் = பட்டீஸ்வர பைரவர்(கும்பகோணம் அருகில்)


உத்திரம் = ஜடாமண்டல பைரவர்,அருள்மிகு ஆவுடையம்மன் சமேத அம்மநாதர் கோவில்,சேரன்மாதேவி,நெல்லை மாவட்டம்


அஸ்தம் = யோக பைரவர்,திருப்பத்தூர்

சித்திரை = அருள்மிகு கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜீனர் கோவிலில் இருக்கும் பைரவர்,தர்மபுரி


சுவாதி = திருவரங்குளம் (பொற்பனைக்கோட்டை) பைரவர்,வழி:புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 வது கி மீ

விசாகம் =கோட்டை பைரவர்,திருமயம்(சாலையோரம் இருக்கும் ஆலயம்)

அனுஷம் = அருள்மிகு ஆபத்சகாயர் கோவில் பைரவர்,ஆடுதுறை

கேட்டை= அருள்மிகு ஆவுடைநாயகி சமேத தேசிகநாதர் கோவிலில் இருக்கும் கதாயுத பைரவர்,சூரக்குடி,பள்ளத்தூர்(காரைக்குடி)

மூலம் = ஆகாச பைரவர்,சட்டநாதர் கோவில்,சீர்காழி


பூராடம் = அவிநாசி கோவிலில் இருக்கும் இரண்டு பைரவர்கள்


உத்திராடம் = வடுக பைரவர்,அருள்மிகு பசுபதி நாதர் கோவில்,கரூர்


திருவோணம் = மார்த்தாண்ட பைரவர்,வைரவன்பட்டி

அவிட்டம் = அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் கோவில்,சீர்காழியில் இருக்கும் அஷ்ட பைரவர்கள்


சதயம் = சர்ப்ப பைரவர்,சங்கரன் கோவில்

பூரட்டாதி = திருச்செங்கோடு தாலுகா,கொக்கராயன்பேட்டையில் இருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் பைரவர்


உத்திரட்டாதி = ஓசை உடைய பைரவர்,சேங்கனூர்,கும்பகோணம் அருகில்


ரேவதி = கரூர் மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் பஞ்சமுக பைரவர்

அல்லது

காலபைரவர் ஆட்சி புரியும் காசியில் 64 படித்துறைகள் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரு படித்துறையில் கங்கையில் மூழ்கியவாறு ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஒரு மணி நேரமாவது ஜபிக்கலாம்;

அல்லது

காசியில் எட்டு பைரவர்களின் ஆலயங்கள் இருக்கின்றன;இங்கே ஏதாவது ஒரு இடத்தில் ஜபிக்கலாம்;


அல்லது

சூரியனின் ப்ராண தேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;இவர் சிதம்பரம் ஆலயத்தில் இருந்து அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;


சந்திரனின் ப்ராண தேவதை கபால பைரவர்;இவர் தென்காசிக்கு அருகில் இருக்கும் திருமலைக்கோவில் முருகன் கோவிலில் அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

குருவின் ப்ராண தேவதை அசிதாங்க பைரவர்;இவர் ஆம்பூர் சிவாலயத்தில் அருள்புரிகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

மற்ற கிரகங்களின் ப்ராண தேவதையாக இருக்கும் பைரவ ஆலயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;


அல்லது

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னதி

அல்லது

இங்கே எங்கேயும் செல்ல இயலாதவர்கள் உங்கள் தெருவில் வசிக்கும் பைரவ வாகனத்திற்கு உணவு தானம்,பிஸ்கட் தானம் செய்யலாம்;

நம்முடைய கடுமையான கர்மவினைகளை கரைக்க ஓர் பொன்னான பைரவ வாய்ப்பு!!!

மனம் வருந்தி ஈசனைச் சரண் அடைந்தவர்களுக்காக....

