Monday, November 26, 2018

மஹாகால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்!



உலகம்,உயிர்கள்,ப்ரஞ்சம் = இம்மூன்றையும் அந்த ஈசனின் ஆணைப்படி,நவக்கிரகங்கள் மூலமாக நிர்வகித்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;


ஈசன் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி ஒரு முறை வெளிப்படுத்திய சிறுபகுதி சக்திதான் கால தேவன் என்ற மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார்;இந்த விளம்பி ஆண்டு,கார்த்திகை மாதத்தில் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று (30.11.2018) மஹாதேவ அஷ்டமியாக வர இருக்கின்றது;


ஒரு நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார்;அது எந்த நாள் தெரியுமா?


மஹா கால பைரவப் பெருமான் பிறந்த தினமான 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று தான்!


ஐந்து விதங்களில் மஹா கால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடலாம்;


1.ப்ரபஞ்சத்தின் மைய பாகமான அண்ணாமலையில் 29.11.2018 வியாழக்கிழமை இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரை கிரிவலம் வந்தவாறு ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;அல்லது இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டு,மீதி நேரத்தை அண்ணாமலையார் கோவிலுக்குள்ளும்,தங்கும் இடத்திலும் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;இதனால்,ஒரே சமயத்தில் கால பைரவப் பெருமானின் அருளையும்,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;


2.முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,மஹா கால பைரவப் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இந்த எட்டு படைவீடுகளிலும் வெவ்வேறு கால கட்டங்களில் தமது வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்;


இதில் ஏதாவது ஒரு படைவீட்டில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை ஜபிக்கலாம்;அல்லது முழு நாளும் (கோவில் திறந்திருக்கும் நேரம் வரை=காலை 6 முதல் 12 வரை,மாலை 4 முதல் இரவு 8 அல்லது 9 வரை) ஜபிக்கலாம்;


அட்டவீரட்டானங்கள்:1.திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 8 வது கி மீ தொலைவில்)

2.திருக்கோவிலூர் வீரட்டானம்

3.திருவதிகை வீரட்டானம் (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில்)

4.திருவிற்குடி வீரட்டேஸ்வரர்  (திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் 3 கி மீ பயணித்து அதன் பிறகு இருக்கும் உள்ளடங்கிய கிராமத்துச் சாலையில்)

5.திருக்கடையூர்  கால சம்ஹார மூர்த்தி & திருக்கடையூர் மயானம்

6.வழுவூர் வீரட்டானம் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்  (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு 1 கி மீ தூரத்தில் உள்ளடங்கிய கிராமத்திற்குள் இருக்கும் வீரட்டானம்)

7.செம்பொனார் கோவில்(மயிலாடுதுறையின் ஒரு பகுதியில்)

8.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு விசாரித்து செல்லவும்)

ஒன்பதாவதாக சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம்

இந்த எட்டு வீரட்டானங்களிலும் மூலவர் சிவலிங்கமாக இருக்கின்றது;சிவலிங்க வடிவில் மஹா கால பைரவப் பெருமான் அருள் பாலித்து வருகின்றார்;ஈசனும்,பைரவரும் ஒருவரே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றார்;


3.பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவ சன்னதிகளுக்கும் அருளாற்றலை வழங்கும் ஓர் ஆலயம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்,கும்பகோணம் அருகில்;இங்கே 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று ஈசனுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும்.திருமணத்தின் முடிவாக கல்யாண விருந்து நடைபெறும்;விருந்தின் முடிவில் நாம் ஒவ்வொருவரும் திருமண அன்பளிப்பு தரலாம்;மிகவும் புண்ணியம் தரும் செயலாகும்;நமது நியாயமான  நீண்டகால ஏக்கங்களைத் தீர்க்கும் திருக்கல்யாண வைபவம் இது!!!


