Thursday, April 23, 2015

சம்மர் கோர்ஸ்களில் எதைத் தேர்ந்தெடுப்பது?


பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)

இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)
ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.

தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.

முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!

உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)

தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவம்




உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.
3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.

ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

மன்மத ஆண்டின் (14.4.15 முதல் 13.4.16 வரை) மைத்ர முகூர்த்த நாட்கள்!!!



ஜோதிடம் ஒரு மஹாசமுத்திரம்! அதில் ஒரு சிறு துளியில் ஆராய்ந்து கண்டறிந்த உண்மையை உங்களுக்கு வழங்குவதில்  பெருமைப்படுகிறேன்.

நாம் வாழ்ந்துவரும் கலியுகத்தில் நம் ஒவ்வொருவரும் கடன் அல்லது நோய் அல்லது எதிரிகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருவது நிதர்சனம்;கடனைத் தீர்க்க ஒரு சுலபமான ஜோதிடப் பரிகாரம் இதோ:

நீங்கள் ஒருவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;அந்தக் கடனை அடைக்க கீழே தரப்பட்டிருக்கும் நேரப்பட்டியலில் உள்ள நேரங்களில் அசலில் ஒரு பகுதியை தொடர்ந்து தருவதன் மூலமாக அதன்பிறகு,அந்தக் கடன் வெகுவிரைவில் தீர்ந்துவிடும்;(இந்த நேரத்தில் வட்டி தரக் கூடாது)இந்த நேரத்திற்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்;மைத்ர முகூர்த்தத்தைக் கணிக்க அடியேனுக்கு காலப்பிரகாசிகை என்ற நூல் உதவியது;தஞ்சாவூர் சரபோஜி மஹால் நூலகம் வெளியிடாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது;ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்குத் தீனி போடும் நூல்களில் இதுவும் ஒன்று.

19.4.15 ஞயிறு காலை 6.20 முதல் காலை 8.20 வரை

5.5.15 செவ்வாய் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை

16.5.15 சனி அதிகாலை 4.04 முதல் 6.04 வரை

2.6.15 செவ்வாய் மாலை 5.00 முதல் 7.00 வரை

13.6.15 சனி விடிகாலை 2.15 முதல் 4.15 வரை

29.6.15 திங்கள் மதியம் 2.56 முதல் மாலை 4.56 வரை

9.7.15 வியாழன் இரவு 12.30 முதல் 2.30 வரை

26.7.15 ஞாயிறு மதியம் 1.30 முதல் 3.30 வரை

6.8.15 வியாழன் இரவு 11.00 முதல் 12.51 வரை

23.8.15 சண்டே மதியம் 12.15 முதல் 2.15 வரை

2.9.15 புதன் இரவு 9.04 முதல் 11.04 வரை

19.9.15 சனி காலை 10.04 முதல் 12.04 வரை

29.9.15 செவ்வாய் இரவு 7.34 முதல் 9.34 வரை

10.10.15 சனி காலை 6.34 முதல் 8.34 வரை

10.10.15 சனி மதியம் 12.34 முதல் 2.34 வரை

10.10.15 மாலை 6.34 முதல் 8.34 வரை

16.10.15 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை

17.10.15 சனி காலை 8.08 முதல் 10.08 வரை

27.10.15 செவ்வாய் மாலை 5.34 முதல் 7.34 வரை

13.11.15 வெள்ளி காலை 6.24 முதல் 8.24 வரை

23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை

10.12.15 வியாழன் காலை 6.00 முதல் 6.30 வரை

21.12.15 திங்கள் மதியம் 1.45 முதல் 3.45 வரை

6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை

7.1.16 வியாழன் காலை 4.40 முதல் 6.40 வரை

17.1.16 ஞாயிறு மதியம் 12.00 முதல் 2.00 வரை

2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை

6.2.16 சனி காலை 6.00 முதல் 6.30 வரை

6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை

6.2.16 சனி மாலை 4.30 முதல் 6.30 வரை

6.2.16 சனி இரவு 10.30 முதல் 12.30 வரை

13.2.16 சனி காலை 10.43 முதல் 12.00 வரை

20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை

20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை

20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை

29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை

1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 11.22 வரை

12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை

28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை

8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை

இந்த நேரங்கள் தமிழ்நாடு,இலங்கை மற்றும் தென் மாநிலங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்;அயல் நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடன் வாங்கியிருந்தால் இந்திய நேரத்தைப் பயன்படுத்தவேண்டும்;இந்தியாவில் வாழ்பவர்கள்(மேலே கூறப்பட்டிருக்கும் மாநில மக்களுக்கு மட்டும்) அயல்நாடுகளில் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி அசல் பணபரிவர்த்தனையைச் செய்தால் கடன் படிப்படியாகத் தீரும்;வங்கிக்கடன் களுக்கும் இந்த மைத்ரமுகூர்த்தம் பொருந்தும்;

கந்துவட்டிக்குப் பொருந்தாது;
கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை:கவனக்குறைவு என்பதும் நமது கர்மவினையால் உருவாகும் ஆளுமைத்திறன் குறைபாடே!


