Monday, July 29, 2019

ஆன்மீகத் தொண்டிலும்,கடமையிலும் ஏன் தொடர் முயற்சி தேவை?





ஆன்மீகத் தொண்டிலும் ஏன் தொடர் முயற்சி தேவை?

உங்களுடைய கர்மவினைகளின் தொகுப்பினை எடை போட முடியாது;இருந்தாலும்,உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்பீட்டுடன் சொல்ல வேண்டி இருக்கிறது;

இதுவரை உங்களது கர்மச்சுமைகளின் எடை 30,000 டன் என்று வைத்துக் கொள்வோம்;நீங்கள் ஒரே ஒரு முறை ஒரு சிவ மந்திரத்தை ஜபித்தால் அதன் புண்ணிய எடை 100 கிராம் அளவு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் சென்றுவிட்டால்,அதன் புண்ணிய எடை 100 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒருமுறை பித்ரு தர்ப்பணம் செய்துவிட்டால்,அதன் புண்ணிய எடை 50 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை ஒரு பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்தால்,அதன் புண்ணிய எடை 30 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
நீங்கள் ஒரே ஒரு முறை உழவாரப் பணியில் ஈடுபட்டால்,அதன் புண்ணிய எடை 40 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;

நீங்கள் தீட்சை பெற்ற சிவமந்திரம் ஜபித்தால் அல்லது சொன்னால்,அதன் புண்ணிய எடை 1 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;

சில அபூர்வமான சிவ மந்திரத்தை,ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட சிவாலயத்தின் உள்ளே குறிப்பிட்ட நேரத்தில் ஒரு முறை ஜபித்தால் அதன்  புண்ணிய எடை 1000 கிலோ அளவுக்கு இருக்கிறது;
நீங்கள் ஒரே ஒரு பாழடைந்த சிவாலயத்தை புனர்நிர்மாணம் செய்தால்,அதன் புண்ணிய எடை 10,000 கிலோ அளவுக்கு தான் இருக்கும்;
அதனால் தான் உங்களுக்குப் பிடித்தமான ஆன்மீகத் தொண்டு ஒன்று அல்லது ஒரு சிலவற்றை தொடர்ந்து செய்யும் படி வலியுறுத்துகிறோம்;
தமிழ்நாட்டில் ஒருவர் 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்;அவருக்கு அவரது தாத்தா பித்ரு தர்ப்பணத்தின் மகிமையை போதித்துக் கொண்டே இருந்தார்;கூடவே தான் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது கூடவே இந்த பேரனை அழைத்துச் சென்று அதைப் பற்றி முழு விளக்கத்தையும் நேரடியாகவே சொல்வது வழக்கம்;
இதனால்,அந்த மனிதர் தனது 21 வயது முதல் 71 வது வயது வரை ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும் 96 வெவ்வேறு நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்து கொண்டே இருந்தார்;அவரது 72 வது வயதில் அவரது பிறவி முடிந்தது;அவர் மேல் உலகம் சென்றதும்,அவரிடம் மறுபிறவி கொடுத்தார்கள்;அப்போது அவரது விருப்பம் என்ன ? என்று கேட்டார்கள்;அவர்,அதே ஊரில் பிறக்க விரும்பினார்;
அதன் படி மீண்டும் அதே ஊரில் பிறவி எடுத்து,அப்பிறவியிலும் 14 வது வயது முதல் ஆயுள் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 96 நாட்களுக்கு (ஷண்ணாவதி நாட்கள்) பித்ரு தர்ப்பணம் செய்து வந்தார்;
மீண்டும் பிறவி எடுக்கும் போது அதே ஊரில் பிறக்க ஈசனை வேண்டினார்;இப்படியே 8000 முறை மனிதப் பிறவி எடுத்து,அனைத்து பிறவிகளிலும் அவர் பித்ரு தர்ப்பணம் செய்வதையே தனது ஜன்மாந்திர லட்சியமாகக் கொண்டார்;
அவர் தனது 8000 பிறவிகளிலும் செய்த ஒரே ஒரு ஆன்மீகத் தொண்டு (ஆக்சுவலாக கடமை தான் இது) பித்ரு தர்ப்பணம் மட்டுமே!!!
8000 பிறவிகளுக்குப் பிறகு ஈசனே நேரடியாக அவருக்கு காட்சி அளித்து மிக உயர்ந்த தெய்வீக பதவியை கொடுத்துவிட்டார்;
இதை வாசிக்கும் எனது சகோதர சகோதரிகளே,நீங்கள் எல்லாவிதமான ஆன்மீக தொண்டுகளையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;உங்களால் முடிந்த,உங்களுக்குப் பிடித்த,உங்களுக்கு விருப்பமான ஆன்மீக சேவைகளை தினமும் அல்லது வாரம் ஒரு முறை அல்லது மாதம்ஒரு நாள் செய்து வாருங்கள்;அது போதும்;