4.செல்வ வளம் வேண்டுவோர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை இந்த நாளில் அவர் சன்னதிக்குச் சென்று மூலமந்திரத்தை ஜபித்து அருளைப் பெறலாம்;


5.வெகுதூர மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணிக்குள் இறுதி 30 நிமிடங்களில் ஓம் சம்ஹார பைரவாய நமஹ் என்று ஜபிக்கலாம்;


சனியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினர் இன்று முழுவதும் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம் அல்லது தினசரிப் பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னைதியில் ஜபிக்கலாம்;


பைரவ ஜபம் கை மேல் பலன் என்பது பழமொழி!



Saturday, November 24, 2018

அகத்தீசரின் அருளைப் பெற ஒரு சுலப வழி!



உலகத்தில் வாழ்ந்து வரும் நம் அனைவருக்கும் முதல் குரு அகத்தியர்;ஏனென்றால்,இவர் தான் சித்தர்களின் குரு;இவர் தான் ரிஷிகளின் குரு;தமிழ் மொழியை முருகக் கடவுளிடம் இருந்து கற்றுக் கொண்டு,இந்த பூமி முழுவதும் பரப்பியவர் இவர் தான்;சித்த மருத்துவம்,மூலிகைகளின் மருத்துவ குணங்கள்,யோகக் கலை,ஜோதிடக் கலை,சரக் கலை,பஞ்ச பட்சி சாஸ்திரம்,கோவில்களை கட்டும் கலை,கோவில் வழிபாட்டு முறைகள் என்று அனைத்திற்கும் ஆதி மூல முதல் குரு அகத்தியர் தான்;


அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி வெளியே கொண்டு வர வேண்டும் என்பதை உணர்ந்த முதல் மனிதர் இவர் தான்;அதை அப்படியே இன்று வரை மனிதர்களாகிய நமக்கு போதித்துக் கொண்டு இருப்பவரும் இவர் தான்;


அகத்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா ஆகும்;ஆமாம்! தமிழர்களின் ஆதி குருவின் பெயரால் இருக்கும் ஒரே கண்டம் ஆஸ்திரேலியா!

தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை அகத்தீசர் கட்டியிருக்கின்றார்;ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 தேவ ஆண்டுகள் வரை பூஜை செய்து சிவகடாட்சத்தைப் பெற்றிருக்கின்றார்;12 தேவ ஆண்டுகள் என்பது பூமியின் காலக் கணக்கின் படி 15,00,000 ஆண்டுகள் ஆகின்றது;இவர் உருவாக்கிய கோவிலில் மூலவராக இருக்கும் ஈசனின் பெயர் அகத்தீசர் ஆகும்;பெரும்பாலும் காவிரிக் கரையோரம் இவர் கோவில்களைக் கட்டியிருந்தாலும்,தமிழ்நாடு நெடுக கட்டியிருப்பதும் உண்மையே!


அவைகளில் ஒரு சில ஆலயங்கள் இன்னும் பிரபலம் ஆகவில்லை;உங்கள் ஊர்ப்பகுதியில் தேடிப் பார்த்தால் அகத்தீசர் என்ற பெயரில் ஆலயம் இருக்கலாம்;அப்படி இருந்தால் அதை புனர்நிர்மாணம் செய்ய தாங்களே முயற்சிகளை ஆரம்பிக்கவும்;


மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 19 வது கிலோ மீட்டர் தூரத்தில் மேலையூர் அமைந்திருக்கின்றது;இங்கே மெயின் ரோட்டில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி இருக்கின்றது;இந்த பள்ளிக்கு பின்புறம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது;மூலவருக்கு மிக அருகில் அகத்தியரின் சன்னதியும் அமைந்திருக்கின்றது;2009 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்;அடுத்த கும்பாபிஷேகம் 2021 இல் வர இருக்கின்றது;காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது;


அக்யூ ஹீலிங்,ப்ராணிக் ஹீலிங்,குவாண்டம் மெடிட்டேஷன்,ஆல்பா மைண்டு தியானம்,ஆழ்நிலை தியானம்,வாசி யோகம்,ப்ராணயாமம் செய்பவர்கள் தமது ஆன்மீக முயற்சியில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினால் அடிக்கடி இங்கே வருகை தந்து 90 நிமிடங்கள் வரை நெய் தீபம் ஏற்றி தியானம் செய்ய வேண்டும்;அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்து வர வேண்டும்;


மாதம் ஒருமுறை வீதம்   24 முறை இப்படி செய்கின்றார்களோ அவர்கள் அகத்தீசரின் அருளைப் பெறுவார்கள்;

Friday, November 16, 2018

அரிய பைரவ வழிபாடு!