கை.வீரமுனி,ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் 27 வருட ஜோதிடர்.

நம் ஒவ்வொருவரையும் ஜீனியஸ் ஆக்கும் புத்தக வாசிப்பு. . .பாகம்1



உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி அடியேனுக்கு உண்டு;ஏனெனில்,கடந்த 27 ஆண்டுகளாக பொது மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது ஜாதகங்களைப் பார்த்து பலன் சொல்லி,அவர்களின் கஷ்டங்கள் தீர ஜோதிட ஆலோசனை சொல்லி பலர் நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்;அடிக்கடி சந்தித்து ஜோதிட ஆலோசனை பெறுபவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனையும்,ஆன்மீக வழிகாட்டுதலும் செய்வது வழக்கம்;

சுமாராக ஆயிரம் குடும்பத்தினருக்கு ஜோதிட ஆலோசனை கூறி அவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தாலும் அடியேனை இப்பூமிக்கு அனுப்பிய இறைவன்,ஒரு பொறுப்புள்ள ஜோதிடராக மட்டும் உருவாக்கவில்லை;அனுபவம் மிக்க ஆலோசகராகவும்,சிலபல அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,ஆன்மீகவாதிகள்,கூட்டுக்குடும்பத்தார்களுக்கு அந்தரங்க மந்திரியாகவும் உருவாக்கியிருக்கிறார்;அப்படி உருவாகக் காரணம் புத்தகவாசிப்பு என்ற பழக்கம் தான்!

ஜோதிடர்தான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதில்லை;

இந்த பாரத நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும்,

தனது குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும்

அடுத்த பத்தாண்டுகளில் ஒரு தலைசிறந்த பணியாளராகவோ,அல்லது தலைசிறந்த தொழிலதிபராகவோ ஆக விரும்பும் ஒவ்வொருவரும்

சமூகசேவையில் பிரபலமடைய விரும்பும் ஒவ்வொருவரும்
நமது பாரத நாட்டின் பெருமைகளை அறிய விரும்பும் ஒவ்வொருவரும்

உலகத்திலேயே தலைசிறந்த வலைப்பூ நடத்திட விரும்பும் ஒவ்வொருவரும்

நமது தமிழ் மொழி,இந்து தர்மம்,ஜோதிடம்,சித்தமருத்துவம்,ஆயுர்வேத மருத்துவம்,வாஸ்து,ஆலய வாஸ்து,தேசபக்தி,இறைவனைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள்,ஜோதிடத்தில் ரகசியங்களைக் கண்டறிய விரும்புவோர்,சமஸ்க்ருத மொழியின் பெருமைகளை உலகம் முழுக்கப் பரப்ப விரும்புவோர்,வரலாறு படைக்க விரும்புவோர்,பலதுறை வித்தகராக இருக்க விரும்புவோர் ஒவ்வொருவரும்

உங்கள் குழந்தை 21 வயதைத் தொடும் போது மற்ற குழந்தைகளை விடவும் மேதையாக இருக்க விரும்பும் ஒவ்வொருவருமே

புத்தகவாசிப்பை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்;அடியேனது புத்தகவாசிப்புப் பழக்கம் பற்றியும்,அடியேனை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த புத்தகங்களைப் பற்றியும் குறிப்பிடவிரும்புகிறேன்.

1987 ஆம் ஆண்டில் தினசரி செய்தித்தாள்கள் வாசிக்கத் துவங்கினேன்;அதுதான் புத்தகவாசிப்பின் ஆரம்ப முனை;அப்போது அடியேன் எட்டாம் வகுப்பு படித்த ஒரு சராசரி மாணவன்;ஒரு போதும் பத்து ரேங்க்குக்குள் வந்ததில்லை;அப்போதைய தினகரனில் வந்த ஒரு பெட்டிச் செய்தி அடியேனை ஆச்சரியப்பட வைத்தது;

திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமம்;அங்கே ஒரு விவசாயி மார்கழி மாதத்தில் ஒரு நாளில் அதிகாலை 5 மணிக்கு தனது விவசாயப் பண்ணைக்குச் சென்றிருக்கிறார்;அவரை ஒரு பாம்பு கடித்துவிட்டது;அப்படி கடித்த பாம்பு சில நிமிடங்களில் இறந்துவிட்டது;இதுதான் அந்தச் செய்தி;
கடந்த 25 ஆண்டுகளாக அந்த விவசாயி(அதாவது 1962 முதல் 1987 வரை) தினமும் வேப்பமரத்தில் இருந்து வேப்பங்கொழுந்துகளைப் பறித்து,ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்குச் சாப்பிடுவாராம்;அதுவும் ஒரு நாள் கூட இப்படிச் சாப்பிடாமல் இருந்ததில்லை;காலையில் பல் துலக்கியதும் அவர் சாப்பிடுவது இதை மட்டும் தான்;