கலியுகத்தில் பிறந்து வாழ்ந்து வரும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு குறையுடன் வாழ்ந்து வருகின்றோம்;பணம் நிறைய தேவையா? சொர்ண பைரவ அஷ்டகம் பாடலை தினமும் ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் 33 முறை ஜபியுங்கள்;  (கண்டிப்பாக மது,அசைவம் தவிர்க்கவும்;)
இப்பிறவியிலேயே முக்தி வேண்டுமா? அடிக்கடி அண்ணாமலை கிரிவலம் செல்லுங்கள்;அதுவும் முடியவில்லையா? உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்திற்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை சிவாய நம அல்லது ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்துவாருங்கள்!

எல்லா கலியுகத் துன்பங்களுக்கும் காரணம் நாம் அடிக்கடி பித்ரு தர்ப்பணமும்,திலா ஹோமமும் செய்யாமல் இருப்பது தான்! இயற்கையான முறையில் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டியது பித்ரு தர்ப்பணம்;செயற்கையான முறையில் இறந்து பசி,தாகத்துடன் தவிக்கும் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்,திலா ஹோமம் ஆகும்.அவரவர் ஜாதகம் பார்த்து கண்டறிய வேண்டியது இது;
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் பித்ரு தர்ப்பணம் செய்து வந்தார்கள்;அப்புறம் அதை மாதா மாதம் அமாவாசை அன்று மட்டும் செய்தால் போதும் என்று மாற்றினார்கள்:அப்புறம்,ஒரு ஆண்டில் மூன்று முறையாவது பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் மாற்றிவிட்டார்கள் (நாமும் அவ்வளவு பிசியாகி விட்டோம்)   
ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை;
இதில் ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் அதற்கு முந்தைய 12 ஆண்டுகள் செய்யாமல் விட்ட தர்ப்பணத்தை ஈடு செய்யும் வலிமை கொண்டது;புரட்டாசி அமாவாசை அன்று (28.9.2019 சனிக்கிழமை) பித்ரு தர்ப்பணம் கூட செய்ய முடியாத வறுமையில் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் ஒரே ஒரு சாதுவுக்கு/அனாதைக்கு அன்னதானம் செய்தாலும் போதும் என்று அகத்தியர் பரம்பரையில் பிறந்த சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் ஐயா அவர்கள் நமக்கு உபதேசிக்கிறார்;
தமிழ்நாட்டில் ஓசூர் முதல் சுங்கான்கடை வரை;ஊட்டி முதல் பூம்புகார் வரை எல்லா சிவாலயங்களின் வெளிப்புறம் இருக்கும்  கோவில் குளக்கரையிலும் பித்ருதர்ப்பணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்;எனவே,குறிப்பிட்ட ஆலய நகரம் சென்று தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;
ஆண்வாரிசு இல்லாத குடும்பங்களில் பெண்கள் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;வெள்ளை எள் கொண்டு செய்ய வேண்டும்;
தெய்வ நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் அல்லது நடக்க முடியாத முதுமை கொண்ட பெற்றோர்கள் இருந்தால்,அவர்களுக்கு பதிலாக தெய்வ நம்பிக்கை கொண்ட மகன் அல்லது மகள் அல்லது பேரன் அல்லது பேத்தி என்று யார் வேண்டுமானாலும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது;

31.7.2019 புதன் காலை 11.23 முதல் 1.8.2019 வியாழன் காலை 9.19 வரை ஆடி அமாவாசை இருக்கிறது;இந்த நேரத்திற்குள் பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள்;பித்ருக்கள் ஆசியினால் நீடூழி வாழ்க!!!

No comments:

Post a Comment