 


மனத்தால் செய்த பாவங்கள் தீர ஒரு சுலபமான வழி உண்டு;சென்னையில் இருக்கும் திருநின்றவூர் அருள்மிகு இருதயாலீஸ்வரர் ஆலயத்தில் உழவாரப் பணி அல்லது அடிப்பிரதட்சணம் அல்லது அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்;இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு நம்மால் ஆன எது செய்தாலும் மனதால் செய்த பாவங்கள் தீரும்;ஆனால்,திரும்பவும் அதே பாவங்களை ஒரு போதும் செய்யக்கூடாது;

அல்லது/மேலும்


உடலாலும் மனதாலும் செய்த பாவங்கள் தீர,திங்கட்கிழமை மற்றும் பெளர்ணமி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

கிரிவலம் முழுவதும் ஒரு போதும் பேசாமல் இருந்து ஏதாவது ஒரு சிவமந்திரம் ஜபித்து வரவேண்டும்;வசதி உள்ளவர்கள் கன்றுடன் கூடிய பசுவை அழைத்துக் கொண்டு கிரிவலம் வரலாம்; கிரிவலம் நிறைவடையும் போது அந்த கன்றையும்,பசுவையும் அண்ணாமலையாரின் கோசாலைக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட வேண்டும்;

திங்களும் பவுர்ணமியும் வரும் நாளில் அல்லது பூசமும் திங்களும் வரும் நாளில் கிரிவலம் வருவது மிகுந்த வரங்களைத் தரும்;

21.1.2019 திங்கட்கிழமை அன்று காலை 11.08 வரை பவுர்ணமி திதி இருக்கின்றது;அன்று முழுவதும்,மற்றும் மறுநாள் விடிகாலை 3.59 வரை பூசம் நட்சத்திரம் இருக்கின்றது; 

16.6.2019 ஞாயிறு மதியம் 3 மணிக்குத் துவங்கும் பவுர்ணமி மறுநாள் 17.6.2019 திங்கள் மதியம் 2.54 வரை இருக்கின்றது;17.6.2019 திங்கள் சூரிய உதயத்தில் இருந்து மதியம் 2.54 வரை அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

11.11.2019 திங்கள் மாலை 6.46 க்கு பவுர்ணமி ஆரம்பம் ஆகின்றது;மறுநாள் சூரிய உதயம் வரை அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

10.3.2020 திங்கள் காலை சூரிய உதய நேரத்தில் இருந்து இரவு 11.36 வரை பவுர்ணமி இருக்கின்றது;

21.10.2019 திங்கள் மதியம் 2.44 முதல் பூசம் ஆரம்பமாகின்றது;மறுநாள் மதியம் 1.35 வரை பூசம் இருந்தாலும்,மறுநாள் சூரிய உதயத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்துவிட வேண்டும்;

18.11.2019 திங்கள் இரவு 9.32 வரை பூசம் இருக்கின்றது;இன்று காலை சூரிய உதயத்தில் இருந்து இரவு 9.32 க்குள் அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

இளநீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அது கோமுகம் வழியாக வரும் போது அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து,சித்த பிரம்மை,மன நோய் உள்ளவர்களை அருந்தச் செய்ய வேண்டும்; இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் மன நோய்களும்,சித்தபிரம்மையும்,காத்துகருப்பும் விலகிவிடும்;

இந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்வோம்;அளவற்ற வரங்களை பெறுவோம்;

ஓம் ஸ்ரீஅண்ணாமலை குருவே துணை

மன அடக்கத்துடன் கூடிய செல்வச் செழிப்பைத் தரும் அஸ்வாரூடா வராகி ஜபம்!!!


உலகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் முந்தைய பிறவிகள் நான்கில் செய்த பாவ,புண்ணியத்தினால் விளைந்த கர்மவினைகளை அனுபவிக்கவே இப்பிறவி எடுத்துள்ளார்கள்;இதில் விலங்குகளும்,மரம் செடி கொடிகளும் அடங்கும்;

புராணங்களை வாசித்துப் பார்த்தால்,ஒரு உண்மை விளங்கும்;இந்திரன்,தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள் என்று யாராக இருந்தாலும் முறையற்ற காம இச்சையால் ரிஷியிடம் அல்லது துறவியிடம் சாபம் பெற்றிருப்பார்கள்;அல்லது நான் என்ற அகங்காரத்தினால் சாபம் பெற்று தனது பதவியை இழந்திருப்பார்கள்;

அது எப்படி தேவ உலகத்தில் வாழ்ந்து வருபவர்களுக்கும் நான் என்ற அகங்காரம் உண்டாகின்றது;முறையற்ற காம இச்சை தோன்றுகின்றது என்று கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை;