இந்தச் செய்தியை வாசிக்கும் நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்;1987 முதல் இன்று 2015 வரை இந்தச் செய்தி தொடர்பாக பலரிடம் சந்தேகம் கேட்டிருக்கிறேன்;இதுவரை அவர்கள் சொன்னக் கருத்துக்களை ஒரு 100 பக்க புத்தகமாகவே வெளியிடலாம்;நீங்கள் இது தொடர்பாக அறிய உங்கள் நட்பு வட்டத்தில் கேட்டு விசாரித்துக் கொள்ளுங்கள்;

1988 ஆம் ஆண்டில் நான் வாசித்த முதல் நாவல்:-
ஏழை படும் பாடு;எழுதியவர் கவியோகி சுத்தானந்தபாரதியார்;இது பிரெஞ்ச் மொழியிலலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்;இந்த நாவலை எனது பாட்டிவீட்டு மாடிப்படியில் அமர்ந்து நான்கு மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன்;ப்ரெஞ்ச் புரட்சியின் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு காதல் புதினம்.இதை வாசித்து முடித்ததும் எனக்குள் காதல் உணர்வு உண்டானது;ஆமாம்! யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது;

1989,1990,1991 மூன்று ஆண்டுகளில் பள்ளி ஆசிரியர்களின் பிரம்படியும்,மிரட்டலும் எனக்குள் இருந்த துணிச்சலை கொன்றுவிட்டது;1991 இல் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்டமத்துச்சனியின் பிடியில் இருந்ததை உணர்ந்தேன்;அது என்ன அஷ்டமத்துச்சனி? இந்தக் கேள்விக்குரிய முழுமையான விடையை அறிந்து கொள்ள எனக்கு பத்து ஆண்டுகள் ஆயின;ஏனெனில்,நான் வாழ்ந்த அடிமட்ட சமுதாயத்தில் சிந்திக்கும் திறன் உள்ளவர்களை கிறுக்கன் என்றார்கள்;கூர்மையாக கேள்வி கேட்டால் அதற்குப் பதில் சொல்லாமல் பொறாமை என்ற முகமூடியால் என்னைத் தாக்கினார்கள்;1991 முதல் ஜோதிடம் பார்க்கத் துவங்கினேன்;அப்படிப் பார்க்கத் துவங்கும் முன்பு எவரிடமும் ஜோதிடம் கற்றுக் கொள்ளவில்லை;2006 ஆம் ஆண்டில் சந்தித்த ஒரு அருள்வாக்கு சொல்பவர் மூலமாக “நான் போன பிறவியிலேயே ஜோதிடராக இருந்தேன்” என்பதை அறிய முடிந்தது;

1991 முதல் 1994 வரை சென்னயில் இளங்கலை பொருளாதாரம் பயிலும் பாக்கியம் பெற்றேன்;எங்கள் ஊரில் வாழ்ந்து வந்த அய்யாப்பிள்ளை(இது அவர் பெயர்:) என்ற பிரபல ஜோதிடரிடம் எனது அப்பா எனது ஜாதகத்தைக் காட்டினார்;அவர் நிச்சயமாக உன் மகன் கடலோரம் சென்று பட்டப்படிப்பு படிப்பான் என்று சொல்லியிருக்கிறார்;அதன் பிறகே தைரியமாக என்னை சென்னையில் பட்டப்படிப்பு படிக்க கொண்டுவந்து விட்டார்;அய்யாப்பிள்ளையிடம் ஜோதிடம் பார்க்க தமிழ்நாடு முழுவதும் இருந்து காரில் பலர் வருவார்களாம்;அவர் அவ்வளவு பிரபலம்;அவரிடம் ஜோதிடமும் சிலர் கற்றுள்ளனர்;
17 ஆண்டுகளாக வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்று வந்த என்னால் முதல் வருடம் வரை சென்னையில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை;ஏனெனில்,எப்பப் பார்த்தாலும் அம்மா,அப்பா நினைவு வந்து கொண்டே இருந்தது;அந்த நினைவுகளை மறக்க இரண்டு காரியங்கள் செய்து சமாளித்தேன்;ஒன்று தினமும் அம்மா,அப்பாவுக்கு இன்லாண்டு லட்டர் எழுதுவது;இரண்டு கல்லூரி நேரம் போக மீதி நேரம் முழுக்க கல்லூரி நூலகத்திலேயே இருந்து பழமையான நூல்களை வாசிப்பது;