உலகத்தில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் செல்வ வளத்தை அள்ளித் தருபவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்;இவர் கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் பைரவ உலகத்தில் இருந்து ஈசனின் ஆணைப்படி பூமிக்கு (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) வருகை தந்தார்;

இன்றைய அருள்மிகு பவானீஸ்வரர் திருக்கோவிலில் (பொன்பேத்தி,புதுக்கோட்டைக்கு அருகில்) அருள்பாலித்து வருகின்றார்;

தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முந்தைய முகூர்த்த நேரத்தில் (காலை 4.30 முதல் 6 மணிக்குள்)  சொர்ண பைரவ அஷ்டகத்தை 33 முறை ஜபித்து வருவதன் மூலமாக பெரும் செல்வச் செழிப்பை அடைய முடியும்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவரின் மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாகவும் செல்வ வளத்தைப் பெற முடியும்;அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கு மட்டுமே செல்வ வளம் தேடி வரும்;கூடவே,ப்ரம்மச்சாரிய விரதம் இருப்பவர்களுக்கு ஆறு மடங்கு செல்வ வளம் வெகு சீக்கிரமே கிடைத்துவிடும்;


இந்துக்களின் ரகசிய வழிபாட்டுமுறைகளில் முக்கியமானது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு ஆகும்;இவரை தொடர்ந்து ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் ஜபித்து,செல்வ வளத்தைப் பெற்றவர்கள்,அதை நேர்மையான செயல்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும்;அப்படி இல்லாமல் அநீதியான செயல்களுக்குச் செலவிட்டால்,பைரவ சாபம் பீடிக்கும்;


ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரது அவதாரத்திற்கும் முன்பே தோன்றிய பைரவப் பெருமான் ஒருவர் இருக்கின்றார்;அவரது பெயர் ஸ்ரீவித்ருமா ஆகர்ஷண பைரவர்!
இவரது சன்னதி அருள்மிகு ஸ்ரீ சூரிய கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில் அமைந்திருக்கின்றது;


கடந்த ஓராண்டுவரை யார் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டு இருக்கின்றார்களோ,அவர்களுக்கு மட்டுமே இவரது அருள் கிட்டுகின்றது;

ஒவ்வொரு நாளும் வரும் குளிகை காலம் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் இவரை பின்வரும் பொருட்களால் ஆன கலவையைக் கொண்டு காப்பு இட வேண்டும்;

(புனுகு,கோரோசனை,ஜவ்வாது,கஸ்தூரி,சந்தனம்)
இந்த பொருட்களில் ஒரிஜினலைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்;விலை மிகவும் அதிகம்;தாங்கள் வாங்கும் பொருட்கள் ஒரிஜினல் தானா என்பதை தகுந்த(அனுபவம் மிக்க) சித்த வைத்தியர் மூலமாக பரிசோதித்துக் கொள்ளவும்;அதன் பிறகு,இவைகளை ஒன்றாக்கி காப்பு இட வேண்டும்;இட்டு தொடர்ந்து 9 நாட்கள் பைரவரது மூலமந்திரத்தை 90 நிமிடங்கள் ஜபித்து வருக!

பைரவர் உபாசனை செய்து வருபவர்கள் தொடர்ந்து 64 நாட்கள் இப்படிச் செய்து வருவது நன்று;

பைரவப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் குறைந்தபட்சம் 9 நாட்கள் வரையிலும்,அதிகபட்சம் 18 நாட்களும் இப்படிச் செய்து நீடூழி வாழ்க!


இதன் மூலமாக பிறருக்கு தாம் செய்த தீங்குகளும்,அதனால் உண்டான கர்மவினைகளும் படிப்படியாக விலகிவிடும்;

திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர்களுக்காக மட்டுமே இந்த பைரவ வழிபாட்டினை தெரிவிக்கின்றோம்!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Thursday, November 15, 2018

கால பைரவரின் பிறந்த நாளைக்(30.11.2018 வெள்ளி) கொண்டாடுவோம்!!!



உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் என்று அனைத்தையும் ஈஸ்வரனின் ஆணைப்படி,ஈசனின் பெயரால் நம்மை ஆட்சி புரிந்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான்!

கால தேவனாக இருப்பவர் இவரே! நவக்கிரகங்களின் தலைவரும் இவரே! 64 வித அவதாரங்களாக இவர் அவதரித்து,மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்,விண் உலகத்தில் வாழ்ந்து வரும் தேவர்கள்,தேவ இனங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,கந்தர்வர்கள் என்று அனைவரது வாழ்க்கையையும் சூட்சுமமாகத் தீர்மானிப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்!

அப்படி உருவான நாள் தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்;

இந்த விளம்பி வருடம்,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளானது 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று வர இருக்கின்றது;

29.11.2018 வியாழக்கிழமை அன்று இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரையிலான நேரம் வரை அஷ்டமி திதி அமைந்திருக்கின்றது;

கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;கி பி 2018 என்பது முழுமையற்ற,தெளிவில்லாத கிரிகோரியன் (கிறிஸ்தவ) காலண்டர் ஆகும்;இந்து தேசமான நமது பாரதத்தில் கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட தவறான காலண்டர் முறை தான் அது;


கடந்த 4 பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே இப்பிறவியில் அனுபவித்துக் கொன்டிருக்கின்றோம்;இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கின்றது;நம் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரக்கணக்கான முற்பிறவி கர்மவினைகளை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது;இதில்,இப்பிறவியில் செய்த,செய்து கொன்டிருக்கும்,செய்ய இருக்கும் கர்மவினைகளும் பாவங்களாகவும்,புண்ணியங்களாகவும் நமது ஆத்மாவில் சேர இருக்கின்றன;

யார் ஒரே பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து முற்பிறவிகளின் கர்மாக்களும்,இப்பிறவி கர்மச்சுமைகளும் அழிக்கப்படுகின்றன;அவர்கள் இனி ஒரு போதும் இந்த பூமியில் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 

அல்லது

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை 

அல்லது

ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்; 

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;

அட்டவீரட்டானங்களுக்குச் செல்லும் பாக்கியம் கிட்டும்;


காசியில் இருக்கும் 64 பைரவர்களையும் நேரில் தரிசனம் செய்யும் பெரும் புண்ணியம் கிட்டும்;64 பைரவர் சன்னதிகளும் கங்கைக் கரையோரத்தில் அமைந்திருக்கின்றன;


உங்கள் வீட்டில் அல்லது உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் பைரவர் சன்னதியில் அல்லது பழமையான விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் பைரவ மந்திரம் ஜபிக்கலாம்;


கால பைரவப் பெருமானின் பிறந்த நாளான 30.11.2018 வெள்ளிக்கிழமை முழுவதும் பைரவ மந்திரம் ஜபிப்பதால்,பைரவரின் அருள் கிட்டும்;


பைரவ மந்திரம் ஜபிக்கத் தேவையான சுய கட்டுப்பாடுகள்;
1.அசைவம் ஒரு போதும் சாப்பிடக் கூடாது;முட்டைவகைகள்,புரோட்டாவும் அசைவமே!
2.மது ஒரு போதும் அருந்தக் கூடாது;
3.பைரவ ஜபம் ரகசிய வழிபாட்டு முறைகளில் ஒன்று;எனவே,பைரவ ஜபம் செய்து வருவதை எவ்வளவு நெருங்கிய நட்பு வட்டத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம்;வெளிப்படுத்தியதால்,பலருக்கு தொடர்ந்து பைரவ ஜபம் செய்ய முடியாமல் போய்விட்டது;


அட்ட வீரட்டானங்கள்:

முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்;
1.திருக்கண்டியூர்
2.திருக்கோவிலூர்
3.வழுவூர்
4.திருப்பரசலூர்
5.திருக்கடவூர் & திருக்கடவூர் மயானம்
6.திருவிற்குடி
7.குறுக்கை
8.திருவதிகை
இந்த ஆலயங்களில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளி அன்று ஒரு மணி நேரம் வரை பைரவ மந்திரம் ஜபிப்பது நன்று;


திரு அண்ணாமலையில் வசிப்பவர்கள் கால பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம் அல்லது இந்த திதி ஆரம்பித்த நேரம் முதல் முடியும் நேரம் வரை கிரிவலம் செல்லலாம்;அப்படி கிரிவலம் செல்லும் போது பைரவ மந்திரம் ஒன்றை ஜபிப்பது நன்று;

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்த குரு நம ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ



Sunday, October 7, 2018

உலகம் முழுவதும் பரவியிருக்கும் முருக கடவுள் வழிபாடு!



உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் படைத்தவர் உருவம் இல்லாத ஈசன்! அந்த ஈசன் சிவலிங்க வடிவில் உலகம் முழுவதும் அருள்பாலித்துவருகின்றார்;கலியுகம் உருவாகும் வரையில்,இன்றைக்கு 5119 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் 1000 கோடி சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;தற்போது,பாரத நாட்டில் மட்டும் 1 கோடி ஆலயங்களாக மிஞ்சி இருக்கின்றன;ஈசனின் முதல் படைப்பு தான் முருகக் கடவுள்!

ஈசனையும்,முருகனையும் மனிதனாகிய நாம் நேரடியாக தரிசிக்க வேண்டும் என்றால்,குறைந்த பட்சம் 12 பிறவிகள் விடாமுயற்சி செய்ய வேண்டும்;அப்படி விடாமுயற்சி செய்தால்,12 வது அல்லது 13 வது பிறவியில் சிவதரிசனம் அல்லது முருகக் கடவுள் தரிசனம் கிடைக்கலாம்;

ரெஜித்குமார் என்பவர் திருச்சூரில் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றார்;இவருக்கு சிறுவயது முதல் முருக பக்தி அதிகம்;இவரது தாயும்,தந்தையும் இறந்த பின்னர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்;அதன் விளைவாக,நாத்திகவாதியாக மாறிவிட்டார்;அப்போதும்,அவரது தேடல் தொடர்ந்திருக்கின்றது;அதன் முடிவாக மீண்டும் முருக பக்தராகவும்,ஆராய்ச்சியாளராகவும் ஆகியிருக்கின்றார்;
பழனிமலைக்கு கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக வருகை தந்து வழிபடுவது வழக்கம்;இது குமரிக்கண்டம் தோன்றியதில் இருந்து (சுமார் 50,00,000 ஆண்டுகள்) இன்றுவரை தொடருகின்றது;

2006 முதல் 2013 வரை திரு.ரெஜித்குமார் உலகம் முழுவதும் பயணித்திருக்கின்றார்;முருக கடவுள் வழிபாடு உலகில் எந்தெந்த நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதை அறியவே பயணம் செய்து ஆதாரங்களையும் வரலாற்றுப் பூர்வமாகவும்,தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் திரட்டிவிட்டார்;

குமரிக் கண்டம் என்ற லெமூரியக் கண்டத்தில் குமரக் கடவுள் என்ற முருகக்கடவுள் வழிபாடு உச்சத்தில் இருந்திருக்கின்றது;மனிதன் நாகரீகம் அடைந்து முதன் முதலில் வாழ்ந்த இடம் குறிஞ்சி!இங்கே வேட்டையாடுவதுதான் மனிதனின் ப்ரதான தொழில்! வேடர் குலப் பெண் வள்ளியை முருகக் கடவுள் திருமணம் செய்தார் என்று வாசித்திருக்கின்றோம்;இதுதான் முதல் ஆதாரம்;