ஆக,பல கோடி பிறவிகளாக ஒவ்வொரு மனிதனும் சேமித்த புண்ணிய சக்திகளின் தொகுப்பாகவே ஒருவன் இந்திரப் பதவியை அடைகின்றான்;அல்லது அஷ்டதிக்கு பாலகர் என்ற பொறுப்பினை ஏற்கின்றான்;பிரம்மா என்பதும் ஒருவித பதவியே;விஷ்ணு என்பதும் ஒரு வித பதவியே;அதனால் தான் 1970 க்கு முந்தைய ஜோதிட நூல்கள்,வைத்திய நூல்கள்,ஆன்மீக வெளியீடுகளை வாசித்தால் இறைவன் என்றால் அது ஈசன் என்பதை உணரலாம்;

மஹா கணபதி உபாசனை செய்வதன் மூலமாக தடைகளை நீக்கி விடலாம்;

பைரவ உபாசனை செய்து வருவதன் மூலமாக கர்ம வினைகளை கரைத்துவிடலாம்;

ஸ்ரீவித்யா உபாசனை செய்து வருவதன்  மூலமாக பாவமற்ற நிலையை அடைந்துவிடலாம்;

அண்ணாமலை கிரிவலம் செல்வதன் மூலமாக மீண்டும் இந்த பூமியில் பிறவாத முக்தியை அடைந்துவிடலாம்;


இன்றைய கலியுகத்தில் உபாசனை என்ற ஆன்மீக வழிமுறையை பின்பற்ற யாராலும் இயலாது;மனிதர்களே உட்புக முடியாத வனப்பகுதிக்குள் சிலர் உபாசனை செய்து வருகின்றார்கள்;இன்றைய ஜனத்தொகை விகிதப்படி 1 கோடியில் ஒருவருக்கு உபாசனை கைகூடும்;மற்றவர்களுக்கு உபாசனையை போதிப்பதற்குக் கூட ஆன்மீக குரு கிடைப்பதில்லை;


இங்கே யாம் தெரிவிப்பது பக்தி மார்க்கத்தில் தான்;

இறைசக்தியின் அருளை பெற நான்கு விதமான வழிமுறைகளை நமது முன்னோர்களாகிய சித்தர்பெருமக்கள் போதித்திருக்கின்றார்கள்;

1.ராஜ யோகம் = ப்ராணயாமம்,யோகா,வாசி யோகம் மூலமாக முயற்சிப்பது

2.ஞான யோகம் = பக்தி நூல்களை வாசிப்பது,குருவின் வழிகாட்டுதல் படி செயல்படுவது

3.கர்ம யோகம் = மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த எவரும் இதைச் செயல்படுத்தலாம்;சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய கர்ம யோகம் நூல் தான் இதற்கு வழிகாட்டி;

4.பக்தி யோகம் =இன்றைய கால கட்டத்தில் இல்லறவாசிகளான நமக்கு இதுதான் ஒத்து வரும்;காவடி எடுப்பது,பாத யாத்திரை செல்வது;அன்னதானம் செய்வது;கோவில் கட்டுவது/மறு நிர்மாணம் செய்வது/சீரமைப்பது; தினசரி மந்திர ஜபம் செய்வது;ஆன்மீக முயற்சிகளை ஜோதிடத்தின் அடிப்படையில்,ஜோதிட வழிகாட்டுதலின் படி செயல்படுத்துவது;

 அஸ்வாரூடா மாலையை    தினமும் ஒருமுறையும்,ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று ஐந்து அல்லது இருபத்தைந்து முறையும் ஜபிக்க வேண்டும்;அஸ்வாரூடா வராகிக்கு தனியாக ஒரு தீபம் ஏற்றி வைத்து அந்த தீபத்தை பார்த்தவாறு ஜபிப்பது சிறப்பு;அந்த சமயத்தில் மனதில் அன்னையின் உருவம் தெரியும் விதமாக நினைத்துக் கொண்டே(இதற்கு பாவனை என்று பெயர்) ஜபிக்க வேண்டும்;

சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகு,அஸ்வாரூடா வராகியின் அருளை சூசகமாக உணரலாம்;அதன் பிறகு தொடர்ந்து அஸ்வாரூடா மாலையை ஜபித்து வர மூன்று முதல் ஐந்து  ஆண்டுகளுக்குள் மனமானது மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையில் இருந்து முழுமையாக விலகிச் சென்றுவிடும்;


நமது ஆன்மீக லட்சியங்களை நோக்கி அதன் பின்னர் படுவேகமாக முன்னேறலாம்;



அஸ்வாரூடா மாலையையும்,அஸ்வாரூடா வராகியின் முழுமையான வழிபாட்டுமுறையையும் பெற விரும்புவோர் எம்மை நேரில் சந்திக்கவும்;

அஷ்டமச்சனியினால் ஏற்பட்டு வரும் கஷ்டங்கள் தீர





16.12.2017 முதல் பிப்ரவரி 2020 வரையிலும் ரிஷப ராசியினருக்கு அஷ்டமச்சனி இருக்கின்றது.

ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.


கடந்த 15 ஆண்டுகளில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால்,அஷ்டமச்சனியில் படாத பாடுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இது அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தும்.


அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லதுபைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.


இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.

அல்லது

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று வீட்டில் எழுதி வர வேண்டும்;இயலாத பட்சத்தில் 108 முறை எழுதலாம்; பிப்ரவரி 2020 வரை தினமும் எழுதி வர வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்கள் தவிர பிற நாட்களில் எழுதலாம்;




சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;கால பைரவரை யார் தொடர்ந்து வழிபடுகின்றார்களோ அதை எண்ணி மன மகிழ்ச்சி அடைபவர் சனிபகவான்;இதனால்,தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார்;

ஜன்மச்சனியின் துயரங்கள் நீங்கிட


16.12.2017 முதல் முன்றாண்டுகளுக்கு தனுசு ராசியை சனிபகவான் கடக்கிறார்இதுவே தனுசு ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.

நவக்கிரகங்களில் சனிக்கிரகத்தின் குருவாக கால பைரவர் இருக்கின்றார்;சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவரும் கால தேவன் என்ற கால பைரவப் பெருமானே!!!


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த மூன்றாண்டுகளும் துலாம் ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.

மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.



 சனிப்பிரதோஷ நாட்களில்        திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

வீட்டிலேயே தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும்; இது முடியாதவர்கள் 108 முறையாவது தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்; ஜனவரி 2020 வரை தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி நடைபெற்று வருவதால் பைரவரின் அருளைப் பெற முயற்சிப்பது அவசியம்;

தீராத கடன் தீர




மிகுந்த கடனால் அவதிப்படுபவர்கள்,எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் வறுமையில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள்,வியாபாரத்தில் லாபமே பார்க்க முடியாமல் வியாபாரத்தை கைவிடமுடியாமல் இடியாப்பச்சிக்கலில் மாட்டியுள்ளவர்கள் பட்டீஸ்வரம் சிவாலயம் வரவேண்டும்;


இங்கே வருகை தந்து காராம்பசுவின் பாலைக் கறந்து அதன் இளஞ்சூடு ஆறும் முன்பாகவே இங்கே இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;

இதை மாசி மகம் ( 19.2.2019 செவ்வாய் காலை 10.31 முதல் 20.2.2019 புதன் காலை 8.53 வரை மகம் நட்சத்திரம் இருக்கின்றது ) அன்று செய்ய வேண்டும்;

இந்த வருடம் வரும் மாசி மகம் முதல் ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இப்படி அபிஷேகம் என்று அடுத்த வருடம் வரும் மாசி மகம் வரை செய்து வர வேண்டும்;

தொடர்ந்து இப்படி மாதம் ஒரு முறை மகம் நாளன்று அபிஷேகம் செய்து வர படிப்படியாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வழிகள் கிட்டும்;
ஓம் சத்குரு இடியாப்பசித்த குரு நம ஸ்வாஹா

கர்மவினைகளை கரைக்கும் தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் 2019 டூ 2020!!!


உலகத்தின் மையப்பகுதியாக இருக்கும் அண்ணாமலையில் நாம் வாழ்ந்து வரும் காலத்தில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;பலர் பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நம்புகின்றார்கள்;இது முழுத் தவறு;மறு பிறவி இல்லாத முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இப்பிறவிக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதும்.முக்தி உறுதியாக கிட்டும்;இது அருணாச்சலேஸ்வரர் மீது சத்தியமான உண்மை;


உலக வரலாற்றில். . . இல்லையில்லை ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் தாயாகிய அன்னை பார்வதி தேவி;நம் அன்னைக்கு துணையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் குருவாக இருப்பவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும்(தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;) பரப்பியவரும்,சித்தர்களின் தலைவரும்,ரிஷிகளின் தலைவருமாகிய அகத்தியர் ஆவார்;


எனவே,ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரியன்றும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்;அவ்வாறு செல்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் நீங்கத் துவங்கும்;நமது முன்னோர்களாகிய பித்ருக்களில் ஒருவர் அல்லது ஒரு சிலர் கிரிவலம் வருவர்;அவர்களை கிரிவலத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டும்;நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு சித்தரின் வம்சாவழியைச் சேர்ந்தவரே! எனவே,நமது முன்னோராகிய சித்தர் தரிசனம் கண்டிப்பாக நமக்கு கிட்டும்;

அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்து 12 வது முறையோ அல்லது 36 வது முறையோ கிரிவலம் செல்லும் போது கிட்டும்;மிகுந்த பூர்வ புண்ணியம் செய்தவர்களுக்கு அன்னை பார்வதி தேவியின் தரிசனமும்,நமதுகுரு  அகத்திய மகரிஷியின் தரிசனமும் கிட்டும்;

பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால்,அடுத்த ஒருவருடத்திற்கு தேய்பிறை சிவராத்திரி நேரத்தை இங்கே குறிப்பிடுகின்றோம்;தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் சிவராத்திரி திதி என்பதை மறக்காதீர்கள்;

விளம்பி & விகாரி வருடத்தின் தேய்பிறை சிவராத்திரி நாட்கள்:

4.1.2019 வெள்ளி விடிகாலை 4.29 முதல் 5.1.2019 சனி விடிகாலை 5.28 வரை

2.2.2019 சனி இரவு 10.31 முதல் 3.2.2019 ஞாயிறு இரவு 12.20 வரை

4.3.2019 திங்கள் மாலை 5.30 முதல் 5.3.2019 செவ்வாய் இரவு 7.34 வரை (மஹாசிவராத்திரி)

3.4.2019 புதன் காலை 11.46 முதல் 4.4.2019 வியாழன் மதியம் 1.28 வரை


3.5.2019 வெள்ளி

1.6.2019 சனி மாலை 5.18 முதல் 2.6.2019 ஞாயிறு மாலை 5.06 வரை

30.6.2019 ஞாயிறு பின்னிரவு(திங்கள் விடிகாலை) 4.11 முதல் 1.7.2019 திங்கள் பின்னிரவு(செவ்வாய் விடிகாலை) 3.05 வரை

30.7.2019 செவ்வாய் மதியம் 1.13 முதல் 31.7.2019 புதன் காலை 11.23 வரை

28.8.2019 புதன் இரவு 9.20 முதல் 29.8.2019 வியாழன் இரவு 7.05 வரை

27.9.2019 வெள்ளி

26.10.2019 சனி மதியம் 2.18 முதல் 27.10.2019 ஞாயிறு மதியம் 12.04 வரை

24.11.2019 ஞாயிறு இரவு 12.28 முதல் 25.11.2019 திங்கள் இரவு 10.44 வரை(இது தான் குபேர கிரிவல நாள்!)

24.12.2019 செவ்வாய் மதியம் 12.23 முதல் 25.12.2019 புதன் காலை 11.24 வரை

23.1.2020 வியாழன்

21.2.2020 வெள்ளி மாலை 6.14 முதல் 22.2.2020 சனி இரவு 7.19 வரை(மஹாசிவராத்திரி)

22.3.2020 ஞாயிறு காலை 11.23 முதல் 23.3.2020 திங்கள் மதியம் 1.13 வரை


சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான சிவபக்தர்கள்,அருணாச்சல சித்தர்கள் இந்த திதி ஆரம்பிக்கும் போது கிரிவலம் துவங்குவார்கள்;திதி முடியும் போதுதான் கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்;


400 ஆண்டுகளாகத் தான் தற்போதைய கிரிவலப்பாதையை நாம் பயன்படுத்தி வருகின்றோம்;அதற்கு முன்பாக கிரிவலப்பாதையின் நீளம் 50 கி.மீட்டராக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிவலப்பாதையின் நீளம் 1000 கி மீட்டர்களாக இருந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