மூன்று ஆண்டுகளில் சுமாராக 2000 நூல்களை வாசித்துவிட்டேன்;அதில் என்னை சுமாராக மூன்று மாதங்கள் வரை தூங்கவிடாமல் செய்த புத்தகம் ஒன்றே ஒன்றுதான்;அந்த புத்தகத்தை விவேகானந்த கேந்திரம் 1960 வாக்கில் வெளியிட்டிருந்தது;அந்த புத்தகத்தின் பெயர்:ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல்; சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களின் தொகுப்பு;தொகுத்தவர் ஏக்நாத் ரானடே ;அது எப்படி ஏக்நாத் ரானடே என்பவர் தமிழ்நாட்டிற்கு வந்து சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களைத் தொகுத்தார்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது;கல்லூரிப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,வகுப்புத் தோழர்கள் என சகலரிடமும் இந்த சந்தேகத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்;பலருக்கு பதில் தெரியவில்லை;ஒரே ஒருவருக்குத் தெரிந்திருந்தது;அவர்தான் வி.பா.பிரபாகர்;முதலாம் ஆண்டு பயாலஜி படிக்கும் மாணவர்; அப்போது நான் இரண்டாம் ஆண்டு மாணவர்;இவரது அறிமுகம் எனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது;அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னை,எனது சிந்தனையை,எனது வாழ்க்கையை அடியோடு மாற்றியவர் இவர்;
அவர் 40 பக்கங்கள் கொண்ட சிறு,சிறு கையேடுகளைத் தந்து என்னை வாசிக்க வைப்பார்;அந்த கையேடுகளின் பெயர்கள் இன்றும் நினைவில் இருக்கிறது;

1.ஆரிய மாயை,திராவிட மாயை ஒரு கட்டுக்கதை
2.நான் ஏன் நாத்திகனானேன்?=ஈ வே.ரா.,
3.ஓம் சக்தியும்,அணு சக்தியும்
4.ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடரை வாசிக்கச் சொன்னார்;அதுதான் வந்தார்கள்;வென்றார்கள்
மேலும் சில புத்தகங்களை அவர் பரிந்துரைத்தாலும் அவைகளில் பலவற்றை இன்று வரை வாசிக்கமுடியவில்லை;ஏனெனில்,இன்றுவரையிலும் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை;

மீண்டும் சந்திப்போம். . .

இன்று உலக புத்தக தினம்!!!
எனவே புத்தகம் வாசிப்பதை ஒரு அனிச்சை செயலாக்குவோம்;மேதை ஆவோம்;

இப்படிக்கு உங்கள் கை.வீரமுனி.


Monday, March 9, 2015

தட்சிண பஞ்ச பூதஸ்தலங்கள்




தென் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கோஷம் மனித இனம் நாகரீகம் அடைந்தது முதல் இன்று வரையிலும் சிவாலயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது;உலகின் ஆதி தெய்வம் ஈசன் எனப்படும் சிவன் என்பதற்கு இந்த கோஷமே முதல் ஆதாரம் ஆகும்; எல்லாம் சிவன் செயல் என்பதும்,சிவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் பிற்காலத்தில் வேறுவிதமாக திரிக்கப்பட்டன;

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் மறைமுகமாக இயக்கிவருவது நவக்கிரகங்கள்;இந்த நவக்கிரகங்களை வழிநடத்துவது பஞ்சபூதங்கள்;இந்த பஞ்சபூதங்களாக இருந்து உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இவைகளில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஆதிசிவன் ஆவார்.பஞ்சபூதத் திருத்தலங்களாக அண்ணாமலை(அக்னி);திருவானைக்கா(நீர்);சிதம்பரம்(ஆகாயம்);காஞ்சிபுரம்(நிலம்);திருக்காளஹஸ்தி(வாயு) இருக்கின்றன;இவைகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஐந்து சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன;

அக்னிஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூரும்,நீர்ஸ்தலமாக தாருகாபுரமும்;நில ஸ்தலமாக சங்கரன் கோவிலும்;வாயுஸ்தலமாக தென் மலையும்;ஆகாயஸ்தலமாக தேவதானமும் அமைந்திருக்கின்றன;
வானியல்படி செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து தமிழ்நாடு விலகியிருப்பதால்,செவ்வாய் தோஷம் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு தருவதில்லை;அதே சமயம் செவ்வாய்க்கிரகத்தின் பார்வை தமிழ்நாட்டின் மீது படிவதால் உலகம் முழுவதும் இருந்து சித்தர்கள் இங்கே வருகை தந்து முக்தி பெற்றனர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத சேதி!

எப்போதெல்லாம் பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை (பூமியின் மொத்த மக்கள் தொகையில்) குறிப்பிட்ட சதவீதத்திற்கும் கீழாக வருகிறோதோ அப்போதெல்லாம் தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பதை தேவாரப்பதிகங்களில் ஒன்று தெரிவிக்கிறது;எனவே,தமிழ்நாட்டின் தெற்கு நீர்ஸ்தலமான தாருகாபுரத்தின் பெருமைகளை நாம் முதலில் அறிவோம்:
திருச்சிக்கு அருகில் அமைந்திருக்கும் திருவானைக்காவுக்கு இணையான நீர்ஸ்தலம் இந்த தாருகாபுரம்;ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் வாசுதேவநல்லூருக்கும் புளியங்குடிக்கும் நடுவே சாலையில் இருந்துவிலகி 2 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது;தாருகன் என்ற அசுரன் இந்த ஆலயத்திற்கு வந்து சிவ வழிபாடு செய்து சாப நிவர்த்தி பெற்றான்;அதனால் இதற்கு தாருகாபுரம் என்ற பெயர் தோன்றியது;சுமாராக 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருநகரமாக விளங்கியிருக்கிறது;சில நூற்றாண்டுகள் வழிபாடு விடுபட்டுப் போனது;பின்னர்,மானாபுரப் பாண்டியன் என்ற மன்னனால் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது;