பூடான் நாட்டில் டைகர் மலையானது,திபத் மதத்தின் முதல் மத குரு (ரிம்போச்சே) பத்ம சம்பவர் வாழ்ந்த இடம் ஆகும்;இங்கே முருகக் கடவுள் வழிபாடு இருந்திருப்பதை பத்ம சம்பவர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிய முடிகின்றது;
பாலித் தீவு இந்தோனோஷியாவில் ஒரு பகுதி ஆகும்;இங்கே புரா பெசாகி(PURA BESAKIH) 86 க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன;இங்கே,வாசுகி என்ற நாகம் முருகக் கடவுளை வழிபட்டது;இப்பகுதியில் காணப்படும் புராணக் கதை மூலமாக இதை உணரலாம்;


தாய்லாந்தில் பட்டாயா என்ற இடத்தில் தி ட்ரூத் (Sanctuary of Truth) ஆலயம் சென்ற போது,அங்கிருந்த பழமையான ஓவியத்தில் இருந்த திரு உருவம் முருகப் பெருமானின் ஆதி வடிவை ஒத்திருந்தது;இதை அங்கிருந்த சுற்றுலா வழிகாட்டி தெரிவித்தார்;

இங்கிலாந்தின் டிராகன் மலையின் மண்ணுக்கும்,இலங்கையின் கதிர்காம மண்ணும் ஒரே மாதிரியான மண் அமைப்பைக் கொண்டிருக்கின்றது;

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் உள்ள நீல மலைத் தொடர்களில் (Blue Mountain) செய்த ஆய்வுகளின் முடிவாக குமரிக் கண்டத்தில் நடைபெற்ற பெரும் யுத்தத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன;குமரிக்கண்டத்து மக்கள் எப்போதும் வடக்கு நோக்கியே திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபடுவது வழக்கம்;தினமும் காலையில் வடக்கு நோக்கி(இன்றைய கன்னியாக்குமரியில் இருந்து 2800 கி மீ வரை பரவியிருந்தது குமரிக்கண்டம்) கை எடுத்து கும்பிட்டுவிட்டே அன்றாடப் பணிகளைத் துவக்குவது வழக்கம்;குமரிக்கண்டத்தின் வடக்கு எல்லையில் உயரமான மலைப்பகுதியாக கெந்தமாதன பர்வதம் விளங்கியிருக்கின்றது;1600 களில் இது கடலில் மூழ்கியதால் தான் இன்றைய செந்திலாண்டவர் கோவிலை மூன்று சாதுக்கள் திருச்செந்தூரில் கோவிலாக கட்டினார்கள்;படகோட்டிகள் மூலமாக,திருச்செந்தூர் கோவிலுக்கு நேர் கிழக்காக 2.5 கி மீ பயணித்தால்,கடலுக்குள் மூழ்கி இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றுச் சுவரின் மேல் பகுதியைத் தொட்டுக் கும்பிட முடியும்;


திருச்செந்தூரில் பஞ்சலிங்கத்தை வழிபட்டுவிட்டு,முருகக் கடவுள் அன்றைய போர்க்களத்தில் 2000 கி மீ தொலைவு வரை போரிட்டவாறே சென்று இன்றைய ஆஸ்திரேலியாவின் நீல மலைப்பகுதியில் சூரனை சம்ஹாரம் செய்திருக்கின்றார்;ஒரு ராணுவம் 2000 சதுர கி மீ பரப்பளவுக்கு பரவியிருந்து போரிட்டு இருந்தால் எத்தனை கோடி போர்வீரர்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள்!!!


நீலமலையில் ஜெலோவின் கேவ்ஸ் எனப்படும் குகையில் முருகப் பெருமானின் திருப்பாதம்  பதிந்திருக்கும் இடத்தையும் தரிசிக்கலாம்;
தென் கொரியா,வடகொரியா,மலேசியா,சிங்கப்பூர் என தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் முருகக் கடவுளின் வழிபாடும் சித்தர் பெருமக்களின் நடமாட்டங்களும் இன்று வரை அதிகமாக இருக்கின்றன;


ஆதியில் குமரிக் கண்டத்தில் தோன்றிய குமரக்கடவுள் வழிபாடு,உலகம் எங்கும் மீண்டும் தழைத்தோங்க ஆரம்பிக்கும்;அப்போது,உலகில் சத்தியமும்,தர்மமும் ஓங்கி நிற்கும்;


