Saturday, August 12, 2017

திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை



திருச்சிற்றம்பலம்
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;
ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த ந்தராய் ஏய்ந்தனை;
வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.
திருச்சிற்றம்பலம்

திருக்கடவூர்மயானம்


திருச்சிற்றம்பலம்
1.வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி 
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே .
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்
கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
செங்கண் வெள் ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,
அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.
3.ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,
காடு அது இடமா உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்,
ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
4.இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின் மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
5.வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத்
துள்ளும் இளமான் மறியார், சுடர் பொன் சடைகள் துளங்கக்
கள்ளம் நகு வெண்தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
6.பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்,
ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார்
கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
7.பாசம் ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,
ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடை மேல் வருவார்;
காசை மலர் போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பேச வருவார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
8.செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்
கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல்
பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
9.வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
10.தூய விடை மேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர், அமணர்,
"பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே.
11.மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.
திருச்சிற்றம்பலம்

திருவாழ்கொளிபுத்தூர்


திருச்சிற்றம்பலம்
1.பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.
2.அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.
3.“பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி” என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.
4.“தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி” என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.
5.“கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி” என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.
6.“அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே!” என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.
7.“அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி” என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.
8.“உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை” என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.
9.“கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி” என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.
10."குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார்,
புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை" என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.
11.கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.
திருச்சிற்றம்பலம்

திருப்பூந்தராய்


திருச்சிற்றம்பலம்
1.பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி
போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து,
வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
2.காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர்
முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு
மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.
3.பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி,
வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு
உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.
4.முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென்
கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த
முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ
மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
5.பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ்
பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு
வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.
6.வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண்
தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப்
பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
7.கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள், புயல் கால்
ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும்
நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய்
போற்றுதுமே.
8.காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன
தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான்
இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
9.கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய்,
கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.
10.கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள்,
கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.
11.“தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன கண்ணியோடு
அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்!” என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை ஞானசம்பந்தன்-ஒண்
தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா,
வினையே.
திருச்சிற்றம்பலம்

கோளறு திருப்பதிகம்




திருச்சிற்றம்பலம்
1.வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
2. என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் *ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
3. உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
4.மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
5.நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
6.வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
7. செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை. நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
8. வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்

திருஅதிகைவீரட்டானம்


திருச்சிற்றம்பலம்
1.கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
2நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்; நினையாது ஒருபோதும் இருந்து அடியேன்;
வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
“அஞ்சேலும்!” என்னீர்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
3பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்! படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், சுடுகின்றதுசூலை தவிர்த்து அருளி
பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர்! பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண் தலை கொண்டு
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மனே!
4முன்னம், அடியேன் அறியாமையினான் முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும் பட்டேன்; சுடு கின்றது சூலை தவிர்த்து அருளீ
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ, தலைஆயவர் அம் கடன் ஆவதுதான்?
அன்னம் நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
5காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால், கரை நின்றவர், “கண்டுகொள்!” என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட, நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்; வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்-புனல் ஆர் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
6சலம், பூவொடு, தூபம், மறந்து அறியேன்; தமிழோடு இசைபாடல்மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்; உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்! உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
7.உயர்ந்தேன், மனை வாழ்க்கையும் ஒண் பொருளும், ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால், வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீ
பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;-அதிகைக்கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
8.வலித்தேன் மனை வாழ்க்கை, மகிழ்ந்து அடியேன், வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை; சங்கவெண் குழைக் காது உடை எம்பெருமான்! கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்;-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
9.பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர்! புரி புன் சடையீர்! மெலியும் பிறை
துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என்போலிகள் உம்மை இனித் தெளியார், அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும்-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
10.போர்த்தாய், அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி-தோல்! புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு, அருள் செய்த அது கருதாய்;
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால், என் வேதனை ஆன விலக்கியிடாய்-
ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!
திருச்சிற்றம்பலம்

நமச்சிவாயத் திருப்பதிகம் காந்தாரபஞ்சமம்


திருச்சிற்றம்பலம்
1.சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
2. பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!
3.விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
4. இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
“விடுக்கிற்பிரால்!” என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கல் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!
5.வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!
6. சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
7. வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
8. இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ள
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
9. முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
10. மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே
திருச்சிற்றம்பலம்