நவக்கிரக அதிபதிகள் வட்டவடிவில் அமர்ந்து கவனிக்க, அவர்களுக்கு  தட்சிணாமூர்த்தி போதித்துக் கொண்டிருக்கிறார்;இப்படிப்பட்ட விசேஷமான தட்சிணாமூர்த்தி வடிவம் உலகத்திலேயே இங்கே மட்டும்தான் காணப்படுகிறது;இந்த தட்சிணாமூர்த்தியை மூன்று வியாழக்கிழமைகளுக்கு இங்கே வந்து குரு ஓரையில் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும்;தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் துண்டு சார்த்தி,சுயஜாதகத்தை பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்;கொண்டைக்கடலையை அவித்து பிரசாதமாக வைக்க வேண்டும்;அர்ச்சனைக்குப் பின்னர் கொண்டைக்கடலையில் பாதியை பிரசாதமாக வாங்கிக் கொண்டு அங்கே வருபவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;இப்படிச் செய்வதன் மூலமாக குரு கிரகத்தின் பலம் அதிகரிக்கும்;குரு கிரகம் சார்ந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும்;
இங்கே இருக்கும் மூலவரின் பெயர் அருள்மிகு மத்தியஸ்தநாதர்;இறைவியின் பெயர் அருள்மிகு அகிலாண்ட நாயகி.இந்த மூலவருக்கு நேர்கீழாக பூமிக்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்;இவர் அருள்மிகு மத்தியஸ்த நாதருக்குச் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறார் என்பது இப்பகுதி மக்களின் ஆயிராமாண்டு நம்பிக்கை ஆகும்;
இவ்வாலயத்தை தலைவன் கோட்டை ஜமீன் தார்கள் காலம் காலமாக பராமரித்து வருகின்றனர்;மாமரம் இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக அமைந்திருக்கிறது.இங்கே உள்ள பைரவருக்கு அக்னி பைரவர் என்று பெயர்;இவர் பில்லி ஏவல் சூனியங்களும் நீக்கும் பைரவப் பெருமானாக அருள்பாலித்து  வருகிறார்;

நிலஸ்தலம் சங்கரன் கோவில்:ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் விதமாக இங்கே சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சியளிக்கிறார்;பார்வதிதேவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒரு ஆடி மாத உத்திராடம் நட்சத்திரநாளன்று(ஆடி பவுர்ணமி) இவ்வாறு சங்கரநாராயணர் பார்வதிதேவிக்குக் காட்சியளித்தார்;பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியன்று ஆடித்தவசு திருவிழாவாக இப்பகுதி மக்கள் இதைக் கொண்டாடிவருகின்றனர்;

கேது தோஷங்களை நீக்கும் ஸர்ப்ப கணபதியும்,ராகுவின் தோஷங்களை நீக்கும் ஸர்ப்ப பைரவரும் இங்கே அருள்பாலித்து வருகின்றனர்;சதயம் நட்சத்திரத்திற்குரிய பைரவ ஆலயமாக சங்கரன் கோவில் விளங்குகிறது;
முற்காலத்தில் பொருநை ஆற்றங்கரையில் உக்கிரமப்பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது;இந்த ஆலயத்தின் கோபுரம் 125 அடி உயரமும்,9 நிலைகளும் கொண்டது;கோமதியம்பிகையின் சன்னதியின் எதிரே ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது;வாசியோகம் பயில்வோர்,தினமும் பிராணயாமம் செய்பவர்கள் இந்த சக்கரத்தின் மீது அமர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் கோமதியம்பிகையை எண்ணி தியானம் செய்தால் அவர்கள் அடுத்த நிலையை எட்டுவர்;
இங்கு அக்னித்தீர்த்தம்,அகத்தியர் தீர்த்தம்,சூர்யதீர்த்தம்,சந்திரத் தீர்த்தம்,இந்திரத்தீர்த்தம் என்று ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன;
சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திர நாளில் இங்கே அமைந்திருக்கும் சர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அப்படி எட்டு முறைச் செய்தால் அவர்களது அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;108 முறை அவ்வாறு செய்தால் இப்பிறவியிலேயே தகுந்த ஆன்மீககுருவை அடைவார்கள்;

ஸ்தலவிருட்சமாக புன்னை மரம் இருப்பதால் இந்த ஆலயத்தின் பழைய பெயர் ஆதி புன்னைவனம் என்று இருந்தது;
இங்கு புற்று மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது;இதனால் சங்கரநாராயணருக்கு வன்மீக நாதர் என்ற பெயரும் உண்டு;
அமைவிடம்:ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் சாலையில் சங்கரன் கோவில் அமைந்திருக்கிறது.

அக்னிஸ்தலம் கரிவலம்வந்தநல்லூர்:
இந்த ஆலயத்தின் முன் மண்டபம் மாவீரன் புலித்தேவனால் கட்டப்பட்டது;1928 ஆம் ஆண்டில் திரு.அருணாச்சலம் செட்டியார் என்பவர் இந்த ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தையும்,கிழக்கு மண்டபத்தையும் கட்டினார்;குடமுழுக்கையும் செய்தார்;இவரது சிலை இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது;இவர் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்தவர்;இந்த ஆலயத்தின் கிளாமரம் பூக்கும்;ஆனால் காய்ப்பதில்லை;
அகத்தியர் பராசக்தி பீடத்தை மூன்று இடங்களில் ஸ்தாபித்தார்;அவை குற்றாலம்,வேதாரண்யம் மற்றும் கரிவலம்;
மனிதனுக்கு சிவன் சிரார்த்தம் செய்த இடங்கள் இரண்டு;ஒன்று அண்ணாமலை;மற்றது கரிவலம்;அண்ணாமலையில் வல்லாளமகாராஜாவுக்கு தகப்பனாக இருந்து சிரார்த்தம் செய்தார்;கரிவலத்தில் வரகுணராமபாண்டியனுக்கு மகனாக இருந்து சிரார்த்தம் செய்திருக்கிறார்;வரகுணராமப்பாண்டியன் பதிற்றுப்பத்து அந்தாதி,வெண்பா அந்தாதி,கலித்துறை அந்தாதி என 300 அந்தாதிப்பாடல்களைப் பாடியுள்ளார்;இதை குட்டித் திருவாசகம் என சைவ மரபினர் இன்றும் போற்றிப்பாடிவருகின்றனர்;

ஈசனுக்குத் தெற்கே ஸ்தாபிக்கப்படும் அம்மன் அளவற்ற வரங்கள் அருளும் சக்தியுள்ளவளாகத் திகழ்வாள் என்பதை கோவில் ஆகமவிதிகள் தெரிவிக்கின்றன;இந்த விதிப்படி இங்கே பால்வண்ணநாதருக்குத் தெற்கே ஒப்பனையம்மாள் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;ஆவணி மாதத்தில் வரும் பூராட நட்சத்திரதினத்தன்று இங்கே தவசு(சங்கரன் கோவிலைப் போல) நடைபெற்று வருகிறது;

ராமாயணப் போரில் இராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் வதம் செய்தான்;அதனால் லட்சுமணனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது;லட்சுமணன் இங்கே வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெற்றான்;அதனால் லட்சுமணேசுவரர் என்ற லிங்கம் இன்றும் இங்கே காணப்படுகிறது;ராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆவதாக இன்றைய நவீன அறிவியல் தெரிவிக்கிறது;இதன் மூலமாக கரிவலம் அருள்மிகு பால்வண்ணநாதர்+அருள்மிகு ஒப்பனையம்மாள் என்ற   அழகிய சுந்தரியம்மாள் ஆலயத்தின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்;

அகத்தியர் ஸ்தாபித்த பராசக்திபீடமானது தற்காலத்தில் புத்திர தோஷத்தை நீக்கும் அன்னையாகவும்,திருமணத்தடையை தகர்க்கும் அருள் சக்தியாகவும் மிளிர்கிறது;திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் 48 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே விரதம் இருக்கவேண்டும்;இந்த விரத நாட்களில் அசைவம் சாப்பிடுவதையும்,பழைய உணவு உண்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்;48 ஆம் நாள் அன்று இங்கு வருகை தந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து,புடவை சார்த்த வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் இங்கே தரப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்;இப்படிச் செய்தால்,அடுத்த 90 நாட்களில் திருமணத்தடை இருப்பவர்களுக்கு அது நீங்கி சிறந்த வரன் அமையும்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களுக்கு அந்த தோஷத்தை அன்னையானவள் வாங்கிக் கொண்டு மழலைச் செல்வம் அருளுவாள்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர் இருவருமே இந்த விரதத்தை மேற்கொள்வது நன்று.அகத்தியர் பராசக்தி பீடத்தை ஸ்தாபித்த மற்ற ஆலயங்கள் குற்றாலம் மற்றும் வேதாரண்யம்.

வாயுஸ்தலம் தென்மலை:அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரர்+அருள்மிகு சிவபரிபூரணியம்மாள்
ராஜபாளையத்தில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இந்த கிராமத்திற்குச் செல்கின்றன;மேற்கு நோக்கிய சிவாலயங்கள் பரிகாரக் கோவில்களாகும்;இவர் மேற்கு நோக்கி அமைந்திருப்பதால் நமது கர்மவினைகள்,சாபங்கள்,துயரங்களை நீக்கிவருகிறார்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இங்கே நடைபெறும் கிரிவலம் பிரபலமானது;ஏராளமான சித்தர்கள் இங்கே சூட்சுமமாக வந்து வழிபடுவது வழக்கம்;
ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வர வேண்டும்;அல்லது அவரவர் ஜன்ம நட்சத்திரதினத்தன்று வருகை தந்து மூலவருக்கு அர்ச்சனை செய்தாலே போதுமானது;ஸர்ப்ப தோஷம் விலகிவிடும்;பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களின் ஸர்ப்ப தோஷத்தை தென்மலை திருபுரநாத ஈஸ்வரர் நீக்கியவர் என்பதால் இப்பகுதி மக்கள் தமக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு இவரது பெயரையே வைப்பது வழக்கம்;

அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தில் சில ஆண்டுகளாக வழிபாடு தொடர இயலாமல் இருந்தது;அந்தக் கால கட்டத்தில் இந்த ஆலயத்தின் காவலாளியிடம் சிறுமி வடிவில் வந்து அன்னை சிவபரிபூரணியம்மன் உண்ண உணவு வாங்கியிருக்கிறார்;இதை இன்றும் இப்பகுதி மக்கள் பெருமையாகச் சொல்வது வழக்கம்;
மூலஸ்தானத்தினுள் ஜன்னல் கிடையாது;மூலவருக்கு அருகில் ஐந்து சர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது;இதில் முதல் தீபம் மட்டும் ஒரு நிமிடம் பிரகாசமாக எரியும்;மறுநிமிடம் அணைவது போல சுருங்கும்; அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரரின் மூச்சுக்காற்றுதான் இப்படி முதல் தீபத்தை துடிக்க வைக்கிறது என்பது இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால நம்பிக்கை ஆகும்;

அதே போல இங்கே அமைந்திருக்கும் அன்னை சிவபரிபூரணிக்கு வியர்ப்பது வழக்கம்;ஈசன் தம்பதியாக இங்கே சூட்சுமமாக வசித்து வருவதற்கு இந்த இரு சம்பவங்களே  ஆதாரங்கள் ஆகும்;
ஸ்தல விருட்சம் வில்வமரம்
சிவகிரி நாச்சியார் அறக்கட்டளையினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்;

ஆகாயஸ்தலம் தேவதானம்:இறைவன்:அருள்மிகு நச்சாடைதவிர்த்து அருளிய நாதர்;இறைவி:அருள்மிகு தவம்பெற்ற நாயகி
ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் 16 வது கி.மி.தொலைவில் தேவதானம் அமைந்திருக்கிறது;இந்த கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ.தொலைவில் வயல்வெளிக்கு நடுவே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது;

பல நூற்றாண்டுகளாக இங்கே 7 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன;பார்வதி தேவி ஆகாயம் நோக்கித் தவம் செய்ய இங்கே உருவான சுயம்புலிங்கமே நச்சாடைத் தவிர்த்து அருளிய நாதராகத் திகழுகிறார்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,பாண்டிய நாட்டு மன்னன் பராக்கிரமப் பாண்டியனுக்கும்,சோழ நாட்டு மன்னன் விக்கிரம சோழனுக்கும் போர் மூண்டது;வருடக்கணக்கில் போர் மூண்டதால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மாண்டனர்;ஆனால்,போர் முடிவுக்கு வரவில்லை;எனவே,விக்கிரமச் சோழன் ஒரு தந்திரம் செய்தான்;நச்சுச்செடிகளிலிருந்து பிழியப்பட்ட சாறுகள் கலந்த ஒரு பட்டு ஆடையைத் தயார் செய்து பராக்கிரமப் பாண்டியனுக்கு பரிசாக அனுப்பி வைத்தான்;அவ்வாறு அனுப்பியதை கனவில் பராக்கிரமப் பாண்டியனுக்கு தேவதான ஈசன் தெரிவித்ததோடு,அந்தப் பட்டு ஆடையை வாழைத்தண்டு மூலமாக எடுத்து என்மீது போர்த்திவிடு என்று அருளிமறைந்தார்;தன்னைக்  காத்த ஈசனை பராக்கிரமப் பாண்டியன் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் என்று போற்றி வழிபட்டு வந்தார்;அவரது பரம்பரையினரும் அந்த நன்றியுணர்வோடு இன்றும் வழிபட்டு வருகின்றனர்;

ஓம் ஆம் ஹெளம் செள
ஒம் அருணாச்சலாய நமஹ

Monday, December 22, 2014

ஜீவ சமாதியும் ஆலய வழிபாடும்



ஆதிசிவன் என்று அழைக்கப்படும் அண்ணாமலையைத் தவிர,இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களுமே ஆவிநிலையில் இருப்பவையே! சராசரி மக்களிடம் இதைச் சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகம்;

பூமியில் இதுவரை இருக்கும் மதங்களிலும்,இனிமேல் உருவாகப் போகும் மதங்களிலும் இருக்கப் போவது ஒரே ஒரு கருத்துதான்:- இறைவன் ஒருவனே!