லயன் மயூரா ராயல் கிங்டம் என்ற அமைப்பை இவர் நடத்தி வருகின்றார்;நன்றி:சக்தி விகடன்,பக்கங்கள் 78 டூ 81,வெளியீடு 9.10.2018 மற்றும் பல முருக பக்தர்கள் மற்றும் முருகக் கடவுள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் வெளியீடுகள்

வேலுண்டு;வினையில்லை;மயிலுண்டு;பயமில்லை;



ஒரு கோடி முறை முருகா,முருகா என்று இப்பிறவிக்குள் யார் ஜபிக்கின்றார்களோ அவர்களுக்கு முருக சித்தர் ஒருவரின் வழிகாட்டுதல் கிடைக்கத் துவங்கும்;

Tuesday, October 2, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    புரட்டாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 2.10.2018 செவ்வாய்க்கிழமை

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை இருக்கின்றது.

 செவ்வாய்க்கிழமை   இராகு காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 மணி வரை அமைந்திருக்கின்றது.



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 31.10.2018 புதன் மதியம் 12 மணி முதல் 1.11.2018 வியாழன் காலை 9.38 வரை

Sunday, September 16, 2018

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!


இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;

இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;
84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;
21.9.2018 வெள்ளிக்கிழமை காலை 4.31 முதல் மாலை 6.30க்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,
மாலை 6.31 முதல் 22.9.2018 சனிக்கிழமை இரவு 8.56 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;
22.9.2018 சனிக்கிழமை இரவு 8.57 முதல் 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

6.10.2018 சனிக்கிழமை மாலை 4.34 முதல் 7.10.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.10 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

21.10.2018 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.11 முதல் 22.10.2018 திங்கட்கிழமை காலை 8.07 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 8.08 முதல் அன்று இரவு 10.13 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

5.11.2018 திங்கட்கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 1.13 முதல் இரவு 9.10 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

20.11.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.16 முதல் மாலை 5.05 வரை ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களும்,மாலை 5.06 முதல் 21.11.2018 புதன்கிழமை மதியம் 1.20 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

4.12.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 1.22 முதல் 5.12.2018 புதன்கிழமை விடிகாலை(செவ்வாய் நள்ளிரவு) 4.13 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;
5.12.2018 புதன் விடிகாலை 4.14 முதல் மதியம் 12.47 வரை விசாகம் (துலாம் & விருச்சிகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

20.12.2018 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 1.54 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷம் & ரிஷபம்) பிறந்தவர்களும்

3.1.2019 வியாழக்கிழமை விடிகாலை 4 மணி முதல் மதியம் 12.09 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 12.10 முதல் 4.1.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.29 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

18.1.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 19.1.2019 சனிக்கிழமை காலை 8.14 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;காலை 8.15 முதல் மதியம் 3.16 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

1.2.2019 வெள்ளிக்கிழமை இரவு 9.04 முதல் இரவு 11.05 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 11.06 முதல் 2.2.2019 சனிக்கிழமை 10.31 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

17.2.2019 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மதியம் 1.42 வரை புனர்பூசம் (மிதுனம் & கடகம்) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.43 முதல் நள்ளிரவு 2.12 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

3.3.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 முதல் 4.3.2019 திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 1.11 முதல் மாலை 5.30 வரை அவிட்டம் நட்சத்திரத்தில்(மகரம் & கும்பம்) பிறந்தவர்களும்;

18.3.2019 திங்கட்கிழமை மதியம் 2.23 முதல் மாலை 6.45க்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மாலை 6.46 முதல் 19.3.2019 செவ்வாய்க்கிழமை 12 மணி வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;

2.4.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.51 முதல் நள்ளிரவு 1.36 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்; நள்ளிரவு 1.37 முதல் 3.4.2019 புதன்கிழமை காலை 11.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் (கும்பம் & மீனம்) பிறந்தவர்களும் கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;
இதில் குறிப்பிடப்படாத நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அடுத்த தமிழ் வருடப் பிறப்பு வரை காத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்;


அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!

ஓம் ரீங் அகத்தீசா! அகத்தீசா!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!