Monday, February 26, 2018

யாரெல்லாம் வராகி ஜபம் செய்யலாம்?


1)போதுமப்பா இந்த மனிதப் பிறவி;இனி எப்போதும் இந்த பூமியில் பிறக்கவே கூடாது என்ற மனநிலையில் இருப்பவர்கள்(சோகங்கள்,அவமானங்கள்,வீண் அபவாதங்களை வாழ்நாள் நெடுக இன்று வரை சந்தித்தவர்கள் அதில் இருந்து மீண்டு கவுரவமாக வாழ விரும்புபவர்கள்)
2)இப்பிறவியிலேயே முக்தியை அடைய விரும்புபவர்கள்
3)எவருக்கும் மனதால் கூட பிறருக்குத் தீங்கு நினைக்காமல் தான் உண்டு;தனது வேலை/தொழில் உண்டு என்று வாழ்ந்தாலும் போட்டி,பொறாமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள்
4) என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அலுவலகத்தில் சீனியாரிட்டிப்படியோ அல்லது சாதனை செய்ததால் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் (பிறரின் சதிவேலைகளால் பாதிக்கப்பட்டு) தனிமையில் கண்ணீர் வடிப்பவர்கள்
5)லஞ்சம் வாங்காமல் கிடைக்கும் வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்திட முடியாமல் மாதம் தோறும் கடன் வாங்கி அவதிப்படுபவர்கள்
6)குறளி,ஜின் முதலான மாந்திரீகப் பாதிப்பினால் படாத பாடுபடுபவர்கள்(அஷ்டகர்மாக்களின் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபடத் துடிப்பவர்கள்)
7)ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள்,ராகுவுடன் ஏதாவது ஒரு கிரகம் சேர்ந்திருந்து அந்தக் கிரகத்தின் திசை நடப்பில் இருப்பவர்கள்;ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை அல்லது சுவாதி அல்லது சதயத்தில் பிறந்துள்ளவர்கள்
8)கனவில் அடிக்கடி மாமிசம்,ரத்தம்,கோரமுகங்களைக் கண்டு அவதிப்படுபவர்கள்
9)ஸ்ரீவித்யா உபாசனையைப் பின்பற்ற சரியான குருவைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்
10)சித்தர்கள் கூட்டத்துடன் ஒருவராக மாற ஆசைப்படுபவர்கள்
11)சிந்தையில் சிவனை எப்போதும் வைத்திருப்பவர்கள்(இப்பிறவியிலேயே சிவத்துடன் கலக்க விரும்புவோர் அல்லது சிவகணமாக மாறிடும் லட்சியத்துடன் பிறந்துள்ளவர்கள்)
12) பிரபஞ்ச அன்னையான வாலை/திரிபுரசுந்தரி/மனோன்மணியை தரிசனம் செய்ய விரும்புவோர்
13) இப்போது இருக்கும் அனைத்து குறைகளும் நீங்கி அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு சகல வளங்களும் பெற்று வளமோடும்,நலமோடும்,சீரோடும் சிறப்போடும் வாழ விரும்புவோர்,அப்படி வாழ்வதற்காக தினமும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஆன்மீகரீதியாக உழைக்க விரும்புவோர்(ஆமாம்! யாராலும் எவர் விதியையும் மாற்றிட முடியாது;தற்காலிகமாக மாற்றியது போல நம்ப வைக்கலாம்;நாம் தான் நமது விதியை மாற்றிட முயற்சிக்க வேண்டும்)
14) குறிப்பிட்ட ஆன்மீக சக்தியைப் பெற விரும்புவோர்
15) ஜோதிடத்தில் வாக்குப் பலிதம் உண்டாகி,பொருளாதாரத் தன்னிறைவை எட்டிட விரும்புவோர்
16) எதிர்காலத்தில் வர இருக்கும் ஜாதகரீதியான துயரங்களை எதிர்கொள்ள அல்லது வரும் முன்பாகவே அதை பக்தியால் தீர்த்துவிட்டு நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ(கர்மவினைகளை இப்பிறவியுடன் மொத்தமாக அழித்துவிட)
தேவையானவை:
பச்சை நிறத் துண்டு(புதியது)
புதிய மண்விளக்கு அல்லது புதிய காமாட்சிவிளக்கு
ஐந்து முக ருத்ராட்சங்கள் இரண்டு புதியவை(கதர் ஸ்டோர்களில் கிடைக்கும்)
எப்போதும் அசைவம் சாப்பிடாத மன வைராக்கியம்