அந்த ஒரு இறைவனை மனிதர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்;
மனித நிலையில் இருந்து இறைநிலையை அடைய முயலும் போது ஏராளமான ஆன்மீக முன்னேற்றங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது;அப்படி முன்னேறும் போது உருவாகும் ஒரு நிரந்தர நிலையே சித்தர்கள் நிலை;

ஒரு சித்தர்  பிறவி முழுவதும் எந்த தெய்வத்தை வழிபட்டாரோ,அந்த தெய்வம் இருக்கும் இடமே நாம் வாழும் கலியுகத்தில் பிரபல கோவிலாக வளர்ந்திருக்கிறது;

உதாரணமாக போகர் தனது வாழ்நாள் முழுவதும் முருகக் கடவுளை வழிபட்டார்;அதனால் அவர் வழிபட்ட முருகக்கடவுள் பழம் நீ என்ற பெயரில் பிரபலமான ஆலயமாக ஆகியிருக்கிறது.இன்றும் பழனிமலைக்கு அடியில் ஒரு குகையில் போகர் சித்தர் தவம் செய்வதாகவும்,கலியுகம் முடியும் போது அவர் வெளியே வருவார் என்றும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்;

படத்தில் நீங்கள் பார்ப்பது குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;இவர் ஒரு பிறவி முழுவதும் வினாயகரை வழிபட்டு வந்துள்ளார்;


இன்னும் நிறைய பார்ப்போம். . .

உலக நாடுகளுக்கு எல்லாம் குரு நமது இந்தியா!!!



உலகிலேயே அதிகமான நீரழிவு நோயாளிகள் வாழும் நாடு நமது பாரதம்! இந்த முதலிடத்தை கி.பி.2050 வரையிலும் தொடர்ந்து ‘தக்க’ வைக்கும் என உலக மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களும்,ஆய்வறிக்கைகளும் தெரிவிக்கின்றன;இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
சுதந்திரம் அடையும் முன்பு கோவா கடற்கரையில் ஒரு ஆங்கிலேயத் தளபதிக்கும் நமது நாட்டு மகாராஜாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இதற்கான பதில் மறைந்திருக்கிறது.
நமது நாட்டு மஹாராஜா ஒருவர்,தனது ‘நண்பரான’ ஆங்கிலேயத் தளபதியிடம், “ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?” எனக் கேட்டார்.
அதற்கு அந்த ஆங்கிலேயத் தளபதி, “அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவர்தம் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக் கொள்;அது போதும்”என்றான்.
இணையம்,செல்போன்,வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட் என்று தகவல் யுகத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர்களுக்கு சித்தர்கள் எழுதிய சர நூல் சாஸ்திரம்,போகர் 7000,திருமூலரின் திருமந்திரம்,மலைவாடகம்,முப்பு,மூலிகை ஜாலரத்தினம்,பதார்த்த குணசிந்தாமணி போன்ற நூல்களைப் பற்றித் தெரியும்?
சாதாரண ஜலதோஷத்தைப் போக்கி ஆரோக்கியமான சுவாசத்தை ஒரு வெங்காயமும்,கொஞ்சம் வென்னீரும் சில நிமிடங்களிலேயே தரும் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
1980களில் “மேற்கு”நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும்,ஆலிவ் எண்ணெயும் அதிகமாக உற்பத்தி  செய்யப்பட்டன;இவைகளை வீணாக்காமல் எப்படி ‘காசு பார்ப்பது?’ என யோசித்தார்கள்.அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் விளம்பரங்கள்,டாக்டர்களின் அறிவுரைகள்,ஹெல்த் கட்டுரைகள்,இலவச மருத்துவக் குறிப்புகள் மூலமாக நமது நாடு முழுக்க=காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை;குஜராத் முதல் அஸ்ஸாம் வரை இந்த எண்ணெய்கள் “ஆரோக்கிய அந்தஸ்தை” பெற்றன;

சுமாராக 20,00,000 ஆண்டுகளாக நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்த நல்லெண்ணெயும்,தேங்காய் எண்ணெயும் தினசரி பயன்பாட்டில் இருந்து காணாமல் போகத் துவங்கின;கி.பி.2010 இல் அதே ‘மேற்கு’ நாடுகளின் ஆராய்ச்சிகள் உலகில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் எண்ணெய் நல்லெண்ணெய் என்பதை நிரூபித்தன;எண்ணெய்களின் அரசி நல்லெண்ணெய் என்றும் சான்றளித்தன;(தற்காலத்தில் நாம் பயன்படுத்தப்பட்டு வரும் பேக்கிங்கில் வரும் நல்லெண்ணெய்க்கும்,தேங்காய் எண்ணெய்க்கும் இந்த குணம் கிடையாது;செக்கில் ஆட்டப்பட்டு கிராமங்களிலும்,இயற்கை விளைபொருட்கள் கடைகளிலும் கிடைக்கும் எண்ணெய்களுக்கு மட்டுமே இந்த குணம் பொருந்தும்)