18 வயது நிரம்பிய ஆண்,பெண் எவராக இருந்தாலும்
இலுப்பை எண்ணெய் மற்றும் புதிய பஞ்சுத்திரி
தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் புதிய விளக்கில் கிழக்கு நோக்கி ஏற்றவும்;வடக்கு நோக்கி பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ளவும்;
சில வீடுகளில் இது சாத்தியப்படாமல் இருக்கும்;அங்கே வடக்கு நோக்கி இலுப்பைஎண்ணெயில் பஞ்சுத்திரியில் தீபம் ஏற்றிவிட்டு,கிழக்கு நோக்கியும் அமர்ந்து கொள்ளலாம்;
இரு கைகளிலும் தலா ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு,கைகளை மூடிக் கொள்ளவும்;
ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாத குரு சரணம்,சரணம் என்று ஒரு முறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்கவும்;(குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லலாம்;அதுவும் இல்லாதவர்கள்/அறியாதவர்கள் அடுத்த வரிக்குச் செல்லவும்)
பிறகு,ஓம் மஹா கணபதி நமஹ என்று ஒரு முறை ஜபிக்கவும்;
பிறகு,ஓம் அருணகிரி வசிவசி என்று ஒருமுறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை நமஹ என்று ஒருமுறை ஜபிக்கவும்;
பிறகு ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற அன்னை அரசாலை(வராகி) மந்திரத்தை இன்று முதல் 7 நாட்கள் வரை 15 நிமிடம் ஜபிக்கவும்;இதே போல மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒரு 15 நிமிடம் ஜபிக்கவும்;
8 வது நாள் முதல் 14 ஆம் நாள் வரையிலும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்கவும்;
15 வது நாள் முதல் 21 ஆம் நாள் வரையிலும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்கவும்;
21 வது நாள் முதல் 1008 வது நாள் வரையிலும்( 3 ஆண்டுகள்) காலையில் 60 நிமிடமும்,இரவில் 60 நிமிடமும் ஜபிக்கவும்;
ஜபிக்கும் நாட்களில் துக்க வீடுகளில் கலந்து கொள்ள நேரிட்டால் 28 நாட்கள் வரை ஜபத்திற்கு விடுமுறை விடவும்;
தீட்டுவீடுகளில் கலந்து கொண்டாலும் இதேநாட்கள் வரை விடுமுறை விடுவது அவசியம்;
இந்த 1008 நாட்களில் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும்,(சிவாலயம்,அம்மன் ஆலயம்,பெருமாள் ஆலயம்) அங்கே மூலவர் முன்பாக 30 நிமிடத்திற்குக் குறையாமலும்,அம்பாள்/தாயார் சன்னதி முன்பாக 30 நிமிடத்திற்குக் குறையாமலும் ஜபிக்கவும்;அப்போது காலை,மதியம்,மாலை,இரவு என்று எந்த நேரப் பாகுபாடும் பார்க்க வேண்டியதில்லை;
45 வது நாளில் இருந்து நமது மனபாரம் குறையத் துவங்கும்;
90 வது நாளில் இருந்து அன்னை அரசாலையின் அருட்பார்வை கிட்டும்;
120 வது நாளைக் கடந்துவிட்டால்,கூடவே இருந்து நமக்கு எதிராக செயல்படுபவர்கள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்;
அதே சமயம்,நம் மீது உள்ளன்போடு இருப்பவர்கள் நம்மிடம் வலிய வந்து உதவி செய்வார்கள்;பக்கபலமாக இருப்பார்கள்;
சிலருக்கு குலதெய்வத்தின் அருளாசி பிறந்தது முதல் இருந்து வரும்;அதை 180 வது நாளுக்குப் பிறகு ஜபிப்பவர்கள் உணருவார்கள்;
200 நாட்களுக்குப் பிறகு என்னென்ன ஆன்மீக ஆச்சரியங்களை அன்னை அரசாலை(வராகி)யால் உணர்ந்தீர்கள் என்பதை எமக்கு தெரிவிக்கவும்;
பஞ்சமி,அஷ்டமி,நவமி,தசமி நாட்களில் மட்டும் அதிகநேரம் ஜபிக்க முயற்சிக்கவும்;
;
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment